Ad Code

Recent Posts

லெப்.கேணல் அகிலாவின் வீர வரலாற்று நினைவுகள்

லெப்.கேணல் அகிலா
 

சோமசுந்தரம் சத்தியாதேவி 

கோப்பாய், யாழ்ப்பாணம் 

வீரப்பிறப்பு: 25.12.1969

வீரச்சாவு: 30.10.1995


எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது.


அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை, எமது தேசத்தைக் கடந்து பறந்து போன பெருமை….. அவரது தனித்துவமான இடம் நிரப்பப்பட முடியாததுதான்.


எப்போதுமே காற்சப்பாத்துக்களைக் கழற்றியறியாத கால்கள், நடந்துவரும் போது தனியானதொரு கம்பீரம் நடையிற் தெரியும். அந்த மெல்லிய உருவத்தின் வல்லமை, அதைவிட உறுதியின் வலிமை, எல்லாவற்றிலுமே முன்னுதாரணமான போராளி.


அகிலாக்கா எல்லாப் போராளிகளையும் தொட்டுச்சென்ற அவரது நினைவுகள். இழப்பை நெஞ்சம் ஏற்க மறுக்கும் பெயர் கூற முடியாத சாதனைகளுக்குள்ளும், இன்னும் ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கிப்போன உண்மைகளுக்குள்ளும் அவர் ஆற்றிய பங்கு, அவரது உழைப்பு….. இவை அவரை இனங்காட்ட முடியாத பக்கங்கள். எழுத்திலே வடிக்க முடியாத வரலாற்று நிகழ்வுகள்.


அவர் இயக்கத்துக்கென சேவையாற்ற புறப்பட்ட காலங்கள் மிக நெருக்கடியானவை. போராட்ட உத்வேகம் கொண்ட பெண்களணி ஒன்று, தங்கள் தங்கள் குடும்பங்களுக்குள்ளே போராட்டம் நடத்தி வெளியே வந்து இந்தத் தேசத்துக்காய் தம்மை அர்ப்பணிக்கத் தொடங்கியது. லெப்.கேணல் திலீபனினால் உருவாக்கப்பட்ட ‘சுதந்திரப் பறவைகள்’ அணிக்குள் அவர்கள் ஒன்று திரண்டனர். இருண்மைச் சக்திக்குள் உறங்கிக் கிடந்த மனங்களைத் தட்டியெழுப்ப அவர்கள் அல்லும் பகலும் பாடுபட்டனர். அந்த அணிக்குள் அகிலாவும் தன்னை இணைத்துக் கொண்டார். அன்று தொட்டு இன்றுவரை தனது செயல்களினால் மட்டும் தன்னை இனங்காட்டி வந்தார்.


அவரது துப்பாக்கியிலிருந்து புறப்படும் ரவைகள் எப்போதுமே இலக்குத் தவறியதில்லை. பெயர் சொல்லக் கூடிய இலக்காளர். அந்த இலக்குத் தவறாத தன்மை அவரது போராட்ட வாழ்வின் எல்லாப் பக்கங்களிலும் ஊடுருவியிருந்தது. எந்த வேலையாயினும் செய்து முடிக்கின்ற வரையில் அவரது அயராத உழைப்பு, செய்து முடிக்க வேண்டும் என்ற ஓர்மம் அவரிடம் தனித்துவமாக விளங்கியது.


எல்லாவற்றையும் விட அவரிடமிருந்த பிரச்சனைகளை அணுகின்ற முறை வித்தியாசமானது. இந்த வேலையை எப்படிச் செய்வது? குறித்த நாட்களுக்குள் செய்து முடிக்க முடியுமா? யோசித்து யோசித்து மண்டையைப் போட்டுக் குழப்பிப் போய் அவர் முன்னாள் நின்றால், இவ்வளவு நேரமும் இதற்காக போய் நின்றோம் என்ற மாதிரி செய்கின்ற வேலை இலகுவானதாகிவிடும். 


ஒவ்வொரு போராளியையும் சுயமாக வளர்த்தெடுப்பதில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் செயலாற்றலும்…….. எங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் அவரை ஆழ இருத்தி விட்டது. எந்த வேலையாக ஓடி அலைந்து திரிந்தாலும் நித்திரையின்றிய இரவுகளைச் சந்தித்தாலும் தானே நேரம் ஒதுக்கி, போராளிகளுக்கு கல்வியூட்டிய அந்த நாட்கள்………. எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்ற அவரது கொள்கை செயலுருப்பெற்றபோது, முகாமில் அனேகமான போராளிகள் இயந்திரங்களைத் திருத்துவதிலிருந்து எவ்வாறு சுவையாகச் சமைப்பது என்பது வரை கற்றிருந்தனர்.


அவருக்குரிய வரலாற்றின் முகவுரைக்கு எடுத்துக் கொண்ட சில வரிகள் இவை. இந்த அறிமுகத்துக்குரிய லெப்.கேணல் அகிலாவின் கடைசி மூச்சு 30.10.1995ல் சூரியக்கதிர் படர்ந்த காலைப்பொழுதோடு கலந்து போனது. வலிகாமத்தின் மிகப்பெரிய சமருக்குள் ஊரெழுவின் சிவப்பு மண்ணுக்குள் குருதிதோய எங்கள் அகிலாக்கா கலந்து போனார்.


நெஞ்சை விட்டகலாத நினைவுகளிலிருந்து.!

வெளியீடு :களத்தில் (12.06.1996) இதழ் 


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code