பசுபதி மணிவண்ணன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 01.10.1970
வீரச்சாவு: 10.03.1989
நிகழ்வு: கிளிநொச்சி வட்டக்கச்சியில் இந்தியப்படையினரின் சுற்றிவளைப்பில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவு
வட்டக்கச்சிக் கிராமம் மெல்ல விடியத்துவங்கியது. இந்தியப் படை முகாமிற்கு அருகில் மிதிவெடி நாட்டும் தனது பணியைச் செவ்வனே முடித்திருந்தான் புலிவீரன் ரமேஸ். கூட வந்தவன் ஈசன். அதே ஊரைச் சேர்ந்த புலிகளின் ஓர் ஆதரவாளன்.
அருகிலேதான் அப்போராளி ரமேசின் வீடு தன் அம்மாவைப் பார்க்கவேணும் போல ரமேசுக்கு இருந்தது. இருவரும் போனார்கள். வீட்டிலிருந்து சிறிது தூரத் தில் கூடவந்த ஈசனை நிறுத்தி, "கவனம் அண்ணை" என்று விட்டு ரமேஸ் வீட்டுக்குள் நுழைந்தான். கையில் இருந்த பையில் மிதிவெடிகளும், 'கிறனேட்'டுகளும் இருந்தன.
தாயினதும் தனயனதும் பரவசமான சந்திப்பு. உச்சி முகர்ந்தாள்; அள்ளி அணைத்தாள். மகனைக் கண்ட அளப்பரிய சந்தோசம் அம்மாவுக்கு! அவர்கள் அளவளாவிக் கொண்டிருக்க நிமிடங்கள் கரைந்தன. கனத்த சப்பாத்துக்களின் கீழ் சருகுகள் நெரிபடும் ஓசைகேட்க, தாயின் மடியில் தலைசாய்த்துப் படுத்திருந்தவன் திடுக்கிட்டு எழுந்தான். காதுகளைக் கூர்மையாக்கினான்.
'செத்தை' நீக்கலுக்கூடாக வெளியே பார்த்தான். குழை செருகப்பட்ட தலைகள்; நீட்டிய துப்பாக்கிகள்.
வாசற் படலையை உதைத்தபடி இடி போலக் கத்திக் கொண்டு, துப்பாக்கியோடு வீட்டுக்குள் நுழைந்தான் ஓர் இந்தியன்,
அம்மா அசைவற்றுப்போனாள். திக்பி ரமை அடைந்தவளாக அவள் வாசலையே பார்த்து நிற்க, முதுகுப்புறமாக அம்மாவோடு சாய்ந்து கொண்டான் ரமேஸ். வாசலைப் பார்த்தவன் அதிர்ச்சியடைந்தான். இவனோடு வந்த ஈசன் இப்போது அவர்களோடு வந்தான். பச்சைத் துரோகம்.
தப்பி ஓடுவதென்பது முற்றாகச் சாத்தியமற்றது என்பது அவனுக்குப் புரிந்தது.
அம்மாவோடு இறுகச் சாய்ந்துகொண்டான்.
கண்ணாடி நொருங்கும் சத்தம் சடுதியாகக் கேட்க அம்மா திடீரெனத் திரும்பினாள்.
குப்பி இல்லாத வெறும் கயிறு, வாயிலிருந்து வழுக்கி விழ, அவன் அம்மாவின் காலடியில் சரிந்துகொண்டிருந்தான்.
அம்மாவுக்கு உயிர் அசையவில்லை. தான் பெற்ற பிள்ளை தனது கண்முன்னாலேயே, தனது காலடியிலேயே...
"ஐயோ...!.. ரா... சா....
அந்தத் தாயின் ஒலத்தை மிதித்துக்கொண்டு, ரமேசது உடலைக் 'கொறகொற'- வென இந்தியர்கள் இழுத்துச் சென்றனர்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்