கணேசசுந்தரம் சிறிதுளசி
அரசடி வீதி
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 13.08.1969
வீரச்சாவு: 14.06.1991
நிகழ்வு: செட்டிகுளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
தனது RPG யைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு நிமிர்ந்தவாறு காட்டுப்பாதையால் நடக்கின்றாள். முன்னாலும் பல பெண் போராளிகள்...பின்னாலும் பல பெண் போராளிகள் நீண்ட வரிசையில் அமைதியாக எங்கள் பயணம் தொடர்கிறது. காடு கூட, தன் இலைகள் சலசலத்தால் இவளையும் ஏனையோரையும் எதிரி உணர்ந்து விடுவான் என்று எண்ணியதால்தான் அமைதியாக இருக்கிறது போலிருக்கிறது.
ஒவ்வொரு போராளியினதும் முகத்தை உற்றுப் பார்க்கிறேன். எல்லாருடைய முகத்திலுமே எதிரியைத் தேடிப் பிடித்து அழிக்கும் ஆவலே தெரிந்தது. ஜீவமலரையும் பார்த்தேன். 'இந்த முறை வவுனியாவிலிருந்து சிங்கள இராணுவத்தை விரட்டி விடுவோம்' என்பதுபோல் நடந்து கொண்டிருந்தாள்.
ஜீவமலர் ஒரு சிறந்த பாடகி. "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே" இதுதான் அநேகமாக அவள்பாடுவது. எந்த நேரமுமே நகைச் சுவைப் பேச்சும் பாட்டுமாகத்தான் இருப்பாள், சினிமாப் பாடல் பாடுமாறு நாம் கேட்டபோது. சினிமாப்பாடல் கேட்கக் கூடாது, பாடக் கூடாது என்ற எமது இயக்க ஒழுங்குகளுக்கேற்ப மறுத்து விட்டாள். யாருடனும் இவள் சீறிச் சினப்பதில்லை. இவளது பயிற்சிப் பாசறையில் நன்றாகச் குறி பார்த்துச் சுடுபவர்களுள் இவளும் ஒருத்தி. 'என் பிள்ளைகள் வளர வேண்டும். நன்றாகப் பயிற்சி எடுக்க வேண்டும். நன்றாக எதிரியுடன் மோத வேண்டும். வெல்ல வேண்டும் என்று எங்கள் தலைவர் எங்களைப் பற்றிக் காணும் கனவுகளையெல்லாம் நனவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவள்.
காட்டுக்குள் நகர்ந்து நாங்கள் எல்லோருமே ஒரு நிலை எடுத்து 7 நாட்களாகி விட்டன. இராணுவ நடமாட்டம் எதையுமே காணோம். 8 ஆம் நாள் பூவரசங்குளப் பிரதேச மக்கள் கையில் கிடைத்த உடைமைகளுடன் சாரிசாரியாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பலர், படுபாவிகள் வாறாங்களாம்'', என்று ஏசியவாறு போய்க் கொண்டிருந்தார்கள். இராணுவத்தினர் நகர்கிறார்கள் என்பதை மக்கள் மூலம் அறிந்து கொண்ட நாங்கள், எங்கள் ஒவ்வொருவருக்கு முரிய இடங்களில் நிலை எடுத்தவாறு எதிரி வரவை எதிர் நோக்கிக் காத்திருந்தோம்
பயிற்சி முடிந்தகையுடனேயே கனரக ஆயு தம் தரப்பட்டதில் ஜீவமலருக்கு ஒரே சந்தோஷம். குழந்தையைப் போல் RPG யைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு கம்பீரமாகப் பாடிப் பாடி நடப்பதைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும்.
ஜீவமலரின் அப்பா கோயில்களில் பிரசங்கம் செய்பவர். அண்ணன் மிருதங்க வித்துவான். கலைக் குடும்பத்தில் பிறந்த ஜீவமலர் ஒரு நல்ல பாடகியாக இருப்பதில் எமக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை.
சில நிமிட நேரத்தில் வீதியால் ஒரு பெரிய மாட்டுக் கூட்டம் வந்து கொண்டிருந்தது, மாடு தானே என்று நாங்கள் அலட்சியமாக இருந்தாலும், பின்னர் சிறு சந்தேகம் ஏற்பட்டது, இராணுவத்தினர்தான் மறைந்து வருகிறார்களோ என்று அறிவதற்காக ஜீவமலர். ஒரு கல்லை எடுத்து மாட்டுக் கூட்டத்துக்குள் எறிந்தாள், மாடுகள் வெருண்டு, கலைந்து ஓடத் தொடங்கின. மறைவதற்கு எதுவுமில்லாமல் நின்ற இராணுவத்தினரை நோக்கி எமது குழு சுட ஆரம்பித்தது. மோதல் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இராணுவத்தினருக்கு உதவியாக வந்த கவச வாகனங்களை நோக்கி ஜீவமலர் தனது RPG யை இயக்கினாள். கவச வாகனங்களில் ஒன்று அவளது தாக்குதலால் தகர்க்கப்பட்டது, எதிர்பாராத இந்தத் தாக்குதலினால் எதிரி நிலை குலைந்து ஓடினான். சிலர் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தார்கள்.
எமது போராளிகளுள் காயப்பட்ட ஒருவரைத் தூக்கிக் கொண்டு, பாதுகாப்பான இடம் நோக்கிப் பின் வாங்கிக் கொண்டிருந்தாள் ஜீவமலர். காயமடைந்த அந்தப் போராளியை உரிய இடத்தில் ஒப்படைத்து விட்டு, மீண்டும் விரைவாகத் தன் நிலைக்குத் திரும்பி தன் RPGயால் முழு இராணுவத்தினரையும் அழிக்க வேண்டும் என்று சொல்லி சொல்லிக் கொண்டே வந்தாள்.
மீண்டும் எங்கள் நிலையை நோக்கி முன்னேறிச் செல்லுகையில் எதிரி எம்மீது ஷெல் தாக்குதலை ஆரம்பித்தான். நாங்கள் ஷெல்லுக்குப் பாதுகாப்பாக எம்மை மறைத்தவாறு முன்னேறிச் செல்லுகையில் ஜீவமலர் ஷெல்லால் தாக்கப்பட்டுக் கீழே விழுந்தாள்.
இம்முறை அவளை நான் தூக்கிக் கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கிப் பின் வாங்கிக் கொண்டிருந்தேன். ஜீவமலரை உரிய இடத்தில் ஒப்படைத்து விட்டு மீண்டும் முன்னே என் நிலைக்குச் சென்று எதிரியை விரட்டும் ஆவலுடன் விரைந்தேன். ஆனால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை.
0 கருத்துகள்