Ad Code

Recent Posts

லெப்டினன்ட் அன்பழகனின் வீர வரலாற்று நினைவுகள்

லெப்டினன்ட் அன்பழகன்

கந்தையா சசிக்குமார் 

திருநகர் கிளிநொச்சி

வீரப்பிறப்பு: 11.05.1973  

வீரச்சாவு: 31.08.1992


நிகழ்வு: கிளிநொச்சி ஆனையிறவு தட்டுவன்கொட்டியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு

  

ஒரு வெற்றிகரமான தாக்குதல் நடைபெற்றது என்பதைக் கேள்விப்படும்போது தமிழீழ மக்களின் உள்ளங்கள் வெற்றிக் களிப்பில் மூழ்குகின்றன. ஆனால் குறிப்பிட்ட தாக்குதலின் வெற்றிக்கு உயிர்நாடியாக இருந்தது வேவுப் பிரிவின் திறமைதான் என்ற விடயம் பெரும்பாலும் வெளிக்கொணரப்படுவதில்லை. அது போராளிகளுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.


ஒரு தாக்குதல் திட்டத்தை வகுப்பதற்கு வேவுப் பிரிவின் பங்கு மிக முக்கியமானது. எதிரி நிலை கொண்டுள்ள பூகோள சூழல் அந்நிலையின் கட்டமைப்பு., எதிரியின் ஆட்பலம், ஆயுத பலம் போன்ற சகல தகவல்களையும் வேவுப் பிரிவினரே சேகரித்துக் கொள்கின்றனர். அத்துடன் தாக்குதலுக்கான சாதக பாதக அம்சங்களையும் அவர்கள் கணிப்பீடு செய்கின்றனர். வேவுப் பிரிவினரின் இந்தத் தகவல்களின் அடிப்படையில்தான் தாக்குதல் திட்டம் வகுக்கப்படுகின்றது. ஆகவே ஒரு தாக்குதலின் வெற்றி வேவுப் பிரிவினரின் திறமையில் பெரும்பாலும் தங்கியிருக்கின்றது எனலாம்.


வேவு பார்க்கும் பணி மிகவும் ஆபத்துக்கள் நிறைந்தது.


ஒரு சிறு அசைவு கூட எதிரிக்குத் தெரியாமல் நடந்து கொள்ள வேண்டும். இல்லையேல் வேவுப் பணியில் ஈடுபடுபவர் தனது உயிரை இழக்க நேரிடும். அதே வேளை எதிரியும் தனது நடைமுறைகளை மாற்றிக் கொள்வான். அதற்கேற்றவாறு மிகவும் நிதானமாக, எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.


எதிரியின் காவலரண்களுக்கு மிக அருகில் செல்லும்போது சில வேளை எதிரி நித்திரையாயிருப்பான். ஓசைப்படாமல் அவனது கனரக ஆயுதத்தைத் தூக்கி வரக் கூடியதாக இருக்கும். எதிரியின் ஆயுதங்களைக் காணும் போது அதைத் தூக்குமாறு மனம் ஏவும். அந்த ஆயுதத்தினால் வீரச்சாவெய்திய நண்பர்களின் முகங்கள் நினைவுக்கு வரும், கை துருதுருக்கும் - ஆனால் இதையெல்லாம் வெல்லக்கூடிய மனப்பக்குவத்தை வேவுப்பணியில் ஈடுபடுபவன் பெற்றிருக்க வேண்டும்.


கயிற்றில் நடப்பது போன்ற இப்பணியில் ஈடுபட்டவர்களில் அன்பழகனும் ஒருவன். முகாமில் இவனைக் காணவில்லையென்றால் சந்தேகமில்லாமல் ஒரு முடிவுக்கு வரலாம். அதாவது எதிரியின் ஏதோ ஒரு நிலைக்கு அண்மையில் இவன் நின்று எதிரியின் நடமாட்டங்களைக் கவனிக்கின்றான் என்று. அவனைப் பொறுத்தவரை எந்நேரமும் அதுதான் சிந்தனை. தனது பொறுப்பு எத்தகையது என்பது அவனுக்கு மிக நன்றாகத் தெரியும்.


ஒரு சராசரி மனிதரை விட இவன் வேறுபட்டவன். ஏனெனில் இவனது அண்ணனான ஈசன் என்பவருக்கு மோசடிக் குற்றங்களுக்காக இயக்கத்தால் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தச் சம்பவம் நிச்சயம் இவனில் இரத்தத் துடிப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் இனப் படுகொலைக்குள்ளாகிக் கொண்டிருக்கும் எமது இனத்தைப் பற்றிய துடிப்பு இவனில் மேலோங்கியிருந்தது. ஆகவே தெளிவாக இருந்தான். இயக்கத்தைப் பொறுத்தவரை எல்லோருக்குமே ஒரே சட்டம், ஒரே நியாயம் என்று. ஆகவேதான் அண்ணன் மறைந்த ஓரிரு மாதங்களுக்குள் முழுநேர இயக்கத்தின் உறுப்பினனாக முடிந்தது.


கிளிநொச்சியிலுள்ள திருநகர் தான் இவனது பிறப்பிடம். இயற்பெயர் சசிக்குமார். கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவன் க. பொ. த (சா/த) பரீட்சையில் 5 பாடங்களில் சித்தி எய்தியிருந்தான். கண்ணன் என்று செல்லமாக ஊர் மக்களால் அழைக்கப்பட்ட இவன் 10-8-90 அன்று இயக்கத்தில் சேர்ந்ததும் அன்பழகனாக உச்சரிக்கப்பட்டான். கிளிநொச்சியிலேயே பயிற்சியும் பெற்றான். அன்றிலிருந்து வீரச்சாவைக் தழுவிக்கொண்ட தினம்வரை கிளிநொச்சிக் காவலரண்களின் சுவாசம்தான் இவனுக்கு.


இவன் மிக அமைதியான சுபாவமுள்ளவன். அந்த சுபாவம்தான் வேவுப் பணியில் ஈடுபடும்போது பெரிதும் உதவியிருக்கிறது. கடமைக்குச் செல்லும்போது இவனுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்களை ஒருமுறை சொன்னால் போதும் திரும்பவும் விளங்கப்படுத்தத் தேவையில்லை. சொல்லப்படும் விடயம் தொடர்பாக நூறு வீதம் இவனது புலன்கள் வேலை செய்யும், அதனால் தளபதிகளின் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தான். அதேபோல் பழகும் விதத்தினால் சக போராளிகளின் நன்மதிப்பைப் பெற்றவன் இவன்.


இவனது பணிக்கு உரைகல்லாக இருப்பது ஆனையிறவு தட்டுவன் கொட்டிப் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல். இத்தாக்குதலில் 22 காவலரண்கள் எம்மால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.


இத்தாக்குதலுக்கு சிறந்த முறையில் வேவுப்பணிகளில் ஈடுபட்டதற்காகத் தலைவர் பிரபாகரனின் கரங்களால் இவனுக்குப் பரிசு கிடைத்தது. இவனது வாழ்வின் உச்சக்கட்ட ஆனந்தத்தைச் சந்தித்தது அன்றுதான்.


மீண்டும் அதே பணி ஒரு நாள் சுற்றுலா விடுதிப் பக்கமாக எதிர்பாராத விதத்தில் இவன் எதிரிகளைச் சந்திக்க நேர்ந்தது. இந்நிலையில் முந்திக் கொண்டவரே உயிர் வாழ முடியும். இவன் முந்திக் கொண்டான். இரு இராணுவத்தினர் அந்த இடத்தில் பலியாகினர். எல்லோரும் இவன் தப்பி வந்ததனை நினைத்து மகிழ்ச்சி அடைந்தபோது இவன் மட்டும் மகிழ்ச்சி அடையவில்லை. இந்தச் சந்திப்புத் தனது பணிகளைத் தடங்கலுறச் செய்ததாகவே கருதினான். ஆயினும் மனம் சோரவில்லை, அடுத்த தாக்குதலுக்குத் தயாரானான்.


அடுத்த தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டது. திகதியும் தீர்மானிக்கப்பட்டது. இத்தாக்குதலுக்கான பயிற்சியும் நடந்தது. இப்பயிற்சியின் போது இவனுக்குச் சிறிய காயமேற்பட்டது. காயத்தின் வேதனைகளுக்கிடையில் சிரித்தபடியே இவன் கூறினான், "எனக்குக் காயம் பட்டிட்டுது. நான் ரத்தம் சிந்திட்டன். ஆனபடியால் நாங்கள் கட்டாயம் இதில வெல்லுவம்" (ஏற்கனவே ஒரு தடவை இவன் காயப்பட்டவன். 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆனையிறவுப் பகுதியில் நடந்த மோதலில் வயிற்றில் காயமடைந்தவன்.)


தாக்குதலுக்கான கடைசிப் பணி -இறுதியாக ஒரு முறை உளவு பார்க்க வேண்டும். 30-8-1992 அன்று இரவு இவன் புறப்பட்டான். "றெக்கி சரியில்லாட்டி பெடியள் கூடச் செத்துப் போடுவாங்கள். அதற்காக நான் உள்ள போய்ப்பாத்திட்டு வாறன். கடைசி றெக்கி வடிவா எடுக்க வேணும்" - சொல்லி விட்டுப் புறப்பட்டு விட்டான். அப்போது தான் அவனைக் கடைசியாகப் பார்த்தது.


இலக்கத்தகடு கூட இல்லாமல் சயனைட்டுடன் மட்டுமே புறப்பட்டான். 30 ம் திகதி முடிந்து 31ம் திகதியானது. இவன் பணி மட்டும் முடியவில்லை. அதிகாலை 2,30 மணி. எதிரியின் முள்ளுக்கம் பியை நீக்கி 2... பட்.. பட்.. பட்


அன்பழகனைப் பற்றிய செய்தி இவ்வாறுதான் எமக்குக் கிடைத்தது. அந்த உப்பு மண் சுமந்த மாவீரர்களின் பெயருள் இவனது பெயரும் இணைக்கப்பட்டது.


"நான் ரத்தம் சிந்தீட்டன் - ஆனபடியால் இதில் நாங்கள் வெல்லுவம்" என்ற இவன் வார்த்தை இந்தத் தேசமெங்கும் கேட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. தொடர்ந்து கிடைக்கும் இராணுவ வெற்றிகள் இவனது வார்த்தையை உறுதிப்படுத்துகின்றன.




விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code