கந்தையா சூரியகுமார்
மட்டுநாடு, பூநகரி, கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 01.01.1975
வீரச்சாவு: 15.10.1999
நிகழ்வு: முல்லைத்தீவு அம்பகாமம் நோக்கி முன்னேறிய "வோட்டசெற் 1" நடவடிக்கைப் படையினருக்கெதிரான சமரில் வீரச்சாவு
வன்னியின் மையப்பகுதியை ஊடுருவிய எதிரி மணலாறு, ஒட்டுசுட்டான். மாங்குளம், நெட்டாங்கண்டல், மன்னார் என எங்கும் பரவியிருந்தான். வன்னியின் ஒரு பரந்த பிரதேசம் எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. பல கிலோமீற்றர் தூரம் நீண்டு வளைந்திருந்த எமது காவலரண் வரிசையை எந்த இடத்திலும் உடைத்து எதிரி முன்னேறலாம் என்ற நிலை அப்போது இருந்தது. சில மாதங்களின் முன்னர்தான் எதிரி பெருமெடுப்பில் மேற் கொண்ட 'ரணகோச- 05' நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. இப்போது இராணுவம் கரிப்பட்டமுறிப்பிற்கு வடக்காக அம்பகாமம் பகுதியூடாக நகரலாம் என ஓர் எதிர்பார்ப்பு இருந்தது.
15.10.1999 நாள் அதிகாலையில் புலிகளின் படையணிகள் தற்காலிகமாக அமைத்திருந்த காவலரண் தொடரை உடைத்துக்கொண்டு சிங்களத்தின் 'வோட்டர் ஷெட்' இராணுவ நடவடிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்போடு படையினர் உக்கிரமான அந்தச் சமரைத் தொடக்கினர்.
அன்றைய களச்சூழல் மிகவும் நெருக்கடியானதாக இருந்தது. மட்டுப்படுத்தப்பட்டிருந்த எமது போர் அணிகளிற் பெரும் பகுதி 'ஓயாத அலைகள் 03' நடவடிககைக்கான பயிற்சிகளிலும் தயாரிப்பு வேலைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. எனினும், எதிரியின் நகர்வு ஆயத்தானது. முறியடிக்கப்பட வேண்டியது. எனவே, வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் அணிகள் களமிறக்கப்பட்டன. அம்பகாமம் காடு பீரங்கிக் குண்டுகளால் அதிர்ந்து கொண்டிருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் முறியடிப்பில் இறங்கின. இடைவிடாத பீரங்கி மழையில் நனைந்தவாறு புலிகள் சமராடத்தொடங்கினர்.
புலிக்குட்டி என்ற போராளி, சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவிற்கு மாத்திரமல்ல போராட்டத்திற்கே புதியவன். ஐந்து பேரடங்கிய முறியடிப்பு அணியில் அவனும் ஒருவன். அன்றைய சண்டையில் அவர்கள் அடையவேண்டிய இலக்குக் கடுமையானதாக இருந்தது. இராணுவம் ஊடுருவிய ஒரு கேந்திரமான நிலையை அவர்கள் மீளக்கைப்பற்றவேண்டும். எதிரியின் கைவசம் உள்ள அந்த நிலையின் அருகிற் சென்ற அணிகள் எல்லாம் ஏற்கனவே எதிரியின் கடுமையான எதிர்ப்பால் சிதைக்கப்பட்டு விட்டன. எஞ்சியவர்கள் மட்டுமே இப்போது அந்த நிலையைப் பிடிக்கவேண்டியிருந்தது.
தமது இலக்கைச் சென்றடைய இன்னமும் இருபது மீற்றர் தூரம் மட்டுமே உள்ள நிலையில் அவர்களுடைய அணியில் ஆக மொத்தம் இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். எதிரியின் இயந்திரத் துப்பாக்கி ஒன்று தொடர்ச்சியாக அவர்களை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தது. அந்த நிலையைக் கைப்பற்றினால்தான் மிகுதி முன்னேற்றம் இவர்களுக்குச் சாத்தியமாகும்.
போரில் அனுபவம்மிக்க, கடுமையான போர்களுக்குப் பரிச்சயமான போர்வீரர்களே திகைப் படையும் கொடிய களச்சூழல், ஏறக்குறைய எல்லா அணிகளும் எதிரியால் முறியடிக்கப்பட்டு விட்டன. எஞ்சிய அணியிலும் அவர்கள் இருவர் மட்டுமே அப்போது இருந்தனர். அவர்களுக்குப் பின்வாங்குமாறு கட்டளை வந்தது.
ஆனாலும் இன்னமும் அவர்களது துப்பாக்கிகள் சடசடத்துக்கொண்டிருந்தன. தொடர்ந்தும் அந்த இரண்டு வீரர்களும் முன்னேறிக்கொண்டிருந்தனர். எதிரி தனது எதிர்ப்பில் தீவிரமாக இருந்தான்.
'மச்சான் நான் காயப்பட்டிட்டன்'
புலிக்குட்டியின் அருகிலிருந்த அவனது கடைசித் தோழனும் எதிரியின் குண்டடிபட்டு வீழ்ந்தான். வேதனையுடன் ஒலித்த அவனது குரலில் தன் தோழனுடன் தொடர்ந்து முன்னேற முடியவில்லையே என்ற ஆற்றாமை இருந்தது.
'பிரச்சனையில்லையடா, நான் தனியப்போறன்'
வெடித்துச் சிதறிய எறிகணைகளின் ஊடாக, புலிக்குட்டி அந்த இளம் வீரன்
தொடர்ந்தும் முன்னேறினான்.
இடைவிடாது அவனுக்குக்கிடைத்த பின்வாங்கும் கட்டளையையும் கடந்து அவனது ஆவேசமான முன்னேற்றம் இருந்தது. தனது நிலத்தை ஆக்கிரமிப்பவனின் மீதான ஆத்திரம், எப்படியாவது எதிரியை முறியடித்து விடவேண்டும் என்னும் உத்வேகம் அவனை அந்தக் களத்தில் வேகமாக இயக்கின. காட்டிற்கு வாயிருந்தால் அவனின் துணிச்சலை நேரில் வாழ்த்தியிருக்கும்.
சண்டையின் அந்தப் பொழுதுகள், சாதாரணமானவர்களால் புரிந்துகொள்ள முடியாதவை. வர்ணனைக்கு அப்பாற்பட்டவை. தனியொருவனாக, எதிரியின் மூர்க்கமான எதிர்ப்புக்களின் மத்தியில் இடைவிடாத எறிகணை வீச்சுக்களின் மத்தியில் முன்னேறுவது போர்க்களத்தில் எல்லோராலும் சாதித்துவிடக் கூடியதல்ல.
இறுதியில் எதிரியின் நிலைகளை வீழ்த்துவதற்கு இன்னமும் ஐந்து மீற்றர் தூரமே இருக்கும்போது அவன் வீழ்ந்துபோனான். பெருமைக்குரிய அந்த வீரன் திரும்பி வரவில்லை.
அவன் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் கட்டளையை மீறித் தனித்து முன்னேறிச் சென்றதற்குத் தண்டனைகூடப் பெற்றிருப்பான். ஆனால், இன்று விசாரணைக்கு உட்படுத்த முடியாத அவனது வீரத்தை மெச்சி, பெருமைகொண்டார் அவனது தளபதி. உறுதியுடன் அவனது நா இறுதியாகத் தன் தோழனுக்குச் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகள் மீண்டும் எம் காதுகளில் மோதி ஒலிக்கின்றன.
"பிரச்சனையில்லையடா, நான் தனியப்போறன்"
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்