சின்னத்துரை செல்வராசா
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:-17.08.1961
வீரச்சாவு:-27.08.1990
நிகழ்வு:- யாழ்ப்பாணம் கட்டுவனில் சிறிலங்கா படையினருடனான நேரடிச்சமரில் வீரச்சாவு
மேஜர் செல்வராசா மாஸ்டர்
எமது இயக்கத்திலுள்ள கூடுதலான போராளிகளுக்குப் பரிச்சயமான ஒருவர்.
காரணம்- பல்லாயிரக்கணக்கான போராளிகள் அவராலேயே உருவாக்கப்பட்டனர்.
அவரிடம் நான் பயிற்சி பெறவில்லையே என்றதொரு ஏக்கம் அவரிடம் பயிற்சி பெறாதோருக்கு இருந்ததுண்டு. அவரிடம் பயிற்சி பெறாது விட்டாலும் பரவாயில்லை - சில மாதங்கள் அவருடன் கூட இருந்தாலே போதும், என்று கருதும் போராளிகளும் உண்டு. அவர்களில் நானும் ஒருவன்,
1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இந்தியப் படைகளுடன் சண்டை ஆரம்பமாகி சுமார் இரண்டு மாதங்களின் பின்னர், வன்னியிலுள்ள விஸ்வமடுக் காட்டிற்குள் இருந்த முகாம் ஒன்றிற்குள் அவருடன் இருந்தேன்.
1987 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறீலங்கா இராணுவத்துடனான சண்டைகளிலோ அல்லது முகாம் தாக்குதல்களிலோ, அதிகளவில் தான் கலந்துகொள்ளவில்லை என்று, செல்வராசா மாஸ்டர். சிறிது கவலையுடன் கூறுவார். அதற்குக் காரணம், போராளிகளை உருவாக்கும் பயிற்சியாளனாக செல்வராசா மாஸ்டர் தலைவரால் நியமிக்கப்பட்டதுதான்.
ஆனால் இந்திய இராணுவத்துடனான சண்டைகளில், வட்டியும் முதலுமாகச் சேர்த்து பல சண்டைகளில் மாஸ்டர் கலந்து கொண்டிருந்தார். அதில் யாழ்ப்பாணத்திலுள்ள குளப்பிட்டிச் சந்தியில் இந்தியப் படைகளுடன் நடந்த சண்டை ஒன்றும், இணுவிலில் நடந்த சண்டை ஒன்றும் மாஸ்டரின் திறமையைப் பறைசாற்றிய தாக்குதல் சம்பவங்களாகும்.
--குளப்பிட்டிச் சண்டை நடைபெற்ற நேரம், இரண்டு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் யாழ்ப்பாணத்திலே நின்றிருந்தனர். ஒருவர் ' இந்தியா ருடே' நிருபர்; மற்றவர் பிரான்சுப் பத்திரிகை ஒன்றின் நிருபர்.
இவர்கள் இருவரும், தாக்குதல் நடந்த இடத்துக்கு எமது போராளிகளால் கூட்டிச் செல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட இராணுவத்தினரது உடல்களும், கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் அவர்களுக்குக் காட்டப்பட்டன.
இந்தியப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் எவ்விதம் சண்டைகள் நடை பெறுகின்றன என்பதை உலகம் முதலில் அறிந்தது, இந்தச் சம்பவத்தின் மூலம்தான். இதை ஆதாரங்களுடன்-படங்களுடன்- வெளிநாட்டு நிருபர்களே கொடுத்தபோது, உலகம் மூக்கில் விரலை வைத்தது.
இந்தத் தாக்குதலை எவ்விதம் தனது குழுவினர் செய்தனர் என்பதை, மாஸ்டர் எமக்குச் செய்து காட்டுவார்; அவ்விதம்தான் எதிரியுடன் சண்டை செய்யவேண்டும் என்றும், எமக்குக் கற்பிப்பார்.
இதில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்: எமது தரப்பில் எவருமே இறக்கவில்லை .
அடுத்ததாக இணுவிலில் நடந்த ஒருசண்டை . அதில், இந்திய அரசால் " வீர சர்க்கார் '' என்ற உயர்ந்த இராணுவ விருது கொடுத்துக் கௌரவிக்கப்பட்ட இந்திய அதிகாரியான மேஜர் பரமேஸ்வரன் கொல்லப்பட்டார்.
இந்தச் சண்டையைப்பற்றி மாஸ்டர் சொல்லும்போது கூறுவார்: ''இணுவிலில் ஒரு இடத்தால் இராணுவ அணியொன்று முன்னேறிக்கொண்டிருந்தது. சுமார் 50 பேர் வரை அந்த அணியில் இருந்தனர்,
இவர்கள் ஒரு பனங்கூடலூடாக வரும் போது, எமது போராளிகள் தாக்குதலைத் தொடங்கினர். சண்டை நீண்டநேரம் நடந்தது. எமது பக்கத்தில் நிலை எடுத்துச் சண்டை செய்ய, தகுந்த காப்பிடங்கள் இருக்கவில்லை . அப்படியிருந்தும் எனது தலைமையில், தந்திரோபாயமும் துணிச்சலும் மிக்கவர்கள் மூலம் எதிரிகள் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இறுதியில் 18 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதில் மேஜர் பரமேஸ்வரனும் ஒருவர். எமது பக்கத்தில் ஒரு போராளி வீரமரணமடைந்தார்.
இத்தகைய வெற்றிகரமான சண்டைகளில் ஈடுபட்டபின்னர், வன்னிக் காட்டிற்குள் முகாம் அமைத்துத் தங்கினார். காட்டுக்குள் இருக்கும்போது மாஸ்ரர் சும்மா இருக்கமாட்டார். எப்பொழுதும் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார். அப்படியான நேரங்களில் மாஸ்ரர் சொல்வார்......
".... இயக்கத்திலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருக்கவேண்டும்; அது இயக்கத்திற்குப் பயன் உள்ளதாகவும் இருக்கவேண்டும்.”
உடற்பயிற்சிப் போட்டியொன்று வைத்தால் இயக்கத்தில் மாஸ்ரருக்குத்தான் முதல் இடம் கிடைக்குமென்று, எமது போராளிகள் சொல்வார்கள். காட்டு முகாமில் - இருக்கும் போது அடிக்கடி எமக்கெல்லாம் அறிவுரைகள் கூறுவார்.
பொன்னம்மான் ராதா அண்ணை ஆகியோரைப் பற்றி அடிக்கடி கூறுவார். குழப்படி செய்யும் போராளிகளைத் திருத்துவதில், மாஸ்டர் தனக்கே உரிய பாணிகளை வைத்திருக்கின்றார்.
ஒருமுறை இரண்டு போராளிகள் தங்களுக்குள் சண்டைபிடித்துக்கொண்டு கதைக்காது இருந்தனர். அவர்கள் இருவரையும் அழைத்து, ஒரு கோப்பையில் சாப்பாட்டை எடுத்து வந்து ஒருவர்மாறி ஒருவருக்கு ஊட்டு வித்தார் "நாங்கள் எல்லோரும் சகோதரர்கள் போல இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் சண்டையிடக்கூடாது'' என்று அறிவுரை கூறி அனுப்பினார்.
காட்டுக்குள் இருந்த காலகட்டத்தில் உணவுகளுக்குப் பெருத்த தட்டுப்பாடு இருந்தது. அதுவும் இராணுவம் காடுகளுக்குள் இறங்கிய நேரங்களில் பட்டினியும் கிடந்திருக்கின்றோம்.
இந்த நிலையில் எந்த ஒரு உணவையும் உண்ணாது வீசுவதை மாஸ்ரர் அங்கீகரிக்க மாட்டார். சிலவேளைகளில் இரவு உணவு அடுத்த நாள் காலையில் மிஞ்சியிருக்கும் அத்துடன் சேர்த்து ஏதோ ஒரு காலை - உணவும் சிறிது சமைக்கப்படும்.
அந்தப் புது உணவுக்காக எமது மனங்கள் ஏங்கும். ஆனால் அது எல்லோருக்கும் போதாது என்பதால், பழைய உணவையும் புதிய உணவையும் கலந்துவிட்டு, 'சரி இனிச்சாப்பிடுவோம்'' என்பார்.
இரண்டையும் கலந்தபின் அது இரவு சமைத்த உணவு வகையாகவும் இராது காலை சமைத்த உணவு வகையாகவும் இராது - ஏதோ புதியவொரு உணவாகவும் புதியதொரு சுவையாகவும் இருக்கும். பெருமூச்சு விட்டபடி அதை உண்போம். -
ஒருமுறை 'ஒப்பறேசன் திரிசூலம்' என்ற பெயரில், நாம் இருந்த காட்டுப்பகுதியில் இந்திய இராணுவத்தினர் தேடுதலை - நடாத்தினார்கள்.
அப்போது நடந்த சண்டையில் எமது இருப்பிடம் இராணுவத்திற்கு தெரியவர, புதிய இருப்பிடத்தைத் தேடினோம்.
அந்தச் சமயங்களில் எம்மிடம் உண்பதற்கு எதுவுமே இருக்கவில்லை; குடிக்க நீரும் கிடைக்கவில்லை.
அப்போது எமது ஒருநேரச் சாப்பாடு மூன்று கிறீம் கிறேக்கர்' பிஸ்கற்றும், அரைக் கோப்பை தண்ணீரும்தான். அதுவும் ஒரு நாளைக்கு இரண்டு தடவைதான் உண்போம்.
அந்த நேரத்தில் எமது உடல் சோர்வடையும். ஆனால் உள்ளத்தில் சோர்வு ஏற்படாதவாறு மாஸ்டர் ஒவ்வொரு போராளியையும் ஊக்குவிப்பார்.
தனது வீரமரணத்துக்கு நான்கு வாரத்துக்கு முன்னர் தான் அவர் ஒரு பயிற்சி முகாமை நடாத்தி முடித்திருந்தார்.
அப்போது மாஸ்டர் சொன்னார் ......
நான் பலாலிப்பக்கம் போகின்றேன். இனி நான் இறந்தாலும் பரவா இல்லை . - ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை நான் உருவாக்கிவிட்டேன். இதற்கெல்லாம் காரணம் பொன்னம்மான் தான்; அவர்தான் என்னை உருவாக்கினார்.''
மாஸ்ரர் வீரமரணமடைந்த அன்று கூட, திருக்கோணமலையிலிருந்து இடம்பெயர்ந்து வந்த - எமது போராளியின் குடும்பத்தவர்களில் ஒருவர், செல்வராசா மாஸ்ரர் இப்போது எங்கே நிற்கின்றார்? எனக்கு அவரை நன்றாகத் தெரியும்' என்றார்.
இப்படி போராளிகளுக்கு மட்டுமன்றி மக்களுக்கும் மாஸ்டரை பற்றி, நன்கு தெரியும்.
அந்த செல்லராசா மாஸ்டர் இன்று எம்முடன் இல்லை .
செல்வராசா மாஸ்டர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சொந்த இடம், காங்கேசன்துறை. தந்தையின் பெயர் சின்னத்துரை; அவருக்கு இரண்டு கண்களும் தெரியாது. அந்த நிலையிலும்தான் செல்வராசா மாஸ்டர் தன்னைப் போராட்டத்துக்கு அர்ப்பணித்தார்.
இவரது இயற்பெயர் செல்வராசா. ஆனால் இயக்கம் இவருக்கு இட்ட பெயர் அன்பு. மாஸ்டருடன் சேர்ந்து இயக்கத்துக்கு வந்த அவரது ஊர் நண்பர்களால் செல்வராசா அண்ணை ' என அழைக்கப்பட்டார். காலகதியில் பயிற்சி முகாமின் பயிற்சி ஆசிரியனாக வந்த பின்னர், அவரது மாணவர்கள் இட்ட பெயர்தான் செல்வராசா மாஸ்டர் என்பதாகும்.
1983 ஆம் ஆண்டு த.வி. புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மாஸ்டர், எமது இயக்கத்தின் 3 ஆவது பயிற்சி முகாமில் - பயிற்சியைப் பெற்றிருந்தார்.
இவரது பயிற்சி முகாமினது பொறுப்பாளராக லெப் கேணல் பொன்னம்மான் இருக்க, பயிற்சியாளராக லெப். கேணல் புலேந்தி அம்மான் இருந்தார்.
பயிற்சிக் காலகட்டத்தின்போதே செல்வராசா மாஸ்டர் திறமை பெற்று, சகதோழர்கள் மத்தியில் முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தார்.
பயிற்சி நேரத்தின் போதே இவரது திறமையை, முயற்சியை, கட்டுப்பாடுகளுக்கு உட்படும் தன்மையை அவதானித்த புலேந்தி அம்மான், 3 ஆவது பயிற்சி முகாமின் மாணவனாக இருந்த செல்வராசா மாஸ்ரரை, அதே பயிற்சி முகாமின் பகுதிநேரப் பயிற்சியாளனாக இறுதியில் மாற்றி வைத்தார். அந்த அளவிக்கு மாஸ்ரர் உடற் பயிற்சியில் ஒரு புலியாக இருந்தார்.
பின்னர் நான்காவது பயிற்சி முகாமின் இறுதிக்கட்டத்தில், செல்வராசா மாஸ்டரே பயிற்சியாளனாக இருந்தார்.
எமது இயக்கத்தில் பொன்னம்மானுக்கு அடுத்தபடியாக ஏராளமான போராளிகளை உருவாக்கியது, செல்வராசா மாஸ்ரர்தான்.
பலாலியில்...... அன்று செல்வராசா மாஸ்ரர் வீரமரணமடைந்து விட்டார். செம்மண்ணான கட்டுவன் பகுதி, மாஸ்டரின் குருதி பட்டு மேலும் செம்மையடைந்து விட்டது.
செல்வராசா மாஸ்டரின் கரத்தால் இனித் துப்பாக்கியை இயக்க முடியாது தான்.
ஆனால்மாஸ்ரர் உருவாக்கிவிட்ட ஆயிரமாயிரம் போராளிகளின் கரங்களிலுள்ள துப்பாக்கிகள், ஆக்கிரமிப்பாளரின் அரண்களை நோக்கி முழங்கிக் கொண்டே இருக்கின்றன. அந்தத் துப்பாக்கி வெடிச்சத்தங்கள் தான் மாஸ்ரருக்குக் கிடைக்கும் அஞ்சலிக்கீதமாகும்.
-தினேஸ்
-விடுதலைப் புலிகள் இதழ்
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”





0 கருத்துகள்