திருமலைநம்பி (பெர்னாண்டோ)
வரப்பிரகாசம் யுகதீபன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 02.12.1972
வீரச்சாவு: 25.07.1993
வீரச்சாவு நிகழ்வு விபரம்:
ஹயசேன, மின்னல், சிக்சர், செவண்பவர் என்றெல்லாம் மணலாற்றில் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளை முறியடித்த போது எம்மோடு துணை நின்ற திருமலைநம்பியே! உன் மலைபோன்ற வீரத்தை நாம் மறந்துவிடமுடியுமா…?
மணலாறு தமிழீழத்தின் ‘இதயம்’ என்பதை உன் இதயத்தில் பதித்து செயல்புரிந்த வீரனே! நீ பிறந்த மண் கொழும்புத்துறையா மணலாறா என்று தடுமாற வைத்தவனே! உன் உணர்வுகளை, உன் நினைவுகளை இலகுவில் அழித்து விட முடியுமா…?
சண்டைக்குச் செல்லும் போதெல்லாம் , “மச்சான் நான் இந்தச் சண்டையில் செத்திடுவன்;;; நான் சண்டைபிடிக்க செத்த முழு விபரத்தையும் வீட்டிலபோய் மறக்காமல் சொல்லிப்போடு” என்று கேட்பாய்.
பொறுப்பாளனென்பதை மறந்து தோழமையோடு பழகினாய். போர் வாழ்வில் உன்னுடன் வாழ்ந்த கால நினைவுகள் எண்ணில். அவற்றில் சிலவற்றை மட்டுமே நினைத்துப்பார்க்குச் சக்தி எனக்குண்டு. என் சக்திக்கு அப்பாற்பட்டவன் நீ. அதனால்தான் என்னை முந்தி சாதனை வரிகளில் பிறந்து நிற்கிறாய்.
மண்கிண்டிமுகாம் தகர்ப்புக்காகச் செல்லும்போது எம்மையெல்லாம் ‘வீடியோ’ படம் எடுத்ததும், அப்போது நீ சொன்னதையும் நினைத்துப்பார்க்கிறேன்.
‘வீடியோ’ கமெரா உன்னை நோக்கித் திரும்பியபோதெல்லாம் எழுந்து, எல்லோருக்கும் முன்னே வந்து நின்றாய். “ஏன் மச்சான் எழும்பி முன்னுக்கு முன்னுக்குப் போய் நிற்கிறாய்’ என்று கேட்டேன்.
“நான் இந்தச் சண்டையின் செத்தால் அண்ணன் என்னை அடிக்கடி போட்டுப் பார்ப்பாரில்லையா?” என்று, பதில் சொன்னாய். தலைவன் உன் கடைசி வீரத்தைப் பார்க்கவேண்டுமென்று தீர்மானித்துத்தான் இதைச் சொன்னாயோ…?
நீ எழுந்ததும், இருந்ததும், விழுந்ததும் இன்னும் என் மனத்திரையில்…
‘இதயபூமி – 1’ இராணுவ நடவடிக்கையின் வெற்றிக்கு உயிர்தந்த பதின்மர்!
மணலாறு, அப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல. தமிழீழத்தின் எத்திசையில் இருப்பவர்களுக்கும் அந்தமண் சொந்தமண் எம் வீரகாவியத்தின் தலைவனைக் காத்துத்தந்த பூமி அது, இந்த உண்மை எம் வீரர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதும், தலைவன் எமது மண்ணில் கொண்ட தளராத பற்றும், அவனது வளர்ப்புக்களின் அயராத கடின பயிற்சியும், நிறைவாகும் வரை மறைவாக இருக்கும் விவேகமும் இதயபூமி நடவடிக்கையின் வெற்றிக்கு வழிசமைத்தவைகளாகும். இந்த வெற்றி வரலாற்றோடும், இதயத்தோடும், இதயபூமியோடும் இரண்டறக் கலந்துபோனவர்கள்தான்.
லெப்டினன்ட் திருமலைநம்பி / பெர்னாண்டோ
லெப்டினன்ட் நக்கீரன் / செந்தூரன்
லெப்டினன்ட் காந்தி / அழகப்பன்
லெப்டினன்ட் விமலன் / வில்லவன்
லெப்டினன்ட் ஈழவேந்தன் / அமீர்
லெப்டினன்ட் குயிலன்
லெப்டினன்ட் வாசன் / தமிழ்வாணன்
லெப்டினன்ட் விக்ரம் / துரைக்கண்ணன்
2ம் லெப்டினன்ட் சியாமணி
2ம் லெப்டினன்ட் புகழரசன்
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”





0 கருத்துகள்