Ad Code

Recent Posts

லெப்டினன்ட் அனிதா வீர வரலாற்று நினைவுகள்

லெப்டினன்ட் அனிதா 

சித்திராதேவி தம்பிராசா  

ஆரையம்பதி, மட்டக்களப்பு 

வீரப்பிறப்பு: 19.09.1970 

வீரச்சாவு: 28.01.1988


நிகழ்வு: மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இந்தியப்படையினர் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலினால் கைது செய்யப்பட்ட நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவு 


துயிலுமில்லம்: யாழ்கோப்பாய் துயிலுமில்லத்தில் நடப்பட்டுள்ளது, 


தென்தமிழீழத்தில் முதல் வீரச்சாவெய்திய பெண் போராளியும் தென்தமிழீழத்தில் முதலாவது குப்பி கடித்து வீரச்சாவு அடைந்த பெண் போராளியும் இவரே ஆவார், 


எமது தேசத்தின் விடுதலை, ஆயுதமேந்திய போராட்டத்தினால்தான் உருவாகும் என்ற உறுதியுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டார் லெப்.அனித்தா.


கிழக்கு மாகாணம் தமிழர் தாயக பூமியின் ஒரு பகுதி. இலங்கைத்தீவு பிரித்தானியரிடமிருந்து சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே சிங்களவரினால் படிப்படியாகப் பறிக்கப்படும் நிலம். ஆரம்பத்தில் கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் மூலமும் பின்னர் அம்பாறைக் குடியேற்றத்திட்டத்தின் மூலமும் தமிழீழத்தின் தென் பகுதி துண்டாடப்பட்டு படிப்படியாகச் சிங்களவர்களால் விழுங்கப்பட்டுக் கொண்டிருந்தது.


பெரும்பான்மையினராக வாழ்ந்த தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும் சிறீலங்கா இனவெறி அரசினதும், அதன் ஆயுதப்படைகளினதும் துணையுடன் குடியேற்றப்பட்ட சிங்கள குடியேற்ற வாசிகளாலும், சிங்களக் காடையர்களாலும் சிறுபான்மையினராக்கப்பட்டு அடித்து விரட்டப்படுவது கிழக்கில் இன்னும் தொடரும் நிகழ்ச்சி. 8000 சதுரமைல் பரப்பளவைக் கொண்டிருந்த எமது தாயக பூமியான தமிழீழத்தில் இன்று அத்துமீறிய குடியேற்றங்கள் மூலம் கிட்டத்தட்ட 3000 சதுரமைல் நிலப்பரப்பு சிங்களவரால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. இதனால் தமிழ், முஸ்லீம் மக்களில் பெரும்பாலானோர் அகதிகளாக, இருக்க இடமின்றி அலைவது மட்டுமல்லாமல் விளைநிலங்களும் பறிக்கப்பட்டதால், பொருளாதார வாய்ப்புக்களும் மறுக்கப்பட்டு அவல வாழ்க்கையைத் தொடர்கின்றனர். 


தமிழர் தாயகம் மீதான ஆயுதத்தாக்குதலும், இனஅழிப்பு நடவடிக்கைகளும், குறுகிய காலத்திற்கு மட்டுமே வெற்றியைத் தரும். ஆனால் திட்டமிட்ட குடியேற்றங்கள்மூலம் தமிழர்களுக்கு என்று ஒரு தாயகத்தை இல்லாமல் செய்துவிட முடியும் என்பதை உணர்ந்த சிங்கள அரசு, குடியேற்றங்களை ஊக்குவித்தது. தமிழர் மீதான இராணுவ அடக்குமுறைகள் தொடர்ந்தன காலத்திற்கு காலம் நீட்டமிட்ட இனக்கலவரங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ், முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான பெறுமதியுள்ள உடமைகள் அழிக்கப்பட்டன. சிறிலங்கா இனவெறி அரசினால் இன அழிப்பு துரிதமாக்கப்பட்டது.


இவ்இராணுவ ஒடுக்கு முறைகள் அனித்தாவை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்துகொள்ளத் தூண்டின. ஒரு இனத்தின் விடுதலைக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு முக்கியம் என்பதையும், சமூகத்தின் ஓர் அங்கமாகிய பெண்கள் பங்குபற்றாமல் தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றி பெற முடியாது என்பதையும், ஒடுக்கப்பட்டுள்ள பெண்ணினத்தின் விடுதலையை ஒரு புரட்சிகரத்தலைமையால் வழி நடத்தப்படுகின்ற இயக்கமொன்றின் புரட்சிகர விடுதலைப் போராட்டத்தின் மூலமே வென்றெடுக்க முடியும் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொண்ட அனித்தா ஆயுதந் தாங்கிய தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். சொந்த ஊரான ஆரையம்பதியிலேயே தன்னுடைய வேலையை ஆரம்பித்தார்.


எமது விடுதலையை வென்றெடுக்க பெண்களும் ஆயுதமேந்தி களத்தில் குதிக்க வேண்டும் என்பதை சமூகத்திலுள்ள பெண்கள் பெருமளவில் புரிந்து கொள்ளாத நேரம் அது. இந்நேரத்தில் மகளிர் படைப்பிரிவு இயங்குவது வெளியானால், எதிரி பெண்கள் மீதான தனது வன்முறையை முடுக்கிவிடுவான். இதனால் சமூகத்தில் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்த விடுதலைப் புலிகள் மகளிர் அணி, தென்தமிழீழத்தில் தம்மை இனங்காட்டிக் கொள்ளாது இயங்க வேண்டிய சூழ்நிலை நிலவியது.


பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சில திட்டமிட்ட விதிகளைக் கொண்டுள்ள பிற்போக்குப் பண்பாட்டில் ஊறிப்போயிருந்த எமது சமூதாயத்தில், ஒரு பெண் இரகரிய ஆயுத நடவடிக்கையை மேற்கொள்வது என்பது மிகவும் சிரமமான காரியம். இந்நிலையில் அனித்தாவும் தன்னை யார் என்று இனங்காட்டிக் கொள்ளாது இயக்க வேலையில் ஈடுபட்டார்.


படிப்படியாக இவருடைய வேலைகள் மட்டக்களப்பு மாவட்டமெங்கும் விரிவாக்கப்பட்டன. இரு வேறானா பண்பாடுகளைக் கொண்ட தமிழ், முஸ்லீம் சமூகத்தவரிடையே ஒரு பொதுவான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலை என்பது அப்படியொன்றும் இலகுவான காரியம் அல்ல. இரு சமூகத்தவரினதும் அடிப்படைச் சிக்கல்களைச் சரிவரப்புரிந்து, அதற்கு தக்கவாறே எமது விடுதலைப் பாதையை முன்னெடுத்துச் செல்லவேண்டும். இங்கு வாழ்ந்த விவசாயிகள், தொழிலாளிகள், சிறு வணிகர்களின் எளிமையான வாழ்க்கை முறையை புரிந்துகொண்டு, அவர்களுள் நானும் ஒருத்தியாக மாறி மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் செயலாற்றத் தொடங்கினார் அனித்தா.


தென் தமிழீழத்துக்குப் பெருமளவில் உல்லாசப் பயணிகள் வருவார்கள். ஆனால் உல்லாசப்பயணத்துறை மூலம் பெறப்படும் அந்நியச் செலாவாணியை கிழக்குப் பகுதி மக்களின் நலன்களைப் பேணுவதற்காக சிறீலங்கா அரசு பயன்படுத்துவதில்லை. அதே வேளை உல்லாசப் பயணத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் பொருளாதாரத்தை ஈட்டித்தரும் ஏனைய வேலைகளுக்கு அரசு தடை விதித்திருப்பதால், அப்பகுதி மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கவேண்டியிருந்தது.


தமிழீழ மக்களின் பொருளாதாரத்தில் விவசாயமும், கடற்தொழிலுமே முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஆனால் தமிழீழத்தின் தெற்கில் அத்து மீறிய சிங்கள குடியேற்றங்கள் மூலமும். சிறீலங்கா இராணுவ நடவடிக்கைகள் மூலம் தமிழ்மக்களின் விவசாயத்திற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் கரையோர தமிழ்ப் பிரதேசங்களில் சிறீலங்கா இனவெறி அரசு சிங்கள மீனவர்களை குடியேற்றி வருகின்றது. இதனால் தமிழ், முஸ்லீம் மீனவர்கள் இப்பகுதிகளில் கடற்தொழில் செய்ய முடியாதவாறு சிங்கள மீனவர்களாலும், சிறீலங்கா கடற்படையினராலும் அச்சுறுத்தப்படுகின்றனர். இப்படியான திட்டமிட்ட நடவடிக்கைகளும் கிழக்கு மாகாண மக்கள் பொருளாதாரக்கஸ்டத்தை எதிர்நோக்குவதில் பெரும் பங்கினை வகித்தன. 


இத்தகைய நடவடிக்கைகளை முறியடித்து எமது விடுதலையை வென்றெடுக்கும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முழுமூச்சாக அனித்தா தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். துரோகக் கும்பல்களை இனங்காண்பதிலும், அவர்களின் தேச விரோத செயல்களை ஒழிக்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.


சிறீலங்கா அரசுக்கெதிரான எமது தாக்குதல்கள் விரிவடைய, எதிரியின் இழப்புக்களும் அதிகரித்தன. எமது தாக்குதல்களிற்கு ஈடு கொடுக்க முடியாத சிறீலங்கா அரசு தனது துணைக்கு இந்தியப் படைகளையும் அழைத்துக் கொண்டது. அமைதிப்படை என்ற போர்வையில் இங்கு வந்த இந்திய ஆக்கிரமிப்பு படை ஆயிரக்கணக்கான தமிழ், முஸ்லீம் மக்களைக் கொன்று குவித்து, வீடுகள், கடைகளை எரித்து நாசமாக்கியது. பெண்கள் மீதும் பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டது. எமக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையேயான தமிமீழ - இந்தியப் போரின்போது வெடி மருந்துகளும், துப்பாக்கி ரவைகளும் களத்தில் நிற்கும் போராளிகளை வந்தடையும் பாதைகளைத் தடை செய்வதன்மூலம் எம்மை பலவீனமாக்கலாம் என்று கருதிய இந்திய இராணுவம் மூலை முடுக்குகள் எல்லாவற்றிலும் தடையரண்களை அமைத்தது.


இக்காலகட்டத்தில், அனித்தாவின் செயத்திறனைக் கணக்கில் கொண்டு முக்கியமான சில வேலைகளைச் செய்ய இவர் நியமிக்கப்பட்டார். இவரின் வேலைகள் அம்பாறை மாவட்டத்திற்கும் விரிவாக்கப்பட்டன. எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் இடையில் மாறி மாறி அலைந்து திரிய வேண்டி ஏற்பட்டது. பல இராணுவத் தளங்களைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. தான் மேற்கொண்ட வேலைகளைச் செவ்வனே முடிப்பதற்காக துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் எதிரியின் காவலரண்களைக் கடந்து சென்று செயலாற்றினார் அனித்தா.


28.11.1989 அன்றும் இயக்க வேலையைக் கவனிப்பதற்காக எமது போராளி ஒருவரின் சகோதரியுடன் சென்றுகொண்டிருந்தபோது துரோகக் கும்பல் ஒன்றினால் இளங்காணப்பட்டுச் சிறைபிடிக்கப்பட்டார் அனித்தா. விசாரணை என்ற பெயரில் சித்திரவதையை அரங்கேற்றுவதற்காக அவரைத் தமது இடத்துக்கு இழுத்துச் செல்ல முயன்றனர் ஒட்டுக் குழுவினர்.


எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற இயக்க மரபிற்கிணங்க இராணுவத்தளத்திற்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத தழுவிக் கொண்டார் லெப். அனித்தா, பின்னர் இவருடன் சென்ற அந்தச் சகோதரியும் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


விடுதலைப் புலிகள் மகளிர் படையணியில் தெற்கில் உதிர்ந்த முதல் வித்து இவர். இவரின் கால் தடங்கள் பதிந்த நிலம் எங்கணும் புதிய புதிய பெண் புலிகள் உருவாகுகின்றனர். இவர் வழி களத்தினை நோக்கி ஆயிரமாயிரமாய் அனித்தாக்கள் அணி வகுக்கின்றனர்.



மாலினி

சூரியப்புதல்வர்கள் 2006 


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code