Ad Code

Recent Posts

கப்டன் அன்பரசன் (அக்பர்) வீர வரலாற்று நினைவுகள்

கப்டன் அன்பரசன் (அக்பர்)
திருச்செல்வம் சதிஸ்குமார் 
தேவபுரம், 
முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 01.07.1972  
வீரச்சாவு: 24.08.1992


நிகழ்வு: மணலாறுமணலாறு அளம்பில் சிறிலங்கா படை காவலரணை தாக்கியதில் வீரச்சாவு 


மணலாற்றில் போராளிகளுக்கு அவன் நல்லவன், கெட்டிக்காரன், அடிபாடுகளில் மிகவும் திறமையாகச் செயற்படுவான். மெலிதான உடலாக அவனைப் பார்ப்பதற்க்குத் தெரிந்தாலும் சண்டைகளில் கட் பொசிசனில் எல். - எம். ஜி. யைப் பிடித்த வண்ணம் சுட்டுக்கொண்டு முன்னேறி இராணுவத்தை வீழ்த்துவான் அவன்தான் எல்.- எம். ஜி. அக்பர்.


விடியலுக்கு முந்திய சாவுகள் விடுதலைப்புலிகள் வரலாற்றில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆம் இந் நிகழ்வுகளில்தான் மணலாற்றில் இன்று ஏ.கே.எல்.- எம். ஜி அக்பரும் இணைந்து விட்டான். எங்கோ அவன் எம்மைவிட்டு தொலைதூரம் சென்றுவிட்டதாக ஓர் உணர்வு. 


போராட்டக்களங்களில் போராளிகளின் இழப்பால் துயருண்டு கனத்த இதயத்தில் இன்று இவனின் பிரிவு தனியிடத்தில். ஆனாலும், அம்மண்ணிலும் போராளிகளின் மனத்திலும் மணலாறு மாவட்ட மரங்களுக்கு அவனின் குறும்புத்தனங்களும், சந்தோச விளையாட்டுக்களும், களத்தில் சலனமின்றிச் செயற்படும் துடிப்பும் வீரத்தின் விளைவுகளும் நீங்காத நினைவுகளாய் பதிந்துவிட்டன. ஒரு போராளியின் இழப்பு ஒவ்வொரு போராளியின் மனத்திலும் தான் ஏதோ பறிகொடுக்கக்கூடாத ஒன்றை இழந்துவிட்டதாக அவர்களின் மாறாத தவிப்பின் வெளிப்பில் தெரியும். அது போலவே இன்று அக்பரின் இழப்பும்.


மட்டக்களப்பில் முறக்கொட்டாஞ்சேனைக் கிராமம்தான் அக்பரின் பிறப்பிடம். சதீஸ்குமார் என்பது அவன் இயற்பெயர். சிங்களப்படைகள் மட்டக்களப்பு மண்ணில் செய்துவரும் கொடுமைகளுக்கு போராட்டமே சிறந்தது என முடிவு செய்தான். அதனால் தான், எம்மக்களின் பாதுகாப்பை எம்மால் உறுதிசெய்யமுடியும் என்றுணர்ந்தான். 1988 இன் ஆரம்பத்தில் இயக்கத்தில் இணைந்தான். அதே ஆண்டில் மூதூரில் விடுதலைப்புலிகளின் பத்தாவது முகாமில் பயிற்சிகளை முடித்து களத்தில் இறங்கினான்.


அக்காலப்பகுதியில், இந்தியப் படையுடன் விடுதலைப்புலிகள் போரிட்டுக் கொண்டிருந்தனர். அக்பரும் இந்தியப்படைகளுக்கு எதிரான சில தாக்குதல்களில் பங்கெடுத்துக் கொண்டான். பின் இந்தியப் படை ஈழமண்ணைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கையில், தேச விரோதிகளை அழிப்பதில் அக்பரும் ஈடுபட்டான். இதன் பின்புதான் 1989ம் ஆண்டில் புலிகளின் அணி ஒன்று மணலாறு மாவட்டத்திற்கு வந்தது. அதனுடன் தான் அக்பரும் மணலாற்று மண்ணில் தனது கால்களைப் பதித்தான். இத்துடன் இவனது செயற்பாடு மணலாற்றில் தொடர்ந்தது. அக்பர் ஏ.கே. எல். எம்.ஜி யுடன்தான் அதிக விருப்பம் கொண்டவன்.


அவ்வாயுதத்தை துடைத்துத் துணியினால் எப்போதும் மூடியவண்ணமே வைத்திருப்பான். அந்த எல். எம்.ஜி சண்டைகளில் தனது சந்தர்ப்பத்தை நிறைவேற்றத் தயங்குவதில்லை. அக்பர் மணலாறு மாவட்டத்திற்கு வந்த சில மாதங்களில் இந்தியப்படைகள் முற்றாக ஈழமண்ணை விட்டு வெளியேறின.


11-06-1990 இல் மீண்டும் இலங்கைப்படைகளுடன் இரண்டாம் ஈழப்போர் தொடங்கியது. அக்பரின் எல்.எம்.- ஜிக்கும் வேலைகள் அதிகமாயின. இந்தியப்படைகளுக்கு மணலாற்றில் புலிகள் மறக்கமுடியாத பாடம் புகட்டியதுடன் அங்குள்ள மரம் செடிகொடிகளும் கூட தங்களின் மண் மீதான ஆக்கிரமிப்பை உடைக்க பெரும் எதிர்ப்பை காட்டியன. 


தொட்ட இடமெல்லாம், கால் வைத்த இடமெல்லாம் வெடிகுண்டுகள். இந்தியப்படைகளின் கால்களும், உடல்களும் சிதற அதிர்ந்தன. உலகில் நான்காவது பெரிய படை "பிச்சை வேண்டாம் நாயைப்பிடி" என்ற அளவில் ஓடியது இதனால் நிலைகுலைந்த இராணுவத்தினர் 'மணலாற்றில் புலிகள் இல்லை, பேய்கள்தான் வாழ்கின்றன' என்று சொல்லும் அளவிற்கு மணலாற்று மண் தன் வரலாற்றை எழுதியது.


அன்று, ஒரே ஒரு பண்டார வன்னியன் பிரிட்டிஸ் படை கலங்க மணலாற்று காடுகளில் உலாவந்தான். இன்று, ஆயிரமாயிரம் பண்டாரவன்னியர்கள் இந்தியப் படைகளுக்கு சிம்மசொப்பனமாக அக்காட்டில் எழுந்தனர். இவர்களின் பின்பு இன்று இலங்கைப் படைகளுக்கு பாடம் புகட்ட மணலாறு தன்னை தயார்படுத்தியது. இம்மண் வெறும் நிலமல்ல - தமிழீழத்தின் இருதயம் ஆகும். இதை நசுக்க முற்பட்ட சிங்கள இராணுவத்தினர் அடிக்கடி புலிகளின் துப்பாக்கிகளுக்கு இரையாக தொடங்கினர். அதில் அக்பரின் ஏ. கே. எல். எம். ஜி யும் பங்கெடுத்தது. இவனது இயந்திரத் துப்பாக்கி காணாத மணலாற்று எல்லைப்புற முகாம்களே இல்லையென்று கூறுவதற்கேற்ப இவன் எல்லாத் தாக்குதல்களிலும் பங்கெடுத்தான். 


தினமும் சிங்கள இராணுவத்தினர் புலிகளின் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இலங்கை அரசும், இவர்களை புலிகளின் மரணவலைக்குள் தள்ளிக் கொண்டே இருந்தது. இதைப்புரியாது பணத்திற்காக சண்டையிடும் இராணுவத்தினர் புலிகளின் விடுதலை உணர்விற்கும், உறுதிக்கும் முன்னே சிறு தூசிகளாகவே இருந்தனர்.


மணலாறு, ஒரு வளமான மண். இதை அபகரிக்க இலங்கை அரசு தனது படைகளின் உதவிகளுடன், தன் இன வெறிப்பாதங்களை அம்மண்ணில் படிப்படியாக பதித்து குடியேற்றங்களை நிறுவியது. இதை நிறுத்த புலிகள் திடசங்கற்பம் கொண்டனர். சிங்கள வெறியர்களை அடித்துத் துரத்தினர். அன்று இப்படிச் சிங்கள குடியேற்ற வாசிகளை கதிகலங்க வைத்தவர்களில் நவம், லோறன்ஸ், சபா ஆகியோருடன் இன்னும் பல நூறு புலிகள் அம்மண்ணின் சுபீட்சத்திற்காய் போராடி தமிழீழ உணர்வுகளைத் தாங்கிய வண்ணம் தமிழீழ மண்ணின் விடிவுக்காய் சாவை அணைக்கின்றனர்.


அக்பர் இம்மாவட்டத்தை சாராதவன் என்றாலும், எங்கென்றாலும், எம் ஈழமண்னில் எவர் என்றாலும் தமிழ் மக்கள் ஆதலால் இம்மண்ணின் காவலாளியாகத்தான் அக்பரும் போராடினான். அக்பர் மணலாற்றில் கரையோர முகாம்களில் தங்கவே அதிகமாக விரும்புவான். அப்படியான முகாம்களுக்கு அவனையும் அவனது குழுக்களையும் போகும்படி தளபதி பணிப்பாராயின் மிகவும் சந்தோசத்துடன் தான், அங்கு போய்ச் சேருவான். அவன் புறப்படும் இடத்திலிருந்தே அங்குபோய்ச் செய்ய வேண்டிய வேலைகளை மற்றைய போராளிகளுக்கு கூறுவான். அவ்வளவு கூடுதலான பிரியத்தை அம்முகாம்களில் வைத்திருப்பான். காரணம் உண்டு. 


அதற்கு கரையோர முகாம்களில் தென்னம் தோட்டங்கள் உள்ளன. இதனால், இளநீருக்கு பஞ்சம் இல்லை. கடல்குளிப்புக்கும் விளையாட்டுக்கும். குறைவில்லை. இரவோடு இரவாக கடல் ஓரங்களில் உள்ள பாறைகளின் வெடிப்புகளுக்குள் இருக்கும் நண்டுகளை டோச்லைட் வெளிச்சத்தில் ஊசிக்கம்பியால் குத்தி அவற்றைச் சேர்த்து வந்து, சமையல் செய்து, ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போராளிகளையும் எழுப்பி அவர்களுடன் சேர்ந்திருந்து உண்ணுவான். அதன் பின்பே அக்பர் நித்திரைக்குப் போவான். இதனால்தான், அம்முகாம்களில் அவன் தங்குவதற்கு விரும்புவதுண்டு. 


உப்புவெளிகளில் மாலையான நேரத்தில் கிளித்தட்டு விளையாடுவதற்கு ஆட்களைச் சேர்த்தெடுப்பான். விளையாட்டு என்றால் முதலில் வருவது அவன்தான். எப்பொழுதும் எல்லோரிடமும் கலகலப்பாகவும் சிரிப்பூட்டும் கதைகளுடனுமே சேர்ந்திருப்பான். போராளிகள் இவனது பகிடிக்கதைகளைக் கேட்பதற்காகவே இவனுடன் கூடிவிடுவார்கள். இவன் கதைக்கும் போது எழும் சத்தம் உரலில் உலக்கை போடும் போது எழும் ஓசையாகவே இருக்கும். இதை எங்களுடைய தளபதி அடிக்கடி கூறி அவனையும் எல்லோரையும் சிரிக்கவைப்பார். அவரின் அன்புடனும் அதேநேரம் கண்டிப்புடனுமே வளர்ந்த போராளிகளில் அக்பரும் ஒருவன். 


குறும்புத்தனங்களும் விளையாட்டுக்களும் எவ்வாறு உள்ளதோ அதேபோல் தான் வீரத்தில் சிறந்து விளங்கினான். இவன் மணலாற்றில் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மின்னல் தாக்குதல் நடவடிக்கையில் இருந்து, இன்னும் பல முகாம் தாக்குதல்களின் போதும் பலமுறைகள் காயப்பட்டவன். அதற்காக யாழ்ப்பாணம் சென்று காயங்கள் மாறியதும் மணலாற்றுக்கு வந்து சண்டையிடும் குழுவில் இணைந்து கொள்வான். இது தான் அக்பரின் குண வியல்புகள்.


1992 ஆரம்பத்தில் இவனுடைய பெற்றோர்கள் மட்டக்களப்பில் இருந்து எத்தனையோ கஸ்டங்களுக்கும் இராணுவத்தின் சோதனைகளுக்கும் மத்தியில் வந்து இவனைப் பார்த்து விட்டு சென்றனர். ஆனால், மறுபடியும் மணலாற்றுக்கு அவர்கள் வந்தால் அவனை உயிருடன் பார்க்க முடியாது அவனுடைய கல்லறையத் தான் பார்க்க முடியும்.


ஆம், இன்று எங்களின் அக்பர் எங்களுடன் இல்லை. "மறுகா போவோம்""மறுகா வாடா" என்று மட்டக்களப்பு பாசையில் பகிடியாக கதைப்பதற்கு அக்பர் இன்றில்லை. அவன் எம்மை விட்டு பிரிந்து விண்ணில் வாழும் மாவீரர்களுடன் சேர்ந்துவிட்டான். ஆனால், அவனில்லாமல் எங்கள் முகாம்கள் அனைத்தும் வேதனையைத் தருகின்றன. எத்தனையோ தடவைகள் காயப்பட்டுத் தப்பியவன்.


24-08-1992 அன்று அலம்பில் முகாம் தகர்க்க சிரித்த முகத்துடன் சந்தோசமாகப் போனவன், மீண்டு வரும் போது அவனையும் அவனது எல். எம். ஜி. யையும் அவன் தோழர்கள் தூக்கிய வண்ணம் முகாமிற்கு வந்தனர். அக்பர் வீரச்சாவடைந்து விட்டானாம். இந்த சண்டையில் நீ சாவாய் என்று அக்பரை பார்த்து ஒவ்வொரு சண்டையிலும் தளபதி பகிடியுடன் சொல்வார். ஆனால், மீண்டும் அவன் வருவான். ஆனால் இன்று உண்மையாகவே சாய்ந்து விட்டான். இவனது இழப்பும் எல்லாப் போராளிகள் மனதிலும் வேதனையை ஏற்படுத்தியது. விடியலுக்காய் காத்திருந்தவன் புலரும் முன்பே சருகாகி விட்டான்.


இன்று, அவன் பிடுங்கித் தந்த இளநீர், சமைத்துத் தந்த நண்டுக்கறி, உப்புவெளிகளில் விளையாடிய விளையாட்டுக்கள், கடலில் நேரம் போவது தெரியாமல் நீந்தி விளையாடியது எல்லாம் மறக்க முடியாத நினைவுகளாகி விட்டன. இன்று மணலாறு மக்கள் தமது நிலத்தைப் பாதுகாக்க ஆயுதங்களை எடுத்துள்ளனர். புலிகளும் மக்களும் இன்று ஒன்றாகி காவல் காக்கின்றனர். இவர்கள் அக்பரின் கனவுகளுடன் அம்மண்ணின் விடிவுக்காய் களமாடி சாவை அணைத்த நூற்றுக்கணக்கான மாவீரர்களின் கனவுகளையும் சுமந்து கொண்டு விடியலின் பாதையில் விரைகின்றனர்.


கப்டன் அக்பரின் ஏ.கே.எல் எம்.ஜி. இதோ ஒரு போராளியின் கரத்தில் தவழ்கின்றது. ஆனால் அவனது நினைவுகள் மணலாற்று மண்ணிலும் மக்களிலும் மரம் செடிகொடிகளிலும் மறையாத தென்றலாய் தவழ்ந்து கொண்டிருக்கப் போகின்றது. மணலாற்று மண் தன் வரலாற்றில் அக்பரையும் அணைத்துக் கொண்டது.




சிந்தா.

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code