யோசப் சௌந்தரநாயகம்
பரப்பாங்கண்டல், உயிலங்குளம்,
மன்னார்
வீரப்பிறப்பு::-13.03.1965
வீரச்சாவு::-14.11.1985
நிகழ்வு::-மன்னார் அடம்பன் ஆட்காட்டிவெளியில் உலங்குவானூர்தியால் தரையிறங்கிய சிறிலங்கா படையினருடன் சமரின்போது வீரச்சாவு
முற்றுகையிட முயன்ற சிங்களப்படையிடமிருந்து புலிகள் தப்பித்துக்கொண்டனர். ஆனால் மேஜர் அசோக் காயமடைந்துவிட்டான்.
இருந்ததோ இரண்டொரு றைபிள்கள்தான் எனவே துரத்திக்கொண்டு வரும் எதிரியுடன் மோதுவது அவ்வளவு சுலபம் அல்ல. மேலே வட்டமிட்டுக்கொண்டு உலங்குவானூர்தி ஒன்று சுட்டுக் கொண்டிருக்க ரவைகள், புலிகளுக்கிடையில் தரையைக் கிளறிக் கொண்டிருந்தன. காயம்பட்ட அசோக்கோடு போராளிகள் பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.
வழியில் வெளியான பகுதி ஒன்று எதிர்ப்பட்டது. உலங்குவானூர்தியின் கண்களுக்குத் தப்ப உடனடியாக அருகிலிருந்த கட்டடத்திற்குள் புகுந்து கொண்டார்கள். எதிரி மிக அண்மித்துவிட்டான். உலங்குவானூர்தியிலிருந்து துப்பாக்கி சடசடத்துக்கொண்டே இருந்தது. தொடர்ந்து அங்கே நிற்க முடியாது. அது ஒரு இக்கட்டான நிலை.
அசோக் முனகிக்கொண்டேயிருந்தான். “என்னைப் போட்டிட்டு நீங்கள் தப்புங்கோடா…” என்று முனகலுக்கிடையே கத்தினான்.
முற்றிலும் பாதகமான நிலை ஒன்று அங்கு உருவாகி வந்தது. அவ்வேளை ரொனி சொன்னான், “அண்ணை… எனக்கு இரண்டு குண்டு தாங்கோ… நான் அவங்களை திசை திருப்புறன். ஆமிக்காறரை என்னோட மினக்கெட வைக்கிறன். நீங்க அசோக் அண்ணையோட தப்புங்கோ.”
தான் தீர்மானித்தபடி ரொனி குண்டுகளை வாங்கினான்.
‘கிளிப்பு’களைக் கழற்றினான்.
அது உடன் வெடிக்காதவண்ணம் ‘லிவர்’ அமுக்கியை தன்கைகளால் இறுக அழுத்தியபடி வெளியில் வந்தான்.
இந்த நிலையில் இராணுவத்தினரின் கவனத்தைத் தன்பக்கம் திசை திருப்ப எதிர்ப்புறமாக ஓடினான்.
எதிரியின் கவனம் ரொனி பக்கம் சென்றது.
இராணுவத் துப்பாக்கிகள் இவன் சென்ற திசையை நோக்கி ரவைகளைப் பொழிந்தன. இதற்குத் தன்னையே இலக்காக்கியபடி தன்னிடமிருந்த குண்டுகளை வெடிக்க வைத்துக் கொண்டிருந்தான் ரொனி.
மறுபக்கத்தால் வெளியேறிய தோழர்கள் வயல் வரப்புக்களுக்கூடாக அசோக்கையும் இழுத்துக் கொண்டு ஊர்ந்து கொண்டிருந்தார்கள்.
காயம்பட்ட அசோக்குடன் மற்றையவர்கள் மீண்டு விட்டார்கள்.
சகதோழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற இலட்சிய வீறுடன், ரொனி தன்னையே அர்ப்பணித்துவிட்டான்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்