யூலியஸ் வின்சன்கெனடி
தமிழீழம்: மன்னார் மாவட்டம்
தாய் மடியில்: 08.09.1970
தாயக மடியில்: 09.06.1992
சிறுநாவற்குளம் படைமுகாமிலிருந்து 300 யார் தூரத்திலுள்ள பிரதான வீதிச்சந்தி.
எப்போதும் இராணுவத்தினரின் அணி ஒன்று அங்கு காவலுக்காகப் பதுங்கி இருப்பது வழமை.
முன்னிலையில் ஒரு ஏ.கே. எல். எம்ஜியைக் கொண்டதாக, எந்த நேரமும் இரை தேடியபடி அந்த அணி காத்திருக்கும்.
இந்த இராணுவ அணியை வளைத்துத்தாக்கி அழித்துவிடுவதற்கு முடிவுசெய்யப்பட்டது.
வேவுபார்த்து திட்டமும் தயாரிக்கப்பட்டது. ரவிசங்கர் இந்த முயற்சியில் ஓய்வின்றிச்செயற்பட்டுக் கொண்டிருந்தான்.
எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தியாகி முடிந்திருந்தபோது, 28.05.1992 அன்று, எதிர்பாராதவிதமாக ஒரு துயரம் சம்பவித்துவிட்டது.
மேஜர் பாரதி உட்பட எங்களது 4 பெண் போராளிகள் இதே பாதையால் தவறுதலாகப் பிரவேசித்ததில், அதே இராணுவ அணியின் தாக்குதலுக்கு இலக்காகி வீரச்சாவடைந்து விட்ட சோகம் நிகழ்ந்தது.
ரவிசங்கர் துடிதுடித்துப்போனான். 'எல்லாம் தயார்' என்றாகியிருந்த சமயத்தில் இப்படியாகிவிட்டதே என்று வேதனைப்பட்டான்.
" அந்த ஏ. கே. எல். எம். ஜி. காரன்தான் எங்கட பெண் போராளிகளைப் போட்டிருப்பான். முன்னுக்கிருக்கிற அவன்ர 'ரேஞ்சுக்குள்ளதான் அவையள் சிக்கியிருக்கினம்..." என்று தோழர்களிடம் பொருமினான்.
நான் செத்தாலும் பரவாயில்லை... இந்தச் சண்டையில அந்த ஏ.கே.எல் எம்.ஜி. காரனை சாகடித்து, அந்த ஏ.கே. எல். எம்.ஜியை எடுத்தே தீருவன்..." என்று, தன் இலக்கில் இன்னும் உறுதியானான்.
இது நடந்து ஒன்பதாவது இரவு அந்த இராணுவ அணி தாக்கப்பட்டது. புலிகளின் ஆவேசமான பாய்ச்சல். அனல் விழிகளோடு சண்டையில் முன்னேறிய ரவிசங்கர் அந்த இராணுவத்தினனை வீழ்த்தி அந்த எல். எம். ஜியை எடுத்துச் சக போராளிகளிடம் கொடுத்தான்.
தன் நோக்கத்தை அடைந்த திருப்தி அவனது முகத்தில் பளிச்சிட்டது. ஆனால் அடுத்த நொடி... எதிரியின் ரவைகளில் சில அவனைத்துளைத்துச் சென்றன.
சண்டை முடிந்த பின்னர் - வேறு ஆயுதங்களுடன் இந்த ஏ.கே. எல். எம். ஜியையும் ரவிசங்கரின் உடலையும், நெஞ்சத்தில் அவனது நினைவையும் சுமந்து கொண்டு நாங்கள் வந்தோம்.
0 கருத்துகள்