பெனடிற் றெக்சன்
எழுத்தூர், மன்னார்
வீரப்பிறப்பு: 01.07.1974
வீரச்சாவு: 28.08.1990
வீரச்சாவு நிகழ்வு: கோட்டையில் 21.08.1990 அன்று இடம்பெற்ற சமரில் விழுப்புண்ணடைந்து மருத்துவமனையில் பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
அன்பான தமிழீழ மக்களே!
கோட்டை காவலரணில் கடந்த 28-8-90 அன்று வீர மரணமடைந்த பிரதீபன் என்ற போராளி தன்னுடன் வைத்திருந்த ஒரு எழுத்துக் கொப்பியின் முன் அட்டையில் இருந்த ஒரு வாசகம்தான் இத்தலையங்கம்.
கொப்பி முன் அட்டையின் மேற்பக்கத்தில் அச்சாகியிருந்த கல்வியே எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்ற வாசகத்தின் முதற் சொல்லாகிய "கல்வியே" என்பதை வெட்டிவிட்டு "போராட்டமே" எதிர் காலத்தை நிர்ணயிக்கும் என்று திருத்தி எழுதியிருந்தார்.
மாணவனாக இருந்து போராட்டத்திற்கு வந்த ஒரு இளைஞனின் புதிய பார்வையை இன்றைய இளைஞர்களின் முன் சிந்திப்பதற்காக வைக்கின்றேன்.
எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காரணி தொடர்பான இப்போராளியின் புதிய பார்வையானது இன்றைய காலகட்டத்திற்கு மிகச் சரியானது.
கல்வி மனித முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது என்பது உண்மையே.
ஒரு காலகட்டத்தில் தமிழ்மக்களில் கணிசமானவர்களின் பொருளாதார உயர்ச்சிக்கு வழிவகுத்ததும் கல்வியேதான்.'
உயிர் பாதுகாப்பிற்கான போராட்டங்கள் எதுவுமற்றிருந்த ஒரு காலகட்டத்தில் கல்வியும் அதன் வழிவந்த வேலை வாய்ப்புகளும் கணிசமான தமிழர்களின் எதிர்காலத்தை நிர்ணயித்தது என்பது உண்மைதான்.
ஆனால். இன்று இந்த மண்ணில் தமிழ் மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, உயிர் வாழ்வதற்கு ஒரு போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போராட்டத்திற்கு கல்வியும் அதன்மூலம் வந்த அறிவும் பயன்பட வேண்டும்.
எமது தமிழ்ச் சமூகம் இதுவரை காலமும் பெற்று வந்த கல்வியும் அது வழங்கிய அறிவும் இன்றைய இக்கட்டான சூழலில் எமது மண்ணிற்கோ அல்லது எமது மக்களின் சுபீட்சமான சுதந்திர வாழ்வுக்கோ போதியளவு பயன்படவில்லை என்பது வேதனைக்குரியது.
எமது மக்கள் தமது சுதந்திரத்திற்காக ஆர்ப்பரித்தெழுந்து, இரத்தம் சிந்தியபோது எமது கல்வியானது திருப்திப்படக்கூடிய அளவுக்கு விடுதலைப் போராட்டத்திற்கு கைகொடுக்கவில்லை.
இக் கல்வி உருவாக்கிய இம் மண்ணின் மைந்தர்களான மருத்துவர்களும், பொறியியலாளர்களும், அறிவு ஜீவிகளும் சுதந்திரத்தைப் பிரசவிக்க எமது தமிழீழத்தாய் துன்பமுறும் போது அவள் அருகில் இல்லை. அவள் கொடுத்த கல்வியைப் பெற்று அறிவு உழைப்பாளர்களாக மாறிய பின் தமிழீழத்தை விட்டே சென்றுவிட்டார்கள்.
இதை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்கள் சொல்லப்படலாம் அவை அனைத்தும் தமது பொருளாதார வாய்ப்புகளை போராட்டம் தடுத்து விட்டது என்ற நிலையில் போலியான அந்தஸ்துக்களைக் கட்டிக்காக்க முடியாமல் போகின்றது என்ற ஆதங்கத்தில் எழுந்த சுயநல காரணிகளாகவே இருக்கும்.
மாறாக, அந்தக் கல்வியை முறைப்படி பயின்றிராத போர்க்கள அனுபவத்தைப் பெற்ற மருத்துவர்களும், பொறியியலாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களும், சிந்தனைவாதிகளுமே இன்று தமிழீழத்தாயின் அருகில் நின்று அவளது இன்ப துன்பங்களில் பங்கெடுக்கின்றனர். சுதந்திரக்குழந்தையின் சுகப்பிரசவத்திற்காகப் பாடுபடுகின்றனர்.
உண்மை இவ்விதமாக இருக்கும்போது எமது மக்களின் எதிர்காலத்தை இன்றைய காலகட்டத்தில் கல்விதான் நிர்ணயிக்கின்றது எனக் கூறமுடியாது.
போராட்டமே எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றது.
நாம் இதுவரை காலமும் பெற்ற கல்வியும், அது தந்த அறிவும் தனி மனித முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டிருந்ததே அல்லாமல் சமூக மேம்பாட்டை இலக்காகக் கொண்டிருக்கவில்லை.
இதற்குக் காரணம் எமது கல்வியமைப்பை உருவாக்கியதும், நெறிப்படுத்தியதும் அந்நியர்களே என்பதுதான்.
அனைத்தையும் கருதியதுபோல கல்வியையும் தமக்குப் பயன்படும் உற்பத்திப் பொருளாகத்தான் ஆட்சியாளர்கள் கருதிச் செயற்பட்டிருந்தார்கள். சுதந்திர உணர்வுடன் இசைந்து போகாத கல்வியைத்தான் அன்னியர்கள் எமது மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அதனால்தான் அந்தக் கல்வியானது இக்கட்டான நிலையில் எமது மண்ணிற்கும் மக்களுக்கும் கைகொடுக்கவில்லை. அத்துடன் பல சந்தர்ப்பங்களில் எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாடையும் எடுக்கத் துணிந்திருக்கின்றது என்பதையும் கூறியே ஆகவேண்டும்.
இதனுடைய அர்த்தம் நாம் கல்வியை முற்று முழுதாகப் புறக்கணிக்கவேண்டும் என்பதல்ல.
எமது மண்ணிற்கும், மக்களுக்கும் பயன்படக் கூடிய வகையிலேயே அக்கல்வி இருக்கவேண்டும்.
இன்று போரின் மூலம்தான் தமிழ்மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.
போரிடாவிடின் எமக்கு வாழ்வில்லை. எனவேதான் எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவக்கூடிய கல்வியைத்தான் இன்றையவர்கள் பெறவேண்டும் போரை அடிப்படையாகக் கொண்ட கல்வியைத்தான் இன்றைய தமிழீழ மாணவர்கள் பெறவேண்டியுள்ளது.
இன்று எமது மக்களின் விடுதலைப் போராட்டமானது இதுவரை நாளும் எமது சமூகத்தில் இருந்து வந்த அன்னிய மனோபாவத்தை நியாயப்படுத்தும். அடிமை மனோபாவத்தை சகித்துக் கொள்ளும், போர்க்குணத்தை மறுக்கும் காலணித்துவ சமூக இயக்கத்தை குலைத்து வருகின்றது.
இது எமது விடுதலைப் போராட்டத்தின் உயர் வளர்ச்சியின் ஒரு விளைவு.
சமூக வளர்ச்சியை நோக்கிய இம்மாற்றங்கள் நிகழ்ந்து வரும் இந்த இடைக்கால கட்டமானது சிலரால் ஏற்றுக் கொள்ள கொள்ள முடியாததும், சிலருக்கு நம்பிக்கையற்ற தன்மையையும் ஏற்படுத்துகின்றது என்பதை அறியமுடிகின்றது.'
ஆனால், இந்த நம்பிக்கையற்ற தன்மையையும், மனோபாவங்களையும் ஏற்றுக்கொள்ளமுடியாத தாண்டி அந்த முற்போக்கான மாற்றங்கள் மெதுவாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
இதனால் சமூகம் பற்றிய புரட்சிகரமான பார்வைகளும்; புதிய சிந்தனை வீச்சுக்களும் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதன் வெளிப்பாடுதான்.
இந்த மண்ணின் விடுதலைக்காக தன்னுயிரை அர்ப்பணித்துவிட்ட 16 வயது நிரம்பிய இளம் போராளி பிரதீபனின் அதிஉயர் சிந்தனையாகும்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்