முத்துலிங்கம் தங்கரஜனி
வேம்படி, உடுத்துறை,
தாளையடி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 10.10.1973
வீரச்சாவு: 05.08.1991
நிகழ்வு: யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி - ஆனையிறவு படை சங்கிலித்தொடர் மீதான அதிரடிததாக்குதலில் வீரச்சாவு
வீரம் விளைகின்றது
உடுத்துறை எனும் அந்த அமைதியான கரையோரக் கிராமத்தில், 1973 ஆம் ஆண்டில், வீட்டிற்கு ஒரு பெண்பிள்ளையாய் - அதுவும் மூத்த பிள்ளையாய்ப் பிறந்தாள் லக்சி.
1989 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் எமது தாயகப் பூமியை ஆக்கிரமித்து நின்ற வேளை, எமது இயக்கத்துக்குள் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டாள்.
வீட்டில் இருந்து இயக்கத்திற்குப் புறப்பட்ட அன்று, அவளது ஊரில் இருந்த இன்னும் சில இளம் பெண்களுடன் பயிற்சிப் பாசறை நோக்கிச் செல்லப் படகில் ஏறும் போது இவளது தந்தை, அந்த அடிக்கும் கடலுக்குள்ளும் படகை கரை நோக்கி இழுத்து ஏறவிடாது கடலுக்குள் புரண்டு விழுந்த போதும், பறித்துக் கொண்டு, ஓடும் படகிற்குள் ஏறியவள் இவள்.
பயிற்சி முடிந்த பிறகு அடிக்கடி அவள் சொல்வாள்"...... பயிற்சிக்கு வரமுன்னர் அப்பாவை நினைத்துப்பார்த்து வீட்டை போகவா என்றுகூட நினைத்தேன். ஆனால், போராட வந்தனான் திரும்பிப் போகக்கூடாது என்று முடிவெடுத்து, நின்று விட்டேன்.
பயிற்சிப் பாசறைக்கு வன்னிக் காட்டுக்கு இவளை அனுப்பியபோது, ஏற்கெனவே அங்கே பயிற்சி தொடங்கி விட்டதால், அடுத்த பாசறையில்தான் இவளால் பயிற்சி எடுக்க முடிந்தது. தனது பயிற்சிப் பாசறை தொடங்கும் வரை இவள் சும்மா இருக்கவில்லை. காட்டிற்குள் நீண்ட தூரம் நடந்துசென்று, முகாமிற்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டு வருவதிலும், கொட்டில்கள் அமைக்க மரந்தடி வெட்டுவதிலும் மிக விருப்புடன் ஈடுபட்டு வந்தாள்.
பயிற்சி முடிந்து காட்டில் இருந்து வந்தவுடன் இவள், ஒரு சிறு குழுவுடன் வடமராட்சி மண்டான் வெளியில் காவல் கடமையிலீடுபட்டாள்.
முதன் முதலாக எமது மகளிர் படையணி பிரதான பங்கு வகித்த கொக்காவில் இராணுவ முகாம் தகர்ப்பின்போது, ஏழு பேர் கொண்ட ஒரு சிறு குழுவிற்குத் தலைமை தாங்கி, அத்தாக்குதலில் சிறப்பாகப் பணியாற்றினாள்.
கொக்காவில் சண்டை முடிந்த பின்னர் யாழ்.கோட்டை முகாம் மீது தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டபோது, அதிலும் ஒரு குழுத் தலைவியாக நின்று, லக்சி போராடினாள். அத்தாக்குதல் எமக்கு வெற்றியைத் தரவில்லை. அதன் பின்னர், கோட்டைக் காவல் அரண்களுள் ஒன்றைப் பொறுப்பெடுத்துக் காவற் கடமையில் ஈடுபட்டு வந்தாள். அங்கே காவற் கடமையில் ஈடுபடும் போது, ஏதாவது ஒரு உயரமான இடத்தில் இருந்து எதிரியின் நடவடிக்கைகளை உன்னிப்பாகப் பார்த்து, அவர்களின் தலை தெரியும் நேரங்களில் எல்லாம் குறிபார்த்துச் சுட்டுக்கொண்டே இருப்பாள்.
கோட்டையில் இவளது திறமையான செயற்பாடுகளையும் தலைமைத்துவத்தையும் கவனத்திற் கொண்டு, கோட்டையிலிருந்து இராணுவம் பின்வாங்கியதன் பின்னர் இவள். பலாலியில் 75 பேர் கொண்ட பெரிய குழு ஒன்றின் தலைவியாக நியமிக்கப்பட்டாள்.
பலாலி இராணுவ முகாமைக் காவல் காத்த வேளைகளில், தனது பொறுப்பில் விடப்பட்ட எல்லாக் காவல் அரண்களுக்கும் மாறிமாறிச் சென்று போராளிகளை உற்சாகப்படுத்தி, காவலைப் பலப்படுத்திக்கொண்டிருப்பாள். அடிக்கடி எதிரி அரண்களை இரகசியமாக நெருங்கி, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, இராணுவத்தினரை எந்த நேரமும் பதற்றத்திற்குள் வைத்திருப்பாள்.
இவ்விதமாக லக்சியின் அணி நகர்ந்து சென்று இராணுவத்தின் மீது தாக்குதலை நடத்தும் ஒரு கட்டடத்துள், ஒருநாள் இவர்களுக்குத் தெரியாமல் இராணுவத்தினர் வந்து தூரக்கட்டுப்பாட்டில் இயங்கும் கண்ணி வெடிகளைப் புதைத்துவிட்டுச், சென்றுவிட்டார்கள்.
அடுத்தநாள், லக்சி வழமை போலவே தன்னுடன் இரு போராளிகளையும் அழைத் துக்கொண்டு கட்டடத்திற்குக் கிட்டே போனவள், சந்தேகம் அடைந்து கவனமாகச் சென்றபோது, ஒரு மின் வயர்த்துண்டு அவளின் கண்ணில் பட்டது. உடனடியாகவே வயரைக் கத்தரித்து புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளையும் எடுத்துக்கொண்டு, எமது அரணுக்கு வந்துவிட்டாள். இவளுடைய துணிகரமான செயற்பாடுகளுக்கு இது ஒரு உதாரணமாகும்.
பலாலி காவல் அரண்களில் லக்சி முக்கிய பொறுப்புக்களை வகித்ததால், மாங்குளம் முகாம் தாக்குதலுக்குச் செல்ல இவளுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
சிலாவத்துறைச் சமரின்போது, தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல் அணி ஒன்றிற்குத் தலைமை தாங்க விடப்பட்டாள்.
ஆனையிறவுச் சமரிற்குத் தன்னையும் அனுப்பும்படி விடாப்பிடியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்குரிய சந்தர்ப்பமும் கிடைத்தது 5.8.1991 அன்று. புல்லா வெளியில், இராணுவம்மீது ஒரு சிறப்புத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் இவள் வீரமரணமடைந்துவிட்டாள். -
இவளது குழு கடைசியாகத்தான் சண்டையில் இறங்க வேண்டும். ஆனால் இவளது குழுவிற்கு முன் இன்னொரு குழு சண்டையில் இறங்கக் காத்திருந்த போதும், சண்டை பிடிக்கவேண்டும் என்ற ஆவலில் தனது குழுவும் சண்டைக்களத்தில் இறங்கி விட்டதா வோக்கி ரோக்கி 'மூலம் அறிவித்தாள்.
ஆனையிறவுச் சண்டைக்கான பயிற்சிகள் நடந்துகொண்டிருந்தபோது லக்சியைப் பார்க்க வந்த தாயும் தந்தையும், இயக்கத்தை விட்டுவிட்டு வீட்டிற்கு வரும்படி மன்றாடினர்.
"நான் போராட வந்தனான்; எனது உயிரற்ற உடல்தான் வீட்டிற்கு வரும். நான் வரமாட்டேன்" என்று, தாய் - தந்தையைப் பார்த்துச் சொன்னவள், அதன் பிறகு. பெற்றோருடன் கதைக்கவில்லை; முகாமிற்க்கே வந்துவிட்டாள்
ஆனாலும் ஒருமுறை வீட்டுக்குச் சென்று வரவேண்டும் என்ற விருப்பம் அவளுக்கு இருக்கத்தான் செய்தது. ஆனையிறவுச் சமர் முடிந்து உயிருடன் திரும்பி வந்தால், ஒரு முறை வீட்டுக்குப் போய்வர வேண்டும் என்று சொன்னவளது உயிரற்ற உடலைக் கூட வீட்டாரிடம் கொடுக்க, எம்மால் முடியவில்லை.
விடுதலைப்புலிகள் ஆனையிறவுச் சண்டையில் வீரமரணமடைந்து எம்மால் மீட்கப்படாது போனவர்களின் உடல்களுள், எங்களுடைய லக்சியினது உடலும் ஒன்றாகும்.
குரல் - 25
ஆவணி - புரட்டாதி 1991
0 கருத்துகள்