செல்வநாயகம் வானதி
3ம் வட்டராம், முள்ளியவளை,
முல்லைத்தீவு
வீரப்பிறப்பு: 23.05.1979
வீரச்சாவு: 29.10.1995
நிகழ்வு: யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு
அது நேற்றுப்போல் இருக்கிறது. காலச் சுழற்சியில் அள்ளுண்டு போகாத நினைவுகளாக மீண்டும் மீண்டும் நினைவுத் திரையில் ஒடிக் கொண்டிருக்கும் நிகழ்வுகள். எழுதுகின்ற வரிகள் தெளிவின்றி, விழியில் நீர்த்திரை படிய எதை எழுத? எல்லாமே வார்த்தைகளின்றித் தோற்றுப் போகும். வலிகாமத்தின் காற்று, துயரம் சுமந்தபடி மோதி உடையும், தனிமையில் மௌனமாக இருக்கின்ற வீடுகளில் உனது மூச்சும் கலந்தபடி.... "நாமகள்" உன்னை நினைக்கும் போது அந்தக் குழந்தைத்தனம் மாறாத குழப்படி நினைவுக்கு வரும்.
நீ குழந்தைதான். வயதுக்கும் உருவத்திற்கும் எதுவித சம்மந்தமும் அற்ற குழந்தை. அதுவும் உனது கடைசிப் பொழுதுகளில் உனது உயரமும் அசாதாரண வளர்ச்சியும் கண்டவர்களை வியப்பிலாழ்த்தியபடி........... எப்படியிருந்தாய்? உனக்குப் பதினாறு வயதென்றால் யார் நம்புவார்? "நீ இயக்கத்துக்கு வந்தபொழுது குழந்தை " "இந்த வயதில் ஒருவரையும் இயக்கத்துக்கு எடுக்கிறதில்லை. திரும்பி வீட்டுக்குப் போங்கோ" என்று கூறிய போது நீ அடம் பிடித்தாய்.
"போராட்டத்துக்கு வயதெல்லை இல்லை " கடைசியில் உனது நியாயமான கேள்வியும் பிடிவாதமுமே வென்றது. அந்தப் பயிற்சி முகாமில் உனது திறமையால் எப்போதும் உன்னை இனங்காட்டினாய். உனக்கும் லெப்,சுபானந்தினிக்கும்தான் அங்கு போட்டி. யார் யாரை முந்துவது? இருவருமே திறமைசாலிகள். எதில் எவர் கெட்டிக்காரர் எனப் பிரித்தறிய முடியாதவாறு இருந்தீர்கள். அதன் பிறகு எங்கள் தலைவரின் கனவுகளின் ஒன்றான படைத்துறைப்பள்ளியில் உனது போராட்டப்பாதை தொடர்ந்தது. அங்கு உனது குழந்தைத் தனங்களும் குறும்புகளும் சொல்லி மாளாது. அங்கு உனது எல்லாத் திறமைகளையும் மீறி இவற்றிலே பேர் போனவளாக இருந்தாய்.
அங்கிருந்த படியே நீ, "நான் சண்டைக்குப் போறன்" என்று பொறுப்பாளரை நச்சரித்து நச்சரித்து வெளியில் வந்தாய். உனது முதற்களம் பூநகரித் தாக்குதலாக இருந்தது. பூநகரிச் சண்டைக்கு பூரிப்போடு போய் வந்தாய். நீண்ட நாட்கள் உனது முகத்தில் அந்தச் சண்டைக்குப் போய் வந்த சந்தோசமும் திருப்தியும் இருந்தது. பின்னர் நீ கலை பண்பாட்டுக்கழகத்தில் உனது திறமைகளைக்காட்டினாய். இயல்பாகவே உன்னிடமிருந்த கலையார்வம் நடனத்திலும் பாட்டிலும் வெளிப்பட்டது.
எப்போதுமே அபிநயம் பிடித்தபடி முகாமில் நடனமாடுவாய். எங்கேனும் கலை நிகழ்ச்சிகள் பார்த்து விட்டு வந்தால் அன்று இரவு நிச்சயமாக நீ முகாமில் ஆடிக்காட்டுவாய். அல்லது பாடலையாவது பாடிக் காட்டுவாய். பாட்டு எப்படியிருப்பினும் உனது குரலின் கம்பீரமும் பாட்டின் குழைவுகளும் உனது பாட்டை இன்னொருமுறை கேட்கத் தூண்டும். முகாமில் எந்த நிகழ்வு நடந்தாலும் உனது நிகழ்ச்சி ஒன்று கட்டாயம் இருக்கும்.
அநேகமாக அது களத்தில் காத்தானாக இருக்கும். அதில் நீ காத்தானாக வருவாய். முல்லை மண்ணின் பாரம்பரியக் கலை மரபில் ஊறிப்போனவள் நீ - அதனாலோ என்னவோ அவற்றை நீ நடிக்கும் போது இயல்பாகப் பாத்திரத்தோடு ஒன்றிப்போய் இருக்கும். மேடையில் எங்கள் நாமகளா? எப்படிக் கம்பீரமாக. இன்னும் ஜீரணிக்கமுடியாத உனது மறைவுக்குப் பின் எல்லாம் நினைவுகளாக உனது பாடல் வரிகள் மெல்லக் காற்றில் தேய்ந்த படி அவை உனது கடைசிக் காலங்கள்.
அது உனது கடைசிச் சண்டையுங் கூட. அந்த விடிகாலைப் பொழுது இராணுவத்தின் யுத்த டாங்கிகளின் இரைச்சலோடும் எற்கணைகளின் பெரும் ஓசையோடும் விடிந்த போது, கோப்பாயின் வாழைத் தோட்டங்களில் எமது நிலைகளில் நீ நின்றாய் அச்சண்டை உக்கிரமாக இருந்தது. அதற்குள்ளும் நீ நின்ற இடம் எப்போதும் போல் கலகலத்தபடி இருந்தது. செம்மண் மேலும் சிவப்பேறி எமது விழிகளைப் போல் சிவந்த போது நீ இல்லை . பெருத்த ஓசையோடு எறிகணை யொன்றின் தழுவலுக்குள் நீ துடிப்படங்கிப் போனாய்.
"நிறையச் சண்டைக்குப் போக வேணும் நல்லா அடிபட வேணும்" என்று சொல்லிப் போனவள் 1995-10-20 க்குப் பின் வரவேயில்லை . "வைதேகியைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு லீவிலை வருவன் அம்மா " என்று போனவள் வரவேயில்லை. அவளோடு வைதேகியும். அவர்கள் அமைதியாக உறங்கட்டும்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்