செபஸ்ரியான்பிள்ளை சிவகுமார்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 13.09.1975
வீரச்சாவு: 18.05.1995
நிகழ்வு: பலாலியிலிருந்து தொண்டமனாறு நோக்கி முன்னேறிய இலங்கைப் இராணுவத்துடனான நேரடிச் சமரின் போது
1991ம் ஆண்டு பிற்பகுதியில் அமைப்பில் இணைந்த மாயவன் அடிப்படை இராணுவப் பயிற்சியை முடித்து யாழ்மாவட்டத் தாக்குதலணியில் இணைக்கப்படுகிறான்.அங்கு களப் பயிற்சிகளையும் கள அனுபவங்களையும் பெற்று தனது திறமைகளை வளர்த்துக்கொள்கிறான்.
யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற அநேகமான சமர்களில் தனது திறமையைக்காட்டினான். சக போராளிகளிடத்தில் அன்பாக பழகுவதுடன் தனக்குத் தெரிந்தவைகளை சக போராளிகளுக்கு அவர்களுக்கு விளங்கும் வகையில் சொல்லிக்கொடுத்து அவர்களையும் முன்னேற்றியவன்.
முகாமில் நடந்த கலைநிகழ்வுகளிலும் சரி விளையாட்டுகளிலும் பயிற்சிகளிலும் அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்பட்டவன்.காயமடைந்து மருத்துவமனையிலிருந்து முகாமிற்கு வரும்போராளிகளுக்கான சகல வேலைகளிலும் முன்மாதிரியாக செயற்பட்டவன்.
மணலாறு மண்கிண்டிமலை இராணுவமுகாம் தகர்ப்பிலும் பங்குபற்றினான்.(இத்தாக்குதலுக்குப் பழி தீர்க்கும் முகமாக விமானப்படையினரால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதலில் பாடசாலை சென்ற இவனது சகோதரி உட்பட்ட பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டனர்.)
1994 ம் ஆண்டு காலப்பகுதியில் கனரக ஆயுதப் பயிற்சியாளனாக நியமிக்கப்பட்டு அங்கு தனது திறமையான செயற்பாட்டைக் காட்டி போராளிகளின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவன். பல சமர்களில் பங்கேற்று அச் சமர்களின் அனுபவங்களை நகைச்சுவையோடு சக போராளிகளுக்கு சொல்லிக் கொடுத்தவன்.
அன்று பலாலியிலிருந்து இராணுவம் முன்னேறுவதாக எமது முகாமுக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக அணிகள் தயார்படுத்தப்பட்டு களமுனைக்குச் சென்றன அவ் அணிகளுடன் சென்ற மாயவன் களமுனைத்தகவல்களுடன் வருவானென எதிர்பார்த்த வேளையில் தான் தொலைத்தொடர்புக்கருவியூடாக அச்சோகச் செய்தி எம்மை வந்தடைந்து. முன்னேறிய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவடைந்தான். இவனால் அக்காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட போராளிகள் இறுதிவரை போராடினார்கள்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
0 கருத்துகள்