Ad Code

Recent Posts

07.02.2003 கடற்கரும்புலிகள் லெப்.கேணல் சுதன், மேஜர் பொதிகைத்தேவன், மேஜர் அன்பன் வீரவணக்க நாள். கடலில் நடந்த சம்பவம்

சமாதான உடன்படிக்கை காலத்தில் 07.02.2003 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின் நீதியற்ற செயலினாலும் தங்களை தாங்களே இருப்புடன் அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் சுதன் (ஆற்றலோன்), கடற்கரும்புலி மேஜர் பொதிகைத்தேவன், கடற்கரும்புலி மேஜர் அன்பன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.


கடற்கரும்புலி 

மேஐர் பொதிகைத்தேவன் 

சிவஞானசுந்தரமூர்த்தி தயாபரன்

பருத்தித்துறை யாழ்ப்பாணம் 

வீரப்பிறப்பு:16.10.1980

வீரச்சாவு: 07.02.2003



கடற்கரும்புலி

மேஐர் அன்பன் 

இராசையா குகதாஸ் 

அரியாலை யாழ்ப்பாணம் 

வீரப்பிறப்பு: 26.01.1981 

வீரச்சாவு: 07.02.2003



கடற்கரும்புலி 

லெப்.கேணல் ஆற்றலோன் (சுதன்)

கிருஸ்ணசாமி சதீஸ்வரன் 

சாவகச்சேரி யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு:23.03.1979

வீரச்சாவு: 07.02.2003


அலைகடலில் ஓர் நாள்…


தமிழீழத்தின் மன்னார் மாவட்டம் ஓர் மாலைப் பொழுது அந்த மீனவர்களும் தங்களது அடுத்த நாள் தொழிலுக்கு உரியவற்றை சரி செய்தாலும், சில மீன்பிடி வள்ளங்கள் புறப்படுவதும், சில மீனவர்கள் சிறிலங்கா கடற்படைக் கடலில் விளைத்த கொடுமைகளைப் பேசுவதும், சிறுவர்கள் ஓடி விளையாடுவதுமாக தாய்மார்கள் கூடியிருந்து கதைப்பதுமாக , இரை தேடச் சென்ற பறவைகள் கடலிலிருந்து கரைநோக்கிப் பறந்து வருவது, ஆலயமணிகள் ஒலிப்பதுமாக வழமைபோல் ஈழத்தின் கடற்கரை மாலைக்காட்சி இருந்தது.


அப்போது சிறு சந்தோஷக் கூக்குரல் சத்தங்களுடன் ஓர் படகு கடலில் புறப்படுகிறது. அது ஓர் மீன்பிடி வள்ளம் (றோலர்) அது செலுத்துவது மீனவர்கள் இல்லை அதை செலுத்திச் செல்வது சில கடற்புலி, கடற்கரும்புலிப் போராளிகள்.


எங்கே செல்கிறார்கள்?


என்றுமே ஓய்வறியாத நாளும் விடியலை சுவாசிக்கும் இதயங்கள் போராளிகள். அதில் பயிற்சி தம்மை வருத்தி தேர்சி பெறுவார்கள், அப்படி எத்தனையோ காவியங்கள் தரையிலும் – கடலிலும் புரிந்து இன்று வரலாறாக, சரித்திரமாக நிலைத்துள்ளார்கள் ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள். சில பயிற்சிகளுக்காக, சில தேவைகளுக்கும் மீன்பிடி வள்ளங்கள், பெரிய படகு போல் போராளிகளாலே வடிவமைத்து பயிற்சிக்கும் சில தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அப்படியாக அன்று…..!


சில போராளிகள் படகை எடுத்து பயிற்சிக்கு சென்றார்கள்.


ஆயினும் இவர்கள் இயற்கையின் சீற்றத்தையும் மீறி படகைச் செலுத்திக் கொண்டிருக்கையில் கடலின் அலையின் வேகம் சற்று அதிகமானதால் படகும் கடல் வீச்சை மீறி இயங்க மறுக்க இயந்திரக் கோளாறால் படகு செல்லாமல் கடல் அலையினால் தள்ளப்பட்டு செல்கிறது. படகில் இருக்கும் தொலைத் தொடர்பில் நிலைமை கரையில் உள்ள நிலையத்திற்கு அறிவிக்கப்படுகிறது.


உடனே நாச்சிக்குடாவிலிருந்து கட்டி இழுக்க படகு சென்று கட்டி இழுக்கும் தருணம், எங்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து எதிரியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் நன்றாக படகு சென்றுவிட்டது.


யாரும் கடலில் நின்று எதையும் நிர்ணயிக்க முடியாது காரணம் கடல் எந்த நேரமும் எமக்கு சாதகமாக இராது அடிக்கடி மாற்றம் கொள்ளும், அதை விட எதிரியின் ரோந்தும் கூடிய இடம் எந்த நேரங்கள் என்று கணிப்பதற்கும் இல்லை. எதிரிகள் தாக்கினாலும் எதிர்த்துச் சண்டை செய்ய போராளிகளின் வள்ளத்தில் எந்த ஆயுதமும் இல்லை. அவர்கள் சென்றது மீன்பிடிக்க மற்றும் அந்தச் சூழ்நிலை சமாதான காலம் என்றாலும் போராளிகள் போர் விதிகளை மீறியவர்கள் இல்லை.


பரந்த கடல்வெளியில் இவர்களும் பயணித்தார்கள் ஆனால் படகு எதிரியின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் நுழைகிறது. காற்றும் கடலும் அதிகமானதால் படகை செலுத்துவதும் கடினம் காற்றையும் கடலின் எதிர் வீச்சையும் மீறி மனித வலுவால் படகை செலுத்துவது என்பது இயலாத காரியம்.


போராளிகளை மீட்பதற்கு எம்மவர்கள் சில முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் அது பலனளிக்கவில்லை. சில சாதகமற்ற சூழ்நிலையால் (கடல் இயற்கை சாதகமின்மை) படகும் மன்னார் மாவட்டம் தாண்டி யாழ் மாவட்டம் நெடுந்தீவின் மேற்குப் பக்கத்திற்குச் சென்றுவிட்டது.


அப்போது திடிரென எதிரியின் படகின் கண்காணிப்புக் கருவியில் போராளிகளின் படகு தெரிந்திருக்க வேண்டும். எதிரியின் படகுகள் போராளிகளைச் சூற்றி வளைக்கிறது. எதிரி போராளிகளின் படகை நெருங்க பயந்தான். அவன் படகைச் சோதனை இட வேண்டும் என்றான். அதற்கு போராளிகள் பகைவனின் சூழ்ச்சி அறிந்து அனுமதிக்கவில்லை.


அவன் கூறியது ‘நாங்கள் ….. உங்க படகை சோதனை செய்ய வேண்டும் நீங்கள் எல்லாம் எங்கள் படகில் ஏறவும் என…’


போராளிகள் உண்மை நிலவரத்தை கூறினார்கள். எதிரியோ அவர்களது நியாயத்தைக் கேட்கவேயில்லை. இப்படியாக கடலில் பேச்சுக்கள் நடைபெற்ற தருணம் நேரமும் கடந்து சென்றது.


போராளிகளிடம் ஆயுதம் இருக்கவில்லை, அதைவிட சமாதான காலம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஆயிரம் ஆயிரம் போராளிகள் அரசியல் பணி புரிந்து இருந்த காலம் அது.


அப்போது போராளிகள் கரையில் இவர்களின் வரவை எதிர்பாத்து காத்திருந்தனர். ஆயினும் சில போராளிகளின் வசனங்கள் கடலில் இருந்த போராளிகள் சுதன், பொதிகைத்தேவன், அன்பன் பற்றியே அவன் நல்ல சண்டைக்காரன், அவன் ஏதாவது எதிரிக்கு தகுந்த பாடம் புகட்டுவான், கோபக்காரன் என்றைக்கும் பணியமாட்டான் இப்படியாக அவர்களின் சக தோழ – தோழியரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன. அது ஓர் போர்க்காலம் இல்லை. சமாதான காலத்தில் போராளிகளுக்கு இப்படியா என்பதை எந்த மனமும் ஏற்பதற்கு இல்லை.


கடலிலே….. பகைவன் போராளிகளை சரணடையவும் என்றான். சற்று வானம் வெளுக்கத் தொடங்கியது அது விடிசாமம் 3 மணி இருக்கும். அப்போது போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு பகைவனின் படகில் இருந்து தங்கள் கொடியின் சமிக்கையுடன் போராளிகளை நெருங்கி வந்தார்கள். போராளிகள் கண்காணிப்புக் குழுவிற்கு மதிப்பளித்து அவர்களை சோதனை இட அனுமதித்தார்கள் ஆயினும் இத் தருணத்திலும் பகைவனிற்கு பயம் போராளிகள் படகில் ஏற.


போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஏறும் முன் அப்போது பகைவன் ஓர் சூழ்ச்சி செய்தான் படகை கரையில் கொண்டு வந்து தான் சோதனையிடலாம் என அதற்கு கண்காணிப்புக் குழுவும் தலையை அசைத்தது போலும் கரையை அதாவது இராணுவக் கட்டுபாட்டுப் பிரதேசத்திற்குள் போராளிகளின் படகை கட்டி இழுத்துச் செல்ல முற்பட்ட வேளை அதற்கு போராளிகள் மறுத்தார்கள்.


எதிரியின் துப்பாக்கிகள் யாவும் போராளிகளின் படகை நோக்கிக் குறிபார்த்து மிரட்டினார்கள். ஆயினும் அதிலிருக்கும் வேங்கைகள் கரும்புலிகள் என யாரும் அறியவில்லையே!!!


போராளிகள் சிரித்தார்கள் ஆயுதம் இன்றியும் கடற்படையுடன் வாதாடினார்கள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் வேடிக்கை பார்த்தது ஏனோ தெரியவில்லை.?


அப்போது நிலைமையை கரையில் உள்ள நிலையத்திற்கு அறிவித்தார்கள். ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் அந்த செய்தியை கேட்டவருக்கு ஓர் கணம் யோசிக்க வைத்தது. இது சமாதான காலமா..?


அவர்கள் தொலைதொடர்பில் கூறியது …


இதுதான்……….நிலைமை


நாம் கேட்பதை அவர்கள் கேட்கவில்லை……..


நாங்கள் சரணடையமாட்டோம்,


எதிரி போராளிகளின் படகை கரைக்கு கொண்டு செல்ல முனைகிறான். ஆயுதங்களை போராளிகளின் படகை நோக்கிய வண்ணம் குறிவைத்தபடி நெருங்கினான். அப்போது கடலில் எதிரியும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் எதிர்பார்க்கா விடயம்.


படகை கடற்கரும்புலிகள் எரிபொருள் ஊற்றி எரித்தார்கள் அந்த நெருப்பின் நடுவில் 3கருவேங்கைகள் தீயில் சங்கமித்தார்கள். அந்த ஒளி நெடுந்தீவுக் கரை முழுமையாக நிறைத்ததை ஓர் சிலரைத் தவிர வேறு யாரும் அறியவில்லை. மறுநாள் தான் தெரியும் தங்கள் கடலில் 3முத்துக்கள் மூழ்கிவிட்டார்கள் என்பது.


எதிரியையும் நிச்சயமாகக் கண் கலங்க வைத்து அந்த கரிய வேங்கைகள் கடலிலே காவியமாகியிருந்தார்கள். நாளும் ஈழத்தின் கடலில் நிம்மதியாக மக்கள் சென்று வர அவர்களின் வாழ்விற்காக நாளும் தம்மை உருக்கி வருத்தி வளர்ந்த வேங்கைகள் இன்று அந்தக் கடல்த்தாய் மடியில் காற்றுடன் கலந்து போனார்கள்.


பொதிகைத்தேவனின் உடையில் இன்றும் உள்ளது அவனின் மூச்சு அவனின் ஆடைகளைப் பார்க்கையிலே என் மனம் ஓர் பாடல் வரியைத்தான் நினைவில் கொள்ளும்.


சிரிப்புமலர் பூத்திருந்த முகங்கள் எங்கு போச்சு

சேர்த்து வைத்த உடைகளிலும் இருக்கு உங்கள் மூச்சு

ஆழக்கடல் மடியினிலும் அன்பின் அலை பாயும்

ஐந்து பெரும் ஒன்றாய் இருந்த நினைவு………..

நீங்கள் விதைத்த தடத்தில் கடலிலே காவியங்கள் தொடரும் வீரரே..!


– இசைவழுதி


இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code