கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன்
வேலுப்பிள்ளை ராசன்
கல்வியங்காடு, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 06.05.1971
வீரச்சாவு: 26.06.2000
நிகழ்வு: 26.06.2000 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் யாழ் குடாநாட்டு சிறிலங்கா படையினருக்கான ஆயுத – தளபாட வெடிமருந்து ஏற்றிச் சென்ற ‘உகண’ விநியோகக் கப்பல் முழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவு
யாழ். குடாவில் நிலை கொண்டிருக்கும் படையினருக்குத் தேவையான ஆயுதங்கள் வெடிபொருட்களுடன் காங்கேசன்துறைத் துறைமுகம் நோக்கி டோறா பீரங்கிப் படகுகளின் வழித்துணையுடன் சென்ற “உகண” கப்பல் 26.06.2000ம் அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்குதல் தொடுக்கப்பட்டது.
சுமார் எட்டு மணிநேரம் இடம்பெற்ற கடும் சமரின் நடுவே தமது வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட படகுகளால் குறித்த கப்பலை கடற்கரும்புலிகள் தகர்த்து மூழ்கடித்தனர். இதன்போது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும் கடுமையாகச் சேதமடைந்தது.
இத்தாக்குதலின்போது ஆறு கடற்கரும்புலிகள் தமது இன்னுயிர்களை ஈர்ந்து கடலன்னை மடியில் வீரகாவியமாகினர்.
எந்த இறுக்கமான கடற்சண்டையாக இருந்தாலும் சரி, நடவடிக்கைப் படியாக இருந்தாலும் சரி, பழுதடையும் இயந்திரங்களை இலகுவாக சீர் செய்து கொண்டு அந்த இடத்துக்கு விரையும் நல்லப்பன் மற்றவர்களால் மதிக்கப்படும் சிறந்த இயந்திரப் பொறியியலாளன்.
இயந்திரம் சீர்செய்யும் களத்தில் இவனது பணி ஆழமானது. திருத்த முடியாது என கைவிடப்படும் இயந்திரங்களை எல்லாம் தன் பெரு முயற்சிகளினால் சீர் செய்துவிடும் நல்ல தற்துணிவு இவனிடத்தில் இருந்தது.
அமைதியான அவனது சுபாவம். தானும் தனது வேலையென ஒதுங்கிப்போகும் பக்குவம் எல்லோரையும் இவனிடத்தில் ஈர்க்கவைத்தது.
படகோட்டியாக, தொலைத்தொடர்பாளனாக, சகல ஆயுதங்களையும் இயக்கி சண்டை செய்யக்கூடிய வல்லமை பெற்றிருந்த நல்லப்பன் பல கடற்சமர்களில் பங்கெடுத்தான்.
கடற்கரும்புலிகள் அணியில் இணைந்திருந்த நல்லப்பன், ஆழகடலேங்கும் விடுதலைக்கு பலம் சேர்க்கும் பணியிலும் தனது கடமையைச் செய்திருந்தான்.
இவ்வாறாக விடுதலைக்காக உழைத்த நல்லப்பன். எதிரியின் உகண கப்பல் தகர்ப்பில் வீரவரலாறு படைத்தான்.
0 கருத்துகள்