Ad Code

Recent Posts

கப்டன் சுந்தரியின் வரலாற்று நினைவுகள்

கப்டன் சுந்தரி
உருத்திராபதி உதயலட்சுமி
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம் 
வீரப்பிறப்பு: 30.03.1964 
வீரச்சாவு: 19.12.1990

வீரச்சாவு நிகழ்வு விபரம்: கட்டுவன் குரும்பசிட்டி பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு

துயிலுமில்லம்: எள்ளங்குளம் 

நிலவாய் இருந்து நெருப்பாய் எழுந்து! கப்டன் சுந்தரி

தனது கைகளில் ஆயுதத்தை தூக்குவதற்கு முன்பிருந்தே ஒரு சமூகப் பெண்ணாக இருந்து கொண்டு சுந்தரி சுதந்திரப்பறவைகளுக்குத் தோள் கொடுக்கத் தொடங்கினார். வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட இவர் “சுதந்திரப் பறவைகள்” சஞ்சிகைக்கு ஆக்கங்கள் எழுதுவதில் ஈடுபட்டார். ஆயுதம் ஏந்திய பெண்ணாக ஒவ்வொரு பெண்ணும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், ஆயுதம் தரித்து பயிற்சிப் பாசறைக்குப் புறப்படும் பொழுதுதான் மன உணர்வுகளை ஒரு கடித வடிவில் எழுதியிருந்தார். இக்கடிதம் 1987 வைகாசி ஆனி 'சுதந்திரப் பறவைகளில்' இடம்பெற்றது. இக்கடிதம் இளம் பெண்கள் மத்தியில், வேண்டிய காலத்தில், பொருத்தமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

1987இல் ஆயுதப் பயிற்சி பெற்றுவிட்டு, இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிரான போர்க்களத்தில் நின்ற வேளை, 17.01.1989 இல் மாமடு என்றும் தமிழ்க்கிராமத்தில் நடாத்தப்பட்ட சிறீலங்கா இராணுவத்துக்கெதிரான தாக்குதல் சம்பவம் ஒன்றை 'தாயக மீட்புக்காக' என்ற தலைப்பில் கவிதை வடிவில் எழுதினார். 

1989இன் தொடக்கத்திலிருந்து முடிவு #வரை 'சுதந்திரப் பறவைகள்' ஆக்கக் குழுவில் இவர் அங்கம் வகித்தார். 1989 இல் நாடு முழுதும் இந்திய இராணுவம் சூழ்ந்திருக்க கல்லச்சுப் பதிப்பில் வெளியான 'சுதந்திரப் பறவைகள்' சஞ்சிகைகள் அனைத்தையும் வெளிக் கொண்டு வருவதற்காக ஆக்கங்கள் பலவற்றை எழுதுவதிலிருந்து, கல்லச்சு வேலைகளைச் செய்து சஞ்சிகைகளை வெளியிடுவது வரை காட்டுக்குள்ளிருந்து கடும் பணியாற்றினார்.

01.06.1989 இல் வெளிவந்த 'சுதந்திரப் பறவைகளில்' இவர் எழுதிய 'களத்திலிருந்து ஒரு கடிதம்' இலகு நடையில் தெளிந்த கருத்துடன் சுவை குன்றாமல் அமைந்திருந்தது. அக்கடிதத்தில் தன் தோழியை நோக்கி அவர் கேட்டுள்ள,

"வீட்டின் சுவர்களுடன் உன் உணர்வுகளை முட்டி மோதவிட்டு, வெளியேற முடியாமல் தவிக்கின்றாய். எவ்வளவு காலந்தான் உன் உணர்வுகளை திரை போட்டு மறைக்கப் போகின்றாய்"

"விடியலுக்காக சிறையை உடைக்கும் வலிமை உனக்கு ஏன் இன்னமும் வரவில்லை” 
போன்ற கேள்விகள் உண்மையில் இளம் பெண்கள் சமுதாயத்தின் மீது அவர் தொடுத்த கேள்விக் கணைகளாகும். ஆனால் அக் கேள்விக் கணைகளைக்கூட எழுத்தாற்றலூடாக பசுமரத்தில் ஆணி ஏற்றுவது போல் பதிய வைத்துள்ளார்.

எந்த இலட்சியக் கனவோடு தனது உயிரை அர்ப்பணித்துக்கொண்டாரோ, அந்தக் கனவு அவரின் எழுத்துக்கள் யாவற்றிலும் ஆழவேரோடி நிற்பதைக் காணமுடியும்.

"பெண் பிள்ளை எனும் பாதிப்பு உங்களைத் தாக்காது என்றே நம்புகிறேன். நாமும் ஆண் போராளிகளுடன் சரி நிகர் நின்றே போராடி வருகின்றோம். இதற்கு எம் சகோதரிகளின் ஆயுதம் ஏந்திய போராட்டம் எடுத்துக்காட்டாக அமைகின்றது. நாங்கள் உங்கள் மகள் மட்டுமல்ல, இந்த இனத்தின் மகள். அதனால் கவலைகளுக்கு இடம் கொடுக்காது நீங்கள் இருக்கவேண்டும்”

என்பது போன்ற கருத்துக்களை தனது எழுத்தின்மூலம் வெளிப்படுத்தினார். இவ்வாறு தனது எழுத்தாற்றல் மூலம் இளம் சமுதாயத்துடன் நெருங்கி நின்ற சுந்தரி தாயக விடுதலைக்காக விதையாகி வீழ்ந்தார் .

ஒரே குடும்ப மாவீரர்:
கப்டன் வாசு 
மேஐர் ஜேம்ஸ் 
கப்டன் சுந்தரி



-மாலினி
சூரியப்புதல்வர்கள் 2006

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code