இறுதியாக 25.09.92அன்று, பூநகரியில் பள்ளிக்குடா படைமுகாம் மீதான தாக்குதலில், இரண்டு சிறீலங்கா இராணுவ மினிமுகாங்கள், 62 காவலரண்களை தகர்த்தெறிந்த வீரப்போரில் லெப். கேணல் சுபனும், மேலும் 5 போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
1983ல் திருநெல்வேலித் தாக்குதலுடன் பல இளைஞர்கள் படிப்டியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு போராளிகளாக மாறிக்கொண்டிருந்தனர். படையினரும் அரசும் தமிழீழ மக்களின் உரிமைகள் அத்தனையையும் ஒவ்வொன்றாகப் பறித்தன. தமிழீழத்தின் அத்தனை சாலைகளிலும் படையினர் கால் பதித்துக் கொண்டிருந்தது, இவர்களைக் கண்டு நெஞ்சு கொதித் தெழுந்தவர்களில் ஒருவராய் சுபன் (சுந்தரலிங்கம்) 1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
'சுபன்' தமிழீழத்தில், மன்னார் மாவட்டத்தில், கள்ளியடி என்னும் ஊரில் 1965ம் ஆண்டு, ஆடித் திங்கள் 21ம் நாள் பிறந்தார். விநாசித்தம்பிக்கும், மகிளம்மாவிற்கும் அன்பு மகனாக, பன்னிரண்டு சகோதரரிடையே இவர் பிறந்தார். கள்ளியடியில் தனது கல்வியைத் தொடங்கி, பின் அயல் ஊரில் உள்ள மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
இவருக்கு பெற்றோர் இட்டபெயர், சுந்தரலிங்கம். அன்பொழுக அழைக்கும் பெயர் மணியம். விடுதலை வீரனாய், விடுதலைப் புலிகளின் முகாமில் அவர் பெற்ற பெயர் சுபன்.
1984ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில், ஆயுதப் போராளியாக தன்னை இணைத்துக்கொண்ட சுபன், இந்தியாவில் தனது ஆயுதப் பயிற்சியையும், பின்னர் சிறப்புக் கொமாண்டோப் பயிற்சியையும் முடித்து, தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலனாக கடமையாற்றினார். பின்னர் களத்தில் போரிடுவதற்காய் தமிழீழம் வந்தார்.
தனது சொந்த இடமான மன்னாரிலேயே அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியான விக்டருடன் தோளோடு தோள் நின்று போராடினார். அமைதிக் கொடியேற்றிவந்த இந்திய படையினருடன் கடுமையான போராட்டம் நடாத்த வேண்டியிருந்த காலத்தில் மிகவும் திறமையாகப் போராடி பல களங்களில் வெற்றிவாகை சூடி 1989ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பல தாக்குதல்களில் பங்கு கொண்ட சுபன் சிலாபத்துறை முகாம் தாக்குதலிலும், மன்னர் பழைய பாலத்தில் நடந்த தாக்குதல்களிலும், கஜவத்தை படைமுகாம் தகர்த்த தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்ததுடன் இரண்டு மினி முகாம்களையும், 62 காவலரண்களையும் தகர்த்து பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட மன்னார் பூநகரி தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
0 கருத்துகள்