Ad Code

Recent Posts

கப்டன் வாணன் வீர வரலாற்று நினைவுகள்

கப்டன் வாணன் 

சண்முகலிங்கம் மோகனகுமார்

உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு: 01.08.1973

வீரச்சாவு: 24.12.1991


நிகழ்வு: யாழ்ப்பாணம் ஈவினைப்பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் வீரச்சாவு 


அருமையான குரல் வளம் கல்விச் சாலையில் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளையுமே ஆக்கிரமித்தான். அமோக வரவேற்பு, கவிதை, கட்டுரை என ஆளுமை பரந்தது. விளையாட்டுத்துறைகளிலும்தான் மகா சூரன். விளையாட்டுக்களில், மெய்வல்லுனர் போட்டிகளில் பரிசில்களைச் சான்றிதழ்களை அள்ளிக் குவித்தான்.


ஆயினும்- இவ்வளவு மட்டுமே போதுமானதா? மனிதத்துவம் பூரணமெய்தியதன் குறியீடுதானா? இல்லை என்ற உண்மையே உறுத்திற்று - சுதந்திரம்! அதுவே முதன்மை என்பதை உணர்ந்து கொண்டான். மோகன்குமார் வாணனாகியதன் அடித்தளமிது. தினக்குறிப்பேடு அவனது இதையே கோடு காட்டுகிறது.


தினக்குறிப்பேடு,அஃறிணை வடிவம்தான். ஆனால் ஒருவனது ஆத்மாவின் உணர்வு வடிவம். அதனால் பேசவே செய்கிறது. இவ்வழியே அவன் பகர்கிறான்!


'எம் இனம் பெற்ற சுதந்திரம் பெறுமதி வாய்ந்தது. அதை எதிரியிடம் விட்டுவிடலாமா?


கூடாது எமது இனத்தின் சுதந்திரத்தை மீண்டும் பெற்றுவிட இறுதி மூச்சுவரை போராடுவோம்!"


உரும்பிராய் வீரத்தின் விளை நிலம். உண்மைதான் தாயக விடுதலைக்காய் எத்தனையோ மாவீரர்களை ஈந்து நிற்கும் மண். இந்த மண் தான் கப்டன் வாணணுக்கும் தாய்மடி. அவனது அன்பு. பாசமெல்லாம் அங்கு இழையோடிக் கிடந்தது.


ஆனால் வந்து நுழைந்தனர் அழையா விருந்தாளிகள். அவர்தம் அமைதிப்பணியின் சரித்திரச் சான்றுகளாய் விளங்கும் தினங்கள் எத்தனையோ! அவற்றுள் ஒன்று. 21-10-1987.


கருத்தை மூடிக்கொண்டு தமிழீழத்திற்க்குள் புகுந்தவர்கள், கண்களை மூடிக்கொண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குட் புகுந்தனர். துப்பாக்கிச் சன்னங்கள் தும்பித் தள்ளின. வைத்தியர்கள், தாதிமார்கள், ஊழியர், நோயாளிகள், பார்வையாளர்கள்.....ஏராளமான தமிழுயிர்கள் உறிஞ்சப்பட்டன! அவர்களுள் ஒருவராய்ச் சண்முகலிங்கம் "அம்புலன்ஸ்" ஓட்டுனர் வாணனின் தந்தை.


இந்த அமைதிக்கான அமர்க்களத்துள் இவன். இவன் தம்பி சிக்கி நின்றனர். தம்பியின் கையிற் காயம், அவசரமாய்க் கட்டுப் போட்டான். அவனை அணைத்தபடி சரிந்து குவியும் சடலங்களுக்குள் புகுந்து கொண்டான்.


வந்த வேறு வைத்தியர்கள், உயரதிகாரிகள் விரைந்து வந்தனர். எஞ்சியோரை மீட்க முனைந்தனர். இந்த ஆரவாரத்தைச் சாதகமாக்கினான். காயத்தின் வழிக் குருதிப் பெருக்கினால் சோர்வுற்றிருந்த தம்பியைத் தோளிற் தூக்கினான். சுற்றுமதிலேறிக் குதித்து நல்லூரிற்கு வந்து சேர்ந்தான். மருந்து கொண்டு தாயாரைச் சென்றடைந்தான்.


தந்தையின் மறைவு விழிகளைத் துளைத்துச் கொடுரக் சென்ற காட்சி -பிஞ்சு மனத்தை வெகுவாய்த் தைத்து விட்டது. சுதந்திரம் பற்றிய எண்ணங்கள் அவனுள் தூவத் தொடங்கின. போராட்டம் பற்றிய உணர்வு முளைவிடத் தொடங்கின.


அப்போதும் பத்தாம் ஆண்டு பயிலும் அப்பாவி மாணவனாய் இருந்த அவனை அந்நியப் படை ஆக்கினைகள் அலைக்கழித்தன. அடிக்கடி கைது செய்யப்பட்டான். அம்மா லோகநாயகியாற் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துணையை இழந்த பறவை தன் குஞ்சுகளையாயினும் காப்பாற்றத் துடித்தது. அது தாய்மையின் இயல்பே! ஒருவாறு பிள்ளைகளைக் கொழும்பிற்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார் அம்மா. நிம்மதிப் பெருமூச்சு. ஆனால், அன்னை நிலையிலிருந்து அந்நியப்பட்ட நிலை ...கொடுமையானதாய் இருந்தது அவனுக்கு. ஏற்றுக் கொள்ளவே மனம் ஓய்வில்லை. "என்னை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பு. அனுப்பு" என அம்மாவுக்கு ஒரே அரிகண்டம், சண்டைகூடப் போட்டான். அவனைச் சமாதானப்படுத்த அம்மாவுக்குப் படாதபாடு, ஒருவாறு தேற்றியாயிற்று.


அவனையறியா விதத்தில், அவனை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஏதோ விதமாய் அறியவந்துவிட்டது. ஆத்திரமடைந்தான். அந்த விடுதியில் போத்தலொன்று கண்களில் எற்றுப்பட்டது. ஆவேசமாய் எடுத்தான், உடைத்தான். கையிற் பெரிதாய் எல்.ரீ.ரீ.ஈ என எழுதினான். குருதி ஆறாய்க் கொட்டியது. ஆனால் மருத்துவரிடம் செல்வதோ ஆபத்து. இது எதிரிகள் சூழ்ந்த அந்நியமண்! அம்மா தன்னால் இயன்ற முதலுதவியளித்தாள். குருதிப் பெருக்கு கட்டுப்பட்டது.


தொடர்ந்தும் கொழும்பில் வைத்திருப்பது நல்லதல்ல. அம்மாவை அச்சம் கவ்வியது. தமிழகத்திற்கு அழைத்துச் சென்றார். சிகிச்சை நடந்தது. மெல்லக் காயம் ஆறிற்று. விடாப்பிடியாய் யாழ்ப்பாணம் வந்துசேர்ந்துவிட்டான்.


போராளிகளுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டான். ஆதரவாளனாகச் செயற்படத் தொடங்கினான். இராணுவ நடமாட்டங்களைக் கண்காணித்து தகவல்களைக் கொடுத்துவந்தான்.


இவ்வேளை இந்திய ஆளும் வர்க்கமானது தமிழீழத்தில் கற்க விரும்பிய பாடம் கற்று முடியும் தறுவாயினையும் அடைந்தது. சுதந்திரத்தையே உயிர் மூச்சாய்க் கொண்ட ஒரு நாடு அது சின்னஞ் சிறுசாய் இருப்பினும் அதன் வீரஞ் செறிந்த எதிர்ப்பின் முன்னே வல்லரசு என்பது வெறும் புல்லே" என்ற உண்மையினைச் சுமந்தவாறு இந்தியப் படை பின்வாங்கிக் கொண்டது.


இடையே தாயகம் மீது தற்காலிகமாய் கவிந்திருந்த வசந்தத்தின் போது, இவனும் இவனது அண்ணனும் இணைந்து கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுநேர உறுப்பினர்களாகத் தம்மை ஆக்கிக் கொண்டனர்.


இருவரும் ஒன்றாகவே பயிற்சி யெடுத்தனர். வாணன் உழவு இயந்திர விபத்தொன்றிற் சிக்கிக் கொள்கிறான் ஒரு கை உடைந்துவிட்டது. சிகிச்சை சிறிது நாட்கள்தான். நீண்ட கால ஓய்வு என்றால் விடுதலை வீரனுக்கு அது சாவினிற்தான்" என்று கூறுமாப்போல் துள்ளியெழுந்து வந்தான். மீண்டும் பயிற்சியைத் தொடர்ந்தான்.


பயிற்சி நிறைவெய்தியதும் காவலரண் ஒன்றில் கடமையாற்றி னான். இரவு பகலாய் மூடாத இந்த இமைகளில் ஒருவனாய் அவனும் கடமை புரிந்தான்.


இவ்விதம் காவலரண்களில் கடமை புரிகிற வேளைகளில் எதிரிப்படையினரின் நிலைமை களைச் சென்று கண்காணிப்பான். ஆனால் கத்தி விளிம்பில் நடக்கிற இச்செயலின் ஆபத்து, அவனுக்குப் பெரிதாய்ப்பட்ட தில்லை -மகிழ்ச்சியைக் கொடுத்து, உற்சாக ஊக்கியாய் இருந்தது.


03-11-1990 அன்று நடாத்தப்பட்ட மாவிட்டபுரம் சிறீலங்காப்படை மினிமுகாம் தாக்குதலுக்கு முன் வேவு பார்க்கும் பணியினை இவன் ஏற்றிருந்தான். மிகச் சாதுரியமாகச் சென்று தகவல்களைத் திரட்டி ஒன்றும் மீதியின்றி தளபதியிடம் பகிர்ந்தான். மேலதிக உறுதிப்பாட்டிற்காக தளபதியினால் அனுப்பப்பட்ட போராளிகளினால் கொண்டுவரப்பட்ட தகவல்களும் இவனுடையதை ஒத்து அச்சொட்டாகவே இருந்தது. வேவுக் கடமைகளிலும் இவன் ஆளுமை மிளிர்ந்தது.


இத்தாக்குதலுக்காக எதிரியின்ன்நிலைகளை நோக்கி இவன், சகபோராளிகள் ஊர்ந்து முன்னேறி நிலையெடுக்கின்றனர். தளபதியின் கட்டளை பிறக்கிறது. எதிர்பாராத் தாக்குதலில் எதிரிப்படையினர் நிலைகுலைந்து போயினர். நிதானிப்பதற்குள்ளாகக் குண்டுபட்டு வீழ்கின்றனர். எறிகணைகள், உலங்கு வானூர்திகள் உக்கிரம் கொண்டு எமது நிலைகளைத் தாக்குகின்றன. குண்டு வீச்சு விமானங்கள் எமது முன்னேற்றத்தைத் தடுக்கப் பகீரதப்பிராயத்தனம் செய்கின்றன. ஆயினும் எதிரிப்படையின் நிலைகளை இவர்கள் அழித்தனர். மினி முகாமைக் கைப்பற்றினர். எதிரிப்படையினர் தமது ஆயுதங்களை வீசிவிட்டு, காயமுற்ற தமது சகாக்களைத் தூக்கிச் சுமந்தவாறு ஓட்டமெடுத்தனர். அவற்றையும் கைப்பற்றி எமது நிலைகளை நோக்கி மீள்கையில், எங்கிருந்தோ வந்ததொரு குண்டு! இவன் உடலைப் பதம்பார்க்கிறது! குருதியாறு நிலத்தை நனைக்கிறது. அவனது தினக்குறிப்பு வரிகள் குரலிலேயே நெஞ்சுள் ஒலிக்கிறது!


"தமிழா நீ பிறவி எடுத்தாலும் நீ பிறந்த மண்ணுக்காக ஒரு துளி இரத்தத்தைக் கொடுத்துவிட காடு மறந்திடாதே தமிழா”


மாவிட்டபுரம் மினிமுகாமைத் தகர்த்து வீரசாதனை புரிந்தவர்களில் ஒருவரான இவன், தனது விழுப்புண் ஆறமுன்னே அடுத்த சமர்க்களத்திற் குதித்தான். 19.12.1990 அன்று கட்டுவனில் சிறீலங்காப் படையினருடனான கடுஞ்;சமர். முன்னேற முயல்கின்றனர் எதிரிப்படையினர். தடுத்து நிறுத்துவதில் இவனது துப்பாக்கியும் சுறுசுறுப்பாய்த் துரிதமாய் இயங்கியது.



05-02-91 அன்று நடந்த தச்சன் காடு மினிமுகாம் தாக்குதலிலும் இவனது பங்கு அளப்பரியது.


சகதோழர்கள் மேல் இவன் காட் டுகிற கரிசனை அபாரம். அவர்களை வழிநடத்துகிற ஆற்றலை அவர்களே புகழ்ந்துரைப்பார்கள். இராணுவம் முன்னேறி வந்த ஒரு தடவை, இவனது குழுவைச்வைச் சேர்ந்த ஒருவன் அசட்டையாக எழுந்து நின்று அவதானித்தான். இவன் கண்டிப்பும் அன்பும் கலந்த தொனியிற் சொன்னான், "எவ்வளவு கஸ்டத்திற்கு மத்தியில் ஒவ்வொரு போராளியையும் அண்ணை உருவாக்கி வைச்சிருக்கிறார். நீ என்னெண்டா சும்மா மண்டையைப் போடுகிறன் எண்டு எழும்பி நிக்கிறாய்!". இந்தச் சிறுவயதிலேயே தலைமைத்துவத்திற்கு விசுவாசமிக்கவனாக, ஒவ்வொரு போராளியினதும் பெறுமதி உணர்வாகத் தன்னை நிலைநிறுத்தியிருந்தான். பங்குபற்றிய அனைத்துத் தாக்குதலுமே மிக நிதானத்துடனும், திறமையாகவும் செயற்பட்டு தளபதிகளின். பாராட்டுதலுக்கும், அன்பிற்கும் பாத்திரமாகிவிட்டான்.


இவனைச் சார்ந்ததால் எத்துணை பெருமை அம்மாவுக்கு. கற்ற கல்விச் சாலைகளிற்கு..

இவனது தாயகத்தின் மீதான தணியாப்பற்று, சுதந்திரத்தின் மீதான தீராக் காதல், உறுதி அம்மாவின் சிந்தனையிலும் சீரிய கருத்துக்களை விதைத்துவிட்டது. தன் பிள்ளைகளுக்கு மட்டுமே அம்மா என்று குறுகி நிற்காது. "எல்லாப் போராளிகளுக்குமே நான் அம்மா" என்று எண்ணக்கூடிய உன்னத நிலைக்குத் தாயை உயர்த்திவிட்டான். மருத்துவமனையிற் சிகிச்சை பெற்றுவந்த எல்லாப் போராளிகளுமே அவரை 'அம்மா அம்மா* என வாயும் மனமும் நிறைய அழைப்பார்கள். தலையை வருடி, காற்று விசுக்கி, பாசத்தால் அவர்களைப் பராமரித்தார். வைத்தியர்களோ. பெற்றோரோ, சகோதரர்களோ சில நேரம் வரத்தவறிவிட்டாலும், இந்த அம்மா ஒரு போதும் வரத் தவறியதில்லை.


"மாவீரனின் தாய் என்ற நியாயமான நிமிர்வு இந்த அம்மாவிடம் நிறைய இருந்தது. வாணன், வள்ளுவன் வாக்கைச் செழுமைப்படுத்தி. "ஈன்ற பொழுதிற் பெரி துவக்கும் தன்மகன் மாவீரன் எனக் கேட்ட தாய் என வளர்த்தெடுத்துவிட்டான்.


கல்விச்சாலைகள்னெஎமது கல்விமான்களை உருவாக்குகின்றதே அன்றிக் கவரிமான்களை உருவாக்குவதில்லை என்பது பெரிய குறை. ஆயினும் நற் சிந்தனையால், பகுத்தறிவு கொண்ட தன்மான மறவர்கள் எம்மண்ணில் வாழவே செய்கின்றனர். அவர்கள் விடுதலை வீரர்கள்! இவர்களுள் ஒருவனை தம் மாணவனாய்க் கொண்டதில் பெருமையடைகின்றன கல்விச் சாலைகள்.'ஆம் வாணன் எமது பழைய மாணவன்' என இறுமாந்து நிற்கின்றன உரும்பிராய் சைவத் தமிழ்வித்தியாலயமும், உரும்பிராய் இந்துக் கல்லூரியும்.


24-11-1991 இது மிகத் தன்நலக் காரத் தினமோ? இத்துணை புகழ் பூத்த எம் வாணனைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டதே


பாரிய வெடியோசைகள் வலிகாமம் கிழக்கின் தலையில் வடிகின்றது. அந்தக் காலை இவ்வாறுதான் தொடங்கிற்று! இப்பிரதேசத்து ஈவினைப் பகுதி மண்ணின் இயல்பான செம்மை எம்மவர் குருதியால் மேலும் சிவப்பேறி மூவர் விதையாகின்றனர். எதிர்பாராத கந்தக வீச்சில் மாசுற்ற எம்சூழற் காற்று இவர் தம் இறுதி மூச்சால் தூய்மை பெறுகிறது. இந்த மூவரில் ஒருவன்தான்.. வாணன்!


ஓ .. கேட்கிறது உனது ஆத்ம ராகம்


அதுதான் உனது குறிப்பேடு:


'வீரத்திற்கு வித்திட்ட தமிழா கோழைக்குக் குடை பிடிக்கலாமா கூடாது எமது இழப்புக்கள் இழப்பு அல்ல விடுதலை என்னும் பயிருக்கு இடப்பட்ட உரமே எமது இலட்சியம் ஓங்குக'


உனது குறிப்பேடு, வெறும் கையேடல்ல. பின்தொடர்ந்து வரும் இளைய வீரர்களுக்காய். தாயக மக்களுக்காய் நீ எழுதி வைத்த மரண சாசனம். அது புனிதம் மிக்கது. ஏனெனில் உனது புகழுடம்பின் சட்டைப் பையிலிருந்து அதை நாம் எடுத்தபோது அதுவும் குருதியிற் குளிப்பாட்டப்பட்டிருந்தது.


அதன் உயிர்த் துடிப்பும். துடிப்புமிக்க வேதவாக்கியங்களை என் உதடுகள் உச்சரித்துக் கொண்டே இருக்கின்றன.




-துஸ்யந்தன்-


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code