சின்னத்துரை கோணேஸ்வரன்
வீரப்பிறப்பு: 01.01.1975
வீரச்சாவு: 25.07.1993
யாழ். மண்ணில் காரைநகர் தந்த புதல்வன் புகழரசன். தான் பிறந்த மண்ணில் சிங்களப்படைகள் ஆதிக்கம் செலுத்துவதும், பிறந்த இடத்தை விட்டு இடம் பெயர்ந்துவாழும் தாய், தந்தையர் வறுமையால் நொந்து தவிப்பதும், புகழரசனின் நெஞ்சில் நெருப்பை மூட்டின. சிங்களத்தின் கொடுமைகள்கண்டு கொதிப்பதா? வறுமையின் நிலைகண்டு வாய் விட்டு அழுவதா?……..
அழுவதற்கு அவன் தயாரில்லை. தன்மான உணர்வோடு களப்பலி எடுக்க வேண்டுமென்ற சினம் ஓங்கி நின்றது. பயிற்சிக் காலத்தில் வீட்டு வறுமை நிலைபற்றி அடிக்கடி சொல்லிக்கொள்வான். வறுமை அவனுள்ளத்தில் ஒரு போராட்டத்தை எழுப்பியுள்ளதை உணர்ந்து கொண்டேன்.
மட்டக்களப்பில் உணவின்றி, உடையின்றி, இருப்பிட வசதியின்றித் தவிக்கும் தம் தாய் தந்தையர் துயர்பற்றிச் சகதோழர்கள் கூறும் சோகக்கதைகளைக், கேட்கும்போது புகழரசன் மன ஆறுதல் கொண்டான்.
காலத்துக்கேற்ப, நேரத்துக்கேற்ப, இடத்துக்கேற்ப தோழர்களோடு பழகிவிட்டு ஏனைய நேரங்களில் அமைதியாக இருப்பதையே விரும்பினான் புகழரசன். இவனுள்ளத்தில் இசைவெள்ளம் நிறைந்து கிடப்பது எவருக்கும் தெரியாது. அமைதியாக இருந்த அவனைத் தட்டியெழுப்பிப் பாட வைத்த நாள், நெஞ்சில் நிலையாய் நிற்கிறது. புகழரசன் நல்லாய்ப் பாடுவான் என்ற உண்மை தெரிந்ததும் தோழர்கள் சும்மாவிடுவார்களா? அவனைச்சுற்றி என்றும் ஒரு கூட்டம் மொய்த்திருக்கும்.
புகழரசனின் போர்வாழ்வு குறுகியது. குறுகியகாலப் போர் வாழ்வில் நிறைவான வரலாற்றுப்பதிவை ஏற்படுத்திக்கொண்டான். மண்கிண்டி இராணுவ முகாமைத் தகர்த்தெறித்து இதயபூமிக்கு உயிரூட்ட உயிர்கொடுத்த உத்தம வீரர்களின் வரிசையில், தன்னையும் இணைத்துக்கொண்டான்.
வதைபடுவதைவிட மானத்துடன் புதைபடுவதுமேல் என்று கருதி விழிதூங்க மறந்த புகழரசன், நிலையான தூக்கத்தோடு வரலாறாகிவிட்டான். அவனிசைத்த கானங்கள், கானமெங்கும் ஒலிப்பதை உணர்கின்றேன்…. காரைநகர் தந்த கானகக்குயிலின் மானம் இந்த மண்ணில் என்றும் வாழும்!
‘இதயபூமி – 1’ இராணுவ நடவடிக்கையின் வெற்றிக்கு உயிர்தந்த பதின்மர்!
மணலாறு, அப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல. தமிழீழத்தின் எத்திசையில் இருப்பவர்களுக்கும் அந்தமண் சொந்தமண் எம் வீரகாவியத்தின் தலைவனைக் காத்துத்தந்த பூமி அது, இந்த உண்மை எம் வீரர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதும், தலைவன் எமது மண்ணில் கொண்ட தளராத பற்றும், அவனது வளர்ப்புக்களின் அயராத கடின பயிற்சியும், நிறைவாகும் வரை மறைவாக இருக்கும் விவேகமும் இதயபூமி நடவடிக்கையின் வெற்றிக்கு வழிசமைத்தவைகளாகும். இந்த வெற்றி வரலாற்றோடும், இதயத்தோடும், இதயபூமியோடும் இரண்டறக் கலந்துபோனவர்கள்தான்.
லெப்டினன்ட் திருமலைநம்பி / பெர்னாண்டோ
லெப்டினன்ட் நக்கீரன் / செந்தூரன்
லெப்டினன்ட் காந்தி / அழகப்பன்
லெப்டினன்ட் விமலன் / வில்லவன்
லெப்டினன்ட் ஈழவேந்தன் / அமீர்
லெப்டினன்ட் குயிலன்
லெப்டினன்ட் வாசன் / தமிழ்வாணன்
லெப்டினன்ட் விக்ரம் / துரைக்கண்ணன்
2ம் லெப்டினன்ட் சியாமணி
2ம் லெப்டினன்ட் புகழரசன்





0 கருத்துகள்