Ad Code

Recent Posts

மேஜர் யாழிசை /மனோ வீர வரலாற்று நினைவுகள்

மேஜர் யாழிசை /மனோ
செல்வராணி திருலோகசிங்கம்
மானிப்பாய் மேற்கு, கட்டுடை 
(காங்கேசன்துறை)
பிறப்பு: 1972-07-12
வீரச்சாவு: 1993-09-29


"அக்கா... அக்கா... என்ன பலமான யோசனையில இருக்கிறியள்"?


"இந்த ஒற்றைப் பனையைப் பற்றித்தான் மனோ".


"ஓம். பாவம் என்னக்கா! தனியா சோகத்தோட நிக்குது" என்று கூறியபடி நெற்றியைச் சுருக்கிக் கண்களைப் படபடப் பாக்கி சிறுபிள்ளை போல சக தோழிமுன் வந்து நிற்பாள் யாழிசை. சிறிது நேரத்துக்குத் தான். உடனேயே கலகலப்பாகி, துள்ளிக் குதிக்கத் தொடங்கி விடுவாள்.


அமைதியான முகம். அதில் செல்ல புன்னகை நித்தமும் இருக்கும். வயதுக்கு மீறிய அனுபவ முதிர்ச்சி. குழந்தை போன்ற மனது. துரு துருத்த கண்கள். சுறுசுறுப்பு. இன்னும் சொல்லப்போனால், சொல்லிக்கொண்டே போகலாம்.


அவள் ஒரு முழுமையான விடுதலைப்புலி. பத்தாவது வகுப்பில் பரீட்சை எடுப்பதற்கு முன்னர் கல்வியை இடைநிறுத்திவிட்டு, 1990 இன் ஆரம்ப காலப் பகுதியில் தன்னை இவ்விடுதலைப் போராட்டத்துடன் இணைத்துக் கொண்டவள். இராணுவ ஆக்கிரமிப்பினால் சிதைந்துபோய்க் கிடக்கும் காங்கேசன்துறை இவளை ஈன்றெடுத்ததற்காக பெருமைகொள்ளும். திருலோக சிங்கத்துக்குச் செல்லப் பெண்ணாக செல்வராணியாக 1972 இல் பிறந்தவள்தான் யாழிசை. இரு பெண் சகோதரிகளையும் உறவெனக்கொண்டவள். தாயின் பாசத்துக்கும் அன்புக்கும் பாத்திரமாக வீட்டில் வளர்ந்து வந்தவள்.


இயக்கத்தில் இணைந்த பின்னர் தனது கடமைகளில் அவள் சிறிதளவும் தளருவதில்லை. பொறுப்பாளர் சொன்ன வேலையைச் சரிவரச்செய்து முடிக்கும்வரை பொறுப்பாளர் முன் வரத்தயங்குவாள்.


லெப். கேணல் ராஜனின் கீழ், அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் கல்வி கற்றாள். பரீட்சை நடைபெறும் சமயங்களில் தனது திறமையைக் காட்டத் தவறுவதில்லை. மிகவும் துடிதுடிப்புக் கொண்ட இவள் பொறுப்பாளரின் சிறிய தண்டனைகளுக்கு அடிக்கடி ஆளாவாள். இவளது செயலினால் பாதிப்பைவிட, சிரிப்புத்தான் அதிகமாகத் தோன்றும். கல்லூரியைப் பொறுத்தவரை ஞாயிறு தவிர்ந்த மற்றைய நாட்களில் சப்பாத்துக்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். ஞாயிறு அதனைக் கழுவிச் சுத்தமாக வைத்து, திங்கள் அணிந்து கொள்ள வேண்டும்.


ஞாயிறு நாட்களில் மட்டும்தான் ஓய்வாக இருந்து ஒன்றாக அமர்ந்து சந்தோசமாக உரையாடுவார்கள்;விளையாடுவார்கள். அன்று ஞாயிறு. ஒரு மாடிவீட்டிலே இவர்களின் முகாம் இருந்தது. கீழே பொறுப்பாளர் இருந்ததை அறிந்தோ, அறியாமலோ ஞாயிறுதானே என்ற எண்ணத்தில், துடிதுடிப்புக் குணம்கொண்ட யாழிசை, - பெட்டி ஒன்றை எடுத்துத் தாளம் போட்டபடி பாடத்தொடங்கிவிட்டாள்.


தோழிகள் அனைவரும் சுற்றி உட்கார்ந்து ரசித்துக்கொண்டிருந்தனர்.


அழகாகத் தாளம் தட்டி அவள் பாடிய பாடல்...


"நான் பிறந்த நமது மண் எங்களதே...


நாம் தவழ்ந்த புழுதி மண் எங்களதே...


மிக இனிமையாக, தாளம் பிசகாமல் அழகாகப் பாடும் திறமைகொண்டவள்.


இவர்களது சத்தம் பொறுக்க முடியாத பொறுப்பாளர் மேலே வந்துவிட்டார். மூலையில் கிடந்த சப்பாத்துக்களே கண்ணில் தெரிய கழுத்தில் சப்பாத்துக்களைக் கட்டிக்கொண்டு ஓடும்படி உத்தரவிட, சிரித்துக் கொண்டே கழுத்தில் சப்பாத்தினை மாலையாக அணிந்தபடி பாடிப்பாடியே ஓடினாள். பின்னால் சக தோழிகளும்.


இவ்வாறு, தான் செய்யும் குறும்புகளுக்குக் கிடைக்கும் தண்டனையைக்கூட சந்தோசத்துடன் செய்து முடித்து விட்டு, பொறுப்பாளர் முன் குழந்தைபோலச் சிரிப்பாள். பொறுப்பாளரின் கோபம் பட்டெனப் பறக்க, சமாதான ஒப்பந்தம் ஒன்று - அங்கு திடீரென உருவாகும்.


சிலவேளைகளில் தனது குடும்பத்தை நினைத்து சிறிது கலங்குவாள். ஆனால் உடனேயே பழைய நிலைக்கு மாறிவிடுவாள் போராட்டத்தில் தந்தையின் பங்கு மிகப்பெரியது.


1975 இல் துரோகி துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டவேளை, ஆக்கிரமிப்பாளர்கள் ஊர்ஊராய் ஊர்வலம் வந்தனர். உளவுப்படைகள் உலாவின. கூடவே இருந்து குழிதோண்டும் பலர் இணைந்திருந்தனர். எனினும் துணிந்த உள்ளம்கொண்ட தந்தை, தண்டனை வழங்கித் திரும்பிய விடுதலைப் புலிகளைத் தனது கட்டுமரத்தின் துணையுடன் மறுகரை சேர்த்தார்.


இதற்காக, இவர் காட்டிக்கொடுக்கப்பட்டு அன்றைய பழைய பூங்கா இராணுவ முகாமில் வைத்து இரண்டு நாட்கள் கடுமையான சித்திரவதைகளை ஏற்க நேர்ந்தது. இதேபோல, இவரின் முத்த மகனும் வடமராட்சி 'ஒப்பரேசன் லிபரேசனின் 'போது பிடிக்கப்பட்டு ஒன்றரை மாதங்கள் பூசாமுகாமில் சித்திரவதை அனுபவித்தான். தந்தையிடமிருந்து எதுவிதமான வாக்குமூலத்தையும் பெறமுடியாத இராணுவம் தனது சித்திரவதையின் பாதிப்பை மட்டும் உணரும்படி விட்டுவிட்டது.


தனது சகதோழியிடம் யாழிசை அடிக்கடி தனது தந்தையைப் பற்றிக் கூறுவாள். அவரின் உடல் நிலையை நினைத்து கவலைப்படுவாள். திருமணத்தை எதிர் நோக்கியபடி இருக்கும் அக்காவைப் பற்றி நினைத்துக்கொள்வாள். இத்தனைக்கும் மேலாக தனது உயிரான தம்பியை நினைத்துக் கலங்குவாள்.


1991 ஆம் ஆண்டு ஆடி மாதம் பத்தாம் திகதி ஆனையிறவுப் போர். புலிகள் தமது மரபுவழி முறையில் மாபெரும் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.


ஆனையிறவுப் பக்கம் யாழிசையின் குழுவும் கட்டைக்காட்டுப் பக்கம் தம்பி நவீனனின் குழுவும். ஆனால் இவ்விடயம் அவள் வீரத்தழும்பு பெற்றுத் திரும்பி வரும்வரை தெரியாது. அப்போரின் போது எத்தனையோ போராளிகளின் உடல்களை இம்மண் அணைத்துக்கொண்டது. அதில் தனது தம்பியும் ஒருவன் என்பதை பல நாட்கள் கழித்தே அறிந்துகொண்டாள் யாழிசை.


அன்று மைதானத்தில் பயிற்சி நடந்து கொண்டிருந்த நேரம் ராஜனண்ணா யாழிசையை அழைத்து தம்பியின் விடயத்தைக் கூறவும் கண்கள் இரண்டும் குளமாக, மைதானத்தை விட்டு வெளியேறி தனது அறைக்குச் சென்று, வேதனை தீரும் வரை வாய்விட்டு அழுதாள். புலிகள் அழுவதில்லைத்தான். ஆனால் அவர்களுக்கும் இதயம் என்று ஒன்று உள்ளது. அதில் பாசம், பந்தம் அனைத்து உணர்ச்சிகளும் நிறையவே உண்டு. இதற்கு அவள் மட்டும் விதிவிலக்கல்ல.


எங்கள் அனைவரையுமே அழ வைத்துவிட்டது. யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்று தெரியாத நிலை. அவள் அடிக்கடி கூறுவாள் "அக்கா என்ர தம்பியோட போட்டிபோட்டுத்தான் இயக்கத்துக்கு வந்தனான். ஆனா அவனும் எனக்குப் பின்னால வந்திட்டான். வீட்டுக்கு ஒரு ஆள் போதும் எண்டு நான் சொன்னாச் சொல்லுவான், இல்லை. ஒரு ஆம்பிளையும் பொம்பிளையும் கட்டாயம் இருக்கவேணும் எண்டு என்னோட சண்டை பிடிப்பான். இயக்கத்துக்கு வந்ததுக்கு ஒருக்காலும் அவனைக் காணேல்லை. கண்டால் கட்டிப்பிடிச்சு மாறி மாறிக் கொஞ்சவேணும் போல ஆசையாக இருக்கக்கா. ஆனா எங்க நிக்கிறான் எண்டுதான் தெரியல்ல" என்று தனது பாச உணர்வினை சகதோழியிடம் பகிர்ந்து கொள்ளுவாள்.


அவளின் தம்பி சிறுவயதிலேயே தீக்காயங்களுக்கு ஆளானவன். உடலிலும் முகத்திலும் அதன் அடையாளங்கள் தழும்புகளாகத் தெரியும். இதனால்தான் மற்றைய சகோதரர்களை விட யாழிசை அவனிடம் கூடுதலாகப் பாசம் வைத்திருந்தாளோ? சக போராளியின் துன்பத்தில் சரிபங்குகொள்ளும் அவள், வேதனை தாளாது அன்று அழுத அழுகை சொல்லமுடியாதது.


"எங்களைப்போல ஒருத்தராலையும் உலகத்தில சந்தோசமா இருக்க ஏலாதக்கா" என்று துள்ளிக் குதித்தபடி திரிந்த யாழிசை தான் அன்று துவண்டு அழுதாள். இவ்விடயத்தை பெற்றோருக்குத் தெரிவிக்கச் சென்ற வேளை இறுகிய முகத்துடன் தனது வேதனையை பெற்றோர் பார்க்கக்கூடாது என்ற நிலையில் தைரியமாய் நின்று அவர்களுக்கு ஆறுதல் கூறியவளும் யாழிசைதான்.


இவளின் சுபாவம் மக்களுடன் பழகும்போது மிகவும் வித்தியாசமானதாகத்தான் இருக்கும்.


யாழ். நகரின் கரையோரப் பிரதேசம் ஒன்றில் ஆமியின் வரவை எந்நேரமும் எதிர்பார்த்தபடி கண் துஞ்சாது புலிகள் காவல் செய்துகொண்டிருந்தனர்.


அங்கு உணவு, மருந்து, ஆயுதங்களைப் பங்கீடு செய்து வழங்கவென அமைக்கப்பட்ட குழுவின் ஒரு பகுதியின் தலைவியாக இருந்தவள் யாழிசை. அந்த வேளையில்தான் மக்களைத் தன்னுடன் இணைத்து, எதிரியின் தாக்குதலை முறியடிக்கவெனப் பல பதுங்கு குழிகளை அமைத்தாள். தனியாக நின்று அவள் அமைத்த பல பதுங்கு குழிகள், அவளது கையின் வலிமையைப் பறைசாற்றியபடி இன்னும் இருக்கின்றன.


இம்மக்கள் அவளைத் சொந்தப்பிள்ளை போலவே உயிராக நேசித்தனர். உணவைச் சமைத்து வைத்துவிட்டு அவளின் வரவுக்காக காத்திருந்தவர்கள் எத்தனையோ பேர்! "என்ர பிள்ளை வரும்" எனக் கூறி, செய்யும் தமது பலகாரத்தில் எடுத்து வைக்கும் தாய்மார்கள் எத்தனையோ பேர்!


அவளும் அப்படித்தான் உரிமையுடன் பழகுவாள். "அம்மா பசிக்குது. எனக்கு என்ன வைச்சிருக்கிறியள். வருவனெண்டு தெரியும் தானே? என்ர பங்கைத் தாங்கோ" என ஆர்ப்பாட்டம் செய்வாள். சமையலறைக்குள் புகுந்து பானையைத் திறந்து, சட்டியைத் திறந்து, தேவையானவற்றை எடுத்து தன்னுடன் வந்த பிள்ளைகளுக்கும் கொடுத்து மீதியைத் தான் உண்ணுவாள்.


இவள் மிகவும் உரிமையுடன் பழகும் ஒரு வீடு பிரதான வீதியில் இருந்து பிரியும் சிறிய ஒழுங்கையில் அமைந்திருந்தது. ஒழுங்கையில் கால் வைக்கும் போதே "அம்மா" என்று சத்த மிட்டபடிதான் வருவாள். வரும் போது மூன்று நான்கு போராளிகளையும் அழைத்துக்கொண்டு தான் பெரும்பாலும் வருவாள். சத்தத்திலேயே "மனோதான் வாறா என்று அம்மக்கள் உணர்ந்து விடுவார்கள்.


"அம்மா நீங்க சரியா எங்கடை அம்மா மாதிரித்தான் இருக்கின் நீர்கள்" என்பாள். சிறு குழந்தைபோல அடம்பிடித்து "சோறு குழைச்சுத் தாங்கோ அப்பதான் சாப்பிடுவேன்"என்று கையை நீட்டியபடி, குழைத்துக்கொடுக்கும் உணவை வெகுவாக ருசித்து உண்பாள். மக்களுடன் உரையாடும் போதுகூட அவளது சிந்தனை, பேச்சு அனைத்திலும் போராட்டத்தின் வளர்ச்சி, தேவை அதற்குச் செய்யவேண்டிய பங்களிப்பு என்ன என்பது பற்றியே அமைந்திருக்கும். அனாவசியமான வார்த்தைகள் அவள் வாயிலிருந்து வருவது கிடையாது. அவளின் மேல் பாசம் வைத்த தன் விளைவாக அவளிடம் புகைப்படம் கேட்ட சகோதரிகள் எத்தனையோ பேர்! இதற்கு அவள் கூறுவாள்;


"நான் செத்தாப் பிறகு கட்டாயம் பேப்பரில என்ர படம் வரும். அதைவெட்டி மாலை போட்டு வையுங்கோ,"என்று கண்களைச் சிமிட்டியபடி, "சீரியசாத் தான் சொல்லுறன். விளையாட்டில்ல, சீரியஸ் எண்டா சீரியஸ் தான்" என்று அடிக்கடி கூறி வைப்பாள்.


வேதனையுடன் நிற்கும் அவர்கள் "இப்படிச் சொல்லாதையும் மனோ" என்று கடிந்து கொண்டாலும் கூட, "சீரியசாத்தான் சொல்லுறன். நான் செத்து பெட்டியில் கிடக்கேக்க, ஆராவது வந்து பக்கத்தில நிண்டு அழுங்கோ, எழும்பிக் காலால நல்ல உதை தருவன்" என்று சிரித்தபடி கூறிமுடிப்பாள்.


"உங்களுக்கு லீவு தந்தா எங்கட வீட்டில வந்து நில்லுமன், பிள்ளை" என்று அன்புடன் கேட்கும் தாயிடம்,


"வருவன். ஆனா உங்கட வீட்டில இல்லை. இன்னொரு வீட்டிலதான் நிற்பன்" என்று கண்ணை இடுக்கியபடி கூறுவாள்.


அவளின் பேச்சில் கூட, மனித வாழ்க்கையின் இன்பதுன்ப ஆசை பந்தங்களின் ஒருதுளி அசைவைக்கூட காணமுடியாது. எந்நேரமும் 'அடிபடவேணும். ஆமியை விழுத்தவேணும்' என்று கதைத்தபடிதான் இருப்பாள்.


தனது பிள்ளைகளுடன் அவள் ஒரு தாயைப் போலவே பழகிக் கொள்வாள். அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் அவள், தனக்கு கீழ் உள்ள பொறுப்பாளர்களிடம் அடிக்கடி கூறும் விடயம். பிள்ளைகளோட நல்லா அன்பா பழகுங்கோ. அதுகளின்ர மனம் நோகக் கதைக்காதேங்கோ. அது போராட்டத்தில இருந்து பிள்ளைகளை விலகிச் செல்ல வைச்சுப்போடும். தவறு செய்யும் பிள்ளையைக்கூட அன்பால திருத்தப் பாருங்கோ" எனப் புத்திமதி கூறுவாள். அதேவேளை அதனை அவளும் கடைப்பிடிக்கத் தவறுவதில்லை.


எவ்வளவு கோபம் வந்தாலும்கூட ஏக வசனத்தில் பேசியறியமாட்டாதவள். செய்யிறதை ஒழுங்காச் செய்யவேணும். குறிப்பறிஞ்சு செய்யவேணும்" அவளின் வாயில் அடிக்கடி வரும் வார்த்தைகள் இவை.


"அடிபடவேணும். அடிபட்டுத் தான் சாக வேணும்" என்பதை செயல்வடிவிலும் காட்டி விட்டாள். அவள் சென்ற களங்கள் அனேகம். பலாலி, கோட்டை, கொக்காவில், பின் ஆனையிறவு. இங்குதான் இவளின் இதயம் இன்னொரு இதயத்தால் சிறைப்பிடிக்கப்பட்டது.


அதன் பின்னர் பலவேகயா, மண்கிண்டிமலை எனக் கூறிக் கொண்டே போகலாம். அனைத்திலும் குழுத்தலைவியாக இருந்து செயற்பட்டாள். போரின் நுணுக்கங்களைத் துல்லியமாக அறிந்து கொண்டாள். இக்கட்டான சூழ்நிலைகளிலும் தேவையற்ற கூட வார்த்தைகளை உதிர்க்காது பொறுமையுடன், அதே நேரம் கவனத்துடனும் குழுவை நடத்திச் செல்லும் திறமைமிக்கவள்.


குழுவினருக்கு ஆணையிடும் போது, கையும் ஆயுதத்தை இயக்கியபடி தான் இருக்கும். 1993-09-28 அன்று கிளாலியைக் கைப்பற்றும் நோக்குடனும், வெளிகொண்ட இடத்துக்குப் புலிகளை இழுத்து அழித்தொழிக்கும் எண்ணத்துடனும் சிங் கள வெறிப்படை பாரிய கவச வாகனங்கள் சகிதமும் விமானத்தின் துணையுடனும் கரையோரமாக முன்னேறிக்கொண்டிருந்தது. 


28ம் திகதி சமருக்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. யாழிசையின் அணியும் இதற்குத் தன்னைத் தயார் செய்கின்றது.


இரவு,


யாழிசையின் தலைமையின் கீழ், சமர் நடைபெறும் இடம் நோக்கி குழு நகர ஆரம்பிக்கின்றது. ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டு இருட்டுடனேயே நிலைகள் எடுக்கப்படுகின்றன. அதிகாலை ஐந்தரை மணிக்கு முன்னர் அனைத்து ஒழுங்குகளும் தயார் நிலையில்.


எதிரியிடமிருந்து விடியற்காலை 8 மணி வரை எதுவிதமான எதிர்ப்பும் இல்லை. சிறிது நேரத்தின் பின்னர் பெரும் ஓசையுடன் தீப்பிழம்பினைக் கக்கியபடி கவசவாகனமும், மேலே குண்டு வீச்சு விமானமும் பாதுகாப்பு வழங்க, சிங்களப்படை எமதணியை நோக்கி முன்னேற ஆரம்பித்தது. ஆனையிறவு யுத்தத்தின் பின்னர் கை கலக்கும் அளவுக்கு அருகருகே நின்று சண்டை பிடிக்கும் நிலை உருவாகியிருந்தது. அங்கு, எதிரியை புலிகளின் குழுக்கள் முன்னேற ஆரம்பித்தன. தனது குழுவினருக்கு கட்டளைகளைப் பிறப்பித்தபடி யாழிசையும்.


யுத்தம் மும்மரமாக நடைபெறுகிறது. பலமான எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பெரும் சமர் ஒன்று நடந்து கொண்டிருந்தது.


முன்னே இறங்கிய அணியை நோக்கி எதிரியின் கவசவாகனம் ஒன்று வேகமாக வரத்தொடங்கியது. அதை அடுத்து கடற்கரையோரமாகவும் சில வந்து கொண்டிருந்தன. குண்டுகள் நாலாபுறமும் மழையெனப் பொழிந்தன. முன்னேறிய யாழிசையின் அணியை இலக்காகக் கொண்டு எதிரியின் கவசவாகனம் தீயைக் கக்கியபடி. கட்டளை ஒன்று கிடைக்கப்பெறுகிறது. போராளி ஒருவரின் கையில் இருந்த ஆர். பி. ஜீ (R. P. G) முழங்குகிறது. குலுங்கிய வண்ணம் அதிர்வுடன் நின்ற இரும்புப்பேய், தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தொடர்ந்து குண்டு மழை.


"கவனம், பிள்ளைகள் கவனம். கவர் எடுத்து அடிபடுங்கோ". யாழிசையின் குரல் அப்பேரிரைச் சலுாடும் கேட்டபடி இருந்தது.


சிங்களப்படைக்குப் பாதுகாப்பாக வந்த மற்றொரு கவசவாகனமும் போராளிகளினால் சிதைக்கப்படுகிறது. வெற்றிப் பெருமிதம்! புலியணி முன்னேறுகிறது. பாதுகாப்பை இழந்த அரசபடையோ தலைதெறிக்க ஓடுகிறது. திக்குத் திசை தெரியாது மழையெனச் சன்னங்களைப் பொழிந்துகொண்டிருந்தான் எதிரி.


"ஆமி ஓடுறான். துரத்தியடியுங்கோம்மா. அடியுங்கோ. கவர் பாத்து அடிபடுங்கோ" என்று யாழிசையின் குரல் சந்தோசத்துடன் எதிரொலித்தது.


எரிந்த வண்ணம் இருந்த இரும்புப் பேயையும் கடந்து முன்னேற முயன்ற வேளையில், ஓடிய எதிரி பொலிந்த குண்டுகள் யாழிசையின் வயிற்றைத் தாக்கியது. ஆயுதத்தை இயக்கியபடி ஓடியவள் தரையில் சாய்ந்துவிட்டாள். "மனோக்கா. மனோக்கா" என்று அழைத்தபடியே அருகில் இருந்த பெண்போராளி காயத்திற்கு வைத்தியம் செய்கின்றாள். மனோக்கா என்ற குரலுக்கு என்ன? என்ற பதிலே அவளின் வாய் உதிர்த்த கடைசிச் சொல்லாகும்.


அடிபட்டுத்தான் சாக வேணும் எனக்கூறும் வார்த்தையை உண்மையாக்கிவிட்டாள். அவளின் பிள்ளைகளோ. தாயை இழந்த நிலையில்! இவளைப் பெறக்கொடுத்து வைக்கவில்லையே என ஏங்கும் தாய்மார்களோ, அந்நிகழ்வை நம்பமுடியாத நிலையில் அவளுக்கென்று ஒரு பங்கு உணவினை வைத்துக்கொண்டு காத்தவண்ணம் உள்ளனர். தனது சொந்த மகளை, சகோதரியை இழந்த தவிப்பில் ஒவ்வொரு குடும்பமும்!


"பேப்பரிலை வரும் படத்தை வெட்டி எடுத்து மாலை போடுங்கோ எண்டு சொன்னதை உண்மையாக்கிப் போட்டாள்" எனக் கூறிக் கண்ணீர் வடிப்போர் ஒரு புறம்! போராளிகள் வித்தியாசமானவர்கள் தான். இவளும் அப்படியே. அவளுடன் படித்த நாளை. பயிற்சி நாளை. சமர்க்களத்து நாளை அசை போட்டபடி சக போராளிகள்! விடுதலை வேள்வியில் ஆகுதியான எத்தனையோ மாவீரர்களுடன் இவளும் இணைந்துவிட்டாள். அணையாத ஜோதியாகி விட்டாள். நிச்சயம் விடுதலைப் பூ பூக்கும் என்ற நம்பிக்கையில்….





பொன்னிலா
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code