செல்லையா வேதா
வீரப்பிறப்பு: 12.09.1974
வீரச்சாவு: 25.07.1993
தென்தமிழீழத்தில், கோவில்போரதீவு கிராமத்தில் பிறந்தவன் வாசன். இராணுவத்துக்கு அஞ்சி காடுகளில் உறங்கி வாழ்ந்தது – பள்ளிக்குச் செல்லமுடியாது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது – துடிக்கத் துடிக்க வாள்வெட்டுக்கு இலக்காகிய இளைஞர்கள் – இராணுவ முகாம்களில் தூங்கிய தமிழரின் எலும்புக்கூடுகள் – பாலியல் வன்முறைகளையெல்லாம் வாசனால் எப்படி மறக்கமுடியும்? இராணுவத்தை அழிக்கவேண்டுமென்பதை விட, அவர்களின் தலையை வெட்டவேண்டும் – அவர்களின் தலை துடிப்பதைப் பார்க்கவேண்டும் – என்ற ஆத்திரம் தன்னுள் நாளுக்கு நாள் அதிகரித்தபோதே களத்துக்கு வந்தவன்.
மணலாற்றுப் போர்வாழ்வில் தென்தமிழீழத்தில் நடக்கும் இராணுவ வெறியாட்டம் பற்றியே அடிக்கடி கதைத்துக்கொண்டிருப்பான். குழந்தைத்தனமான குறும்புகள் இவனிடம் இல்லாமலில்லை. பிறந்த மண்ணில், சுதந்திரமாகச் செய்யமுடியாத குறும்புகளை, தன்னை நேசித்த தோழர்களோடு செய்யநினைத்ததில் தவறில்லை, குறும்புத்தனம் இவனிடம் இருந்தாலும் சண்டையில் இராணுவத்தைச் சுட்டுக் குவிக்கவேண்டும் சுடுவது மட்டுமல்ல வெட்டவேண்டும் என்ற வன்மமும் தலையெடுத்து விடும்.
கனரக ஆயுதம் வைத்து அடிபடவேண்டுமென தளபதியிடம் வேண்டி ஏ. கே. எல். எம். ஜி. துப்பாக்கி பெற்றுக்கொண்டான். இறுக்கமான உடற்கட்டும் – வலிமையும் – வன்மமும் – இத்துப்பாக்கியை வைத்திருக்கும் தகுதியை, இவனுக்குக் கொடுத்தன.
சண்டைகளுக்குச் செல்லத்தயாராகும்போது, கூரிய தனது கத்தியை உறைக்குள் முதலில் போட்டுக் கொள்வான். “என்ன மச்சான் கத்தியைக் கவனமாய்ச் செருகிறாய்” என்று கேட்டால்,
“கண்ணுக்கு முன்னால எத்தனை தலையை ஆமி வெட்டிருக்கிறான். துடிக்க துடிக்க வெட்டிய நாய்களை சும்மாவிடக் கூடாதுதான்” என்று பதில் சொல்வான்.
இதயபூமி 1 தாக்குதலுக்கு அணிவகுத்துச் சென்றபோது துடிப்புடன் – மிடுக்குடன் – இராஜநடை போட்டு நடந்து சென்ற காட்சி….
இலகு இயந்திரத் துப்பாக்கியை அணைத்தபடி, மலர்ந்த முகத்தோடு, செந்நீரால் வீரகாவியம் எழுதி விழிமூடிக்கிடந்த காட்சி…!
‘இதயபூமி – 1’ இராணுவ நடவடிக்கையின் வெற்றிக்கு உயிர்தந்த பதின்மர்!
மணலாறு, அப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல. தமிழீழத்தின் எத்திசையில் இருப்பவர்களுக்கும் அந்தமண் சொந்தமண் எம் வீரகாவியத்தின் தலைவனைக் காத்துத்தந்த பூமி அது, இந்த உண்மை எம் வீரர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதும், தலைவன் எமது மண்ணில் கொண்ட தளராத பற்றும், அவனது வளர்ப்புக்களின் அயராத கடின பயிற்சியும், நிறைவாகும் வரை மறைவாக இருக்கும் விவேகமும் இதயபூமி நடவடிக்கையின் வெற்றிக்கு வழிசமைத்தவைகளாகும். இந்த வெற்றி வரலாற்றோடும், இதயத்தோடும், இதயபூமியோடும் இரண்டறக் கலந்துபோனவர்கள்தான்.
லெப்டினன்ட் திருமலைநம்பி / பெர்னாண்டோ
லெப்டினன்ட் நக்கீரன் / செந்தூரன்
லெப்டினன்ட் காந்தி / அழகப்பன்
லெப்டினன்ட் விமலன் / வில்லவன்
லெப்டினன்ட் ஈழவேந்தன் / அமீர்
லெப்டினன்ட் குயிலன்
லெப்டினன்ட் வாசன் / தமிழ்வாணன்
லெப்டினன்ட் விக்ரம் / துரைக்கண்ணன்
2ம் லெப்டினன்ட் சியாமணி
2ம் லெப்டினன்ட் புகழரசன்





0 கருத்துகள்