Ad Code

Recent Posts

தமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.

2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை  “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா?” எனக் கேட்ட கேள்விக்குப் பதில்

“”அதற்குரிய வயதாகிறபோது அம்முடிவை அவர்களே எடுப்பார்கள்” என்று கூறிய அவர், “”உண்மையில் இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என் சொந்த பிள்ளைகளைப் போலவே நான் உணர்ந்து நடத்தி வருகிறேன். போராளிகளுக்கும், என் பிள்ளைகளுக்குமிடையே நான் எவ்வித வேறுபாட்டையும் பார்ப்பதில்லை” என்றார்.


அவரது  மகன் 24 வயதே ஆன சார்லஸ் அன்டனி மே 18-ந் தேதியன்று களத்தில் வீரமரணம் அடைந்தார். மகள் துவாரகா  22 வயதே ஆன அவரது  மகள் துவாரகாவும் அதே மே-18-ம் தேதியன்று களத்தில் வீர மரணம் அடைந்தார்கள்

சார்லஸ் அன்டனி என தன் முதல் குழந்தைக்கு பிரபாகரன் பெயர் சூட்ட காரணங்கள் உண்டு. 1983 ஏப்ரல் வரை இந்தியாவில் பிரபாகரனோடு இருந்த அவரின் நம்பிக்கைக்கும் நேசத்திற்குமுரிய மூத்த போராளி சார்லஸ் அன்டனி. இந்தியாவிலிருந்து தமிழீழம் திரும்பிய பின் ராணுவத்துடன் நடந்த மோதலில் சார்லஸுக்கு காலில் குண்டடி பட்டுவிடுகிறது. தப்பி ஓட முடியாத நிலை. அது புலிகளிடம் ஆயுதங்கள் அதிகமாக இல்லாத காலம். தன் சக போராளிகளிடம் “”என்னை சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதத்தைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுங்கள்” என ஓர் தளபதியாக உத்தரவிட்டு வீரமரணம் தழுவிய நாயகன் சார்லஸ் அன்டனி. அவனது நினைவாகவே தன் மகனுக்கும் அப்பெயரை சூட்டினார் பிரபாகரன்.

தலைவனின் மகனென்று ஒருபோதும் தன்னை காட்டிக் கொள்ளாத குழந்தை சார்லஸ் அன்டனி. படித்தது யாழ்ப்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில். படிப்பில் படு கெட்டிக்காரன், பண்பில் அப்படியொரு பணிவும் சாந்தமும் உடையவன் என கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பலரிடத்தும் சிலாகித்ததாகக் கேட்டிருக்கிறேன். வருவதும் போவதும் எவருக்கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப்பாணத்தின் ஒரு சாதாரண மாணவனாகவே சார்லஸ் அன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன்னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல.

அவரைப்பற்றி நான் உரையாடிய அத்தனை தளபதிகளும் கூறினர். தலைவரின் முதல்மகன் என்பதால் தளபதிமார் அத்தனை பேருக்கும் சார்லஸ் செல்லம். எவரையும் காயப்படுத்தாத, எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத, எல்லோரிடத்தும் “அப்பா, மாமா, அண்ணே… என்று குழைந்து திரியும் குழந்தை என்றே நான் பேசிய அத்தனைபேரும் சார்லஸை கொண்டாடினார்கள்.

துவாரகா அமைதியான பிள்ளை. தெய்வீக ரோஜாபோல் எப்போதும் கள்ளமில்லா வெள்ளை முகம். “எனது தேவதை இந்தப் பிள்ளை’ என கடவுளே கனிந்துருகக்கூடிய அன்புள்ளம் கொண்ட அருட்கொழுந்து துவாரகா என்கிறார்கள்.

அயர்லாந்து டப்ளின் நகரில் மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு, அங்கே தங்கி விடாமல் தமிழீழ மண்ணுக்குத் திரும்பி “மாலதி படையணி’யில் நின்று களமாடியது.

முல்லைத்தீவு இறுதி முற்றுகையின்போதும் கலங்காத காரிகையாய் அதே மாலதிப் படையணியில் முன்னணிப் போராளியாய் நின்று களமாடிய என் இனத்தின் காவியம் துவாரகா. எழுதும் போதே கண்கள் பனிக்கின்றன. எங்கள் ப்ரியமான சிறு தெய்வங்களில் ஒன்றாகிவிட்ட துவாரகா… எவருக்கும் தெரியாமல் வன்னிக் காடுகளுக்குள் பூக்கள் மலரும் காலம்வரை… முல்லைத்தீவு கடல்வெளியில் மௌனமாய் காற்றுவீசும் காலம் வரை உன் நினைவுகளும் உயிராய்… உணர்வாய் அவற்றையும் கடந்த தெய்வீகத் தேடலாய் எம்மிடையே நிற்கும்.

உண்மையில் கிளிநொச்சி விழுந்தபின் சார்லஸ் சிறப்பு அதிரடிப் பிரிவொன்றின் அங்கமாய் புலமொட்டை காட்டுப் பகுதிக்குள்தான் நகர்ந்து நின்றிருக்கிறார். ஆனால் முல்லைத்தீவு முற்றுகை இறுகிக்கொண்டே வர, விடுதலைப் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகலவேண்டுமென்று தளபதியர்கள் முடிவெடுத்தபோது அதை ஏற்க மறுத்தார் பிரபாகரன். என்னை நம்பி வந்த மக்களையும் போராளிகளையும் விட்டுவிட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமாயிருந்திருக்கிறார்.

தமிழுலகே, இப்படியோர் அப்பழுக்கில்லா உன்னதம் உலகில் வேறெந்த விடுதலை இயக்கமும் கண்டிருக்கவில்லையென உரத்துச் சொல், திமிருடன் பெருமிதம் கொள்.








மே 18. அதிகாலை 2 மணிக்கு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தம் தொடங்கியது. சிறப்பு படையணியில் சார்லஸும், மாலதி படையணியில் துவாரகாவும் நின்று களமாடினார்கள்.

மே-18-ம் தேதியன்று களத்தில் சார்லஸும் , துவாரகாவும் வீர மரணம் அடைந்தார்கள்.

தமிழீழ தாயக விடுதலைக்காக களமாடி வீழ்ந்த தலைவனின் பிள்ளைகளாகிய உங்களிற்கும் எம் மாவீரர்களிற்கும் தலை குனிந்து வணங்குகின்றேன். உங்கள் தியாகங்களை போற்றி உங்கள் பின்னால் அணி வகுப்போம் தமிழீழம் கிடைக்கும் வரை. 

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Comments

Link kopiert! Bereit für Instagram.