சிவப்பிரகாசம் சாந்தகுமார்
வீரப்பிறப்பு: 02.01.1973
வீரச்சாவு: 25.07.1993
யாழ். மண்ணிலிருந்து மணலாற்றுக்கு வந்தபோது, மணலாற்றுக்காடுகளும், பறவைகளும் குயிலனுக்குப் புதிய அனுபவங்களாயின. இலகுவான வாழ்க்கை முறையிலிருந்து கடினமான வாழ்க்கை முறைக்கு அடியெடித்துவைக்கும் போது, துன்ப அத்தியாயங்கள் அதிகமிருந்தபோதும், இராணுவத்தால் அனுபவித்த துன்பங்களின் முன்னே இது துரும்பாகத் தெரிந்தது குயிலனுக்கு.
ஏழாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி முடித்தகையோடு, முல்லைத்தீவு இலங்கை இராணுவ முகாம் மீதான தாக்குதற்களம் காத்துக்கிடந்தது. மிதிவெடிவைக்கும் திறமை மிகுதியாக இருந்ததால், அதற்கான சிறப்புப் பயிற்சியோடு களத்துக்கு விரைந்தான்.
மிதிவெடி வைக்கும் பணியில் குயிலனது வலதுகரம் போனதும், யாழ். சென்று சிகிச்சை பெற்றதும், ஒரு கரத்துடன் என்முன் வந்து நின்றதும், ஒரு சோகம் கலந்த வீர வரலாறு.
கரமொன்று போனபின் சண்டை செய்ய வேண்டுமென்ற துடிப்பு குயிலனிடம் மேலோங்கியது. தனது உள்ளக்கிடக்கையைத் தளபதியிடம் வாய்விட்டுக் கேட்டுவிட்டான் தளபதியும் அவனது ஆசைக்குத் தடை போடவில்லை. ஆனால் அவனது பொறுப்புணர்ச்சியைக் கருத்திற்கொண்டு, அணியொன்றின் பொறுப்பாளனாக நியமித்தார். பொறுப்பாளனாக இருக்க விரும்பாத குயிலன், சாதாரண வீரனாயிருந்து இரண்டு மூன்று சண்டைகள் செய்த பின், பொறுப்பாளனாக வருவதையே விரும்பினான். அதையும் வெளிப்படையாகவே கேட்டுக்கொண்டான். வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது.
குயிலன், மணலாற்றில் பெரும்பாலான களங்களில் மனமாரச் சண்டை செய்தாலும், சில சண்டைகளுக்கு தன்னைக் கூட்டிச் செல்லாததையிட்டுக் குறைப்பட்டிருக்கின்றான் – அழுதிருக்கின்றான். அழுதாவது சண்டைக்குச் செல்லஅனுமதி எடுத்துவிட வேண்டுமென்ற சண்டைக்காரன் குயிலன்.
‘இதயபூமி – 1’ நடவடிக்கைக்கான பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, குயிலன் சலிப்பும் களைப்புமின்றி பயிற்சியீலீடுபட்டான். இயலாவாளி என்று தன்னைக் கூட்டிச்செல்லாமல் விட்டுவிடுவார்களோ என்ற சந்தேகம் அவனுக்கு.
பயிற்சி முடிந்து அணிகள் வகுக்கப்பட்டபோது, தளபதியின் கை தன்னை நோக்கி அசையுமா என்ற ஆவலோடு இசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அசைந்தது! குயிலனின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அந்த மகிழ்ச்சியில் அவன் அடித்த மரியாதை வணக்கம், இன்னும் கண்முன் நிற்கிறது!
‘இதயபூமி – 1’ இராணுவ நடவடிக்கையின் வெற்றிக்கு உயிர்தந்த பதின்மர்!
மணலாறு, அப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல. தமிழீழத்தின் எத்திசையில் இருப்பவர்களுக்கும் அந்தமண் சொந்தமண் எம் வீரகாவியத்தின் தலைவனைக் காத்துத்தந்த பூமி அது, இந்த உண்மை எம் வீரர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதும், தலைவன் எமது மண்ணில் கொண்ட தளராத பற்றும், அவனது வளர்ப்புக்களின் அயராத கடின பயிற்சியும், நிறைவாகும் வரை மறைவாக இருக்கும் விவேகமும் இதயபூமி நடவடிக்கையின் வெற்றிக்கு வழிசமைத்தவைகளாகும். இந்த வெற்றி வரலாற்றோடும், இதயத்தோடும், இதயபூமியோடும் இரண்டறக் கலந்துபோனவர்கள்தான்.
லெப்டினன்ட் திருமலைநம்பி / பெர்னாண்டோ
லெப்டினன்ட் நக்கீரன் / செந்தூரன்
லெப்டினன்ட் காந்தி / அழகப்பன்
லெப்டினன்ட் விமலன் / வில்லவன்
லெப்டினன்ட் ஈழவேந்தன் / அமீர்
லெப்டினன்ட் குயிலன்
லெப்டினன்ட் வாசன் / தமிழ்வாணன்
லெப்டினன்ட் விக்ரம் / துரைக்கண்ணன்
2ம் லெப்டினன்ட் சியாமணி
2ம் லெப்டினன்ட் புகழரசன்





0 கருத்துகள்