Ad Code

Recent Posts

மேஜர் வளர்மதி வீர வரலாற்று நினைவுகள்

மேஜர் வளர்மதி 
சாந்தி செல்லத்துரை  
கண்ணகிபுரம், 
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 01.06.1970 
வீரச்சாவு: 16.04.1992


நிகழ்வு: சுகவீனம் (மாரடைப்பு) காரணமாக சாவு


மேஜர் வளர்மதி உறுதியின் வடிவம்

ஒரு வேங்கை விழ பல வேங்கைகள் எழுவார்கள் என்பதற்கு மேஜர் வளர்மதி சிறந்த எடுத்துக்காட்டு.


பொன் கொழிக்கும் வயல் நிலங்கள்,அதனுடன் மலைளும், அருவிகளும் என தன்னகத்தே செழிப்புறக் கொண்டது தென் தமிழீழம்.


அடர்ந்த காடு,சில்வண்டின் இரைச்சலை இடையிடையே தடுக்குமுகமாக ஒசையிடும் வன விலங்குகள் அவற்றையும் மீறி எதிரியின் எறிகணைகள், துப்பாக்கிச் சன்னங்கள்.

இவற்றுக்கு மத்தியில் தற்காலிகமாக அமைக்கப் பெற்ற பாசறை ஒன்றில் வளர்மதி. அவள் கையில் ஓர் கடிதம். கடிதத்துக்குரிய போராளி அவள் முன். “இந்தாம்மா உன்ட அப்பர் செத்துப் போச்சி எண்டு காகிதம் வந்து இரிக்கு" என்றபடி கொடுக்க, பெற்றுக் கொண்ட போராளி மௌனமாகக் கண்ணீர் விடுகிறாள். காரணம் அவள் மட்டுமல்ல, அவளைப் போல அனைத்துப் போராளிகளுமே இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்ட பின்னர் பெற்றோரின் நிலையைச் சிறிதளவுகூட அறியாத நிலையிலேயே இருந்தனர்.


அழுதவாறு தன்முன் நிற்கும் அப்பிள்ளையைப் பார்த்து "படிச்சிட்டுக் கத்து" என்று முகத்தில் சிறிதளவுகூட மாறுதலில்லாமல் கடுமையாகவே பதிலளிக்கின்றாள் வளர்மதி.

கடிதம் பிரிக்கப்பட, அதில் பல மாதங்களின் பின்னர் தந்தையின் சுகச்செய்தியே தனக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது என்பதைக் கண்டவுடன் அழுகையும் சிரிப்புமாகக் காட்சி தருகின்றாள் அப்போராளி.


வளர்மதியின் இதழிலும் சிரிப்பு வருகின்றது. "பாசத்தைப் பார், ஒழுகுது. வந்திட்டினம் போராட. உன்னைச் சோதிக்கத்தான் இப்படிச் சொன்னனான். என்ன தான் இடைஞ்சல் வந்தாலும் நாங்க கலங்கக்கூடாது. கவலைப்படுறதுக்காம்மா நாங்க இயக்கத்தில சேர்ந்தனாங்க"? என்றவாறு எழுந்து கொள்கின்றாள். மேஜர் வளர்மதி! அவளது இயற் பெயர் சாந்தி. பெயருக்கும் அவளுக்கும் தான் என்ன பொருத்தம்! அமைதியின் உருவம். கண்களில் ஒருவித ஒளி. உறுதியான நீண்ட உடல். மனமும்கூட. கலகலப்பான சுபாவம் கொண்டவள் தான். ஆனாலும் அதற்குக்கூட - ஒரு வரையறையை வகுத்துக் கொண்டவள். மக்களுடன் மகளாக, பெரியவர்களுடன் பணிவாக, சிறியவர்களுடன் அன்பாகப் பழகுவதற்கு ஏற்ப தன்னை மாற்றியமைத்துக் கொண்டவள்.


இராணுவ ஆக்கிரமிப்பினால் அழிவுற்று சாம்பல் பூத்த மேடாகக் காட்சியளிக்கும் பல ஊர்களில் ஒன்றான கண்ணகிபுரம் -தியாவட்டவான் பகுதியைத் தனது பிறப்பிடமாகக் கொண்டவள். காகிதத் தொழிற்சாலைக்கு மிகச் சமீபமாகவே அவ்வூர் அமைந்திருந்தது. - ஒருபுறம் தமிழரின் குடியிருப்புக்கள். மறுபுறம் இசுலாமியக் குடியிருப்புக்கள் என அமையப் பெற்றிருந்தது.


முத்துப்பிள்ளை-செல்லத்துரையின் கடைசிப் பெண் இவள். 01. 06. 1970 இல் பிறந்தாள். ஒரு வயது நடக்கும் போது கொடிய நோயிடம் தந்தையைப் பறி கொடுத்தாள். இறப்புக்குப் பின்னர் குடும்பப் பொறுப்பைச் சுமந்து கொண்டாள். இவள் தமிழ் மகாவித்தியாலயத்தில் தனது கல்வியை பெற்றுக் கொண்டாள். நான்கு பெண் சகோதரிகளினதும் ஆறு ஆண் சகோதரர்களினதும் அணைப்பில் மிகவும் செல்லமாக வளர்ந்து வந்தாள் வளர்மதி. 


இவளின் குடும்பமே இயக்கத்துக்கெனத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டது. -

இராணுவத்தினரால், புலிகளுடன் மோத முடியாத சந்தர்ப்பங்களில் பொதுமக்கள்தான் அவர்களுடைய பலிக்கடாக்கள் ஆயினர். நாள்தோறும் வெட்டுக்களும், சூடுகளும், கைதுகளும் தமது வெறி தீர்ந்த பின்னர் விலகுவார்கள்.


இவளின் குடும்பமும் பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. சொந்தமான ஐந்து வீடுகள் எரிக்கப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. துன்பங்களின் படிகளில் தான் விடுதலையின் வேகம் உயரும் என்பதை சிங்கள ஆதிக்கம் உணர்ந்து கொள்ளாதது எவ்வளவு வேடிக்கையானது! ஒரு சகோதரன் முழு நேரமும் காட்டினுள் புலிகளுடனேயே இருந்து உதவி செய்தார். இரு ஆண் சகோதரர்கள் போராளிகளாக மாறினர். விடுதலையின் வேகத்தினைத் தாங்க முடியாத இராணுவம் காட்டிக் கொடுக்கும் கயவரின் துணையுடன் 1988 இல் ஒரு அண்ணனை வெட்டிக் கொன்றது. 1990 இல், திருமணமான ஒரு அண்ணனைச் சிறையில் அடைத்தது. பெண் பிள்ளைகளின் நிலையை எண்ணிக் கலங்கிய தாய், இறகினுள் குஞ்சுகளை பொத்தி வைக்கும் தாய்க் கோழியைப் போல தன் பெண் குழுந்தைகளுடன் காட்டுக்குள் ஓடி ஒளித்த நாட்கள் அனேகம். ஆனாலும் வளர்மதியின் போராட்டம் தொடர்பான செயற்பாடுகளை அத்தாய் கூட அறிந்திருக்கவில்லை . அவள் போராளியாக மாறிய பின்னரே அனைத்தையும் புரிந்து கொண்டாள். அடிக்கடி நிகழும் கலவரங்களினால் ஒன்பதாம் வகுப்புடன் தனது கல்வியை நிறுத்திய சாந்தி, தையல் கலையிலும் பாய் அடிப்பதிலும் தேர்ச்சி பெற்றாள். இவற்றின் நடுவிலும் அவள் பணி தொடர்ந்தது. 


போராளியாக இணைவதைவிட போராட்டத்துக்கு ஆதரவாக ஊருக்குள்ளே உலாவுவது தான் அங்கே மிகவும் கடினமான காரியம். காட்டிக் கொடுக்கும் கயவர் கூட்டம் கழுகுக் கண்களுடனும் கையில் வாளுடனும் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. இவற்றின் நடுவிலும் அவள் பணியைத் தொடர்ந்தாள். 08. 08. 1988 அன்று சாந்தி வீட்டிலே இருந்த நேரம். துரோகக் கும்பலுடன் நுழைந்த சிங்களப்படை அவளை அடித்து நொருக்கியது. "உண்ட கொண்ணன் எங்க” எனக் கேட்டுக் கேட்டு அடித்தனர். எவ்வளவோ அடிகள் விழுந்தும்கூட அவர்களுக்குச் சாதகமான பதில் ஒன்று கூட அவளின் வாயில் இருந்து வரவில்லை . அக்கொடிய படை போகும் போது "மறுகா வருவம்" என்றபடி போனது.

செய்தி அறிந்து வீட்டுக்கு ஓடி வந்த தாய் வீங்கிய முகத்துடன் இருந்த தனது மகளை வாரி எடுத்து அணைத்துக் கொண்டாள். ஆனால்,வளர்மதியின் உதடுகளோ"நான் இயக்கத்துக்குப் போப்பறன்" என்ற சொல்லைத் திரும்பத் திரும்பக் கூறியது. 


தனது நகைகளைக் கழற்றி தமக்கையின் குழந்தைகளுக்குப் போட்டவாறு "எனக்கிது தேவை இல்ல" என்று கூறியவளை மறுநாளிலிருந்து காணவில்லை.

விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் ஐந்தாவது பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக் கொண்டவள்.1990 ஆம் ஆண்டில் தனது ஒரு சிறு குழுவுடன் தான் பிறந்தமண்ணில் ஒரு முழுமையான போராளியாகக் காலைப் பதித்தாள். அந்நேரத்தில் புதிய பெண்புலிகளும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். பயிற்சி முடிவடைந்தது. பிள்ளைகளுடன் பிள்ளையாகவும் அதேவேளை குழுக்களை வழிநடத்திச் செல்லும் தலைவியாகவும் செயற்பட்டாள்.


சில காலங்களின் பின் சக போராளி ஒருத்தியுடன் ஊருக்குள் இறங்கி, தனது பிரச்சார வேலைகளை இரகசியமாக முடுக்கிவிட்டாள். அதன் பின், பல பெண்கள் இயக்கத்தில் இணைந்தனர்.

மீண்டும் சிங்கள வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. இரண்டாவது ஈழப் போர் ஆரம்பமானது. அவ்வேளையிலும் கூட மக்களின் எண்ணத்தினை அறியும் பொருட்டு

ஊருக்குள் தனது பணியைச் சில காலம் தொடர்ந்தாள் வளர்மதி.


சண்டைகளின் போது இவள் பெரும்பாலும் குழுத் தலைவியாகவே சென்றாள். அடிக்கடி பிள்ளைகளை அழைத்து இயக்க நிலைப்பாட்டை விளக்கி, உறுதியாகச் செயற்பட வேண்டும் என்று ஒரு தாயைப் போல புத்திமதி கூறுவாள்.

“நான் எடுத்த பயிற்சியைப் போல சகல பயிற்சியும் தரணும் எண்டு ஆசை. நல்லா வளக்கணும் எண்டு நிறைய எண்ணி வைச்சிரிக்கன். கொஞ்சக் காலம் போகட்டும். வாகனம் ஓட்டக்கூட பழக்கித்தெருவன்” என்று கூறுவாள். பொறுப்பாளராக இருந்த போதிலும், பிள்ளைகளுடன் பிள்ளையாகக் கரப்பந்து விளையாடுவதிலும், நீச்சலடிப்பதிலும், நகைச்சுவைத் துணுக்குகள் கூறுவதிலும் இணைந்தே நிற்பாள். அவளின் அத்தகைய குணமே பிள்ளைகள் மத்தியில் பெரும் மதிப்பினை வளர்த்தது. எள்எனும் முன்பு எண்ணெயாக வந்து நிற்கும் அளவுக்கு அவளிடம் பாசமும் பணிவும் கொண்டிருந்தனர்.


வளர்மதியின் உயிர் நண்பியாக விளங்கியவள் 2ஆம் லெப். நிலா. இருவரின் உரையாடலிலும் நகைச்சுவை இழையோடும். சிந்தனைவயமான வரிகளும் இணைந்து காணப்படும்.

“நிலா,கொழுத்தித்தான் என்னை எரிச்சாலும் என்ர கொள்கையில இருந்து ஒரு நாளும் விலகமாட்டேன். அது ! போலத்தான் எல்லாப் புள்ளைகளும் இருக்க வேணுமெண்டு விருப்பப்படுகிறன். எங்கட காலடி பெதிஞ்ச இடத்தில எங்கட ரத்தமும் உறைய நாங்க குடுத்து வெச்சவங்க" என்று ஆழ்ந்த உணர்வுடன் கூறுவாள். ! நிலாவோ "வளர்மதியக்கோ , நான் தான் முதல்ல சாவன்" என்னைப்பத்தி எழுதுங்க என்ன"? என்பாள்.


“போடி. நான் தான் சாவன்" என்பாள் வளர்மதி. ஆனால் நடந்ததோ ...கள்ளிச்சையிலிருந்து வெலிகந்தை நோக்கிக் காவல் உலாச் செல்லும் சிறிலங்கா இராணுவ அணி மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டது. சில போராளிகளைக் கொண்ட குழுவுக்கு தலைவியாக வளர்மதி,அவர்களுள் ஒருத்தியாக நிலா.சண்டைக்கெனச் செல்லும் போது தேவையான உணவுப் பொருள்களையும் கொண்டுதான் பயணம் தொடரும். கற்களும், முற்களும் நிறைந்த பகுதிகளையும். அருவிகளையும் மலைகளையும் கடந்து பயணம் தொடர்ந்து செல்லும். இத்தனை சிரமங்களின் மத்தியிலேதான் எதிரியின் மனோபலத்தைச் சிதைத்து புலிகள் போரிடுகின்றனர். நிலை எடுத்து இருக்கும் போது உடல்மேல் புழுக்கள் ஊரும், பாம்புகள் நெளியும். தொண்டை வரண்டு இருமல் வரும். அனைத்தையும் பொறுத்துக் கொண்டுதான் தயார் நிலையில் காத்திருப்பார்கள் புலிகள். இரு நாட்கள் பயணம். உரிய இடத்தில் நிலை எடுத்த பின்னர் தாக்குதல் தொடுக்கப்பட்டது. 


இருபது நிமிட இடைவெளியில் எதிரியின் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் எல். எம். ஜியும் அடங்கும். சிதறிய இராணுவம் ஓடுகின்றது. இறுதியில் விழுகின்றது. ஜீப்புடன் ட்ராக்டர் ஒன்றும் கைப்பற்றப்பட்டுச் சேதமாக்கப்பட்டன. இதில் நிலா வீரச்சாவினை அனைத்துக் கொண்டாள். நிலாவின் மார்பில் ரவையினால் ஏற்பட்ட காயத்தை வளர்மதியின் கை ஆறுதலாகத் தடவிக் கொடுக்கின்றது.

இறுதி வணக்கம் நடைபெற, பயணம் தொடர்கின்றது. தற்காலிகத் தளம் மீண்டும் அமைக்கப்பட்டது. வளர்மதி போராளிகளுடன் மட்டுமல்ல, வனத்து சீவராசிகளுடனும் அன்பாகவே தனது பொழுதினைக் கழித்தாள். 


ஒரு முறை காவல் உலாவுக்குச் சென்ற சமயம் தாய்க் குரங்கு ஒன்று தனது குட்டியை அணைத்தவாறு இவளைப் பார்த்தது. அக்குட்டியை எப்படியும் தான் எடுத்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இவளுக்கு. "தாயுடன் இரிக்கிறதை எப்படிப் பிரிக்கிறது? பேசாம வாங்க போவம்" எனத் தோழிகள் அழைத்தும் கூட, "திரத்திப் பாப்போம். அப்ப தாய் குட்டியைப் போட்டுத்து ஓடும். எடுப்பம்" என்றாள். அவள் சொன்னபடியே நடக்க, குட்டி வளர்மதி கையில். அருமையாக அதை வளர்த்தாள். 


ஒரு நாள் திடீரென பெரிய மழை பிடித்துக் கொண்டது. பொலித்தினாலான சிறு குடிசையில் நிறையப் பேர் நிற்க வேண்டிய நிலை. அங்கு வளர்மதியும்... சாக்கின் கீழே வெகு நிம்மதியாக உறங்கியபடி குட்டி. வளர்மதி அதைக் கவனிக்காமல் சாக்கின் மேல் ஏறி மிதித்ததில் குட்டி இறந்து விட்டது. "ஐயோ உங்கட புள்ளையை நீங்களே சாகவச்சிப் போட்டியளே" என சக போராளிகள் அனுதாபம் நிறைந்த குரலில் கூற, அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை. தன் துக்கத்தை வெளியில் காட்டாது மௌனமாக நின்றாள். அதன் பின்னர் குட்டிக் குரங்குகளைக் காணும் போதெல்லாம் "வளர்மதியக்காவோட புள்ளை போகுது" எனும் பிள்ளைகளின் கிண்டல்களை இதழின் ஓரத்தே ஒரு சிறு புன்னகையுடன் சமாளித்துக் கொள்வாள். மாதத்தின் பாதி நாட்களில் எதிரியின் வரவை வேவு பார்த்து, மிகுதி நாட்களில் திட்டம் தயாரித்து தாக்குதல் நடாத்தி ஆயுதங்களை அள்ளியபடி, வெற்றியுடன் திரும்புவர். 


இவ்வாறே மாதம் ஒரு முறை சண்டை எனக் கணக்கிட்டுத் தாக்குதல்கள் தொடரும். வேவுப் பிரிவு வந்துவிட்டது என அறிந்ததுமே வளர்மதியுடன் சில போராளிகள் பொறுப்பாளரின் முன் நின்று "அண்ணோ , நாங்களும்" என்பர். அனுமதி கிடைத்ததும் துள்ளியபடி சண்டைக்குரிய விடயங்ளைக் கலந்துரையாடச் சென்று விடுவர். போரில் வெற்றியுடன் திரும்பிய பின், கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும். வளர்மதி பிள்ளைகளுடன் இணைந்து தேவையான உதவிகளைச் செய்து, மேடை ஏறுவதில் பிள்ளைகளுடன் பிள் ளையாக நின்று சிரமப்படுவாள். இம்மாத நிகழ்ச்சியில் பங்குபெறும் போராளிகளில் சிலர் மறு முறை நடைபெறும் நிகழ்ச்சிகளில் இருக்க மாட்டார்கள். இப்படித்தான் சோகங்களினூடு கலை நிகழ்வுகளும் கலந்திருந்தன.


1992 சித்திரை மாதம் பொங்கல் விழா. தமிழரின் பூர்வீக விழா. அன்று பிள்ளைகளுக்கு வழங்க வென 'கேக்' வந்திருந்தது. அங்கு இவையெல்லாம் வருவது மிகவும் அபூர்வம், பிரித்துக் கொடுக்கும் பொறுப்பு வளர்மதியிடம் ஒப்படைக்கப்பட, பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி ஒவ்வொரு பிள்ளையாக அழைத்துக் கொடுத்த வண்ணம் 'சாப்புட்டு. மிச்சத்தை வையுங்க, சண்டைக்குப் போற நேரம் பசிச்சா தின்னலாம்" என்று கூறினாள்.


குரங்குக் குட்டிக்குப் பின்னர் அவளிடம் லக்சி எனும் பெயருடைய ஒரு கிளி இருந்தது.

பல நேரங்களில் அதனுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பாள். சண்டைக் குழுவுக்குப் பொறுப்பாக இருந்தவள், காட்டிலுள்ள அனைத்துப் பெண் போராளிகட்கும் பொறுப்பாளராக நியமிக்கபபட்டாள். அந்த வேளையில் தான் கள்ளிச்சைப் பகுதியில் இருந்து காவல் உலாவரும் இராணுவ அணி மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.


இதற்கிடையில் அவள் ஆசையாக வளர்த்த கிளி இறந்துவிட்டது. அது இவளுக்கு மிகவும் வேதனையை உண்டாக்கினாலும் அதனை வெளிக்காட்டாதவாறு தனது பணிகளைச் செய்த வண்ணம் இருந்தாள் மூன்று மணிக்குப் பயணம் ஆரம்பமானது. பதினான்காம் நாள் நிலை எடுக்கப்பட்டது. சிறிது தூரத்தில் சமையல் வேலை நடை பெற இரவு உணவு உண்ட பின்னர் பதினைந்தாம் திகதி மதியம் இரண்டு மணிவரை எதிர்பார்த்த எதிரியின் அணிவராததையடுத்து முன்னைய இடத்துக்கு மீள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தனது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்து கொண்ட வளர்மதி, அதனைப் பெரிதுபடுத்தாமல் புறப்பட ஆயத்தமானாள். குழுவின் தலைவியல்லவா அவள்! அவள் சோர்ந்தால் பிள்ளைகளை யார் வழிநடத்துவது? அவள் முன்னே நடக்க, பின்னே பிள்ளைகளும் ஒற்றை வரிசையாகத் தொடர்ந்தனர். அவர்களுக்கு முன்னே ஆண் போராளிகளும் அதே போலச் சென்று கொண்டிருந்தனர்.


திடீரெனத் துப்பாக்கி வேட்டொலிகள். அனைவரும் ஒருகணம் நின்று தமது நிலைகளை சரி செய்து கொண்டனர். ஒலிக்குரிய காரணம் ஒரு கரடி என்பதை அறிந்ததும் அதனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்கும் ஏழ, "அக்கோ கரடி" என்றவாறு மிகுதியை முடிக்காது நின்ற பிள்ளைகளின் மனதை அறிந்து, "செரி போய்ப் பார்த்தித்து வாங்க. நான் இதில இரிக்கன்” என்றவாறு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டாள்.


என்ன தான் மறைத்திருந்தாலும் உடல் நிலையை அவளின் முகம் தெளிவாக எடுத்துக் காட்டியதை அவதானித்த மருத்துவப் பிரிவு பெண்போராளி, “அக்கா வருத்தமாக்கா”? எனக் கேட்கவும் "காய்ச்சல்தான், கஸ்ரம் இல்ல" என்று மொட்டையாக பதிலளித்தாள், பனடோல் ஒன்று கொடுக்கப்பட்டது. கரடி பார்த்துத் திரும்பினர் பிள்ளைகள். பயணம் தொடர்ந்தது. பதினைந்தாம் நாள் இரவு ஒரு மலை அடிவாரத்தில் உணவருந்தி ஓய்வெடுத்துக் கொள்கின்றனர். சிறிதளவு உணவு உண்ட பின்னர் வளர்மதியும் உறங்கினாள். மறுநாள் காலை உணவை முடித்த பின்னர் பயணம் தொடர்ந்தது. பிள்ளைகளுக்கு முன்னே வழிகாட்டி நடந்த வளர்மதி, சிறிது சிறிதாகப் பின்தங்கி, கடைசியாக வந்து கொண்டிருந்தாள். அப்போதுதான் அவள், "எனக்கு இயலாமக் கிடக்குது. தலை எல்லாம் கிறுகுது" எனக் கூறினாள். சில மணித்தியாலங்களுக்கு அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டது. ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து விட்டாள் வளர்மதி. வாந்தி எடுத்து களைப்படைந்ததால் 'சேலைன்' ஏற்றப்பட்டது. மீண்டும் ஒன்றரை மைல் நடைப் பயணம் அவளால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை . அவளின் அனுமதியின்றியே பிள்ளைகள் அவளை 'ஸ்ரெச்சரில்' ஏற்றினர். அவளை மாறி மாறிச் சுமந்த வண்ணம் பிள்ளைகள் நடந்தனர். இரவு ஒரு இடத்தில் தங்கினர். வேறு இடத்துக்கு வருமாறு அழைப்புவர மீண்டும் பயணம் ஆரம்பமானது. 


வளர்மதி 'ஸ்ரெச்சரில்' ஆடாமல் அசையாமல் கிடந்தாள். களைப்பு மிகுந்ததால் 'ஜீவனி' கொடுக்கப்பட்டது. அவளது உதடுகள் நிறையப் பேசத் துடித்தன. ஆனால் அவை தொண்டையினுள்ளேயே சிக்குண்டு போயின. "சாயம் தாங்க"! இறுதியாக மிகவும் சிரமப்பட்டு வந்த சொற்கள்தான் அவை. அதைக் குடித்த சில நிமிடங்களில் எல்லோரிடமிருந்தும் அவள் விடை பெற்றுக் கொண்டாள். வளர்மதி! அவள் சந்தித்த களங்கள் ஏராளம். கள்ளிச்சை, வாகனேரி, சிங்கபுர, கொழும்பு வீதி, மண்முனை, மகிழடித்தீவு, உன்னிச்சை, பாலையடிவெட்டை, சித்தாண்டி பொலிஸ் நிலையம் எனப் பல களங்கள். ஒவ்வொன்றிலுமே பலமாகச் செயற்பட்டு, எதிரிக்குத் தக்க பதிலடி கொடுத்தவள். 


ஒரு வேங்கை விழ பல வேங்கை எழுவர் என்பதற்கு அவள் நல்ல உதாரணம் அவள்விட்ட பணியைத் தொடரவெனப் பல பெண்புலிகள் தென் தமிழீழத்திலிருந்து எழுந்து தயாராகி வருகின்றார்கள். நிலா, கல்யாணி, வளர்மதி, விவேகா, நிரந்தரி, என பல உடல்கள் அக்கானகத்திடையே விதைக்கப்பட்டன. ஆயினும் பணி தொடர்கின்றது. சோகங்களையே சொந்தமாக்கியபடி, இலட்சியம் ஒன்றை வென்றெடுப் பதற்காகப் பயணம்  இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது.


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code