Ad Code

Recent Posts

லெப்டினன்ட் தமிழ்மாறன் வரலாற்று நினைவுகள்


லெப்டினன்ட் தமிழ்மாறன்
நெல்லிநாதன் விவேகானந்தன்
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை
வீரப்பிறப்பு: 06.12.1969
வீரச்சாவு: 09.07.1992

வீரச்சாவு நிகழ்வு: இயக்கச்சிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு  

ஒரு புலிவீரனிடமிருந்து அம்மாவுக்கு....
25.02.1992
அன்புள்ள அம்மாவிற்கு,

தமிழீழ தாகத்தை நெஞ்சில் சுமந்தநிலையில் உன் மகன் வரையும் இறுதி மடல் இதுவாக இருக்கட்டும். நான் இளம்பிறை, தமிழ்மாறன் ஆகிய இரு போராளிகளோடு இனியில்லை என்ற அளவிற்கு பாசத்தைச் செலுத்தும் விதத்தில் என் மனதில் பாசம் என்ற விதையை விதைத்து வளர்த்தெடுத்ததற்கும், என்னைத் தமிழீழத் தாயின் தவப்புதல்வனாக்கி எத்தனையோ உடன் பிறவாச் சகோதரங்களுடன் பழகவிட்டதற்கும், நீங்களும் ஓர் தமிழ்த்தாய் என்ற வகையில் உங்கள் மகனின் மனப்பூர்வமான நன்றிகள்.

நான் பல்கலைக்கழகப் படிப்பை நிறுத்திவிட்டு இயக்கத்திற்கு வந்தது உங்களிற்கு வேதனையாக இருக்கலாம். எத்தனையோ கஷ்டப்பட்டு பெற்று வளர்த்து ஆளாக்கிய உங்களிற்கு உள்ள வேதனை, உங்களைப் பொறுத்த வரையில் நியாயமாக இருக்கலாம், ஆனால் என்னைப் பெற்ற உங்களிற்கு வேதனை இருக்குமானால், பல்லாயிரக்கணக்கான மக்களைத் தன்மடியில் பெற்றெடுத்த தமிழீழத்தாயின் தமிழீழத்தாயின் மனம் என்ன வேதனைப்படும்? 

சொல்லுங்கள் அம்மா! 

நான் அந்தத்தமிழீழத் தாயின் அடிமை விலங்கொடிக்கத்தானே புறப்பட்டேன்? மாறாக கள்ளுக் குடித்தேனா; களவெடுத்தேனா; ஊராகச் சுற்றித் திரிந்தேனா: இல்லையம்மா இல்லை. உன் பிள்ளையை உன் முன்னால் அடித்துக் கொன்றால் அதைப் பார்த்துக்கொண்டு இருப்பாயா? 

தமிழீழத்தாயின் தவப்புதல் வர்கள் - தவப்புதல்விகள் எத்தனைபேர் சுட்டுத்தள்ளப் படுகிறார்கள்? தீயிட்டுக் கொளுத்தப்படுகிறார்கள்? 

இதைத் தடுக்க வேண்டாமா அம்மா? 

தமிழீழத்தாயின் தேகமெங்கும் இரத்தவடுக்கள்: அவன் மேனியெங்கும் சிவப்பு நிறம். இதை அகற்ற வேண்டாமா அம்மா? தமிழ்த்தாயின் கால்களிலும் கைகளிலும் அடிமைச் சங்கிலி கட்டப்பட்டுள்ளதே; இதை அறுக்க வேண்டாமா அம்மா? நம் தமிழீழத். தாய்க்கு நேர்ந்த துயரை நாமல்லவா துடைக்க வேண்டும்

எத்தனை ஆயிரம் பெண்கள் போராட்டக்களத்தில் குதித்திருக்கிறார்கள். நகைகள் போடும் கனவுகளைத் துறந்து, தாவணி போடும் கனவுகளைத் துறந்து அவர்கள் போராடுகிறார்களே! 

எத்தனை சிறுவர்கள் தாயகத்திற்காக வந்திருக்கிறார்கள்! இவர்களுக்குப் படிக்கத் தெரியாதா; பட்டம் பெற்று வாழத்தெரியாதா? தாங்கள் மறுநேரம் சாவைச் சந்திக்கலாம் என்று இவர்களுக்குத் தெரியாதா? இத்தகைய பிஞ்சு மலர்கள் எல்லாம் நஞ்சையணிந்து கல்லிலும் முள்ளிலும் நடந்து செல்கையில், நாம் பஞ்சணையைத் தேடி வெளிநாடு செல்வதா? இது எமக்கு அழகா? இந்தச் சிறுவர்களும், பெண்களும் இழக்கக் கூடாதவற்றையெல்லாம் இழந்து வந்திருக்கிறார்களே, எதற்காக? சுதந்திரத்தை இழக்கக்கூடாது என்பதற்காகத்தானே?

இவர்கள் துன்பங்களைச் சுமந்து கொண்டிருக்கையில் நாம் புத்தகமும் எடுத்துக் கொண்டு படிக்கச் செல்வதா?

நாம் வீதியால் உல்லாசமாய்ப் போய்த்திரிய 15 வயதுப் பாலகர்கள் உயிர் துறப்பதா? வேண்டாம் அம்மா வேண்டாம். அடுத்த சந்ததியும் இப்படி வருவதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதம்மா. நாம் தான் போராடி அடுத்த சந்ததியை வளமாக வைத்திருக்க வேண்டும்.

லெப். தமிழ்மாறன்
(நெல்லிநாதன் விவேகானந்தன், அராலி வடக்கு, வட்டுக்கோட்டை) என்ற இப் போராளி, வெற்றிலைக்கேணியிலிருந்து இயக்கச்சி நோக்கி முன்னேறிய படையினருடனான சண்டையின்போது, 09.07.92 அன்று, வீரச்சாவு அடைந்தார். இவர் தனது தாயாரிற்கு எழுதியகடிதம் இது.

இன்று 4250இற்கு மேற்பட்ட போராளிகள் வீரமரணம் அடைந்திருக்கிறார்கள். அவர்களின் தியாகங்களை நாம் மறப்பதா? ஒவ்வொரு போராளியினதும் வாழ்க்கை எவ்வளவு பயங்கரமானது; 

இத்தனை போராளிகளும் எங்களை நம்பித்தானே சாவை அணைத்துக் கொண்டார்கள்; இவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவார்கள் என்ற இறுதி ஆசையுடன் தானே மடிந்திருப்பார்கள்? நாம் இன்னும் போராடாது காலம் கழித்தால், அது இவர்களுக்கும் இந்த மண்ணுக்கும் செய்யும் துரோகமல்லவா?

தென்தமிழீழத்தில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து கலைக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர். இதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் போராட்டத்தின் தேவை-அவசியம் என்பதையல்லவா வலியுறுத்துகிறது. இன்று ஒவ்வொரு தமிழனும் தேவையில்லாமல் அநியாயமாகச் சாகிறானே! இவர்களின் உடல்கூட தெருக்களில் நாதியற்றுக் கிடக்கிறதே!

இது தேவையா அம்மா? இப்படியானதொரு சாவை நான் விரும்பவில்லை; நான் எனது சாவை ஒரு சரித்திரமாக்கவே விரும்புகிறேன்.

அம்மா, என்மீது நீங்கள் கூடுதலாகப் பாசம் கொண்டுள்ளீர்கள் என்று சொல்லலாம். ஆனால் உங்களிலும்விட இருவர் என்மீது கூடுதலான பாசத்தைச் செலுத்தி விட்டார்களே! ஒருவன் இளம்பிறை, மற்றையவன் தமிழ்மாறன். நானும் அவர்கள்மீது இணைபிரியாத பாசத்தைச் செலுத்திவிட் டேனே. இது என் வீட்டில் நிகழுமா? அவர்கள் எங்கோ ஒரு மூலையில் பிறந்தவர்கள். நான் எங்கோ ஒரு மூலை யில் பிறந்தவன். எந்தவித சொந்த பந்தமுமற்ற நிலையில் எல்லாவற்றையும் இழக்கத்தயாராக இயக்கத்திற்கு வந்த போதுதானே, இப்படியானதொரு பாசத்தைக் காண்கிறேன்.

இயக்கத்திலுள்ளவர்கள்

கருணையற்றவர்கள், பாசம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் என்று சிலர் நினைப்பதுண்டு. இது தவறு. தாய்மீது பாசம் இல்லாவிட்டால் தாயகமண்மீது எவ்வாறு பாசம் வந்திருக் கும்? இவர்கள் தாயக விடுதலை எனும் கடமையின் முன் பாசத்தைத் தலைகுனியச் செய்பவர்கள்.

நான் வீரமரணமடைந்தால் நீங்கள் துன்பப்படுவீர்கள் என்பது எவ்வளவிற்கு உண்மையோ, அதேபோல் எனக்கருகில் உள்ளவர்கள் - என் மீது அளவற்ற பாசத்தைச் செலுத்தியவர்களும் துன்பப்படுவார்கள் தானே அம்மா? 

கவிஞர் ' இரும்பொறை ' சொன்னார்; "என்னை மிக அதிகமாக நேசிப்பவர்கள் இன்னும் எனது ஆயுதத்தையும் சீருடையையும் நேசிக்கவில்லை என்று. ஆனால் இன்று என்னை மிகமிக அதிகமாக நேசிக்கும் தமிழ்மாறனும், இளம்பிறையும் ஆயுதத்தையும் சீருடையையும் நேசித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்!

இத்துடன் முடித்து கொள்கிறேன். 


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code