Ad Code

Recent Posts

லெப்.கேணல் சிவம் வீர வரலாற்று நினைவுகள்

லெப்.கேணல் சிவம் 
கந்தையா குலராசலிங்கம்
ஆனந்தர் புளியங்குளம், வவுனியா
வீரப்பிறப்பு: 19.07.1963  
வீரச்சாவு: 10.09.2000 

நிகழ்வு: யாழ். கொழும்புத்துறைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு


தென்னை வளத்தால் மேன்மை கொண்டிருக்கும் தென்மராட்சியின் ஒரு கிராமம் அது. 2000 ஆம் ஆண்டின் பங்குனி மாதத்தின் 26 ஆம் நாள் குடாரப்புப் பிரதேசத்தில் நடந்த மாபெரும் தரையிறக்கத்தின் தொடர் வெற்றிகளால் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பின் மீண்டும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வந்திருந்தது அந்த கிராமம். 


அக் கிராமத்தில் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்ட மக்களின் ஒரு தொகுதியினர் வன்னிக்கு நகர்த்தப்படாமல் இருந்தார்கள். அவ்வாறான நிலையில் பூநகரி ஊடாக நகர்ந்து வந்த போராளி ஒருவரால் வீட்டுக் கதவு ஒன்று தட்டப்படுகிறது. திடீர் என்று தட்டப்பட்ட ஒரு வீட்டின் கதவினைத் திறந்த இளம் பெண் ஒருத்தி தனது கண் முன்னே நின்ற போராளியைக் கண்டு எதையும் பேச முடியாதவளாக வாய் மூடி நின்றாள்.


அவள் உடல், உயிர், ஆவி அனைத்தும் ஒடுங்கிப் போகும் அளவுக்கு மகிழ்ச்சி பொங்கி பிரவாகித்தது. எதிர்பார்த்து நீண்ட காலமாக காத்திருந்த அவளது உயிர் எதிர்பார்க்காத நேரத்தில் கண்முன்னே வந்தி நின்றதை அவளால் நம்ப முடியவில்லை. கிட்டத் தட்ட 10 வருடங்களுக்கு மேலான காத்திருப்பு. கிடைக்குமா கிடைக்காதா என்ற ஏக்கம். அனைத்தையும் தாண்டி இன்று கண் முன்னே கிடைக்கும் என்று பதிலளித்தபடி நிற்கிறது அவளின் உயிர்.

அவரும் அப்படித் தான் கிட்டத்தட்ட 1990 ( சரியாக ஆண்டு நினைவில்லை) ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் வடமராட்சிப் பகுதியில் இந்தியத்துக்கு எதிராக போராடிய குறிப்பிட்ட சில போராளிகளுள் அவரும் ஒருவர். 


இந்திய இராணுவத்தின் தாக்குதல் ஒன்றில் கால் தொடையில் காயப்பட்டு படகு மூலமாக இந்தியாவுக்கு சிசிக்கைக்காக செல்கிறார். அங்கே உடைந்து கிடந்த தொடை எலும்புக்கான சிகிச்சையை தமிழகத்தின் ஈழ உணர்வாளர்கள் செய்கிறார்கள். கடுமையான முயற்சியின் பின் அவரின் கால் துண்டாக்கப்படாமல், எலும்பு சீரமைக்கப்படுகிறது. உண்மையில் அக்காலம் இந்தியாவில் பல சிரமங்களுடன் தான் இச்சிகிச்சைகளை தமிழின உணர்வாளர்கள் செய்தார்கள். 


ஏனெனில் யார் இடத்தில் பயிற்சிகளைப் பெற்று எம்மை மெருகேற்றினமோ? அவர்களுக்கெதிரான சண்டையில் காயப்பட்ட போராளியை அவர்களின் இடத்தில் வைத்து காப்பாற்றுவது என்பது எவ்வளவு கடுமையான சிக்கல்களை உருவாக்கும் என்பது வெளிப்படையானது.


இவ்வாறான நிலையில் சிகிச்சை முடிந்து கொஞ்சம் உடல்நிலை தேறி இருந்தவரை தமிழக காவல்துறை கைது செய்து வேலூர் வேறு சில போராளிகளுடன் சேர்த்து அடைத்தது. 


போராளிகளால் சிவம் அண்ணை என்று அன்பாக அழைக்கப்படும் அப்போராளியின் சண்டை முறைகள் சொற்களில் சொல்ல முடியாத வீரம் செறிந்தவை. அதனால் சிறைக்குள் இருந்த போதிலும் கட்டுக்கடங்காத இனவுணர்வை தன் மனதுக்குள் வளர்த்து தன்னைப் புடம் போட்டுக் கொண்டவர்.


பல ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தியாவின் வேலூர் சிறையில் இருந்து சிறையுடைத்துத் தப்பித்து தாயகம் வந்து சேர்ந்தார். அப்போது உண்மையில் எமது விடுதலை இயக்கம் பல பரிணாம வளர்ச்சிகளை தன்னகத்தே கொண்டு வானம் தொட்டு நின்றது. இனம் மானம் குன்றாமலும், விடுதலை பெற வேண்டும் என்ற வீச்சு குறையாமலும் சிறையில் இருந்து மீண்டு வந்த சிவம் அவர்களை விடுதலைப்புலிகளின் சண்டைக்கான வாகனப்பகுதி தன்னகத்தே உள்வாங்கிக் கொள்கிறது.


நெடுங்கேணி பிரதேச வாகனப்பகுதிப் பொறுப்பாளராக இயங்கத் தொடங்கிய அந்த மூத்த போராளி தன்னுடைய பணியில் கொஞ்சமும் தளர்ந்ததில்லை. சண்டை அணிகளுக்கு மிக முக்கியமான பணியாக இருந்தவை காயப்படும் போராளிகளை பின்நகர்த்துவது அல்லது வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களை பின்நகர்த்துவது. அதற்காக நிதிப்பிரிவின் கீழ் இயங்கி வந்த வாகனப்பகுதியே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. அதை விட FDL என்று சொல்லப்படுகின்ற எல்லை வேலியில் காவல் காக்கும் போராளிகளுக்கான உணவு வழங்கலையும் அவர்களே செய்து வந்தார்கள். அதில் இவ்வாறான இரு பெரும் பணிகளை தமிழீழத்தின் எல்லை வேலிகள் அனைத்திலும் வாகனப்பகுதிப் போராளிகள் செய்து வந்தார்கள். 


அவர்களில் ஒரு பகுதிப் பொறுப்பாளராகவே சிவம் அவர்களும் இயங்கினார். இந்த நெடுங்கேணிப் பிரதேச எல்லை வேலியில், சோதியா படையணியின் ஒரு தொகுதிப் போராளிகள், தளபதி லோரன்ஸ் தலைமையில் சிறுத்தை படையணியின் ஆண் பெண் அணிகள், தளபதி லெப் கேணல் ஸ்ரான்லி தலைமையில் ஜெயந்தன் படையணியின் ஒரு தொகுதி அணி ஆகியன தரித்து நின்றன. 


இவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் பால்ராஜ் இருந்தார். இக் களமுனை எல்லையை மிகவும் இறுக்கமாக வைத்திருக்க வேண்டிய தேவை எழுந்தது. ஏனெனில் அப்போது இருந்த எல்லை வேலியை இராணுவம் உடைத்து முன்னேறுமாக இருந்தால் முள்ளியவளை, முல்லைத்தீவு என்பவற்றை இலகுவாக கைப்பற்றி விடுவான் எதிரி. அதனால் பல வியூகங்களைக் கொண்டு நிமிர்ந்து நின்றது அக் களமுனை.


அப்போது இத்திமடு பகுதியில் பிரதான மருத்துவ நிலையை போராளி மருத்துவர்கள் அமைத்திருந்தார்கள். அதில் மருத்துவர் தணிகை, மருத்துவர் பௌலின், மருத்துவப் போராளி மாறன், உதவி மருத்துவர் தில்லை, இம்ரான் பாண்டியன் படையணியின் மருத்துவப் போராளிகள் இருவர், மருத்துவப் போராளி தேவிகா ஆகியோர் பணியில் இருக்கின்றனர்.


அம் மருத்துவ நிலை ( இம் மருத்துவ நிலை மட்டுமல்ல பெரும்பாலும் எல்லா இடமும் இதே நிலை தான்) 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும் இடர் ஒன்றை சந்தித்தது.


அக்காலப்பகுதியில் வன்னியில் பெரும் தொற்று நோய்களாக விளங்கிய மலேரியா (Malaria) , வட்டக்கடி (Ringworm) , நெருப்புக்காச்சல் (Typhoid ), செங்கண்மாரி (Jaundice ), சொறி சிரங்கு( Scabies ) போன்ற தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்திருந்தது. இதனால் மக்கள் மட்டுமல்ல பல நூறு போராளிகளும் அடிக்கடி பாதிக்கப் பட்டார்கள்.


இதில் குறிப்பிட்ட அனைத்தும் தொற்று நோய்களாலும் பல இடர்களை சந்தித்தார்கள் போராளிகள். இதில் வட்டக்கடி என்று சொல்லப்படுவது ஒரு தோல் வருத்தம். அவ்வருத்தம் உடனடியாக பரவும் அபாயம் நிறைந்தது. அதுவும் களமுனை எல்லைகளில் நிற்கும் போராளிகளுக்கு பரவும் வேகம் அதிகரித்திருந்தது. அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் மிக முக்கிய காரணமாக எல்லை வேலிகளில் தூய்மையை பேணுவதில் எழும் சிக்கல்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


குளிப்பதற்கோ அல்லது உடை மாற்றுவதற்கோ ஒழுங்கான நேர அட்டவனை கிடைப்பதில்லை. உறக்கமோ உணவோ சரியாக கிடைப்பதில்லை. அவ்வாறு இருக்கும் எல்லை வேலிகளில் வாரத்துக்கு ஓர் இரு முறைகள் தான் குளிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். இவ்வாறு இருக்கும் நிலையில், வட்டக்கடி பரவுதலை தடுக்க முடியாத நிலை மருத்துவர்களுக்கு எழுந்தது. ஆண் போராளிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவது பெண் போராளிகளே. ஏனெனில் அவர்களின் களமுனை வாழ்க்கை என்பது வார்த்தைகளால் கூற முடியாதது. 


வளங்கல் பிரிவால் கொடுக்கப்பட்ட மாற்றுடையை சண்டைகளினால் இழந்து ஒற்றை உடையோடு காவல் இருக்கும் அவர்களுக்கு மாற்றுடை வரும் வரை உடை மாற்றுவது என்பது வினாக்குறியே. இவ்வாறு களமுனைகளில் இருந்தவர்களுக்கு தொற்று நோயின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை நினைத்து பார்க்க முடியுமா? ஆனாலும் லெப் கேணல் சிவம் போன்ற போராளிகளால் அவர்கள் நலமடைந்து வாழ்ந்ததை மறுக்கவோ மறக்கவோ முடியாது.


பெரும்பாலான போராளிகள் இந்த தோல் நோய் தொற்று ஏற்பட்டவர்களை தனித்துவமாக சிகிச்சை வழங்க வேண்டிய நிலைக்கு வந்திருந்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்துப்படும் மாத்திரையான GRISOVIN பயங்கர வலுவான காரணத்தால் பசுப்பாலுடன் சேர்த்தே அம் மருந்தை உட்கொள்ள வேண்டி இருந்தது.


அதைப் போலவே மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்ட போராளிகளையும் தனிமைப்படுத்த வேண்டி வந்தது. அவர்களுக்கு சத்துணவுகளை கொடுக்க வேண்டி நிலை வந்தது. ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மாத்திரைகளான Chloroquine, Primaquine என்பனவும் வலுவானவையாக இருந்தன. அதனால் அவ் வலுவான மாத்திரைகளை தாங்கும் சக்தியை அவர்களின் உடல் கொண்டிருக்க வேண்டி இருந்தது.


இவ்வாறான நிலையில், அக்காலத்தில் உணவு வழங்கலை செய்வதே பிரச்சனையாக இருந்தது. ஒரு நெகிழ்வுப் பையில் ( Shopping Bag) மூன்று பேருக்கான சோறும் கத்தரிக்காய் கறியும் தான் பெரும்பாலும் கிடைக்கும். அதுவும் சில வேளைகளில் சாப்பிட முடியாத நிலையில் களமுனை அதிர்ந்து கொண்டிருக்கும். இப்படியான நேரத்திலும் இராணுவ மருத்துவமனைகளில் விழுப்புண் அடைந்த போராளிகளுக்கு பால் முட்டை மற்றும் இறைச்சி போன்ற சத்துணவுகள் வழங்கப்பட்டு வந்தாலும், முன்னணி நிலைக்கு வழங்குவது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. அதனால் மருத்துவர்களுக்கு அம் மருந்தைக் கொடுப்பதில் சிக்கல்கள் நிறைந்திருந்தது.


அந்த நேரத்தில் திடீர் என்று பெரிய பரல்களில். பசுப்பாலை கொண்டு வந்து காச்சி அவற்றை மருத்துவ நிலைகளுக்கு வழங்குவார்.

கிரிசோவின் குடிக்கிறதென்றா பால் வேணுமல்ல இதை பெடியளுக்கு குடுங்கோ என்பார். அல்லது திடீர் என்று காட்டு மிருகங்களை வேட்டையாடி அவற்றை உணவாக்கி அப் போராளிகளுக்கு வழங்குவார்.


அப்போது, “அண்ண எப்பிடியண்ண தெரியும் இந்த மாத்திரைக்கு பால் கட்டாயம் தேவை என்று? “

போராளி மருத்துவர் வினவுகிறார்.

டொக்டர் இப்பத் தான் மருத்துவப்பிரிவு, உணவுப்பிரிவு, வாகனப்பிரிவு, அரசியல்துறை, நிதி, நிர்வாகம் எல்லாம் தனித்தனி அலகுகளாக பிரிக்கப்பட்டு நிர்வாகம் இயங்குகிறது. எங்கட காலத்தில நாங்கள் தான் டொக்டர், நாங்கள் தான் இராணுவம், நாங்கள் தான் அரசியல். ஆக மொத்தத்தில் எல்லாமே செய்ய வேண்டியவர்களாக இருந்தோம். அதனால் தான் இவ்வாறான செயற்பாடுகளை பட்டறிவால் அறிந்து கொண்டோம். என்கிறார்


உண்மையில் எமது போராளிகளை தேசியத்தலைவர் அவ்வாறு தான் வளர்த்தார். அனைத்தையும் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவரது எண்ணம். சில போராளிகள் துறை சார்ந்த சிறப்பு வல்லுனர்களாக வளர்க்கப்பட்டாலும் அத்துறை சாராதவர்களுக்கும் அது பற்றிய பட்டறிவு நிட்சயமாக கொடுக்கப்பட்டிருக்கும். இது நியமானதே. இது இவ்வாறு இருக்க உணவில் இப்போதெல்லாம் அடிக்கடி காட்டு விலங்குகளின் இறைச்சி அதிகமாக சேர்க்கப்பட்டதன் காரணத்தையும் வினவுகிறார் மருத்துவர்.


அப்போது புத்தம் புதிய இரட்டை குழல் சொட்கன் (Double Barrel Shotgun) என்ற வகை ஆயுதத்தை எடுத்துக் காட்டி லீமா தந்தவர். அவருக்கு அண்ணை பிரத்தியேகமாக கொடுத்தவராம் அதை எனக்கு தந்தவர். இது தான் வேட்டைக்கு உதவுது. அவர் என்னை மதிப்பளிக்கத் தந்த இந்த ரைபிள் பெடியளுக்கு சாப்பாட்டுக்கு உதவுது என்ற படி புன்னகைக்கிறார் மூத்த போராளி சிவம். 


நகைச்சுவை உணர்வு மிக்க அவர் போராளிகளையும் மக்களையும் எப்பவும் சிரிக்க வைத்து மகிழ்வதைப் போல அவர்கள் தேவையை அறிந்து அதை நிவர்த்தி செய்தும் மகிழ்விப்பார்.


இவ்வாறாக வாகனப்பகுதி பொறுப்பு நிலைப் போராளியாக வாழ்ந்த மூத்த போராளி சிவம் அவர்களின் நெஞ்சத்துள் குடி கொண்டிருந்த சண்டை ஆர்வம் தனது பொறுப்பாளரிடம் சண்டைக்கு செல்வதற்கான அனுமதிக்கு அடம்பிடிக்க வைக்கிறது. அனுமதி கிடைத்து சண்டையணிக்கு செல்கிறார். 


பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் தலைமையிலான சண்டையணி ஒன்றின் பகுதித் தளபதியாக வட போர்முனையை நோக்கி செல்கிறார். தனது நுன்னறிவுப் பார்வையால் சண்டைக் களங்களை அளவிடத் தொடங்கினார்.


அவரது சண்டையணி சிறப்பாக செயற்படத் தொடங்கிய காலப்பகுதியில், குடாரப்பு தரையிறக்கம், ஆனையிறவு படைமுகாம் மீதான முற்றுகை மற்றும் யாழ்ப்பாணத்தில் செறிந்திருந்த சிங்களப்படைகளை முற்றுகையிட்டு முடக்குவது போன்ற பெரும் இலக்குகளுடன் பல பகுதிகளூடாக பல படையணிகள் களம் இறங்கின. 


இந்த சந்தர்ப்பத்தில், பூநகரி ஊடாக தனங்கிளப்பு சென்று அதனூடாக மிருசுவில், கைதடி என நகர்ந்து யாழ்ப்பாண நகரை சென்றடையும் இலக்கோடு ஒரு அணி நகர்ந்தது. அதில் பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் கட்டளையின் கீழ் அவரது அணியும் இருந்தது. அவர்கள் இலக்கை வெற்றியடைந்து கொண்டு யாழ்ப்பாணத்தை நோக்கி செல்கிறார்கள்.


அவ்வாறான வெற்றிச் சமர் ஒன்றை செய்து தென்மராட்சிப் பகுதிக்குள் உள் நுழைந்திருந்த மூத்த போராளி சிவம் தலைமையிலான அணி தமது முன்னிலை வேலியை இறுக்கமாக போட்டிருந்தது. இந்த நிலையில் தான் தென்மராட்சியில் இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த அப் பிரதேசத்தில் அமைந்திருந்த 10 வருடத்துக்கு மேலாக நேசித்த அவ்வுறவின் நினைவு மேலெழுந்து அவ்வீட்டுக் கதவை தட்டி இருந்தார் சிவம்.

அவர் நினைத்து வந்தது. 


தான் காதலித்த தன் உயிரானவள் இன்னும் ஒரு ஆடவனை திருமணம் செய்து இரண்டு மூன்று குழந்தைகளின் தாயாகி இருப்பாள் என்றே. ஆனால் தான் காதலித்தவனுக்காக 10 வருடங்களுக்கு மேல் வருவான் வருவான் என காத்திருந்த அப் பெண்ணைக் கண்டதும் கட்டித் தழுவி முத்தமிட வேண்டும் போல் தோன்றியது அவருக்கு. ஆனாலும் அவர் முதுநிலை போராளி. விடுதலைப்புலிகளின் இயக்க விதிகளை மீற அவரால் முடியாது. எண்ணங்களுக்கு கடிவாளமிட்டு விட்டு தனது காதலியிடம் நலமா என வினவுகிறார்.

அவளால் எதையும் பேச முடியவில்லை. விழிகள் கலங்கி அருவியாய் கண்ணீர் ஓடத் தொடங்கியது.


அழாதையுங்க இது என்ன சின்னப் பிள்ளை போல அழுது கொண்டு…?

அவர் அவளை ஆற்றுப் படுத்துகிறார். ஆனால் அவளால் பேச முடியவில்லை. தான் நேசித்தவன் இருக்கிறானா இல்லையா என்ற எந்த தொடர்புகளுமற்று வாழ்ந்து வந்த காலம் அத்தனைக்கும் இன்று தன் முன்னே பெரும் மகிழ்வாக வந்து அவனே நிற்பதை அவளால் உணர முடியவில்லை. அவள் பேச்சற்று இருந்த போது அவளை உடனடியாக வன்னிக்கு செல்லுமாறும் அங்கே தான் வந்து சந்திப்பதாகவும் விபரங்கள் கூறி வழியனுப்புகிறார். 


அதன் பின் தன் கடமைக்காக களத்துக்கு சென்று விடுகிறார். குறித்த சில காலங்களில் அவருக்கும் அவளுக்கும் இடையிலான மகிழ்வான தருணங்களை அமைப்பின் திருமண ஏற்பாட்டுக் குழு செய்யத் தயாராக இருக்கும். அதற்கான அனுமதியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்குள் எழுந்தது. ஆனால் அனுமதி கிடைத்தாலும் அம் மகிழ்வான தருணங்களை அவர் அடைய முடியாத நிலையில் தமிழீழ விடியலுக்காக பல கனவுகளைச் சுமந்து வாழ்ந்த அப் போராளி வித்துடலாக தென்மராட்சி மண்ணின் கைதடி பாலம் தாண்டிய பகுதியில் ( சரியான இடம் தெரியவில்லை) விதையாக வீழ்ந்திருந்தார்.


சிவமண்ண என்று அன்பாக அழைக்கும் போராளிகளை லெப்டினன் கேணல் சிவம் என்ற மாவீரன் என்று அழைக்க வைத்துவிட்டு அவர் நிம்மதியாக உறங்குகிறார்.



தமிழ்லீடர்

மருத்துவர் தணிகையுடன்
இ.இ. கவிமகன்
29.08.2018


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code