கடற்கரும்புலி
கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி
வெற்றிலைக்கேணி, வடமராட்சி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 16.12.1965
வீரச்சாவு: 19.09.1994
கற்பிட்டிக் கடலில் சிங்களக் கடற்படையின் கடலரசனை தாக்கியழித்த கடற்கரும்புலிகள்.
மங்கையக்கா இன்னும் இருந்து எங்களைப் போல போராளிகளை வளர்த்திருக்கலாம் என்று கவலையாய்க் கிடக்கு" அந்தச் சின்னப் போராளி கூறினாள். கடற்புலிகள் மகளிர் படையணியின் அனேகமான போராளிகளுக்கு அவள் நீச்சல் பழக்கியிருந்தாள். இரவு பகல் பாராது பிள்ளைகளோடு ஒருத்தியாக மங்கை நிற்பாள். எங்கடை "மங்கை அக்கா எந்தக் கஷ்டமான பயிற்சிகளையும் தான் முன்மாதிரியாகச் செய்து காட்டித்தான் எங்களைச் செய்யச் சொல்லுவா. எங்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் மங்கை அக்காவே செய்யிறா. எங்களால ஏலாதோ," என்று செய்து போடுவம்.
எப்போதுமே முன்மாதிரியான போராளியாகவே நாம் அவளைக் கண்டோம். பிள்ளைகள் நாலுமுப்பது மணிக்கு நித்திரை விட்டு எழுந்த போதெல்லாம் அவள் நாலு மணிக்கே எழுந்து விடுவாள். எந்தப் பிள்ளையும் நீந்தத் தெரியாமல் இருக்கக்கூடாது. குறைந்தது ஐந்து கடல் மைல்களாவது நீந்திப் பழகியிருக்க வேண்டும் என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.
அதற்காக வெயிலென்றும் மழையென்றும் பாராது பிள்ளைகளுடன் நனைந்தும் காய்ந்தும் நின்றாள். பிள்ளைகளை நீந்தப் பழகுவதற்கென கடலில் இறக்கி விட்டு அலைகளில் நனைந்தபடி அவள் நிற்பாள். கால்கள் விறைத்தாலும் கண்கள் மட்டும் தூரத்தே புள்ளியாய்த் தெரியும் எதிரியின் விசைப்படகின் அசைவினைப் பார்த்தபடி நிற்கும்.
ஒரு முறை வடமராட்சி கிழக்குப் பிரதேசத்துக்கு மங்கை அலுவலாகச் சென்றிருந்தாள். அங்கிருந்து நான்கு படகுகள் இவர்களது பக்கம் வருவதாகச் செய்தி வந்தது. பிள்ளையள் நீந்துவதற்குப் போவார்களே, நான்கு படகுகளும் தாக்குதல்களை நிகழ்த்தலாம், பிள்ளைகள் கடலுக்குள் இறங்கினால் ஆபத்து. விடியுமுன்னரே அவள் சைக்கிளில் நீண்டமைல்கள் கடந்து கண்களில் சிவப்போடு வந்து சேர்ந்தாள். அவ்வளவு தூரம் ஒவ்வொரு போராளிகளையும் கண்ணுக்குள் வைத்துப் பேணினாள்.
போராளிகள் வீணாக இறக்கக் கூடாது. இந்தப் போராட்டத்தில் நிறையச் சாதிக்கவேணும் என்பதில் தீவிரமாக நின்றாள். ஒவ்வொரு போராளிக்கும் படகு எஞ்சின் உதிரிப் பாகங்களிலிருந்து படகு ஓட்டுவது வரை சகல துறைகளையும் கற்றுக் கொடுத்தாள். கட்டுமரம் ஓடப்பழக்கி குல்லா வலிக்கக் கற்றுக்கொடுத்தது வரை அவள் சாதித்தவை ஏராளம்.
கடலைப்பற்றித் தெரியாது, நீச்சல் பற்றி அடிதலை தெரியாது வந்த போராளிகளே அனேகம். ஐயோ நான் தாழப்போறன் எனக்குப் 'போசா' தாங்கோ என்று மூச்சுமுட்டி நிற்கும் போராளிகளுக்கெல்லாம் அண்ணையை (தலைவரை) நினைச்சுக் கொண்டு பயிற்சி எடுங்கோ. கஷ்டம் தெரியாது என்று நம்பிக்கையூட்டி தைரியமளித்து பிள்ளைகளோடு எப்போதும் தானும் ஒரு பயிற்சியாளராகவே நின்றாள். எப்போதும் தலைவரின் வளர்ப்புப் பற்றியும் போராட்டம் பற்றியும் சொல்லிச்சொல்லி வாழ்ந்த போராளி அவள்.
அவளது முதற்சண்டை ஆனையிறவு ஆகாய கடல் - வெளித்தாக்குதலாக அமைந்தது. அதற்கு அவள் விநியோகக் குழுவில் ஒருத்தியாகச் சென்றாள். அந்தச் சண்டையில் தான் திரும்பி வருவேன் என்ற உறுதியோடு தான் சென்றாள். கையில் சிறிய காயத்தோடு வந்தவளிடம் நிறையக் கனவுகள் இருந்தன. கரும்புலியாய்ப் பாயவேணும் என்ற கனவையே நெஞ்செல்லாம் நிறைத்து அதற்காகவே தன்னைத் தயார்ப்படுத்தினாள்.
பூநகரிச் சண்டைக்கும் அவள் லெப்.கேணல் பாமாவுடன் சென்றாள். அலைகளில் நனைந்து நனைந்து படகோட்டியபடி கண்காணிப்பு படகின் ஓட்டியாக நின்றாள். லெப் கேணல் பாமா நீருந்து விசைப் படகை எடுக்கும்போது படகுக்கு ஓட்டியாக நின்று அதைக்கொண்டு வந்து சேர்த்து பெரிய வெற்றிப் பூரிப்போடு திரும்பவும் சென்றாள். எதிரியின் ஆயுதங்கள் அள்ளி 50 கலிபரின் தாங்கி கழற்றி இலக்குப்பிசகாமல் வந்து கரைசேர்ந்த அந்தச் சண்டையில் அவளது பங்கு கணிசமானது.
கடைசியாக கற்பிட்டிக் கடலில் கரும்புலியாய்ச் செல்வதற்கு முன் அவள் படகு துறைத் தொழில்நுட்பப் பிரிவுக்குப் பொறுப்பாக நின்றாள். ஒவ்வொரு போராளிக்கும் நுட்பமாக விளங்கப்படுத்தி உற்சாகமூட்டி தானே அருகிருந்து ஒவ்வொரு தேவைகளையும் கவனித்துச் சென்றாள். மங்கையக்கா தனக்கு என்ன தெரியாது எண்டாலும் எந்தப் போராளியிடமும் கேட்டு அறிஞ்சு கொள்ளுவா. எதையும் துருவித் துருவி நுட்பமாக கேட்டறிவது அவளிடம் எப்போதுமே இருந்தது. அப்படி எண்டா என்ன? இப்படிச் செய்தால் சரிவருமோ? என்று அவளுக்குப் புதிய புதிய நுட்பமான யோசனைகள் தோன்றும். அதனைச் செயலிற் காட்டும் போது மூக்கில் விரலைவைக்கத் தோன்றும்.
அங்கையற்கண்ணியின் தாக்குதலுக்குப் பின்னெல்லாம் அவளுக்குப் பொறுமை எல்லை கடந்துவிட்டது. எப்ப சந்தர்ப்பம் கிடைக்கும் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்தாள். மனம் சலித்து ஓய்ந்ததில்லை, அந்த இடைப்பட்ட கணங்களிலெல்லாம் இயலுமானவரை போராளிகளுக்கு நீச்சல் பழக்கி, படகு ஓட்டப் பயிற்சி அளித்து அவற்றில் தன்னைத் தீவிரப்படுத்திக் கொண்டாள்.
கற்பிட்டித்தாக்குதலுக்கு நெஞ்சிலே சாவைச் சுமந்தபடி வாய் ஓயாமல் அண்ணையைப் பற்றியே கதைத்தபடி சென்றாள். இலக்குச் சரிவராவிட்டால் காட்டுக்குள்ளையே இருந்திடுவன் கரையில் நின்ற போராளிகளுக்கு கைகளை அசைத்தபடி சொன்னாளாம்.
இரவு 11.25 மணி உச்சி நிலவு பொங்கித் தணிந்தது. மன்னார் கற்பிட்டிக் கடலில் ஓயாத அலைச்சத்தத்தின் மத்தியில் கடலரசன் விரித்தபடி நின்றது. நளாயினி தலைமையில் மங்கையின் படகு மின்னலாய் உயரக்கிளம்பிய அலைகளை கிழித்தபடி முன்னே சென்று மோதி வெடித்தது. லக்ஸ்மனும், வாமனும் சென்றபடகு கப்பலின் அடுத்தபுறம் மோதிவெடிக்க கடலரசன் தீப்பற்றியபடி கற்பிட்டிக் கடலடித்தளத்தோடு மெல்லமெல்ல தாழ்ந்துபோனது
நான் வெடிச்சதன் பிறகு வீட்டிலை என்ரை உடுப்புகளோடை இருக்கிற மஞ்சள் சீலையை அம்மாவுக்கு உடுத்துவிடுங்கோ என்று கூறிச் சென்ற மங்கை சத்தமிட்ட கற்பிட்டிக் கடலலையோடு கரைந்து போனாள். பிள்ளைகள் திருந்துறதுக்குத் தானே அப்படிச் செய்தனான். கிச்சினிலை விடப்போறியளோ? அப்ப நல்லாப் பனங்காய்ப் பிட்டுச் செய்து சாப்பிடலாம் என்று கண்கள் விரிய வாயைச் சப்புக் கொட்டியபடி சொன்ன மங்கை வரவேயில்லை.
கண்கள் வலித்து மீண்டன. அவள் சிரித்தபடி.... சிதறிப்போன உடலைச் சுமந்தபடி
0 கருத்துகள்