Ad Code

Recent Posts

கப்டன் உஷா வீர வரலாற்று நினைவுகள்

கப்டன் உஷா
வனிதாம்பிகை இராசையா
3-ம் வட்டாரம், முள்ளியவளை 
வீரப்பிறப்பு: 20.10.1967
வீரச்சாவு: 13.07.1990

நிகழ்வு: கொக்காவில் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு


"இதுதான் என்ரை கடைசிச் சண்டையாக இருக்கும். நான் செத்தா இந்த யூனி போஃமைத்தான் என்ரை பொடிக்குப் போடவேணும்"


தனது புதிய வரிச் சீருடையை மடித்த படி கூறினாள் உஷா. எல்லோரும் அவளையே பார்த்த வண்ணம் நின்றனர். உஷா கொக்காவில் இராணுவத்தளம் மீதான தாக்குதலுக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தாள்.


எங்கள் உஷா!


அவள் ஓர் உற்சாசம் மிகுந்த கலப்பான போராளி, அவளிருக்கும் இடத்தில் கலகலப்புக்கும் சின்னச் சின்னக் குறும்புகளுக்கும் பஞ்சமில்லை. அவளைச் சுற்றிக் கொஞ்சப் போராளிகள் கூட்டம் ஒன்று கலகலத்தபடி திரியும்.


இந்திய இராணுவம் எமது மண்ணில் மூலை முடுக்கெல்லாம் நுழைந்து வேருன்றிப்போயிருந்த காலம் அது. புலிகளின் காட்டு வாழ்க்கை மிகவும் கடினமானது. சொல்லொணாத் துன்பங்கள் நிறைந்தது. தமக்கு வேண்டிய சகல தேவைகளையும் மிகுந்த நெருக்கடிகளின் மத்தியில் தான் பெற்று வாழ்ந்த காலம்.


அந்தக் கடினமான வாழ்க்கைக் காலப் பகுதியிலும் உஷா உற்சாகமாகத் திரிந்தாள். இருபது அடிகள் ஆழத்துக்கும் அதிகமான ஆழக் கிணறுகளைத் தாங்களே தோண்டும்போது, வேலை செய்த களைப்புத் தெரியாமல் இருக்க உஷா பாடல்கள் பாடுவாள். அவளது பாடல்களில் மெல்லிய சோகம் ஒன்று இழையோடி, ஆழ்ந்து அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். அவள் தனது பாடலை மேல் சுருதியில் கொண்டுபோய் முடிக்கும்போது, எல்லாப் போராளிகளுமே அவ்விடத்தில் உறங்கிப்போயிருப்பார்கள். இது உஷாவின் பாட்டின் சக்தியோ, அல்லது வேலைக்களைப்பு மிகுதியோ என்பதைத் தெளிவாக வரையறுத்துச் சொல்லமுடியாது. பின்னர் மீண்டும் எழுந்து வேலையைத் தொடர்வார்கள்.


இனிமையாகப் பாடக்கூடிய உஷாவின் வாயிலிருந்து பெரும்பாலும் "ஒரு கூட்டுக்கிளியா... என்ற பாடல்தான் வரும். இறந்து போன தனது ஒரே ஒரு அண்ணனை நினைத்து, இந்தப் பாடலை அவள் பாடுவாள்.


1985 ஆம் ஆண்டு...


விடுதலைப் புலிகள் மகளிர் படையணி தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செயற்பட்ட காலம் இந்தக் காலப் பகுதியில்தான் அவள் தன்னை இயக்கத்தோடு இணைத்துக்கொண்டாள். அப்போது அவளது குடும்பம் பொருளாதார நெருக்கடியால் வாடிக்கொண்டிருந்தது. ஆனாலும் வீட்டிக்கு வருவோரையும் போராளிகளையும் உஷா உபசரித்துக் கொண்டுதான் இருந்தாள். இவர்களுக்கென்று சொந்தமாக இருந்த காணியிலிருந்து கிடைக்கும் தேங்காய்கள், பழங்களை விற்றே இவர்களது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. தாயை இழந்த அவளது குடும்பப் பொறுப்பை அவளின் ஒரேயொரு அண்ணனும் தந்தையும் பொறுப்பேற்று வாழ்ந்தபோது அவள் செல்லமாகத்தான் வளர்த்தாள்.


குழந்தைகளோடு குழந்தையாக, உற்சாகமாகத் திரிவதில் அவளுக்கு அலாதியான விருப்பம்.


'அக்கா, அக்கா' என்றபடி அவளைச் சுற்றி ஊரிலுள்ள குழந்தைகளெல்லாம் திரியும். ஊர்ப் புழுதிகளை அளைந்தபடி திரியும் குழந்தைகளை- அது யாருடைய குழந்தையாக இருந்தாலும் சரி - தூக்கி வந்து குளிப்பாட்டுவது அவளுக்கு உற்சாகமானதொரு பொழுதுபோக்கு. தாய்மார் தங்களது குழந்தைகளைக் காணவில்லையே என்று தேடித் தவித்துக்கொண்டிருக்கும்போது, அந்தக் குழந்தைகள் உஷா வீட்டுக் கிணற்றடியில் குளித்துக்கொண்டிருக்கும்.


படிப்பில் மிகவும் கெட்டிக்காரியாகவும், கலை நிகழ்ச்சிகளிலும் சிறந்து விளங்கிய இவள் ஒருமுறை இவர்களது பாடசாலையில் நடைபெற்ற சைக்கிள் ஓட்டப்போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றாள். ஒவ்வொரு முறையும் பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் பரிசில்களை இவளே தட்டி வந்தாள். நீச்சலிலும் இவள் சளைத்தவள் அல்ல.


இதே காலகட்டத்தில்தான் சிங்கள இனவாத அரசின் பிடியால் அல்லல்பட்ட தென் தமிழீழ மக்களை உஷா சந்தித்தாள். இவளின் கிராமத்தில் தங்கியிருந்த இடம் பெயர்ந்த மக்களிடம் சென்று அவர்கள் அனுபவித்த துன்பங்களைக்கேட்டு அறிந்துகொண்டாள். அவர்களுக்குத் தன்னாலான உதவிகளையும். ஆறுதல் மொழிகளையும் வழங்கினாள்.


இயக்கத்தைப்பற்றிச் சிறுவர்களிடையே எடுத்துரைத்தாள். தானும் இணைந்து கொண்டாள்.


அப்போது மக்கள் எமது போராட்டத்தைப் பற்றி முழுமையாக விழிப்படையாத நேரம். பெண்கள், சமூகத்தின் மிக மோசமான பிடிக்குள் அடக்கி  ஒடுக்கப்பட்ட நேரம். பன்னிரெண்டு பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து தம்மை இயக்கத்தில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்குள் உஷாவும், லெப்.துர்க்காவும் அடங்குவர்.


இவர்கள் பயிற்சிக்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள்  பயணித்த படகுகள் இந்தியக் கரையை அண்மித்ததும், இவர்களை அழைத்துச் சென்ற ஆண் போராளிகளுள் ஒருவர். "சரி இதுக்குள்ள எல்லோரும் இறங்குங்கோ" என்று கூறியதும் நீச்சலில் கெட்டிக்காரியான உஷாவே முதலில் கடலில் இறங்கினாள்.


மிகவும் திறமையாகவே தனது பயிற்சியை முடித்த இவளுக்கு எம்-16 ரகத் துப்பாக்கி கொடுக்கப்பட்டது. இந்தியாவில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்த உஷா கரும்புலிகளுக்கான பயிற்சியையும் மருத்துவப் பயிற்சியையும் பெற்று, சில காலம் மருத்துவப் பிரிவில் இருந்து போராளிகளைப் பராமரித்து வந்தாள்.


உஷாவுக்கு நாடகம் நடிப்பதென்றால் மிகவும் பிரியம். பாத்திர உணர்வுடன் நடித்துக் காட்டுவாள். ஒருமுறை நாடகமொன்றில் குண்டர் படையில் ஒருவராக வந்து தமிழர்களைத் துன்புறுத்தும் வேடத்தில் திறமையாக நடித்தாள். அவளது உடற்தோற்றத்துக்கும் நடிப்புத்திறனுக்கும் அமைய, அன்றிலிருந்து உஷா "நீக்ரோ"வாக மாறினாள்.


இந்திய ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான எமது போர் ஆரம்பமானது. இவளின் காலடிச்சுவடுகள் பதியாத இடமே எம் மண்ணில் இல்லை எனலாம். நாவற்குழி பரந்த வெளியில் வீசும் காற்றும், நெல்லியடியில் நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களும், மன்னாரில் அடர்ந்து வளர்ந்த காட்டுமரங்களும் இவளின் வீரச்செயல்களைப் பறைசாற்றும். இந்திய ஆக்கிரமிப்பாளரை விரட்டியடித்ததில் இவளது பங்கைப்பற்றிக் கதை கதையாகக் கூறும்.


கிணறுகள் பதுங்குகுழிகளை வெட்டும்போது மற்றவர்களுடன் போட்டி போட்டே செய்வாள். போட்டி இருக்கலாம். பொறாமைதான் இருக்கக்கூடாது பிள்ளையல்" என்று அடிக்கடி கூறும் உஷா சக போராளிகளுடன் இணைந்து கடினமான காட்டு வாழ்க்கையை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கழித்தாள்.


இந்த நேரத்தில்தான் இவளின் உயிருக்குயிரான அண்ணன் பேருந்து விபத்து ஒன்றில் உயிரிழந்த செய்தி உஷாவின் காதுகளை எட்டியது. ஏற்கனவே அம்மா அப்பாவையும் இழந்த நிலையில், தனது குடும்பத்தின் ஒரேயொரு ஆதரவான அண்ணனும் இறந்ததை இட்டு மனம் கலங்கினாலும், மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு, அமைதியாக இருக்கப் பழகிக் கொண்டாள்.


1990இல் மீண்டும் சிறிலங்கா இனவாத அரசுக்கு எதிரான போர் ஆரம்பமானது. அப்போது கற்கோவளப் பகுதியில் காவற் பணியில் ஈடுபடும் புதிய போராளிகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டாள் உஷா. அவர்களுக்குத் தமது போராட்ட அனுபவங்களையும், எதிரியுடன் எப்படிப் போரிடவேண்டும் என்பதையும் அடிக்கடி சொல்லி வைப்பாள்.


அதன்பின்னர் பலாலியைச் சுற்றி எம்மவர்களால் அமைக்கப்பட்ட காவல் அரண்களுக்குள் ஒரு பகுதியில் இவளின் குழு நின்றது.


ஒரு நாள் இவளுக்கு மேல் உள்ள பொறுப்பாளர் வந்து "உஷா, அங்கால பக்கத்து குறூப், மதில் ஒன்றை உடைச்சிட்டாங்க. நீங்களும் குறிப்பிட்ட நேரத்துக்குள்ள இந்த மதிலை உடைக்கோணும்' என்று கூறியதும், தாமதியாது தனது குழுவுடன் சென்று மதிலை உடைத்து விட்டுத் திரும்பினாள்.


எந்தக் கணத்திலும் எந்தக் களத்திலும் போராளிகளின் வாழ்க்கை முடியலாம். இது அவர்களுக்குத் தெரியும். உஷாவும் இதைத் தெரிந்து வைத்திருந்தாள்.


"தான் செத்தால் என்ர ஜீ. திறியை வாசுகிக்குத்தான் குடுக்கோணும்'' என்று அடிக்கடி கூறுவாள்.


தனது தோழிகளையும், சக போராளிகளையும் சீண்டுவது இவளுக்குப் பிடித்தமான ஒன்று. எந்தளவுக்குச் சீண்டுவாளோ அத்தளவுக்கு அவர்கள் மீது பற்றையும் வைத்திருந்தாள்.


இப்படி இருக்கும்போது தான் கொக்காவில் இராணுவத்தளத்தைத் தாக்குவதற்கெனத் தெரிவு செய்யப்பட்டாள். இவனது குழு, உதவிக் குழுவாக இரண்டாவதாக அனுப்பப்பட இருந்தது. ஆனால் தனது குழுதான் முதலில் போகவேண்டுமென அடம்பிடித்தாள்.


கொக்காவில் இராணுவத் தளம்மீதான தாக்குதல் 1990 07. 10 அன்று இரவு 11 00 மணிக்கு ஆரம்பமாகியது.


இரவின் அமைதியைக் குலைக்கும் வகையில் வெடி ஓசைகள் கேட்கத்தொடங்கின. பகல் போலப் பிரகாசித்த நிலவொளியில், இடத்துக்கும், களத்துக்கும் ஏற்ப நிலையெடுத்துப் புலிகள் போரிட்டனர். அவர்களின் துப்பாக்கிகள் தெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தன.


திடீரென எதிரியால் ஏவப்பட்ட சன்னம் ஒன்று பாய்ந்தது பின்னே திரும்பிச் செல்லமுன் எதிரியின் கைகளில் பிடிபட்டுவிடக்கூடாதே என்று எண்ணிய அவள் சயனைட் வில்லையைக் கடித்து, வீரச்சாவைத் தழுவிக்கொண்டாள்.


ஆனால் ..... பாடும் பறவைகளோ உஷாவின் இனிமையான குரலைக்கேட்க வானில் ஆவலோடு பறந்து திரிகிறது. இவனது தோழிகளின் காதுகளில் உஷாவின் இனிமையான குரலில் 'ஒரு கூட்டுக் கிளியாக என்ற பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code