சண்முகராஜா செந்தில்ராஜ்
கெற்பேலி, மிருசுவில்
வீரப்பிறப்பு: 22.10.1969
வீரச்சாவு: 01.03.1994
வீரச்சாவு நிகழ்வு: 01-03-1994 அன்று பூநகரி கௌதாரி முனைப் பகுதியில் நடந்த எதிர்பாராத நேரடி மோதலில் வீரச்சாவடைந்தார்.
“எனக்குக் கால்வழங்காத குறையை அகற்றியவன்”
ஒரு மாவீரனின் சகோதரியினது உள்ளத்து உணர்வு
என் ஆசைத்தம்பி ராஜன்... எனக்கு இரண்டு வயதான போது எங்கள் தாய் உன்னைப் பெற்றெடுத்தார். பிறப்பிலிருந்தே நான் நடக்க முடியாதவள். எனது ஐந்து வயதில் நீ சிறியவனாக இருந்த பொழுதே நீ அழுகின்ற நேரத்தில் உன்னை என் மடி மீது வைத்து விளையாட்டுக் காட்டுவேன். அம்மா வீட்டு வேலைகளைக் கவனிக்கும் பொழுது உன்னைப் பார்க்கும்படி எனக்குச் சொல்வார். அப்பொழுது நீ நன்றாக நடப்பாய்; ஓடுவாய். என் அருகில் நீ வரும் போது உன்னை இறுகப் பிடித்து விட்டால் என்னை அடித்து விட்டு ஓடுவாய். என்னால் நடக்கவும் முடியாது. ஓடவும் முடியாது.
"என்னைப் பிடி அக்கா” என்பாய்.
என்னால் எப்படிப் பிடிக்க முடியும்? நான் அழுவேன். அப்பொழுது நீ ஓடிவந்து 'ஏன் அக்காஅழுகிறாய்" என்று கேட்பாய்?
என்னால் உன்னைப் பிடிக்க முடியவில்லையே என்று சொல்லி அழுவேன்.
"ஏன் அக்கா உன்னால் ஓடமுடியாது" என்று கேட்பாய். அது எனக்குத் தெரியாது” என்பேன்.
நீ ஏழு வயதை அடையும் வரை எனக்கு சகல கடமைகளையும் அம்மாவே செய்து வந்தார்.
உனது ஏழு வயதிலிருந்து எனக்கான சகல கடமைகளையும் நீ செய்யத்தொடங்கினாய்.
மூன்று சில்லு சைக்கிளில் என்னை வைத்து அங்குமிங்கும் உருட்டித் திரிந்து, நான் நடக்க முடியாத குறையைப் போக்கினாய். என் கால்களாக இயங்கினாய். என்னால் நடக்க முடியவில்லை என்ற துயரம் என்னிடம் நீங்க, எனக்குத் தம்பியாக இல்லையடா அண்ணனாகத் உன்னை என் உயிராக நீயே நான்; நானே நீயென இருந்தோம்.
சிறு வயதினில் நாம் விளையாடிய பொழுது ஒரு நாள் நடந்த சம்பவத்தை, என்னால் உயிருள்ள வரையில் மறக்க முடியாதடா. என்னை வீட்டுக்குள் சைக்கிளில் தள்ளிச் சென்றாய். நான் கொஞ்சம் உடல் பருமனானவள். தள்ளுவதற்குக் கொஞ்சம் உனக்குக் கஷ்டமாக இருந்தது அந்த நேரத்தில்.
"இந்தக் குண்டை ஏலாது" என்று சற்று வைச்சுத் தள்ள விலகிச்சென்றாய்.
அப்போது அருகிலிருந்த மேசை மீதிலிருந்த மேசைக்கத்தியை எடுத்து எறிந்தேன். கத்தி உன் தோள் மீது பட்டது. உன் தோளிலிருந்து இரத்தம் பாய்ந்தது. அதன்பின் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.
கண்விழித்துப் பார்த்தேன்' நான் படுக்கையில் இருந்தேன். பக்கத்தில் அம்மாவும் நீயும் இருந்தீர்கள். உனது இடது தோளில் துணி கட்டப்பட்டிருந்தது அப்போது ...
"அக்கா அக்கா! இனிமேல் உன்னைக் குண்டு என்று சொல்லமாட்டேன். எவ்வளவு தூரம் எண்டாலும் உன்னை சைக்கிலிலை வைச்சுத் தள்ளுறன். எழும்பக்கா. நான் குண்டு என்று சொன்ன படியால்தானே நீ மயங்கிப்போனாய்" என்று அழுதாய்.
நான் கனவு கண்டதுபோல் இருந்தது. நான் இரத்தத்தைக்கண்டு சைக்கிளில் இருந்து மயங்கி விழுந்துவிட்டேன் என்று சொன்ன பொழுது தான், என்ன நடந்தது என்று எனக்குத் தெரிந்தது.
என் முன்கோபத்தால் நான் செய்த குற்றத்தையும் மறந்து, நான் மயங்கியதைக் கண்டு எனக்காக நீ அழுத காட்சியை, எப்படி என்னால்யடா மறக்கமுடியும் ?
நாங்கள் இருவரும் தசையும் நகமும் போல வளர்ந்து வந்தோம்.
கடந்த ஐந்து வருடத்திற்கு முன், எமது விடுதலைக்காக உன்னை நீ இணைத்துக் கொண்டாய். அன்றிலிருந்து எனது சைக்கிளை நானே இயக்கிக்கொண்டிருக்கிறேன். ஏன்? எமது விடுதலைக்காகவே.....!
என்னால் எப்படியடா தாங்க முடியும்?
என் கால்களாக இயங்கி எனக்குக் கால் வழங்காத குறையைத் தீர்த்தவன்.
இரத்தக் காயத்தை நான் ஏற்படுத்திய போதும் எனக்காக அழுதவன். நகமும் தசையும்போல் வாழ்ந்தவன்.
இந்த நாட்டிற்காக, மக்களுக்காக உன்னையே அர்ப்பணித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட செய்தியைக் கேட்டு, என் இதயமே வெடித்ததுபோல் ஆனதடா.
உனது வீரச்சாவு மேலும் எமக்கு உறுதியைத் தந்துள்ளது.
உனக்கு முதலே விடுதலைப் போராட்டத்திலே எமது தந்தை இணைந்து செயற்பட்டிருந்தார்.
உனது பாதச்சுவடுகளை எம்மைப் பெற்ற தாயும் பின்பற்ற முடிவு செய்துள்ளார்.
தாயக விடுதலைக் கனவோடு சென்ற உன் பாதச் சுவடுகள்மீது என் பாதங்களை வைத்துப் பின்தொடர முடியாதபோதும், என் சைக்கிளில் பின்தொடர்வேன். உன் கனவை நனவாக்குவேன்...... இது உறுதியடா என் அருமைத் தம்பியே!
ச. சுபாங்கினி, (சகோதரி)
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்