Ad Code

Recent Posts

வீரவேங்கை கிரிசாந்த் (கல்கத்) வீர வரலாற்று நினைவுகள்

வீரவேங்கை கிரிசாந்த் (கல்கத்)

மார்க்கண்டு மதனரூபன்  

புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு: 25.08.1976  

வீரச்சாவு: 16.09.1991


நிகழ்வு: மணலாற்றில் சிறிலங்காப் படையினருடனான சமரில் வீரச்சாவு

 

சென்ற ஆண்டு மணலாற்றில் நடந்த வரலாற்றுப்

போரில் வீரச்சாவடைந்த இருநூறுக்கும் அதிகமான வேங்கைகளில் ஒருவன்தான் வீரவேங்கை கல்கத். இவனை கல்கத் என்று கூறுவதை விட கிரிசாந்த் என்றே அநேகமான போராளிகள் அழைப்பர். ஏனெனில் கிரிசாந்த் என்ற பெயரில்தான் இவன் முதன் முதல் இயக்கத்தில் அறிமுகமானவன்.


கிரிசாந்த் 1990 ஆம் ஆண்டு தைமாதம் எமது இயக்கத்துடன் தன்னை முற்றாக இணைத்துக் கொண்டான். யாழ் புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியைச் சேர்ந்த மார்க்கண்டு ரவீந்திராதேவி தம்பதிகளின் மூத்த புதல்வன். இவனது இயற்பெயர் மதனரூபன். பழம் என்றுதான் வீட்டில் அழைப்பார்கள். இவனுக்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் உண்டு. கிரிசாந்த் யாழ் மத்திய கல்லூரி மாணவன். ஆனாலும் பள்ளிப் பிராயத்திலே பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு காலத்தின் தேவை கருதி களத்திற்கு வந்தவன். வீட்டிலே தலைமகன். தாய் தந்தையரின் மிகுந்த கட்டுப்பாட்டின் கீழ் வளர்ந்தவன். வெளிஉலகத்தை நன்கு அறியாதவன். வயதில் சிறியவன். ஆனாலும் குறும்புத்தனம் இவனிடம் மிகுதியாகக் காணப்பட்டது. இயக்கத்திற்கு வருவதற்கு சில நாட்கள் முன்புகூட இவனது குறும்புத்தனத்தால் தான் இவனது தம்பியின் கை உடைந்தது. ஆனால் இச்சம்பவமே கிரிசாத்தின் குறும்புத்தனத்தை கட்டுப்படுத்த வழிகோலியது. ஆனாலும் இறுதிவரை முற்றாகக் குறையவில்லை.


கிரிசாந்த் வயதில் சிறியவன் தான். ஆனால் போராட்டத்தில் இவனது பங்களிப்பு பெரியது. சண்டையின்போது மருத்துவம் என்பது அத்தியாவசியமானதும் மிக முக்கியமானதுமாகும். இந்த மருத்துவ சேவையைத்தான் கிரிசாந்த் செய்தான் மருத்துவ பணியுடன் மட்டும் இவனது பங்களிப்பு நிற்கவில்லை. சிறீலங்கா இராணுவத்திற்கெதிரான சில தாக்குதல் சம்பவங்களிலும் பங்கு கொண்டவன். முக்கியமாக ஆனையிறவு வரலாற்றுப் போரிலும் இவனது கைகள் துப்பாக்கி ஏந்தியது குறிப்பிடத்தக்கது. இவற்றுடன் கலையுணர்வு இவனிடம் இயல்பாகவே காணப்பட்டது. இவன் சங்கீதம் கற்கவில்லைத்தான். ஆனாலும் இவனது குரல் இனிமையானது. சில வேளைகளில் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சில பாடல்களைப் பாடுவான். அப்போது நாங்களே எங்களை மெய்மறப்பதுண்டு. அது மட்டுமல்ல. சித்திரங்கள் வரைவதிலும் கெட்டிக் காரன். கானகத்திலே மாவீரர் சிலரின் சமாதிக்கு மாபிள்களைக் கொண்டு பெயர் வரைந்துள்ளான். அதன் நுணுக்கத்தையும் அழகையும் பார்த்தால் இவனது கலைத்திறன் நன்கு புலப்படும். 


ஒரு உருவத்தைப் பார்த்தால் அதை அப்படியே கீறிவிடுவான். இவன் போதும் சும்மா இருப்பதில்லை. வேலை இல்லாத வேளைகளில் ஏதாவது வரைந்து கொண்டு தான் இருப்பான். இயற்கைக் காட்சிகள் இவன் மனதைக் கொள்ளை கொண்டு விடுகின்றன போலும். 


அநேகமாக இவன் வரையும் படங்கள் எல்லாம் இயற்கைக் காட்சிகள் தான். தன் பெயரை எழுதினால்கூட அதற்கு பூக்களின் படங்களை வரைந்து அலங்கரிப்பான். இவற்றுடன் கைப்பணிப் பொருட்கள்கூட நன்றாகச் செய்வான்.  நாம் பாவனை செய்து கழித்து விடும் சேலைன் ரியூப், சேலைன் வயர் போன்றவற்றை எடுத்துச் சேர்த்து மீன், பூ. பறவை போன்ற பொருட்களை மிகவும் அழகாகவும் நுட்பமாகவும் செய்து முடிப்பான். ஆனால் இவனிடம் ஒரு பழக்சகம், எவராக இருந்தாலும் சரி தவறுகள் விட்டால் வெளிப்படையாகவே நேருக்கு நேர் கூறியோ கேட்டோ விடுவான். எதையும் மனதில் வைத்திருக் கும் பழக்கம் இவனிடம் கிடை யாது. இதனால் சிலபேரின் கோபத்திற்குக் கூட ஆளானான். என்னதான் இருந்தாலும் இரக்க சுபாவம் இவனிடம் "மிகுதியாகவே காணப்பட்டது. அத்துடன் இலட்சியத்திலும் உறுதியாகவே இருந்தான்.


கிரிசாந்திடம் இயக்கத்திற்கு வந்தபிறகும் குறும்புத்தனம் ஓரளவு இருக்கத்தான் செய்தது. ஆனால் எமது இயக்கத்தின் கட் டுப்பாடுகளுக்கு மிகவும் கட்டுப்பட்டவன். ஒரு முறை 1990 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நண்பன் ஒருவனின் சவாலுக்காக தனது புதிய பல் தீட்டும் பிரசை சேற்றில் வீசி விட்டான். இதற்கு தணடனையாக எறிந்த பிரசை தாலில் கோர்த்து கழுத்தில் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. 


பின்பு 1991 ஆம் ஆண்டு தைப்பொங்கல் அன்றுதான் அந்த பிரஸ் அவனின் கழுத்தால் கழற்றப்பட்டது. இலட்சிய உறுதி கொண்ட கிரிசாந்த் பயிற்சி முடித்து சில மாதங்களின் பின் மணலாறு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவில் மருத்துவக் கல்வியைப் பயின்றான். பின்பு சில முகாம்களிலும் சில சண்டைகளிலும் மருத்துவராகக் கடமை புரிந்தான். ஆ.க.வெ. தாக்குதலுக்கும் தாக்குதல் பிரிவில் ஒருவனாகச் சென்றான். பின்னர் மீண்டும் மணலாறு வந்து மருத்துவப் பணியைத் தொடர்ந்தான்.


கிரிசாந்த 1990 ம் ஆண்டு தை மாதம் எமது இயக்கத்திற்குச் சேர்ந்த காலத்திலிருந்து இறுதிக் காலம் வரையிலான காலப்பகுதியில் மூன்று மணித்தியாலங்கள் மட்டும் யாழ் நகரில் கழித்திருக்கிறான். அதுவும் காயமுற்ற போராளி ஒருவனை யாழ் வைத்தியசாலைக்கு கொண்டு வந்தபோது தான். அவனது போராட்ட வாழ்க்கையில் மிகுதிக் காலம் முழுவதும் மணலாற்றுக் கானகத்திலேயே கழிந்தது. 


ஆனால் அவனுக்கு இறுதிவரை ஒரு ஆசை இருந்தது. தான் பிறந்து வளர்ந்த மண்ணையும் தன் உறவினர்களையும் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்று தான் ...இதை வெளிப்படுத்த 'யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன் சுவையூறும்* என்று பாட்டாகப் படிப்பான், ஆனால் கிரிசாந்த் கொண்ட இலட்சியம் குன்றிடாதவன். வென்றெடுக்கப்பட தமிழீழம் வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் தீவிரமாகச் செயற்பட்டவன். 


கிரிசாந்த் இறுதிக்கட்டத்தில் களத்தில் நிற்கும் வேளையில்தான் அவன் உறவினர்கள் சிலரைக் கண்டான். அவ்வுறவினர்கள் எமது அமைப்பின் சாள்ஸ் அன்ரனி விசேட படையணியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மூலம் வீட்டில் இருந்து ஒரு கடிதம் கூட அவனுக்குக் கிடைத்தது. அதில் உனது இலட்சியப் பாதைக்கு நாம் எவ்வகையிலும் தடையாக இருக்கமாட்டோம். ஆனால் தயவு செய்து ஒரு முறையாவது எம்மை வந்து பார்த்துவிட்டு செல். எம்மை விட்டு நீ பிரிந்து இரண்டு வருடங்களாகின்றன. உன்னை பார்க்க எமக்கு மிகுந்த ஆர்வலாகவும் ஆசையாகவும் உள்ளது என்று. இக்கருத்தை முதன்மையாகக் கொண்டு அவனது கடிதம் வரையப்பட்டு இருந்தது. ஆனாலும் களத்தில் நின்ற கல்கத்தின் மனம் தளரவில்லை. இலட்சியப்பற்றில் மேலும் வலுப்பெற்றான். 


உடனே அக்கடிதம் கொடுத்த உறவினரான போராளியிடம் கூறினான். 'அம்மாவை காணும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் சொல்லுங்கோ, மணலாற்றில் நிற்கிறேன். போர் முடிந்த பின் நான் உயிருடன் இருந்தால் நிச்சயம் உங்களை வந்து பார்ப்பேன் என்று சொல்லுங்கோ" என்று தீரத்துடன் சொன்னான் அந்த இளம் வீரவேங்கை கிரிசாந்த் என அழைக்கப்படும் கல்கத் இச்சம்பவம் களத்திலே போர் விமானங்களின் அகோரக் குண்டு வீச்சுக்களுக்கும் பாரிய செல் தாக்குதல்களுக்கும் எதிரியிட மிருந்து பாய்ந்து வரும் துப்பாக்கி ரவைகளுக்கும் மத்தியில் நான் நடைபெற்றது.


கிரிசாந்த் இலட்சியத்தில் உறுதியாக தொடர்ந்தும் தன் பணியைச் செய்கின்றான். போர் முனையில் படுகாயமுற்றுக் கிடந்த போராளிகளை எடுத்து வந்து மருத்துவ சிகிச்சை செய்து எத்தனையோ போராளிகளின் உயிர்களைக் காப்பாற்றினான்.


போர் முனையிலே காயமுற்றுக் கிடந்த தன்னையும் விட வய தாலும் உருவத்தாலும் கூடிய போராளிகளைக்கூட சிறிய தனது தோளில் தனித்துத் தூக் கிவந்து மருத்துவ முதலுதவி. புரிந்தான். போர் முனையில் காயமுற்றுக் கிடக்கும் போராளிகளைத் தூக்கும்போது அவர்களின் ஆயுதங்களை விடமாட்டான். அவ்வாயுதங்களை எடுத்து இயக்கி சில கணப் பொழுது எதிரியை அதிர வைத்துவிட்டுத்தான் வருவான். இவ்வாறு களத்திலே வேகத்துடனும் தீரத்துடனும் செயல்பட்டுக்கொண்டிருந்த கிரிசாந்த் போர் முனையிலேயே காயமுற்றுக்கிடந்த போராளி ஒருவனை தூக்கிவந்து மருத்துவ முதலுதவி செய்து கொண்டிருந்த போது தான் எதிரியின் எறிகணையொன்று கிரிசாந்தின் அழகிய முகத்தைப் பதம் பார்த்தது.


அப்போது அந்த வீரவேங்கை மடிந்து வீழ்ந்தான். அவனைக் கையிலே காக்கியெடுத்தபோது அவன் எழும்பவில்லை. குருதிதான் அவனது பச்சை உடைகளை சிவப்பு நிறமாக்கியது அவனுக்கு மருத்துவ சிகிச்சை செய்யத்துடித்த நாம் ஏமாந்துவிட்டோம். அவன் வீரச்சாவடைந்து விட்டான். கிரிசாந்த் துயில் கொண்டிருந்தான் மாவீரனாக.



கவாஸ்கர்


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code