சிவப்பிரகாசம் சிவமேகலா
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 10.09.1972
வீரச்சாவு: 17.10.1995
நிகழ்வு: யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு
அது அவளது கடைசி நாள். வைகறைக் குவியலில் ஒரு செம்பருத்திப் பூவைப் போல மலர்ந்திருந்த முகத்தோடு எமது கண்ணாடிக்கு முன்னால் நின்றபடி தனது ஒட்டவெட்டிய தலை முடியைப் படிய வாரியபடி சிலும்பி நின்ற முடிகள் அவளது சீப்புக்குப் படிய மறுத்தன.
"அக்கா தலை படிஞ்சிட்டுதே" அவளைப் பார்க்கச் சிரிப்பாக இருந்தது. சண்டைக்குப் போக நிற்கின்ற அந்த மகிழ்ச்சி அவள்.... முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
அன்று அவள் முகமெல்லாம் சிரிப்பாகச் சென்றாள். அது அவளது கடைசிச் சண்டை. ஏன். அவளது கடைசி நாளும் கூட என்பதை நாங்கள் நினைத்திருக்கவில்லை. அவளும் நினைத்திருக்கமாட்டாள் என்றுதான் நாம் எண்ணுகிறோம். "நிறையச் சண்டைக்குப் போய்வர வேணும்" என்ற நீண்ட கனவு அவளிடம் இருந்ததை நாங்கள் அவள் வாயிலாக அடிக்கடி கேட்டோம். ஆனால், மாறாக அவளது உயிரற்ற உடல், அன்றே தலையின்றி வந்தபோது, காலை தலைபடிய வாரிய தேவகி "தலை படிஞ்சிட்டுதோ அக்கா" என்று கேட்ட தேவகி நெஞ்சுக்குள் அதிர்வாய் வந்து போனாள்.
தேவகி!
எல்லாவற்றிலும் மேலோங்கி நின்ற அவளது இரக்கக்குணம். அது அவளது போராட்ட வாழ்வில் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தலை தூக்கி நின்றது.
"நேற்றுப்போட்ட அந்தப் புதுச்சேட் எங்கை தேவகி" என்று கேட்கும்போது,
முகாமுக்குப் புதிதாக வந்த பிள்ளையிடம் அதைக் கொடுத்து விட்டு வந்து "நான்தான் குடுத்தனான் அக்கா" என்றபடி நிற்பாள்
யாருக்காவது உதவி எனின், சட்டென்று உதவி செய்யத் தேடிச் செல்கின்ற அந்தப் பண்பினால்தான் தேவகி எல்லோருக்குள்ளும் நிறைந்திருந்தாள்.
முகாமில் எந்த உந்துருளியாவது அவளது கைப்பட்டதாகத்தான் நிற்கும். உந்துருளியில ஏறியிருந்தால் அவளது வேகமும் கூடவே, எந்த நெருக்கடிக்குள்ளும் செல்கின்ற திறமையும் அந்த வேகமும் எல்லா விடயங்களிலும் பளீரிட்டது. எப்போதுமே புயலைப் போன்ற வேகம் அவளிடம் இருந்தது, அது அவளது மறைவிலும் கூட.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்