Ad Code

Recent Posts

லெப்டினன்ட் மொட்டைக்கஜனின் வீர வரலாற்று நினைவுகள்

லெப்டினன்ட் மொட்டைக்கஜன்

அழகரத்தினம் மணிவண்ணன்

கல்லடி வீதி, மட்டக்களப்பு 

வீரப்பிறப்பு: 19.06.1962

வீரச்சாவு:-27.06.1986

   

நிகழ்வு. மட்டக்களப்பு புலிபாய்ந்தகல்லில் எமது முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட சமரில் வீரச்சாவு


மேலைத்தேய எழுச்சியானது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்த போது ஆங்காங்கே உள்ள இளைஞர்கள் தமது சக்திக்கேற்றவாறு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவ்வாறு புறப்பட்ட இளைஞர் குழு ஒன்றில்தான் கஜனும் அங்கம் வகித்தான். அக்குழுவில் பயஸ், முத்துச்சாமி, உமாராம் போன்ற பல இளைஞர்கள் அங்கம் வகித்தனர். இளைஞர்களைத் திரட்டி தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருந்தது அக்குழு.


1983 ஆம் ஆண்டு யூலையில் நிகழ்ந்த இனக்கலவரங்களைத் தொடர்ந்து எமது போராட்டம் அடைந்த திடீர் வளர்ச்சியைக் கண்டு அச்சமடைந்த சிறிலங்கா அரசு தமிழ் பேசும் விவசாயிகளிடம் இருந்த துப்பாக்கிகளை மீள ஒப்படைக்கும்படி கட்டளையிட்டது.


இவ்வாறு மீளப்பெறப்பட்ட துப்பாக்கிகள் கச்சேரிகள் மூலமாக சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. விலங்குகளிடமிருந்து காட்டு பயிர்களைப் பாதுகாப்பதற்குப் பயன்பட்ட இத்துப்பாக்கிகள் அதை விட மோசமான சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு வழங்கப்பட்டன. விலங்குகளால் பயிரழிவு மட்டுமே ஏற்பட்டது. இவர்களால் ஏற்படவிருப்பது இன அழிவு என்பதைப் புரிந்து கொண்ட கஜனும் அவனது நண்பர்களும் இத்துப்பாக்கிகளை கைப்பற்றத் தீர்மானித்தனர்.


நாற்புறமும் ஆற்றினால் சூழப்பட்ட புளியந்தீவு எனப்படும் மட்டக்களப்பு நகரினுள் ஆற்றங்கரையோரமாகவுள்ள ஒல்லாந்தர் கோட்டையினுள் அமைந்துள்ளது. மட்டக்களப்புக் கச்சேரி புளியந்தீவுக்குப் போகும் பாலத்திற்கு அருகே மட்டக்களப்பு காவல் நிலையம் அமைந்துள்ளது மட்டக்களப்பு காவல் நிலையத்துக்கும் கச்சேரிக்கும் இடையிலுள்ள தூரம் குறுக்காகப் பார்த்தால் சுமார் 500 யார் கள்தான் இருக்கும். மட்டக்களப்பு நகரினுள் செல்பவர்கள் காவல் நிலையம் முன்பாகத்தான் செல்ல வேண்டும் என்ற நிலையில் கச்சேரி மிகப்பாதுகாப்பான இடம் என சிறிலங்கா அரசினால் கருதப்பட்டு வந்தது. எனினும் சில தினங்களில் இத்துப்பாக்கிகளை சிறிலங்கா காவல்துறை பொறுப்பேற்க வேண்டியிருந்தது.


இந்நிலையில் தோணிகள் மூலமாக ஆற்றின் வழியாக கச்சேரியை அடைந்தனர் கஜனும் அவனது நண்பர்களும், இத்திட்டத்தில் சிறு தவறு நிகழுமாயின் தாம் அனைவரும் உயிர் தப்ப முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் பேராட்டத்தின் வளர்ச்சிக்காக அந்த நிலைமையை எதிர்கொள்ள அவர்கள் தயாரானார்கள். அத்திட்டமும் வெற்றிகரமாக நிறைவேறியது.


ஆற்றின் வழியாக சுமார் எட்டு மைல்கள் தூரம் துடுப்பினால் வலித்தபடியே இந்தத் துப்பாக்கிகளைக் கொண்டு சென்றனர். இதற்குள் பொழுது விடிந்து விட்டது. ஆற்றங்கரைகளில் அவற் றைப் புதைத்தனர். மீண்டும் இரவு நேரம் அவற்றைக் கிண்டியெடுக்கத் தீர்மானித்தனர். இளைஞர்கள் வந்து இறங்கியதையும் இரவு நடந்த சம்பவத்தையும் கேள்விப்பட்ட புளொட் குழுவினர் ஆற்றங்கரை வழியே மோப்பம் பிடித்துத் திரிந்தனர். அவர்கள் தொகையான ஆயுதங் களைக் களவாடினர். உயிரைப் பணயம் வைத்து எடுக்கப்பட்ட ஆயுதங்களை களவாடிய இக்குழுவினரை விடயம் தெரியாத மக்கள் சோறு கொடுத்து வாழ்த்தி அனுப்பினர்.


இரவு நேரம் வந்ததும், இவர்கள் தங்கள் ஆயுதங்களைத் தேடினர். தாம் புதைத்த ஆயுதங்களை எடுத்தவர்களையும் தேடினர். இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட புளொட் உறுப்பினர்கள் இந்தியாவுக்கு தப்பியோடினர். அங்கே சென்று, கச்சேரியிலிருந்து துப்பாக்கிகளைக் கைப்பற்றிய சம்பவத்திற்கு உரிமையும் கோரினர்.


இந்நிலையில் இந்த ஆயுதங்களைக் கொண்டு மட்டக்களப்பு. வாழைச்சேனை வீதியில் வாகனத்தில் சென்ற புளொட் உறுப்பினர்கள் சிலர் கைதாகினர். கைதாவதற்கு முன் அவற்றினால் சண்டை பிடிக்க முடியும் என்பதைக்கூட மறந்து போயினர். காவல் நிலையத்தில் அனைத்து உண்மைகளையும் சொல்ல மட்டும் அவர்கள் மறக்கவில்லை. அதனால் கஜனும் அவனது நண்பர்களும் சிறிலங்காப் படையின ரால் தேடப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டனர்.


பொன்னம்மானின் பயிற்சியில் இவர்கள் புடம் போடப்பட்ட தங்கங்களாயினர். மீண்டும் களத்தில் கால் வைத்தனர். யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதல் உட்பட குடாநாட்டில் நிகழ்ந்த பல்வேறு தாக்குதல்களில் பங்கு பற்றினர். முதன் முதல் மேற்கொள்ளப்பட்ட இராணுவமுகாம் தாக்குதலான கொக்கிளாய்த் தாக்குதலிலும் பங்குபற்றினர். மீண்டும் மட்டக்களப்பு பிரதேசத்தை நோக்கிப் பயணமாகினர்.


யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு செல்லும் குழுவினர் வழி வழியே தாக்குதல்களை நடத்திச் செல்வது வழக்கம். அவ்வாறே முதூரில் தங்கிருந்த காலத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் கவசவாகனம் ஓன்றினை கண்ணிவெடி மூலம் தகர்த்தான் கஜன், இத்தாக்குதலின் மூலம் கிடைத்த ஆயுதங்களுள் முதன் முதலாக கிடைத்த -303 ரக L M. Gயும் அடங்கும்.


மட்டக்களப்புச் சென்றடைந்ததும் தங்களால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளைக் களவாடிக் கொண்டு தப்பித்தவர்களைக் கண்டான். அவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. பிரச்சினை இன்னும் தீரவில்லை. நாங்கள் ஒரு விரும்பாத சூழ்நிலையில் சந்திக்க வேண்டிவரும்" என்று சொன்னான். இயக்கக்கட்டுப்பாடு கருதி மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் அவன் ஈடுபடவில்லை.


ஏறாவூர் பொலிஸ் நிலையத் தாக்குதலின் போதும் ஒரு குழுவிற்கு தலைமை தாங்கிச் சென்றான். அத்தாக்குதல் மூலம் கிடைக்கப் பெற்ற ஆயுதங்களை அணைத்தபடியே ஆனந்தக் கூத்தாடினான். இந்த விடயத்தில் அவன் சிறுபிள்ளைதான். தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க அவனுக்கு வேறுவழி தெரியவில்லை.


மட்டக்களப்பில் இயக்கத்தின் உணவுத் தேவையையும் பொருளாதார தேவையையும் கருதி மேற்கொள்ளப்பட்ட விவசாயச் செய்கையில் கூடியளவு அக்கறை காட்டினான். இரவு பகல் வித்தியாசமில்லாமல் உழவு இயந்திரத்துடன் உழைத்துக் கொண்டிருந்தான். ஆனாலும் போர்க்களங்கள் என்றால் அங்கு செல்வதற்கு துடியாய்த்துடித்தான்.


இறுதியில் 27-06-86 அன்று புலி பாய்ந்த கல்லில் நிகழ்ந்த இராணுவ முற்றுகை இவனை எம்மிடமிருந்து பிரித்தது. எமது முகாமை முற்றுகையிடுவதென்றால் அது இலேசான காரியமல்ல என்பதை உணர்த்தி விட்டே மடிந்தான்.


புலிபாய்ந்த கல் இந்தப்பெயர் உனக்குப் பிடித்திருக்கும்'


என்று புலிகளைப் பார்த்துக் கிண்டல் செய்தனர் சிலர். அந்தப் பெயர் மட்டுமல்ல அந்த மண்ணும் எனக்குப் பிடித்திருக்கிறது; ஆதலால் நான் இந்த மண்ணைப் பிரியத் தயாரில்லை என்று வெற்றுத் தோட்டாக்களுக்கு மத்தியில் கிடந்த அவனது புகழுடல் பறை சாற்றியது.



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code