நடராசா காந்தகுமார்
பலாலி மத்தி,
வசாவிளான், யாழ்ப்பாணம்.
வீரப்பிறப்பு: 16.03.1965
விரச்சாவு: 06.08.1988
நிகழ்வு: மணலாறு நித்திகைக்குளம் பகுதியில் இந்தியப் படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் புலிகளின் 10வது பயிற்சி முகாமின் (தமிழகத்தில்) பயிற்சியாளர்களிடையே கதாநாயகன். சோமேஸ்தான் அவனைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் காணப்படும். பயிற்சி முகாமுக்கு புதிதாக வரும் உறுப்பினர்கள் என்றாலும் சரி பயிற்சி பெற்ற மூத்த உறுப்பினர்கள் என்றாலும் சரி, அல்லது பயிற்சி முகாமைப் பார்வையிட வந்த வெளியாளர்கள் என்றாலும் சரி, ஒவ்வொருவருக்கும் ஏற்றமாதிரிக் கதைத்து இவன் முழுத் தகவல்களையும் திரட்டி விடுவான். அதேவேளை அங்குள்ள நடைமுறைகள் பற்றியும் அவர்களுக்கு விளக்கமளித்து விடுவான். அங்கு வருபவர்களுக்கும் மற்றவர்களுக்குமிடையில் இவன்தான் தொடர்புப் பாலமாக விளங்குவான். ஏனெனில் பயிற்சி எடுக்கும்போது பயிற்சியாளர்கள் தேவையற்ற விதத்தில் எவருடனும் கதைக்க இயலாது. இதைவிட ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலிருந்து வந்திருப்பவர்கள்,
ஒருவரை ஒருவர் அறிமுகமில்லாதிருப்பார்கள். ஆதலால் கதைக்கத் தயங்குவார்கள் ஆனால், சோமேசைப் பொறுத்தவரை அதெல்லாம் கிடையாது. பழகும் விதத்தினால் அவன் எல்லோருக்கும் பிடித்தவனாகிவிடுவான். அதனால் அவன் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்லாமலிருக்க முடியாது.
சாப்பாட்டு நேரத்தில் இவனிடம்தான் மற்றைய பயிற்சியாளர்கள் விளக்கம் கேட்பார்கள். அவர்களுக்கு விளங்காதவற்றையும் மேலதிக விபரத்தையும் இவன்தான் விபரமாகப் புரிய வைப்பான். அனைவரும் கூட்டமாக அமர்ந்திருக்க நடுநாயகமாக சோமேஸ் உட்கார்ந்திருப்பான். பகிடி விட்டபடி சுற்றி வர எல்லோரையும் அவதானித்துக்கொண்டே சாப்பாட்டைக் குழைப்பான். பின் கதைத்துக் கதைத்து குழைத்த சாப்பாட்டைக் கொடுப்பான். அதே முகாமில் சமைத்த சாப்பாடுதான் - தனியாக இருந்து இதைச் சாப்பிடும் போது இது பயிற்சிக் காலச் சாப்பாடு என்ற உணர் விருக்கும். ஆனால் சோமேஸ் கொடுக்கும்போது மட்டும் அது அமிர்தமாக இருக்கும். வீட்டில் சகோதரர்களுடன் கூட இருந்து அம்மா குழைத்துக் கொடுக்கச் சாப்பிடுவது போலிருக்கும். புதிதாக வருபவர்கள் கூச்சத்தினால் சாப்பிட மறுத்தால் இவன் "நீ சாப்பிடாட்டி நானும் சாப்பிட மாட்டேன்" என்று அடம்பிடித்து சாப்பிட வைப்பான். அடுத்த நாள் அவர்கள் தாங்களாகவே சோமேஸ் முன் ஆஜராகிவிடுவார்கள்.
பயிற்சியின்போது களைத்துப் போய் மைதானத்தை விட்டு வருபவர்களுக்கெல்லாம் சோமேசைக் கண்டவுடன் அக்களைப்பு பறந்துபோய்விடும். இவனது பகிடிகளையும், கதைகளையும் கேட்க புது உற்சாகம் பிறந்துவிடும். பயிற்சி முடிந்ததும் அந்த முகாமின் முதல் பொறுப்பாளர்கள் முதல் அனைவரிடமும் ஒரே கேள்வியைத்தான் கேட்டார்கள் "சோமேஸ் பயிற்சியாளர்கள். எங்கை போறான்" எல்லோருக்கும் தாங்கள் போகுமிடத்துக்கே சோமேசும் வரவேண்டும் என்று ஒரு ஆசை. அவனிருந்தால் தான் எப்போதும் தாங்கள் உற்சாகமாக இருக்க முடியும் என்று நம்பினார்கள்.
ஒவ்வொரு பணிகள் கருதி முகாமிலிருந்து வெவ்வேறு இடங்களுக்குக்கு அனுப்பப்படும் போராளிகளை கைகளால் கட்டிப்பிடித்து கண்கள் கலங்க அனுப்பிய இவன், தானும் அவ்வாறு பிரிந்து சென்றான். அந்தக் காட்சிகள் அவனுடன் பழகிய எவராலும் மறக்க முடியாதவை.
எல்லோரிடமும் பழகும்விதம், விளக்கமளிக்கும் இவற்றைக் ஆற்றல் கருத்திற் கொண்டு, இவன் கோயம்புத்தூர் பகுதியில் விடுதலைப் புலிகள் மாணவர் இயக்கப் பணிகளை மேற்கொள்வதற்கென தெரிவு செய்யப்பட்டான்.
மாணவர் இயக்கப் பணிகளை இவன் சிறப்பாக மேற்கொண்டான். அக்காலத்தில் இவனுடன் பழகிய கோயம்புத்தூர் மக்கள் என்றும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாளர்களாகவே விளங்குவர். எந்தத் தடைகளும் அவர்களின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஏனெனில், ஒரு போராளி எத்தகைய உயர்ந்த குணத்தைக் கொண்டிருப்பான்; இந்தப் போராட்டம் எத்தனை உயரிய தியாகங்களினால் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பதையெல்லாம் சோமேசுடன் பழகியும், அவன் சொல்லக் கேட்டும் உணர்ந்திருக்கிறார்கள் அவர்கள்.
எதைத்தான் செய்தாலும் இவனுக்குத் தன் சொந்த மண்ணிலிருந்து போராட வேண்டும் என்பதுதான் ஆசை. தாயகத்தைப் பற்றி வரும் செய்திகள், தொடர்ந்து அங்கேயிருக்க முடியாத மனநிலையைத் தோற்றுவித்தன. அதனால் "நாட்டுக்குப் - போக வேண்டும்" என்று வற்புறுத்திக் கொண்டேயிருந்தான். மாணவர் இயக்கப் பணிகளைச் செய்வதற்கு இவன்தான் பொருத்தமான ஆள். ஆனாலும் இவனது நச்சரிப்புத் தாங்காமல் தமிழீழத்திற்கு அனுப்பும் பொருட்டு தமிழகக் கரையில் இருந்த முகாமிற்கு அனுப்பப்பட்டான். அங்கு சில காலம் பணியாற்றிய பின்னரே இவனுக்கு, தாயக மண்ணை மிதிக்கும் பாக்கியம் கிடைத்தது.
அந்தக்காலத்தில் சிறிலங்காப் படை இவனது சொந்தக்கிராமமான முழுவதையும் பலாலிப்பகுதி ஆக்கிரமித்திருந்தது. கள்ளக்குடியேற்றக்காரரை தடுக்கவென்று அமைக்கப்பட்ட இராணுவ முகாமினால் அந்த மண்ணிண் பூர்வீகக் குடிமக்கள் அகதிகளாக்கப்பட்டனர்.
இவன் இப்பகுதியைச் சேர்ந்தவனென்பதாலும், அப்பகுதியை நன்கு அறிந்தவனென்பதாலும் அப்பகுதியை வேவு பார்க்கும் குழுவில் இணைக்கப்பட்டான், தான் மழலையாய் நடைபயின்ற மண்ணில், உருண்டு புரண்டு விளையா மண்ணில் இன்று ஒளித்து ஒளித்து போய் வேவு பார்க்கும் நிலை வந்துவிட்டதே என்று எண்ணி வருந்தினான். ஆனாலும் வரலாறு தனக்கு இட்டபணியைச் செய்யும் மனத்திருப்தி அவனுக்கு இருந்தது.
கட்டுவன் காவலரணில் இவன் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், 21-05- 87 அன்று சிறிலங்காப்படை யினருடனான மோதலில் காயமடைந்தான். காலில் காயமடைந்து யாழ். வைத்தியசாலையில் இருந்த பொழுது, இவனது அன்னை இவனைப் பார்க்கவந்தார். தான் முத்தமிட்டு வளர்த்த அந்தக்கால்கள் கட்டிலில் காயத்துடன் ஓய்வெடுப்பதைக் கண்டதும் துக்கம் தாளவில்லை. அதனால் "தம்பி, நீ இவ்வளவு காலமும் இயக்கத்திற்கு வேலைசெய்தது போதும்: இனி வீட்டைவா. உனக்கு ஏழு பொம்பிளைச் சகோதரங்கள் இருக்கெல்லே அதுகளுக்கு உழைக்கவேணும்தானை. வீட்டைவா" என்று கேட்டார், அவ்வளவு தான் இவன் சீறியெழுந்தான்;
தான் இருக்குமிடம் வைத்தியசாலை என்பதையும் மறந்தான்; "எல்லாத் தாய்மாரும் சண்டைக்குப் போ எண்டு பிள்ளையள அனுப்புற நேரத்தில நீ வீட்டை வரச் சொல்லியோ கேக்கிறாய். நீயும் ஒரு தாயே? எங்கட இடமெல்லாம் ஆமிக்காரன் பிடிச்சு வைச்சிருக்கிறான். இந்த நேரத்தில வீட்டை வரச் சொல்லிக் கேட்கிறாய். இஞ்சையிருந்து போ. இனிமேல் இதைப்பற்றிக் கதைச்சா, நான் வீட்டையே வரமாட்டன்" என்று கத்தினான். வேதனையுடன் தாய் அங்கிருந்து நகர்ந்தார்.
பெற்றதாயை இவன் அப்படி பேசியதற்கு சில காரணங்கள் இருந்தன. முதலாவது, இவன் காயப்படுவதற்கு முதல் நாள்தான் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த ராதா சிறிலங்காப் படையினருடனான மோதலில் வீரச்சாவை எய்தியிருந்தார். அதுவும் இவன் காயப்பட்ட அதே கட்டுவன் பகுதியில், ஒரு தாயைப் போன்ற கவனிப்புடன் அவனை நேசித்த ராதாவை இழந்த ஆத்திரம் அவனுள் குமுறிக் கொண்டிருந்தது. ராதாவை இழந்த சோகத்தில் இருக்கையில் தனது தாயார் வந்து இப்படிக் கேட்டதை பொறுக்க அடுத்தது, அவனால் முடியவில்லை. அவனது காயத்தின் வேதனை. இவையிரண் டும் இல்லாவிட்டால் இவன் தனது வழமையான பாணியிலேயே சிரித்துக் கதைத்து தனது மறுப்பைத் தெரிவித்திருப்பான். ஏழ்மையான குடும்பச் சூழ்நிலை ஏழு சகோதரிகள். குடும்பத்தின் மீது அவனுக்குப் பாசமிருந்ததுதான், ஆனாலும் அதை விட தேசத்தின் மீதிருந்த பாசம் கூடுதலாக இருந்தது.
இந்திய ராணுவத்துடனான போர் ஆரம்பித்ததும் இவனுக்கு ஜி. பி. எம். ஜியுடன் நின்று போரிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. குளப்பிட்டி, வட்டுக்கோட்டை, ஏழாலை போன்ற இடங்களில் இந்தியப் படையினர் இவனது அணியிடம் பேரிழப்பைச் சந்தித்தனர்.
இறுதியாக 04- 08- 88 இல் நித்திகைக் குளத்தில் இந்திய இராணுவத்துடனான மோதலில் இவன் வீரச்சாவெய்தினான். நித்திகைக்குளத்தில் இருந்த எமது முகாமொன்றை கைப்பற்றிய இந்திய இராணுவம், அங்கிருந்து தாம் புறப்பட்ட முகாமிற்கு திரும்பிச் சென்றது. இவ்வாறு திரும்பிச் செல்லும் வழியில் அவர்களுக்கு விழுந்த அடி மீண்டும் அதே முகாமிற்குத் தான் வழிகாட்டியது. அதனால் திரும்ப அங்கேபோய்
நின்றுகொண்டு தமது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றித் தீர்மானித்தனர். இந்நிலையில் "நீ போனாலும் அடிப்போம், வந்தாலும் அடிப்போம்" என்று இந்திய இராணுவத்தினருக்கு படிப்பிப்பதற்காக அந்த முகாம் மீது தாக்குதல் நடத்த தீர்மானித்தான் சோமேஸ். மிகவும் கிட்டிய தூரத்தில் தான் நின்று நடத்தப்போகும் அந்தத் தாக்குதல் எப்படி நடக்கப்போகிறது என்பது அவனது மனத்திரையில் தெரிந்தது. அதனால் பத்து கைக்குண்டுகளுடனேயே சென்றான். அங்கிருந்த தனது அயற்கிராமத்தவனாகிய நெடுமாறனிடம், "இந்தச் சண்டையில் நான் செத்தா வீட்டுக்காரருக்கு அறிவிச்சிடடாப்பா? அவை இப்ப இடம் பெயர்ந்து விசுவமடுவில்தான் இருக்கினம், அது உனக்குத் தெரியும்தானை?" என்று கேட்டான். அவன் திட்டமிட்டபடியே சண்டை மிக மூர்க்கமாக நடைபெற்றது. பத்து கைக்குண்டுகளும் முடிந்த நிலையில் திரும்ப வந்து, மீண்டும் பல கைக்குண்டுகளை எடுத்துக் கொண்டு போய்ப் போரிட்டான் சோமேஸ். அவன் திட்டமிட்டபடியே போர் மிகவும் மூர்க்கமாக நடைபெற்றது. அந்தத் தாக்குதலில் எல்.எம்.ஜி சுடுகுழல், பிறவுன் எல்.- எம்.ஜி சுடுகுழல், ரவைகள் இப்படியாக பல பல ஆயுதங்கள் நமக்குக் கிடைத்தன. ஆனால், நாம் சோமேசை இழந்துபோனோம். பொது அறிவு அறிவு சம்பந்தமான விடயங்களில் சந்தேகம் ஏற்படும்போது எமக்கு விளக்கமளிக்கும் சோமேஸ் -எவர் தவறுவிட்டாலும் நக்கீரன் பாணியில் அதே சமயம் அவர்களது மனம் கோணாமல் நகைச்சுவையாகவே அத் தவறைச் சுட்டிக்காட்டும் சோமேஸ் -போராளிகளின் எந்தப் பிரச்சினையானாலும் தனக்கு அப்பால் போகாத நிலையில் தீர்த்துவைக்கும் சோமேஸ் -அந்த பத்தாவது முகாமின் கதாநாயகனான சோமேஸ் -கோயம்புத்தூர் மக்களின் மனதில் என்றும் நிறைந்திருக்கும் சோமேஸ் - இன்று இல்லை என்னும் போது எம்மால் நம்ப முடியாமலிருக்கிறது. இவனை நினைக்கும்போது மிக முக்கிய சம்பவமொன்று நினைவிற்கு வருகிறது.
இந்தியப்படையுடன் போர் தொடங்கிய பின்னர், ஒவ்வொரு இடமாக இந்தியப்படை பிடித்து வந்தது. நாம் யாழ். மாவட்டத்தைவிட்டு வன்னிக்காடுகளுக்கு போயிருந்தோம். தொடர்ச்சியான களைப்பை ஏற்படுத்தியிருந்தவேளை அது. அடுத்து என்னென்ன நடக்குமோ என்ற நிலை. இதைப்பற்றிப் பலரும் பலவிதமாகக் கதைத்துக் கொண்டிருந்தனர். அப்போ சோமேஸ் சொன்னான் இனித்தான் இந்தியன் ஆமி வாங்கப்போறான், எப்படிக் காடு இருக்குதெண்டு படிக்கப்போறான், நாங்கள் இவனுக்குப் படிப்பிச்சுக்காட்டுவம்". சோமேஸ் சொன்ன பாணி அனைவருக்கும் புது உற்சாகத்தை ஊட்டியது. உறுதியுடன் தோள்களில் ஆயுதங்களை மாட்டிக்கொண்டனர். சோமேஸ் சொன்னதுபோலவே இந்திய இராணுவம் தமிழீழக் காடு எப்படி இருக்கின்றது என்பதைப் படித்தது. அதற்காக நிறைய விலை கொடுத்தது.
இந்திய இராணுவம் எமதுமண்ணை விட்டகன்றதும் காட்டுக்குள்ளிருந்து மீண்டும் யாழ். குடாவை நோக்கி வந்தோம். வரும் வழியில் இவன் "இந்தியன் ஆமி இனித்தான் வாங்கப் போறான்" என்று கூறி எமக்கு உற்சாகமூட்டிய இடத்தைக் கண்டோம். அன்றைய காட்சியை நினைக்கும்போது நெஞ்சு கனத்தது, அந்த இனிமை இனி இல்லைத்தான். ஆனால் நாம் சோர்வாக இருப்பது அவனுக்குப் பிடிக்காது. அதனால், மீண் டும் எமது துப்பாக்கியை சரி பார்த்தபடி வண்டியில் ஏறினோம், அவன் பிறந்த இடம் பலாலியை பார்க்க வேன்டும் என்ற அவசரத்துடன். இப்போது, அவன் தனது தாய்க்குக் கூறிய வாசகம் நினைவுக்கு வருகிறது. 'இது எல்லாத் தாய் மாரும் சண்டைக்குப் போ என்று பிள்ளையளை அனுப்புற நேரம்:
செந்தாளன்.-
0 கருத்துகள்