Ad Code

Recent Posts

லெப்டினன்ட் சுயந்தன் வீர வரலாற்று நினைவுகள்

லெப்டினன்ட் சுயந்தன் 

பழனியாண்டி சங்கர் 

இராமனூர், புளியங்குளம், 

வவுனியா

வீரப்பிறப்பு: 19.05.1977 

வீரச்சாவு: 24.06.1997 


நிகழ்வு: வவுனியா பெரியமடுவில் அமைந்திருந்த ஜெயசிக்குறு படையினரின் ஆட்லறி - மோட்டார் ஏவுதளங்கள் மற்றும் காப்பரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு


09.01.1997 நடுநிசியைத் தாண்டிய அதிகாலைவேளை. ஆனையிறவு, பரந்தன் கூட்டுப்படைத் தளத்தினூடாகப் புலிகளின் அணிகள் நகர்ந்துகொண்டிருந்தன. அந்தத் தளத்தின் அமைவிடம் வலிந்த ஒரு தாக்குதலுக்குச் சாதகமற்ற பௌதீகச் சூழலைக்கொண்டிருந்தது. தரவைகள், உப்பு வெளிகள், சிறிய-சிறிய உவர்நீர் நிலைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது அந்தச் சூழல். எனினும், முகாமின் முக்கியத்துவத்தை உணர்ந்த போராளிகள் அனைவரும் கண்களில் ஒரு வெறியுடனும், எங்கள் மண்ணை ஆக்கிரமித்தவனை அழிக்கவேண்டுமென்ற மனவுறுதியுடனும் நீரற்ற அந்த உப்பு வெளிகளினூடாக ஊர்ந்து கொண்டிருந்தனர். 


அது ஒரு நீண்ட நகர்வு விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றிலேயே ஒரு வலிந்த தாக்குதலுக்காகச் சண்டையை எதிர்பார்த்து எமது படையணிகள் நகர்ந்த நீண்ட நகர்வுகளில் அது குறிப்பிடத்தக்கது. எங்காவது எதிரியால் அவதானிக்கப்பட்டால் அங்கே நகர்ந்துகொண்டிருக்கும் அத்தனை போராளிகளின் உயிர்களும் கேள்விக் குறியாகிவிடும்.


அங்கே நகர்ந்துகொண்டிருந்த அணிகளில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ஓர் அணியும் அடங்கியிருந்தது. முகாமின் ஒரு முக்கிய பகுதியைக் கைப்பற்றும் பணி அவர்களுக்குரியது. அவர்களின் அன்றைய சிக்கலான பணியில் எமக்குக் கிடைக்கப்போகும் வெற்றியின் ஒரு கணிசமான பகுதி தங்கிநிற்கிறது.


சாள்ஸ் அன்ரனி சண்டை தொடங்கிவிட்டது. படையணியும் அவர்களுக்குரிய பாதைவழியாகச் சண்டையைத் தொடங்கியது. முட்கம்பி வேலிகளை 'டோப்பிட்டோ’ குண்டுகள் தகர்க்க, அணி ஒவ்வொரு தடையாகத் தாண்டி நகர்ந்துகொண்டிருந்தது. எதிரியின் இயந்திரத்துப்பாக்கிகள் அவர்களை நோக்கிச் சடசடக்க் அப்போதுதான் அந்தப் பாதையில் உள்ள பிரச்சினை அவர்களுக்குத் தெரிந்தது.


ஆம். எமது வேவுத் தரவின்படி அங்கேயிருந்த முட்கம்பிச் சுருள் தடைகளைவிட புதிதாக இன்னுமொரு முட்கம்பிச் சுருள் தடையை எதிரி அமைத்திருந்தான். ஒவ்வொரு நொடியும் சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஓர் இக்கட்டான நேரம். நாம் அந்தத் தடையைத் தகர்த்து உள்நுழையாவிட்டால் எதிரி தன்னைத் தயார்படுத்தக்கூடும். பின்னர் அந்தப் பகுதியைக் கைப்பற்றுவது இயலாமற்கூடப் போய்விடும். புதிதாகத் தடையை உடைக்க 'டோப்பிட்டோ'வும் கைவசம் இல்லை. மாற்று வழிகளைப் பரிசீலிக்கக்கூட நேரம் இல்லாத ஓர் இக்கட்டான சூழல். முட்கம்பியை வெட்டச்சென்ற எங்கள் தோழனும் அரைவாசிக் கம்பிகளை வெட்டிய நிலையில் எதிரியின் ரவைபட்டு வீழ்ந்துவிட்டான். 


எதிரி அந்த இடத்தில் முட்கம்பிகள் வெட்டப்படாமல் இருப்பதையும் நாம் அவற்றை வெட்ட முயல்வதையும் கண்டு விட்டான். அவன் தன் முழுச் சூட்டுவலுவையும் இப்போது அங்கே மையங்கொள்ளவைத்தான். அது வார்த்தைகளின் வர்ணணைக்கு அப்பாற்பட்ட இறுக்கமானசூழல். அன்றைய சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஓர் அணி தடையை உடைக்கமுடியாமல் நிற்க, தனியொருவனாகச் சுயாந்தன் நிலைமையை மாற்றி அமைத்தான்.


அந்தத் தடையை அகற்றவேண்டிய தேவையை அவன் உணர்ந்தான். அன்றைய சண்டையின் முடிவு கண்களிற்பட அவன் உறுதியான முடிவெடுத்தான். ஓடிச்சென்று முட்கம்பிச் சுருளின்மீது பாய்ந்தான், நசுங்கிய கம்பியின் மேல் அவன் கிடக்க, அவன் அமைத்துத் தந்த அந்த உயிர்த்துடிப்பான பாதையின் வழியாக இலக்கை நோக்கி நகர்ந்தனர் தோழர்கள்.


அவனது அணி தனக்குக் கொடுக்கப்பட்ட எதிரிப் பகுதியைப் பிடித்துக்கொண்டு முன்னேறியது. எதிரியின் சூட்டில் விழவேண்டியவர்களாய் இருந்த அவனது தோழர்கள் எதிரியை வீழ்த்திக்கொண்டு முன்னேறினர். தாக்குதலின் முடிவில் நூற்றுக்கணக்கான எதிரிகளை வீழ்த்தினர். எதிரியின் பீரங்கிகளை அழித்தனர். அந்த வெற்றிக்கு வழிசமைப்பதற்காகத் தன் உடலால் வழி சமைத்தவன் சுயாந்தன். உடலின் உயிரணுக்கள் ஒவ்வொன்றும் வேதனையால் துடிக்க அத்தனை வேதனையையும் தாங்கிக்கொண்டு தான் நேசித்த மக்களின் வாழ்விற்காக முட்கம்பித் தடையின் மீது பாய்ந்து தன் தோழர்களுக்கு வழிசமைத்துக்கொடுத்தது அவனது வீரம்.


தலைவரவர்களின் 'எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது' என்ற கூற்றுப்படி தனது நெஞ்சுரத்தால் அன்றைய சண்டையை மாற்றியமைத்தவன் பின் 'ஜயசிக்குறுய்' சமரில் வித்தாகிப்போனான். இவன்போன்ற போராளிகளின் தியாகங்களே இன்றும் வழித்தடங்களாக எமக்கு வழிகாட்டி நிற்கின்றன.



-நெருப்பு நீச்சலில் பத்தாண்டுகள் நூல் 

நன்றி தமிழீழ ஆவணக்காப்பகம் 


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code