Ad Code

Recent Posts

கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளியின் வீர வரலாற்று நினைவுகள்

கடற்கரும்புலி 
கப்டன் கலைவள்ளி
ஆறுமுகம் கசீந்திரா
அராலி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 29.06.1976
வீரச்சாவு: 24.03.1997

  நிகழ்வு: முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் “பராக்கிரமபாகு” தரையிறங்குகலம் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவற்றின் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு


முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


கலைவள்ளி சின்ன உருவம். அணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு வரிசையாக நின்றால், எந்த அணிக்குள் நின்றாலும் அவள் முதலாவதாகத்தான் நிற்கவேண்டியிருக்கும். அதுவே அவளுக்குக் கவலை.   தான்   கட்டையாக இருக்கின்றேனே என்பதில் தன்னிரக்கம். இவர்களது அணிகளுக்குக் கனரக ஆயுதங்கள் கொடுக்கப்படும் நேரங்களில் அவளைப் பார்க்கப் பாவமாக இருக்கும். “பிப்ரியோ? அதெல்லாம் ஏன் எனக்குத் தரப்போயினம்?” என்று ஏக்கத்தோடு பார்த்த படியே ஒதுங்கிக்கொள்வாள். 


வீட்டில் ஒன்பது குழந்தைகளுக்கு கலகலப்பை ஊட்ட, வீட்டுக்குள் குருவிக்கூட்டம் போலப் பாடித்திரிந்த அவளது வாழ்க்கையின் இறுதி நாட்களில் அவளது சகோதரர்கள் ஒருவரும் அருகிலில்லை. அது அவளுக்கு மிகுந்த கவலை.  கடைசியாக அவளது   பெற்றோர்களுக்கும் சகோதரர்களுக்கும் ஏதாவது கூற நினைத்திருப்பாளோ?   அவர்களைக் காணாமலேயே   போவதில் மிகுந்த துயரமாக இருந்தது.  அதையேதான் அவளுடைய தோழிகளிடமும் சொல்லிப் பிரிந்தாள். எதற்கெடுத்தாலும் உணர்சிவசப்பட்டு அழுவது அவளிடமிருந்த தனிக்குணம். அவளிடமிருந்த குழந்தைத்தனங்களில் அந்தப் பண்பு  அழியவேயில்லை.  


அவளை அறிமுகப்படுத்துவதற்கு இந்தக்குணத்தை முன்வைத்தே பெரும்பாலான போராளிகள் அடையாளம் சொல்வார்கள். அவளது அழுகையின் உச்சக்கட்டம் அதுவாகத்தான் இருக்கவேண்டும். அது ஒரு ஒன்றுகூடல்.   அந்த இடத்தினை பெண்,  ஆண் கரும்புலிகள் கரிய  உடையில்  நிறைந்திருக்க,  அந்த இடம் அக்கணத்தில் அமைதியாக இருந்தது.  அதற்குக் காரணம் பொறுப்பளரிடமிருந்து கேட்கப்பட்ட கேள்வி.  இல்லை  வேண்டுகோள். “யாராவது உங்களது படகினைப் (பெண் கடற்கரும்புலி மேஜர் பாரதிக்கு) விட்டுக் கொடுங்கள்”  என்று பொறுப்பாளர் எல்லோரிடமும் கேட்க ஒருவரும் மூச்சு விடவில்லை.  எல்லோரும் நான்முந்தி நீ முந்திப் போய் வெடிக்கவேண்டும் என்று நிற்கும்போது  விட்டுக்கொடுப்பதாவது….. ஒருவருமே விட்டுக்கொடுக்காத நிலையில் கடற்கரும்புலிகள் சிறப்புத் தளபதி எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, சின்ன உருவமான கலைவள்ளியைச் சுட்டிக்காட்டி “நீங்கள் உங்கள் சர்ந்தப்பத்தை பாரதிக்கு விட்டுக்கொடுங்கோ”  என்று கூற, கலைவள்ளி “நான் மாட்டேன்”  என்று கூறி அழுத அழுகை…… அங்கு கூடியிருந்த எல்லோரும் பார்க்க குழந்தைபோல் நின்றபடி காலைத்தூக்கி அடித்து அடித்து அழுத அழுகையை ஒருவரும் மறந்திருக்க மாட்டார்கள்.  அந்தச் சம்மவத்தைச் சொல்லித்தான் தோழிகள் கலங்குகின்றனர்.  அந்த வகையில் அவளது  அழுகை பிரபலமாகியிருந்தது.  


பாரதியின் சண்டைக்கு கலைவள்ளி படகு கொண்டு போனாள். இடையில்  ஏற்ப்பட்ட பாரிய இயந்திரக்கோளாறினால் அவளது படகு இடையிலேயே திரும்பவேண்டி வந்தது. சென்ற படகுகள் திரும்பி வரும்வரை சாப்பிடாமல் கரையில் நின்றபடி அவள் அழுதது இன்னும்  எங்கள் நினைவுகளில்….. கரும்புலிகளுக்கான பயிற்சிகள் எல்லாம் முடிவுற்ற நிலையில் தலைவருடன் நின்று படமெடுத்த சர்ந்தப்பத்தில் தலைவரின் இடுப்புக்குச் சற்று மேலாகப் பக்கத்தில் நின்ற கலைவள்ளியைப் படப்பிடிப்பாளர்கள் படமெடுக்கப்பட்டபாடு…. 


“போட்டை றோபோதான் இயக்குது  என்று எதிரி நினைக்கப்போறான்”  என்று தலைவர் கூற கலைவள்ளிக்கோ பெரும் கவலை. “அண்ணையோடு நின்று எடுக்கிற படம் நல்லாய் வருமோ” ‘ஓயாத அலைகள்’ சண்டை முடிந்த பின்புதான் அவளுக்கும் படகு கொடுக்கப்பட்டது. அது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. படகில் அவள் எப்போதும் நல்ல கவனம். கரும்புலிகளெல்லொரும் அப்படித்தான். அப்படகினை ஒரு கோயில்போல் வைத்திருப்பார்கள்.


இலக்குக்காக அலைந்த நாட்களிலும் நீண்ட கடற் சண்டைகளிலும் கலைவள்ளி சுறுசுறுப்பாகச் செயற்பட்ட இனிய போராளி. கடற்கரும்புலிகள் வானதியும், கலைவள்ளியும், தமிழ்மாறன், நாவலன், சுகுணனும் போய்முடிந்த அந்தக் கடற்சமர் மறக்க முடியாதது. 1997.03.24 அன்று எதிரிக்குப் பெரும் அடியைக்கொடுத்த அந்தச் சண்டையோடு கலைவள்ளியும் போய்முடிந்தாள். அவளை அலைகள் அள்ளிச்சென்றிருக்கும். 



நினைவில் நிறைத்த தோழிகள் தொகுப்புவெளியீடு:களத்தில் 


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code