Ad Code

Recent Posts

லெப்டினன்ட் துரைக்கண்ணன் வீரவரலாற்று நினைவுகள்

லெப்டினன்ட் துரைக்கண்ணன்

வைத்தியலிங்கம் தயானந்தன்

வீரப்பிறப்பு: 08.04.1974 

வீரச்சாவு: 25.07.1993


அரசியல்ஞானம், கலைஞானம், போர்த்திறன் என மூன்று திறமைகளும் ஒரு மனிதனிடம் கூடிப்பிறப்பது அரிது. எமது தலைவனிடத்தில் நிறைந்து கிடக்கின்ற இந்தத் திறமைகள், அவரது வளர்ப்புக்களிடம் குறைவின்றிக் காணப்பட்டாலும், சிலரிடமே முழுமையாகக் கிடக்கின்றன. துரைக்கண்ணனிடம் இந்தத் திறமைகளின் நிறைவைக் கண்டிருக்கின்றேன்.


சினம், கோபம், குரோதம் எப்படியென்பதை அறியாத பொறுமைசாலி. பொறுப்பாளன் என்பதை மனதிற்கொண்டு கண்டிப்புடன் நடந்து கொள்ளாமல் அன்பில் வழிப்படுத்தும் பண்பாளன்.


தற்பெருமை, தற்புகழ்ச்சிகளை விரும்பாத குணசீலன். சகதோழர்களுக்கு வித்தைகள் செய்துகாட்டி, மகிழவைக்கும் வித்தகன். களங்களில் விழுப்புண் சுமந்த துணிவாளன். மைதானத்தில் இறங்கினால் போட்டியாளன் கலங்கும் விளையாட்டு வீரன். எடுத்த எடுப்பில் மேடையில் ஏறி நாடகமோ, கவிதையோ வடித்துக்காட்டும் கலைஞன். சுருக்கமாகச் சொன்னால், துரைக்கண்ணன் ஒரு சகலகலவல்லவன்.


துரைக்கண்ணனின் அந்த உயர்குணங்கள் போராளிகள் அனைவரையும் கவர்ந்தன. அவனைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதுமே மொய்த்திருக்கும். விக்ரம் என்றால் வன்னியில் தெரியாத போராளிகள் இல்லை. போராட்ட வாழ்வில் அவனுடன் வாழ்ந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். ஒவ்வொரு நாளுமே பசுமையாய் இனிமையாய்த் தெரிகின்றது.


பாசறையில் அவனில்லாத கலை மண்டபம் வெறிச்சோடிக் கிடப்பதைப் பார்க்கின்றேன். கண்மூடினால் கனவெல்லாம் அவனுடன் சேர்ந்து நாடகம் நடிக்கின்றேன். ஒவ்வொரு மாவீரரைப்பற்றியும் கவிதையோ ‘விழுதுகளோ’ எழுதிப் படித்துக் காட்டிவிட்டு, “பிழையிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கி வருவது போன்ற பிரமை.


காலையில் கண்விழிக்கும்போது, பாரம் தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் துரைக்கண்ணனே முன்னால் நிற்பான்.


“எப்படி மச்சான், நெஞ்ச அகலமாகியிருக்குதோ? ‘வீ கட்’ அடிக்கிறதா?” என்ற கேட்டான்.


“ஏன் மச்சான் இப்படிக் கஸ்ரப்படுகிறாய்’ என்று கேட்டால், ‘கனரக ஆயுதங்களைத் தூக்கிவச்சு அடிபடோணுமெண்டால் சும்மாயிருந்தால் சரிவருமே மச்சான்” என்று பதிலிறுப்பான்.


‘வீட்டுக்கொரு புலிவரணும்’ என்ற பாடலை எந்தநேரமும் இவனது வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.


வட்டக்கச்சியில் தாயும் தந்தையும் சகோதரியும் வறுமையால் வாடியபோதும், துரைக்கண்ணன் அதை நெஞ்சில் போட்டுக் கொண்டதில்லை. போராட்டத்துடன் ஊறிப்போன தன் குடும்பத்தவர்கள், தான் துண்டு கொடுத்து வந்திடுவன் என்று பயப்பிடாமல் இருக்கவேண்டுமெனக்கூறி கவிதைகள் எழுதி வீட்டுக்கு அனுப்புவான். உறுதிமிக்க வீரனை – பாசம்மிக்க நண்பனை – இழந்நுவிட்டதை நினைக்கும்போது நெஞ்ச முட்டுகின்றது.


மண்கிண்டி இராணுவ முகாம் தகர்ப்புக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது என் அருகே ஓடிவந்தான்.


“மச்சான், இந்தச் சண்டையில் தப்பினா மணலாற்றில் நின்ற நாட்களைப்பற்றி ஒரு நாடகம் எழுது, நடிப்பம் நான் செத்திட்டா என்னைப்பற்றி கவிதை எழுதி வாசித்துவிடு – விழுதுகள் எழுதுக் கொடுத்துவிடு” என்று சொன்னதை நினைக்கும்போதெல்லாம் மனம்விட்டு அழவேண்டும்போலுள்ளது.


போர்வாழ்வில் இன்னும் அவன் சேவைகள் இருக்க வேண்டுமென நினைத்தோம், தன் சேவை போதுமென்று கருதிப் போய்விட்டான்….!



‘இதயபூமி – 1’ இராணுவ நடவடிக்கையின் வெற்றிக்கு உயிர்தந்த பதின்மர்!


மணலாறு, அப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல. தமிழீழத்தின் எத்திசையில் இருப்பவர்களுக்கும் அந்தமண் சொந்தமண் எம் வீரகாவியத்தின் தலைவனைக் காத்துத்தந்த பூமி அது, இந்த உண்மை எம் வீரர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதும், தலைவன் எமது மண்ணில் கொண்ட தளராத பற்றும், அவனது வளர்ப்புக்களின் அயராத கடின பயிற்சியும், நிறைவாகும் வரை மறைவாக இருக்கும் விவேகமும் இதயபூமி நடவடிக்கையின் வெற்றிக்கு வழிசமைத்தவைகளாகும். இந்த வெற்றி வரலாற்றோடும், இதயத்தோடும், இதயபூமியோடும் இரண்டறக் கலந்துபோனவர்கள்தான்.


லெப்டினன்ட் திருமலைநம்பி / பெர்னாண்டோ

லெப்டினன்ட் நக்கீரன் / செந்தூரன்

லெப்டினன்ட் காந்தி / அழகப்பன்

லெப்டினன்ட் விமலன் / வில்லவன்

லெப்டினன்ட் ஈழவேந்தன் / அமீர்

லெப்டினன்ட் குயிலன்

லெப்டினன்ட் வாசன் / தமிழ்வாணன்

லெப்டினன்ட் விக்ரம் / துரைக்கண்ணன்

2ம் லெப்டினன்ட் சியாமணி

2ம் லெப்டினன்ட் புகழரசன்


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code