தர்சினி திருச்செல்வம்
அம்பனை, தெல்லிப்பளை,
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 17.10.1975
வீரச்சாவு: 17.06.1991
நிகழ்வு: 17.06.1991 அன்று வவுனியா குருக்களுரில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
1987 ல் இந்திய இராணுவம் எம் மண்ணில் காலடி வைத்த வேளையில், புலிகளைச் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்தனர். புலிகளோடு மக்களை இனங்காண முடியாத இராணுவத்தினர் மக்களை வயது வேறுபாடு இன்றி கொன்று குவிக்கும் பணியில் வீடு வீடாகச் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்திய இராணுவத்தின் முற்றுகைக்குட்பட்ட ஒரு பிரதேசமான தெல்லிப்பளை பகுதியிலிருந்து மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் 13 வயது நிரம்பியவளான தர்சினி என்ற இளம் பெண் தனது பெற்றோருடன் அப்பகுதியிலேயே இருந்தாள்.
விடுதலைப் போரிலே ஊறிய உள்ளங்கள் உயிர்த்துடிப்புடன் போராடிக்கொண்டிருக்கும் எமது செந்த மண்ணில் "வாழ்வது என்றால் சுதந்திரமாக வாழவேண்டும் இல்லையேல் சாகவேண்டும்" என்ற சிந்தனையே ஊறி இருக்கின்றது.
ஒரு முறை சுற்றிவளைப்பில் ஈடுபட்ட இந்திய இராணுவம் தர்சினியின் சகோதரனை "பயங்கரவாதி" என்ற முத்திரையுடன் கைது செய்து காங்கேசன்துறை தடுப்புமுகாமில் வைத்து மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதை செய்தது.
சகோதரனைப் பார்க்கவென தாயுடன் தர்சினியும் சென்றாள். தமையனின் உடலில் சித்திரவதையின் தடயங்களைக் கண்ட தர்சினியின் கண்கள் கலங்குகின்றன. தமையனிடம் "அண்ணா இவங்களை நான் துவக்கு எடுத்துச் சுடாமல் விடமாட்டேன்" என்று உறுதியுடன் கூறுகிறாள். சகோதரனின் கண்களும் கலங்குகின்றன.
இருஉடன்பிறப்புக்களுடன் கடைசிப் பிள்ளையாகப் பிறந்த தர்சினி மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள். கடுமையான போராட்ட சூழலில் வளர்ந்ததால் இவளது இயல்பு வித்தியாசமானதாக இருந்தது. அச்சமின்றித் துணிவுடன் வாதாடும் திறனும், கல்வியிலும், கலைகளிலும், ஆர்வத்துடன் கற்கும் திறமையும், வீட்டிற்கு வருவோரை உபசரிக்கும் நற்பண்பும் உடையவளாக இருந்தாள்.
தர்சினியின் வீட்டிற்கு போராளிகளும், ஆதரவாளர்களும் வருவதை அறிந்த இந்தியப் படையினர் ஈ. பி. ஆர். எல். எவ் இன் உதவியுடன் சுற்றி வளைத்த போது ஆதரவாளரான நிர்மலன் என்ற தமையனின் நண்பனை இவளின் வீட்டில் வைத்து இவளுக்கு முன்னாலேயே சுட்டுக்கொன்றனர். தர்சினியின் ஒன்றுவிட்ட சகோதரனுடன் தானும் ஒரு சகோதரனைப் போலவே பாசமுடன் பழகி போராட்ட உணர்வினைத் தர்சினிக்கு உணர்த்தியதில் இவனுக்கும் பங்குண்டு. இராணுவத்தினர் சுட்டபோது நேரே கண்டதில் அது தர்சினியின் இதயத்தில் ஆழமாகப் பதிந்தது. இந்தச் சம்பவங்கள் பிஞ்சு உள்ளத்தில் தானும் போராடப் போகவேண்டும் என்ற எண்ணத்தை மேலும் உறுதிபெறச் செய்தது. காவலில் ஈடுபட்டிருந்த தினமும் போராளிகளுக்கு உணவு தயாரித்துச் சென்று கொடுத்து விட்டுவருவாள்.
ஒருமுறை உணவுடன் சென்ற தர்சினி திரும்பி வீட்டிற்கு வரவில்லை. தந்தையார் போராளிகளின் முகாமிற்கு தேடிச்சென்ற போது வரமறுத்துவிட்டாள். ஆனால் போராளிகள் இவளைத் திருப்பி அனுப்பி விட்டார்கள். போராட்ட உணர்வு இதயத்தில் வலுக்கொண்ட இவள் வீட்டில் தந்தையுடனும், சகோதரனுடனும் தான் இயக்கத்திற்குப் போகப் போகிறேன் என்று வாதாடுவாள்.
சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்கள் வான், தரை, கடல் வழியாக ஆரம்பித்தன. யாழ் மும்மரமாககோட்டையில் சண்டை நடந்து கொண்டிருந்தது. புலிகள் சளைக்காது வீரத்துடன் முன்னேறிக்கொண்டிருந்தார்கள். நாளுக்கு நாள் மக்களின் உடமைகளும் உயிர்களும் சிறிலங்காப் படையின் குண்டு வீச்சுக்களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. வீட்டிலிருந்த தர்சினிக்கு தினமும் பத்திரிகைகளை வாசிக்கும் பொழுதும் செய்திகளைக் கேட்கும் பொழுதும் போராடப் போகவேண்டும் என்ற உணர்வு புயலடிக்கத் தொடங்கியது.
தர்சினி 1990-08- 15 அன்று விடுதலையை நோக்கிய பாதையில் காலடி வைத்தாள் வயதிலே சிறியவளான தர்சினி விடுதலைப் பாதையில் இணையும் போது தந்தைக்கு ”நாட்டு நிலைமையை யோசியுங்கள்" என்று எழுதிய கடிதத்தை இங்கு முழுமையாகப் பிரசுரிக்கின்றோம்.
அப்பா, நான் இயக்கத்திற்குப் போக ஆசை கொண்டுள்ளேன். இந்த ஆசையை நிறைவேற்ற உங்கள் ஒத்தாசை வேண்டும். இதைப்பற்றி நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம். பேனா ஏந்திய கைகள் இன்று துப்பாக்கி ஏந்துகின்றன என்று ஆச்சரியப் படலாம். ஆனால் நீங்கள் அன்று படிப்பை விட்டுவிட்டு ஆமி வேலையில் சேர்ந்தீர்கள். இப்போது புரிகிறது. முதலில் நாட்டு நிலமையை யோசியுங்கள். இன்று சிங்களவர்கள் கூட ஒரு சிறுவன் தனது மதிய உணவு நிதியை தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒதுக்குகிறான். நடக்க எடுக்க முடியாத கிழவர்கள் கூட ஆயுதம் ஏந்தியவண்ணம் நிற்கின்றார்கள். அவர்கள் அன்று 66, 72, 83, 87 இவ்வாறு ஆண்டாண்டு காலமாக எம்மை அழித்து ஆட்சி செய்ய முனைகிறார்கள். ஏன் நாம் அப்படி முனையக்கூடாது? "அண்ணன் காட்டிய வழியில் நானும் போகிறேன் வீணாகத் தேடி அலைய வேண்டாம் தமிழீழம் கிடைக்கும் வரை போராடியே தீருவோம்
‘’எத்தனை எத்தனை கொடுமைகள் இங்கே இனியும் இருப்பது
மடமை என்றே இன்றே குதிப்போம் போர்க்களத்தில் அடிமை வாழ்வு
எத்தனை காலம் விடிவு காண புறப்படுவோம் புலிகளின் தாகம் தமிழீழ தாகம்’
தனது கல்வியை இடையில் நிறுத்திவிட்டு சுதந்திர மண்ணில் தான் கல்வியை தொடர முடியும். அதற்கு விடியலின் பாதையிலே புரட்சிக் கல்வியை தொடரப் போவதாக தந்தையின் சேட்டினுள் கடிதத்தை வைத்து விட்டு விடியலை காணப் புறப்பட்டாள் பயிற்சி முகாமுக்கு அனுப்பபட்டாள் தர்சினி அங்கு கீதா என்ற பெயருடன் பயிற்சியினைப் பெற்றாள். தனக்குப் பயிற்சியின் போது வழங்கப்பட்ட பணிகளை மிகவும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பாள். அமைதியான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் விழிகளின் வீரத்தின் உறுதியையும், விடுதலையுணர்வையும் நிதானமாகச் சிந்தித்து திட்டங்களை வகுப்பதிலும் கீதா திறமையாக செயற்பட்டாள். பயிற்சிகளை விரைவாகவும் உற்சாகமாகவும் செய்து முடிப்பாள். தனக்கு பொறுப்பாளராக உள்ளவர்களின் கட்டளைகளை ஏற்று அதன்படி நடப்பாள்.
எல்லாப் போராளிகளுடனும் அன்பாகப் பழகுவாள். இவளது உயிர் நண்பியாக தவச்செல்வி என்ற போராளி இருந்தாள். இருவரும் ஒரே பயிற்சி முகாமிலே பயிற்சி எடுத்தவர்கள். எந்த விடயத்திலும் ஒற்றுமையாகவும் போட்டியாகவும் செயற்படுவார்கள். இருவருக்குமிடையில் பொறாமை என்பது கிடையாது. பயிற்சியின் போது விளையாட்டுப் போட்டிகள் எல்லாக் குழுக்களுக்கிடையிலும் இடம் பெற்றது. அப்போது இருவருக்கும் இடையில் கடும் போட்டி. ஆனாலும் கீதாவே முதலிடங்களைப் பெற்றாள்.
கலை நிகழ்சிகளில்ஆர்வமுடைய கீதா பயிற்சியின் ஓய்வு நாட்களில் நிகழ்சி இடம்பெறும் போது தனது கலைத் திறனையும், பாடல்களையும் இனிமையாக வெளிப்படுத்துவாள்.
பயிற்சி முடிவடைந்ததும் இவள் 15 பேர் கொண்ட குழுவிற்குப் பொறுப்பாளராக தெரிவு செய்யப்பட்டாள். வயதில் சிறியவளாக இருந்தாலும் தனக்குரிய வேலைகளை பொறுப்புடன் ஏற்று பிள்ளைகளுக்கு எந்த நேரம் என்ன வேண்டுமோ அதனைக் கேட்டு நிறைவேற்றுவாள். அறிவுரைகள் கூறி நல்வழிப்படுத்துவாள்.
இவர்களது பயிற்சி முடிந்த நேரத்தில் காரைநகர் பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினருடன் மோதல்கள் ஆரம்பமாகின. இந்த மோதலின் போது மகளிர் படைப்பிரிவும் பங்கு கொண்ட போது கீதாவும் கலந்து கொண்டாள்.
பின்னர் விசேட பயிற்சிக்கென அழைக்கப்பட்டு பயிற்சி முகாமிற்கு சென்ற போது இவளைப் பார்க்கவென முதல் தடவையாக பெற்றோரும் சகோதரனும் தார்கள். ஆனால் கீதாவோ தன்னைப் போலவே வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பல போராளிகள் பெற்றோரைக் காணாது இருக்கிறார்கள். நானும் அவர்களைப் போல ஒரு போராளி. நான் மட்டும் பார்த்துக் கதைக்க மற்றப் பிள்ளைகளுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே. அவர்களுக்கும் பாசம் இருக்கும்தானே என்ற நினைப்புடன் பாசத்தின் பிணைப்பு அழுத்தினாலும் பெற்றோரைச் சந்திக்க மறுத்து விட்டாள் கீதாவைப் பார்க்காமலே பெற்றோர் வீடு திரும்பினார்கள்.
எமது இயக்கத்தில் இருக்கும் இவளுடைய அக்காவையும் ஒருமுறையும் இயக்கத்தில் சேர்ந்த பின் பார்க்கவில்லை எனக் கூறுவாள்.
மீண்டும் போர் ஆரம்பமாகியது. மன்னாரில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா அரச படையின் கெடுபிடிகள் அதிகரிக்க மக்கள் அகதிகளாக வேண்டிய நிலை ஏற்பட்டது. உடைமைகள் உயிர்கள் அழிக்கப்பட்டதுடன் பெண்கள் கோரமான முறையில் பாலியல் வன்முறைகளிற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அத்துடன் புலிகளின் காவல் அரண்களை கைப்பற்றப் போகின்றோம் என்று கூறி முன்னேற முயன்ற இராணுவத்தினரை எதிர்த்துப் புலிகள் பாரிய தாக்குதலை நடத்தத் தொடங்கினர்.
17-06-91 அன்று மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருந்த தாக்குதலில் பங்கு கொள்ள மகளிர் படையணியினரும் செல்வதற்கு தயாராகினார்கள். வாகனத்தில் ஒவ்வொரு குழுவும் ஏற்றப்பட்டது. கீதாவும் தோழியரும் வாகனத்தில் ஏறியதும் எதிரிகளின் பாசறையைத் தேடிப் போகின்றோம் என்று பாடத் தொடங்கினர். வாகனம் எதிரிகளின் மறைவிடத்தை நோக்கி விரையத் தொடங்கியது. சிறிது தூரம் சென்றதும் யார் இந்த சண்டையில் முதலில் சாகிறது என்ற பேச்சு எழுந்தது. அப்போது கீதா நான்தான் முதலில் சாவேன் என்று கூறினாள். நான்தான் முதலில் சாவேன் என்று மகிழ்ச்சியுடன் கூறியதைக் கேட்டு மெளனமாகின்றனர்.
வவுனியாப் பகுதியில் சண்டை மிகவும் தீவிரமாக இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது. சிறிலங்கா படையின் குண்டு வீச்சு விமானங்களின் கண்மூடித் தனமான தாக்குதலின் மத்தியில் புலிகள் இராணுவத்தினரை முன்னேற விடாது பதில் தாக்குதலை நடாத்தியபடி முன்னேறிச் செல்கின்றனர்.
இந்த வேளையில் கீதாவின் அணியினர் வந்த வாகனம் வவுனியா குருக்களூர் பகுதியை அடைந்ததும் பழுதடைந்து விட்டது. அவர்கள் வாகனத்தை விட்டிறங்கி கால்நடையாக சண்டை நடக்கும் இடத்தை நோக்கி விரைகின்றனர். அப்போது இரண்டு குண்டு வீச்சு விமானங்கள் இவர்கள் செல்லும் திசையை நோக்கி வட்டமிட்டு குண்டு வீச்சுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. இதனைக் கவனித்த கீதா தன் தோழிகளிடம் பாதுகாப்பு நிலை எடுக்குமாறு கூறுகின்றாள். அந்த நேரம் விரைவாக வந்த குண்டு வீச்சு விமானங்கள் இரண்டும் பாதுகாப்புநிலை கொண்டிருந்த இடத்திற் கருகில் பதிந்து சென்றது. அப்பகுதி முழுவதும் ஒரே புகைமண்டலமாக இருந்தது. கீதாவும் அவளுடன் இருந்த மூன்று தோழிகளும் வவுனியா மண்ணிலே சாவுடன் சங்கமமாகின்றனர்.
இறுதி மூச்சுவரை இலட்சிய தாகத்திற்காகவே, களத்தில் போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட இவ்வேங்கைகளின் கனவுகளை நனவாக்க விடியலைக் காண பல்லாயிரக்கணக்கானோர் அணிவகுத்து நிற்பார்கள். எமது மண்மீட்கப்படும் வரை துப்பாகிகள் தூங்கப்போவதில்லை
-களத்தில்
0 கருத்துகள்