மாணிக்கராசா சிவகுமார்
விளாங்குளம், திருக்கோணமலை.
வீரமரணம் : 28.07.1991
நிகழ்வு: கிளிநொச்சி ஆனையிறவு மீதான ஆ.க.வெ.நடவடிக்கையில் தடை முகாம் மீதான 2வது தாக்குதலின்போது வீரச்சாவு
இரவு விலக நினைத்த விடிகாலைப்பொழுது, பொழுது, வேகமாக வந்த வாகனமொன்று வைத்தியசாலை வாசலில் போராளி ஒருவனை இறக்கி விட்டு திரும்பி ஓடியது. அந்த வண்டிக்காக இன்னொரு போராளி காத்திருப்பான் போலும்.
இறக்கப்பட்ட அந்தப் போராளி படுகாயமடைந்திருந்தான். அவன் உடல் முழுவதும் கருகி இருந்தது. தீயின் நாக்கு அவனைப் படுகோரமாக சிதைத்திருந்தது. ஆனாலும் அந்தப் போராளி சலனமில்லாமல் அமைதியாக இருந்தான்
இரவு முழுவதும் காயமடைந்த போராளிகளை பராமரித்துக் கொண்டிருந்த அம்மா தன்னையும் அறியாமல் அவனுக்குப் பக்கத்தில் சென்றாள் அவனுக்குரிய பணிவிடைகளைச் செய்யத் தொடங்கினாள்.
உருவம் தெரியாமல்போன அந்தப் போராளியில், அம்மா தன் மகனைக் கண்டாள். அம்மாவும், இந்த மண்ணின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு மகனை உரமாக்கியிருக்கின்றாள். அவனது பெயர் ராஜ்குமார். சில வருடங்களுக்கு முன் நெடுங்கேணியில் ஒரு சம்பவத்தில் வீரமரணமடைந்து விட்டான். மகனைப் போலவே அம்மாவிற்கும் தேசத்தில் பற்று அதிகம்.
அம்மா விசிறியால்" விசிறிக் கொண்டு இருந்தாள். அவளின் கை ஓயும் சில விநாடிக்காக "ஈ"க்கள் காத்திருந்தன. தோல் சிதைந்து போன அவனது உடலில் அவை விழுவதை அவளால் பொறுக்க முடியாது அந்த நேரங்களில் அவளின் கைகள் வேகமாக இயங்கும்.
அந்தப் போராளி கண் விழித்த போது. அன்பே வடிவான அம்மா அவன் முன் நின்றாள் அவனின் தாயும் இப்படித்தான் இருப்பாள். போன வருடம் கூட அவனது தாய்- சகோதரர்கள் எல்லோருமே, திருக்கோணமலையில் உள்ள அவனது கிராமத்தில் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.ஆனால், இப்போது அவர்கள் எங்கு என்று கூடத்தெரியாது.
அம்மா நீண்ட நேரமாக நின்றாள்.
"நிக்காதீங்கோ அம்மா இருங்கோ என்றான் அவன். தனது பெயர் சசி என்றான். ஆனையிறவில் காயமடைந்ததாகக் கூறினான். அம்மாவிற்கு அதிசயமாக இருந்தது அந்த மகன் கதைக்கிறான். அவள் பரபரப்பாகத் திரிந்தாள். இன்னொரு அன்னையையும் உதவிக்கு அழைத்தாள்.
வைத்தியர்கள் வந்து பார்த்துவிட்டு பதிலேதும் சொல்லாமல் சென்றார்கள்.
அம்மா தொடர்ந்து விசிறிக் கொண்டு இருந்தாள். இரவுகளில் உறங்காததால் அவளும் சோர்வாக இருந்தாள். ஒரு தரம் தவறுதலாக விசிறி அவன் உடலில் பட்ட பொழுது அம்மா துடித்தாள்.
அவனோ "பரவாயில்லை அம்மா என்றான். அந்தப் போராளி அம்மாவுடன் மனம் விட்டுப் பேசத் தொடங்கினான்
"நாங்கள் முன்னேறி கொண்டிருந்தோம் இராணுவ முகாமின் எங்களுக்கு அருகில்தான் இருந்தது. கிடந்தது. ஆனால். அந்த நேரம் தான் குண்டு ஒன்று விழுந்தது என் உடம்பெல்லாம் தீப்பிடித்து விட்டது அதை அணைப்பதற்க்காக நான் உருண்டனான். ஆனால் அதற்கிடையில் எரிஞ்சு போனனம்மா என்றான்.
ஆதரவைத் தேடி அவனது கண்கள் அம்மாவைப் பார்த்தன. அந்தத் தாயும் விழிகளால் அவனை தடவிக் கொண்டிருந்தாள்.
"என்னோட வந்த பெடியளில இரண்டு, மூன்று பேர் விழுந்து எரிந்து கொண்டிருந்தார்கள். அசைவில்லாமல் கிடந்த அவர்கள் வீரமரணமடைந்திருப்பார்கள். அதிலேயே எரிந்திருப்பார்கள். அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பற்களைக் கடித்தான்.
"அவங்களை விடக்கூடாது, எங்கட மண்ணில இருந்து... வார்த்தைகளை முடிக்க முடியாமல் அவன் துவண்டு போனான்.
"கதைக்காதையப்பன், உன்னால ஏலாது. களைச்சுப் போவாய். நீங்கள் படுகிற கஸ்டத்துக்கெல்லாம் பலன் கிடைக்காமல் போகாது. தமிழீழம் நிச்சயம் கிடைக்குமடா" அம்மா அமைதியாக ஆனால் உறுதியாகச் சொன்னாள்.
. நேரம் செல்லச் செல்ல சசி வாடிப் போனான். உடலிலிருந்து ஊனம் வழிந்து, கொண்டிருந்தது. முதுகு எல்லாம் எரிந்து இருந்தது படுப்பதற்காக சரியாகக் கஸ்ட்டப்பட்டான். எழுந்து இருக்கப்பார்ப்பான் விட்டது. இயலாமல் தவிப்பான். வேதனையை தாங்க முடியாமல் முகத்தை அடிக்கடி சுழிப்பான் மற்றும் படி அவன் " முனகவோ - கத்தவோ இல்லை.
அமைதியான அந்தப் போராளியின் உறுதியும், பொறுமையும் அம்மாவிற்கு அவனில் அன்பையும், பாசத்தையும் அதிகமாகக் கொட்ட காரணமாயிற்று.
வைத்தியர்களும், தாதியர்களும் வருவார்கள். அம்மா அவர்களிடம் ஓடுவாள். சசியைப் பற்றிக் கேட்பாள். அம்மாவிற்காக, அம்மாவின் ஆறுதலுக்காக அவர்கள் ஏதாவது சொல்லிவிட்டுச் செல்வார்கள்.
- அம்மாவைத் தவிர மற்ற எல்லோருக்குமே அவனின் முடிவு தெரிந்திருந்தது.
சசி பலவீனமாகிக் கொண்டிருந்தான். படிப்படியாகச் செத்துக் கொண்டிருந்தான். அவனின் அந்தக் கடைசிக் கணங்களில் கூட, வேதனையை வெளிப்படுத்தும் எந்த விதமான சத்தமுமே வெளி வர இல்லை.
அம்மாவிற்கு விளங்காத வியப்பாகவே இருந்தது. எங்கள் கைகளிற்குள், இருளுக்குப்பயந்து ஓடித்திரிந்த இவர்கள்.
இன்று, உறுதியான- மலை போன்ற போராளிகளாக எப்படி மாறினார்கள்.?
அம்மாவின் கண்ணுக்கு முன்னாலையே அவன் மௌனமாகிப் போய்விட்டான்.
தாதி ஒருவர் அவன் வீரமர ணமடைந்து விட்டான் என்றார்.
அம்மாவினால் தாங்க முடியாமல் இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாலை நேரம்.
"அம்மா உங்கள் மகன் வீரமரணமடைந்து விட்டான்" என்று அவனது தோழர்கள் வந்த பொழுது, அவளின் மனம் எப்படித் தவித்ததோ, அதேபோலவே இப்போதும்...
அம்மா போர்வை ஒன்றினால் அந்த மகனைப் போர்த்தினாள். அவள் வழமை போல அழவில்லை. அம்மா தன் புதிய மகனிடம் இருந்து உறுதியைக் கற்றுக் கொண்டாள். அமைதியாக வைத்தியசாலையை விட்டு வெளியே வந்தாள். அந்தத் தாயின் மென்மையான பாதம் பட்டு இந்தப் பூமி அதிர்ந்தது
0 கருத்துகள்