Ad Code

Recent Posts

லெப்டினன்ட் மாங்கனியின் வீர வரலாற்று நினைவுகள்

லெப்டினன்ட் மாங்கனி

செல்வநாயகம் வானதி 

3ம் வட்டராம், முள்ளியவளை, 

முல்லைத்தீவு

வீரப்பிறப்பு:08.08.1975 

வீரச்சாவு: 30.10.1995


நிகழ்வு: யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு

 

இவள் ஒரு சிறந்த நடிகை. பாடகி. ரசிகை. பேசும்போது வாய்மட்டுமல்ல கண், மூக்கு எல்லாமே பேசும் கைகள் அபிநயம் பிடிக்கும்.


இனிமையான குரலாலும், திறமான நடிப்பாற்றலாலும் ஏனைய பிள்ளைகளைக் கவர்ந்து கொண்டாள். பயிற்சிப் பாசறையில் இரவு வேளைகளில் ஒரு மூலையில் மாங்கனியின் பாட்டுக் கச்சேரி நடக்கும். 


அவளைச் சுற்றி ஒரு கூட்டம் இவளின் பாடல்களைக் கேட்டு ரசிக்கும். பாட்டைக் கேட்டபடியே அவர்கள் உறங்கிவிடுவார்கள். நிலைமைகள் எப்படியாயிருந்தாலும், பயிற்சி எடுத்த களைப்பை நீக்கிவிடும் மாங்கனியின் பாடல்கள். "அம்மாவே தெய்வம். ஆகாயதீபம்"


என்ற பாடலை ஒரு நாளில் ஒரு முறை என்றாலும் இவள் பாடாமல் விடமாட்டான். அந்தப் பாடல் இவளது குரலுக்குள் இழைந்து வரும் போது நெஞ்சைத் தொடும். இவளது முதற் சண்டை மின்னல் தாக்குதலாக இருந்தது. அதற்கு அவள் விநியோகக் குழுவாகச் சென்றாள். அது நல்லதொரு சண்டை. எதிரியின் 'சகடைகள்' பீப்பாக் குண்டுகளை உருட்டித் தள்ளும். மரங்கள் முறிந்து எந்தப் போராளியின் தலையிலாவது விழும். எங்கு குண்டுகளை வீசுகிறான். எந்த இடத்தைக் குறி வைக்கிறான் என்று எதுவுமே அறிய முடியாதவாறு, காடு குடை பிடித்து மறைக்கும். அந்த இடத்தில் அவளுக்கு விநியோக வேலை. 


சண்டையில் நிற்கும் போராளிகளுக்கான வெடி பொருட்கள். உணவுகளை முன்னணி நிலைகளுக்குக் கொண்டு சென்று கொடுப்பது. காயமடைந்த, வீரச்சாவடைந்த போராவிகளைத் தூக்கி பின்னால் உரிய இடத்தில் சேர்ப்பது என மாங்கனி சோர்வடையாமல் வேலை செய்தாள். 


அடுத்த சண்டை 'பலவேகய -2. இயக்கச்சிச் சண்டை அவளது எதிர்பார்ப்புக்கும் ஆவலுக்கும் ஏற்ப, சண்டையணியில் விடப்பட்டாள். சண்டைக் களத்திலேயே சண்டைக்கான பயிற்சி, இரவு பகலாக ஓயாத பயிற்சி மாங்கனிக்குக் காய்ச்சல் வந்து விட்டது. உடலை அசைக்க முடியாமல் முறித்து எடுத்தது. ஆனாலும் மாங்கனி களத்தைவிட்டு வெளியேறவில்லை. பதுங்குகுழி ஒன்றினுள் படுத்தபடி மருந்துகள் சாப்பிட்டாள். காய்ச்சலும் விட்ட பாடாகஇல்லை. கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாள். காய்ச்சலின் விளைவாக எப்போதும் அபிநயம் பிடிக்கும் அவளின் கைவிரல்கள் பாதிப்படைந்தன. சில விரல்கள் மடங்கி நிமிர்த்த முடியாமல் ஆயின. அதற்குரிய வைத்தியங்களைச் செய்த மாங்கனி கலைபண்பாட்டுக் கழகத்துக்கு வந்து சேர்ந்தாள்.


அங்கு இவளின் கலைத் திறன்கள் வளர்ந்தன. சங்கீதம். நடனம் என்பவற்றை இவள் பயின்றாள். வாத்தியக் கருவிகளைக் கற்றாள். எமது முகாம்களில் நடக்கும் ஒவ்வொரு கலை நிகழ்ச்சிகளிலும் நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்று நடித்தாள். இன்னும் இன்னும் தான் நிறையச் செய்யவேண்டும். சாதிக்கவேண்டும் என்று அயராது உழைத்தாள்.


இவளின் இனிமையான குரலில் உருவாக்கம் பெற்றதுதான் மண்ணாய் போகும் உடலே ஈழ மண்ணுக்காகட்டும்' என்ற பாடல்.


இவனது அன்பான பணிபான செயற்பாடுகள் வலிகாமத்தில் பல கலைஞர்களைக் கவர்ந்தது.


வலிகாமத்தில் 'சூரியக்கதிர்' இராணுவநடவடிக்கை ஆரம்பமானது. மாங்கனியைக் காண்பது இதுதான் கடைசி என்பதை அறியாத அந்த முகாம் அவளைச் சண்டைக்கு வழியனுப்பி வைத்தது. நாங்கள் ஒடித்திரிந்த மண்ணை எதிரியிடம் விடமாட்டோம்' என்ற உக்கிரத்துடன் போராளிகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தியாக மாங்கனியும். 


எதிரியின் எறிகணை மழை எம்மவர்களின் உயிர்களைக் குடித்துக் கொண்டிருந்தது. ஒரு எறிகணை மாங்கனியை 1995.10.30 அன்று அவள் அமைதியானாள்.


மாங்கனி ஒடித் திரிந்த வீதிகள், அவள் கைபட்டு வளர்ந்த வாழை மரங்கள். அவள் இருந்து படிக்க நிழல் பரப்பிய பலாமரங்கள். அவள் ஆசையாக வளர்த்த பூமரங்கள் எல்லாம் ஒரு நாள் மாங்கனி வருவாள் என்று எதிர்பார்த்தபடி வலிகாமத்தில் காத்திருக்கின்றன.




விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code