Ad Code

Recent Posts

வீரவேங்கை கெங்காவின் வீர வரலாற்று நினைவுகள்

வீரவேங்கை கெங்கா

ஆனந்தராஜா சுந்தரராஜா

கும்புறுப்பிட்டி, திருகோணமலை  

வீரப்பிறப்பு:-23.08.1967

வீரச்சாவு:-02.10.1986

   

நிகழ்வு:-திருகோணமலை திருமலை சாம்பல்தீவில் சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்தபோது சயனைற் உட்கொண்டு வீரச்சாவு


விடுதலைப்புலிகள் இயக்க முகாம்கள் எல்லாமே ஒவ்வொரு குடும்பம் போன்றவை. ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் மற்றவரை எவ்வளவுக்கு நேசிப்பார்களோ அதேபோலத்தான் இங்கும் இருக்கும். அதைப் போலதான் சின்னச் சின்னப் பிரச்சினைகள் தோன்றும். பின்னர் சமாதானமாவார்கள். ஆனால் ஒரேயொரு பிரச்சினையில் இலகுவில் மட்டும் சமாதானம் தோன்றாது. 


அது தாக்குதல்களுக்கு தம்மைக் கூட்டிக் கொண்டு போகாமல் விடுவதால் வரும் பிரச்சினை. இந்த ஒரு விடயத்தில் மட்டும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் குமுறுவார்கள். இந்த விடயத்தைக் கிளப்பும் ஒருவன் எந்த விளக்கத்தையும் கேட்கத் தயாரில்லாதவனாகவே இருப்பான். அவனது இதயத்தின் குமுறல் அடுத்த போர்க்களத்தில் துப்பாக்கியை இயக்கும் வரை ஓயாது.


இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவனாக இருந்த றெஜிக்குக் மனோபாவம் கூட இந்த இருந்தது. பயிற்சி எடுத்து முடித்திருந்த காலத்தில் எந்த மோதலுக்குமே சந்தர்ப்பம் கிடைக்காமல் குமுறினான் அவன். அந்தக் காலத்தில் கிடைத்த சந்தர்ப்பங்களிலும் ஏனையோர் தான் தாக்குதலில் ஈடுபட்டனர். 


இந்தத் தாக்குதலில் ஈடுபட்டோரைவிட றெஜி வயதில் கூடியவன். இதைப் பார்க்கும் போது அவனுக்கு இன்னும் கோபம் வந்தது. ஒரு நாள் கோபத்துடன் கூறினான்: "நான் தலைவருக்கு சொல்லப் போறன் எனக்குப் பென்சன் தாருங்கோ எண்டு. இவ்வளவு காலம் இயக்கத்தில் இருந்தும் இன்னும் சண்டைக்குப் போகாமல் இருந்திருந்து வயசும் ஏறிப் போச்சு, இந்தப் போக்கில போனா 55 வயசிலையும் பீல்டுக்குப் போறது சந்தேகம். பேசாமல் பென்சன் கேட்டிட்டா நல்லது" என்றான். பின்னர் அவனது போராட்ட வாழ்க்கையில் கிடைத்த முதல் சந்தர்ப்பமான ஓட்டிசுட்டான் பொலிஸ் நிலையத் தாக்குதலின் போது உள்ளே அவன் சென்ற வேகம் சண்டையிட்ட விதம் என்னை இத்தனை நாள் சண்டையிட அனுமதிக்காதது எத்தனை பெரிய தவறு" என்று கேட்பதைப் போல இருந்தது.


இயக்கத்தின் மூத்த உறுப்பி றெஜியாலேயே, தன்னை தாக்குதலுக்கு அனுப்பாததற்கு விசேட காரணம் எதுவும் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள முடியவில்லையானால், முகாமில் எல்லோருக்கும் பிரியமானவனாக எல்லோருக்கும் சின்னவனாக இருந்த கெங்காவால் மட்டும் எப்படி அந்த நிலையைச் சகித்துக் கொள்ள முடியும்? அதுவும் நாம் வாழ்வதற்கான போராட்டம் இது என்பதை எமக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் திருமலை மண்ணில் பிறந்த அவனால் அவனைத் தவிர்த்து அவனது கண்ணுக்கு எதிரேயே - ஏனையோர் சிறீலங்காப் படைகளுக்கு எதிரான தாக்குதலுக்காகப் புறப்படுவதை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? தாக்குதலுக்கு அவனைக் கூட்டிச் செல்லாத முகாம் பொறுப்பாளர் அவனது முகத்தில் சிரிப்பை எதிர்பார்ப்பதற்கு என்ன நியாயமுண்டு? சிரிக்காதது மட்டுமல்ல அவர்களுடன் கதைக்காமல் கோபம் போட்டும் விடுவான் கெங்கா. அவனைச் சமதானப்படுத்துவதென்றால் மீண்டும் அந்த முகாம் பொறுப்பாளருடன் அவன் கதைக்க வேண்டுமென்றால் நிச்சயம் அடுத்த தாக்குதலில் பங்கு பற்ற அவன் அனுமதிக்கப்பட வேண்டும்.


1985 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இயக்கத்துடன் இணைந்து கொண்ட கெங்காவின் சொந்த இடம் திருமலை நகரிலிருந்து 16 மைல் தொலைவில் உள்ள கும்புறுபிட்டி என்ற கிராமமாகும். தந்தையை இழந்த இவனுக்கு தாயைத் தவிர எந்தச் சொந்தமுமில்லை. அவனது உலகம் குடும்பம் எல்லாமே இயக்கம்தான். அண்ணா - அக்கா தம்பி தங்கச்சி எல்லா உறவையும் அவன், இந்தப் போராட்டத்தை நேசித்தவர்களிடமே கண்டான். அதேபோல் பிறராலும் நேசிக்கப்பட்டான்.


இவனது கடின உழைப்பு, போராட்டத்தின் மீது இவன் கொண்ட பற்று என்பன ஏனையோருக்கு முன்மாதிரியாக இருந்தன. பன்குளம், தம்பலகாமம், சாம்பல்தீவுப் பகுதிகளில் சிறீலங்காப் படையின் மீது மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களின் வெற்றிக்கு இவனது கடினமான உழைப்பே காரணமாக இருந்திருக்கின்றது.


இவன் பங்கு பற்றிய தாக்குதல்களில் இரு தாக்குதல்கள் இவனுடன் பழகிய போராளிகளால் மறக்கப்பட முடியாதவை சிங்கள குடியேற்றத்தால் மொறவேவா எனப்


பெயர் மாற்றம் செய்யப்பட்ட முதலிக்குளம் பகுதியில் சிறீலங்கா விமானப்படையினரின் ட்றக் ஒன்றின் மீது மேற் கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் அந்த மண்ணுக்குச் சொந்தம் இல்லாத வெதமாத்தயா என்ற ஆக்கிரமிப்பாளன் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.


படையினரை முழுமனிதராகக் கணித்துப் பழக்கமில்லாத லங்கா புவத் இச்சம்பவத்தில் இரு உயர் அதிகாரிகள் உட்பட எட்டுப் படையினரும் ஒரு பொதுமகனும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. கொல்லப்பட் டவர்களில் எயர்லீடர் கிற ஸல்பெக், எயர்லீடர் பெர்ணான்டோ, விமானப்படை தொழில்நுட்பவியலாளர்கள் ஜே.பி.ஜீ. பெர்ணான்டோ, பி. எம். டீ. ஆர். வீரசிங்க, ஐ.எல். இந்திரசாந்த மற்றும் ஆர். டீ. கொட்டாச்சி, வீர சிங்கலாமசிறி, என்.ஏ. - கே.லக்ஸ்மன், ஏ. ஜீ. பியதாச என்ற படைவீரர்களும், கணேவத்த வெதமாத்தயா என்ற பொதுமகனும் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டது.


அத்துடன் தாக்குதலுக்கு உள் ளாகிய ட்றக்கின் எஞ்சின் 100 மீற்றர் தூரத்தில் காணப்பட்டதாகவும், பலியான படைவீரர்களின் உடல்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரம் வரை சிதறுண்டு கிடந்ததாகவும் குறிப்பிட்டது.


அப்போதைய திருமலை மாவட்டப் பொறுப்பாளர் லெப் கேணல் சந்தோசம் தலைமையில் நடைபெற்ற இத்தாக்குதல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


இதேபோல குரங்குப் பாலத்தில் சிறீலங்காப் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இவன் செயற்பட்ட விதம் இவனுடன் பழகிய போராளிகளால் மறக்கப்பட முடியாததாகும். இத்தாக்குதலில் எப்படியும் தான் ஒரு ஆயுதத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற வைராக்கியம் இவனுள் எழுந்தது. சர மாரியாகப் பொழிந்து கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுக்களின் மத்தியில் காயப்பட்டுக் கிடந்த சிறீலங்காப் படை வீரனை நோக்கி இவன் ஓடிய வேகம் அவனது ஆயுதத்தை கைப்பற்றிக் கொண்டு வந்த திறமை -இவையெல்லாம் விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லாத காட்சிகளாகும்.


ஒவ்வொரு தாக்குதலின் முடிவிலும் 'கெங்கா இப்படிச் செய்தான் என்றெல்லாம் கதைத்துக் கொண்டிருக்கும் போராளிகள் 02-10-1986 இல் சாம்பல்தீவுப் பகுதியில் இடம்பெற்ற பாரிய இராணுவ முற்றுகையைப் பற்றி மட்டும் கதைப்பதில்லை. ஏனெனில் துக்கம் அவர்கள் வாயை அடைத்துக் கொள்ளும். அந்த முற்றுகையை முறியடித்துக் கொண்டு திரும்பியவர்களில் இவனும் கப்டன் றொபினும் இடம்பெறவில்லை. கணவனை இழந்த நிலையில் தனது உடலில் உயிர் ஒட்டியிருப்பது இவனுக்காகத்தான் என்றிருந்த இவனது தாய்க்கு அவள் கேட்க விரும்பாத செய்தியைச் சொன்னார்கள் போராளிகள்.



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code