Ad Code

Recent Posts

கடற்கரும்புலி கப்டன் வினோத்தின் வீர வரலாற்று நினைவுகள்

கடற்கரும்புலி கப்டன் வினோத்

வேலுப்பிள்ளை திலகராசா

காட்டுவளவு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்  

வீரப்பிறப்பு:19.08.1970

வீரச்சாவு:10.07.1990


நிகழ்வு: யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு

 

அடுத்தநாள் தான் தம்பி தெரிஞ்சது. அதில நான் பெத்த குஞ்சுவும் ஒண்டெண்டு



அண்டைக்கு ஊரெல்லாம் ஒரே பரபரப்பாய் இருந்தது. அண்ணைமார் கடற்கரைக்கு வாறதும் போறதுமாய் இருந்தினம்.

 

“இன்றைக்குப் பெடியள் கரும்புலியாய்ப் போய் நேவிக் கப்பலை அடிக்கப்போறாங்களாம்.” என்று, ஜனங்கள் பரவலாய்க் கதைக்கினம்.

 

“அப்படியெண்டா நாளைக்குக் காலமை நேவி அடிப்பான்” என்று கொஞ்சச்சனம் ஊரை விட்டுக் கிளம்பி விட்டினம். நல்லாய் இருண்டதுக்குப் பிறகு ஊர்ச்சனங்கள் கொஞ்சம் கப்பல் அடிக்கிறதைப் பார்ப்பதென்று கடற்கரைக்குப் போனார்கள், நாங்களும் போனம். கடலில் இருந்து கூப்பிடு தூரம்தான் எங்கள் வீடு. முகபாவத்தில் கவலையும் மகிழ்வும் மாறி மாறி வெளிப்பட அந்த அக்கா சொல்லிக்கொண்டிருந்தா.

 

அம்மாவும் அப்பாவும் கரைக்கு வரேல்லை, அவை வீட்டு வாசலிலேயே நின்றுகொண்டிருந்தனர். கரையில் நாங்கள் போய் பார்த்துக் கொண்டு நின்றம். படகுகள் வெளிக்கிட்டுப் போனது. நாங்கள் கொஞ்சம் தூரத்தில் நிண்டனாங்கள், இருள் வேறு. ஆட்களை அடையாளம் தெரியேலை… படகுகள் வெளிக்கிட்டன. கொஞ்ச நேரத்தில் இருளுக்குள் மறைந்து போய்விட்டது. இருளைப் போலவே மெளனமும் நிலவியது.

 

நாங்கள் இருளுக்கால கடலைப் பார்த்துக் கொண்டு நின்றம்.

 

தீடிரென பெரிய வெளிட்சமாய் நெருப்புச்சுவாலை கடலுக்குள் எரிய, நிலம் நடுங்கிற மாதிரி ஒரு வெடிச்சத்தம் கடலுக்குள் இருந்து வந்தது. எங்களை அறியாமலேயே கண்ணால கண்ணீர் வந்தது. மெதுவான குரலில் அம்மா… ஐயோ… என்ற சத்தங்கள் எல்லோர் வாயிலிருந்தும் உதிர்த்தன.

 

யாரார் பொடியள் போச்சுதுகளோ!? என்று நாங்கள் சொல்லி கவலைப்பட்டோம்.

 

ஒரு கனம் நிறுத்தி அக்கா தொடர்ந்து சொன்னாள்.

 

அடுத்த நாள் நேவி அடிப்பானென்று சனம் எல்லாம் வெளிக்கிட்டதால் நாங்களும் கொஞ்சம் தூரத்தில இருக்கிற சொந்தக்காரற்ற வீட்டுக்குப் போயிற்று, இரண்டு நாள்ல நிலைமையைப் பார்த்திட்டுத் திரும்புவம் என்று இரவிரவாய்ப் போனம். போறவழியில “காம்ப்” ஒன்றுக்கு முன்னால, எங்கட தம்பி ஓடித் திரிகிற மோட்டார் சைக்கிள் நின்றது.

 

அம்மா சொன்னா, “உங்க தம்பி நிற்பான் போல கிடக்கு… ஒருக்கா கேட்டுப்பார்” என்று தொடர்ந்து அம்மா கதைக்கத் தொடங்கினாள்….

 

நாங்கள் கூப்பிடக் கூப்பிட ஆள்மாறி ஆள்மாறி வந்து எட்டிப் பார்த்திட்டுப் போறினமே தவிர வெளியால ஒருத்தருமே வரேல்லை.

 

“வினோத்தின்ர அம்மாவடா…. வினோத்தின்ர அம்மாவடா….” என்று மாறி மாறிச் சொல்லிக் கேட்கிறது…. இருளுக்குள் ஒன்றும் தெரியவுமில்லை. ஏன் இவர்கள் ஒளியிறார்கள் என்று எனக்குள்ள நினைத்தேன். கொஞ்சநேரத்துக்குப் பிறகு, ஒருத்தர் பதுங்கிப் பதுங்கி வெளியில் வந்தார்.

 

“வினோத் நிற்கிறானா தம்பி…?”

 

“இல்லை…. அம்மா…. நீங்கள் எங்க நிற்பீர்கள் என்று சொல்லுங்கோ… நாங்கள் அவரை வரச் சொல்லிவிடுறம்…”

 

“அந்தா அவரின்ற மோட்டார் சைக்கிள் நிக்கிறது… பொய் சொல்லாதேங்க்கடா எங்க போட்டான்..?”

 

“அது சரியாச் சொல்லேலாதம்மா… நீங்கள் நிற்கிற இடத்தைச் சொல்லிப் போட்டுப் போங்கோ, காலையில் அனுப்பிவிடுறம்…”

 

என்னடா இவன், கேட்கிரதுக்கெல்லாம் ஒரு மாதிரியா மறுமொழி சொல்லுறான்…? என்ன கேட்டாலும் நாங்கள் நிக்கிற வீடு எது என்று கேட்கிறான் ? என்று எனக்குள்ள நினைத்துக்கொண்டு, நாங்கள் போற வீட்டுப் பாதையைச் சொல்லிப் போட்டுப் போனோம்.

 

சற்று நிறுத்தி பெருமூச்சொன்றை எறிந்துவிட்டு அம்மா ஆறுதலாகத் தொடர்ந்தாள்.

 

“அடுத்த நாள்தான் மோனை தெரிஞ்சிது, எங்கட பொடியும் போட்டானேன்று. நிக்கிற வீடு எதென்று அந்தப் பெடியன் திரும்பத் திரும்பக் கேட்டது ஏன் என்று, அப்பத்தான் விளங்கியது.”

 

வினோத்தின் அப்பா சொன்னார்….

 

“குண்டுச்சத்தம் கடலுக்குள் பெரிதாகக் கேட்க்கக் கேட்க்க , வீட்டு வாசலில நான் குந்தியிருந்தனான்…. யாரார் பெற்ற பிள்ளைகளோ என்று எனக்குள்ள நினைத்தேன்; ஆனால் அடுத்த நாள்த்தான் தம்பி தெரிஞ்சது, அதில நான் பெற்ற குஞ்சுவும் ஒன்று என்று.”

 




வெளியீடு – உயிராயுதம் பாகம் 01


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code