Ad Code

Recent Posts

கப்டன் கதிரவனின் வீர வரலாற்று நினைவுகள்

கப்டன் கதிரவன்

மருத்தினுப்பிள்ளை கிறிஸ்ரியன்பெர்னாண்டோ 

4ம் வட்டாரம், எழுவைதீவு, 

மட்டக்களப்பு

வீரப்பிறப்பு: 03.03.1972  

வீரச்சாவு: 23.11.1992


நிகழ்வு: வவுனியா வவுனிய ஓமந்தையில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு

  

‘கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்' என்பதை அடிப்படையாகக் கொண்டு இயங்குபவர்கள்தான், எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் புலனாய்வுப் பணிகளை மேற்கொள்பவர்கள். புலனாய்வாளன் ஒருவனின் அறிக்கையில் காணப்படும் சிறு தவறுகூட பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது; எமது போராட்டத்தைப் பின்தள்ளக் கூடியது. எனவே, அவன் நிதானம் மிக்கவனாக நடந்து கொள்ள வேண்டும். கம்பியில் நடப்பது போன்ற இப்பணியினை மேற்கொண்டு வந்தவர்களில் ஒருவன்தான் கதிரவன்.


பெறுப்பாளர்கள் எதிர்பார்க்கும் பணியைச் செய்து முடிப்பது மட்டுமல்ல, மேலதிகமாக இப்படியும் செய்யலாம் செய்விக்கலாம் என்று அவர்கள் உணரக்கூடியதாக, இவனது பங்களிப்பு அமைந்திருந்தது. அதனால், "கதிரவனால் இது செய்ய முடியுது தானே உங்களால ஏன் முடியாது" என்று இவனை உதாரணம் காட்டி, சகபோராளிகளைப் பொறுப்பாளர்கள் ஊக்குவிக்குமளவுக்குப் பணியாற்றினான் இவன். குறிப்பாகச் சொன்னால், இவனது வாழ்க்கை சகபோராளிகளுக்குப் பாடவிதானமாக அமைந்தது. முகாமில் பகல் முழுவதும் நாளாந்தப் பணி: இரவில் காவல் பணியின் போது தனக்கும் நேரத்தைப் பங்கீடு செய்தல்; இந்த இடைப்பட்ட நேரத்தில் தனது வேலைகள் பற்றிய அறிக்கைகளைத் தயாரித்தல் - இது தான் இவனது வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு போராளியையும் முழுமையானவர்களாக, எதிர்காலத்தில் தனது பணிகளைப் பொறுப்பேற்று நடத்தக்கூடியவர்களாக உருவாக்கினான். தான்செய்யும் வேலையில், குறைந்தது அரைவாசியையாவது செய்தோமா என்ற உணர்வைப் போராளிகளுக்கு உருவாக்குவதன் மூலம், படிப்படியாக அவர்களை முழுமையாக்குவது இவனது பாணி.


சிலுவைப் பாதையில்.....

ஜெருசலேம் பெரிய தேவாலயத்தின் முன்னால், அநீதிகள் புரிபவருக்கெதிராக ஆவேசத்துடன் சென்று சாட்டையால் அடித்த யேசுதான் பெரிதாகத் தெரிந்தார்.


பொதுமக்களைப் பொறுத்தவரை இவன் பழகும் விதம், வாழ்வில் என்றுமே மறக்க முடியாதவன் கதிரவன்' என்ற உணர்வைத் தோற்றுவிக்கும். இவனது வாழ்வு வித்தியாசமானது. இவன் சாதாரண மனிதனாக வாழத் தொடங்கியவனல்ல...... குருத்துவக் கல்வியை மேற்கொண்டு கிறிஸ்தவ மதகுருவாக உருவாகவிருந்த ஒருவன்தான், போராளியாக மாறியிருக்கிறான்; இரண்டுமே மக்களுக்காகத் தம்மை ஒப்படைக்கும் பணிதான்!


சுமார் 21 மைல் நீளமும் * மைல் அகலமுமானதுதான் எழுவைதீவு. சுமார் 175 குடும்பங்கள்வரைதான் அங்கிருந்தன. கடற்றொழில்தான் அங்கு பிரதானமானது. அடிக்கடி தெரியும் கடற்படைப் படகுகளும், குமுதினிப் படகு பற்றிய நினைவுகளும், ஆக்கிரமிக்கப்பட்ட தீவில் தாம் சிக்கிக் கொண்டிருப்பதை அங்குள்ளவர்களுக்கு உணர்த்தும். இத்தீவில்தான் இவன் பிறந்தான். இவனது இயற்பெயர் கிறிஸ்ரியன் பெர்னாண்டோ. இவனுடன் சேர்த்து குடும்பத்தில் 13 பேர்.


ஓலை வீட்டில் இருந்த இவனது குடும்பத்தினர், இவன் பிறந்த காலத்தில்தான் கல்வீடு கட்டத் தொடங்கினார்கள். எனவே, வாசலில் சீமேந்தின் ஈரத்தினிடையே இவனது பாதத்தைப் பதித்து மகிழ்ந்தார்கள். அப்போதெல்லாம் நினைத்திருக்க மாட்டார்கள், இந்தப் பிஞ்சுப் பாதங்கள் எதிர்காலத்தில் மக்களுக்காகச் 'சிலுவை' சுமக்குமென்று.


எழுவைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே கல்விகற்க முடியும்; அதன்பின் கடல் கடந்தால்தான் உயர் கல்வி. எனவே, இவன் 6 ஆம் வகுப்பைக் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் படித்தான். இப்பகுதி இரா 

ணுவ நடவடிக்கைக்குட்பட்டதால், பின்னர் இளவாலை ஹென்றியரசர் கல்லூரியில் இவனது கல்வி தொடர்ந்தது. இங்கு 10 ஆம் வகுப்பில் சித்தியெய்திய காலத்தில் தான் குருத்துவக் கல்வியை மேற்கொள்ளத் தீர்மானித்தான் இவன். ஏற்கெனவே இவனது ஒரு சகோதரர் குருத்துவக்கல் வியைப் பயின்று மதகுருவாக உள்ளார். அவரைப் போலவே உருவாக விரும்பினான் இவன். யாழ். புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் உயர்கல்வியைக் கற்றவாறே குருத்துவ வாழ்வில் புகுந்தான். பாடசாலை விடுமுறை நாட்களில் இவன் எழுவைதீவுக்குச் செல்வதுண்டு.


இக்காலகட்டத்தில் ஒருநாள், கடல்வழியாக எட்டுக் குதிரைவலு இயந்திரம்இணைக்கப்பட்ட படகில் பயணமாகிக் கொண்டிருந்தனர் இன்பம், குட்டி, அப்ஸ், ராஜன் ஆகிய நான்கு போராளிகள். அது இந்திய இராணுவத்தினர் எம்மண்ணினை ஆக்கிரமித்திருந்த காலம். அவர்களின் நடவடிக் 

கைகள் காரணமாக, தாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து தற்காலிகமாக இடம் மாறியிருப்பதற்காக இப்பயணத்தை மேற்கொண்டனர். அவ்வேளை சிறீலங்காக் கடற் படையினரின் அதிவேகப் படகொன்று இப்படகினை நெருங்கியது. எனவே, மோதல் தவிர்க்கமுடியாததாகியது. இம்மோதலில், அப்படகில் வந்த சிறீலங்காக் கடற்படை யினரில் ஒரேயொருவனே தப்பினான்; ஏனையோர் உயிரிழந்தனர். தப்பியவன் இவர்களை நோக்கிச் சுட்டபடியிருந்தான்.


போராளிகளின் படகு ஆபத்திலிருந்து தப்பிவிட்டது. எனினும், மோதல் நடந்து கொண்டிருந்தவேளை, இப்படகினைச் செலுத்திக்கொண்டிருந்த பொதுமகன் கடலில் குதித்துவிட்டார். எனவே, படகினைச் செலுத்த ஆள் இல்லை; போராளிகளே படகினைச் செலுத்த முயன்றனர். படகு அப்படியே எழுவைதீவில் கரையொதுங்கியது. அப்போராளிகள் எழுவைதீவு மக்களால் உபசரிக்கப்பட்டனர். அப்போராளிகளை உபசரித்தவர்களுள் இவனும் ஒருவன். இக்காலகட்டத்தில் திலீபன் நினைவு நாள் வந்தது. மக்களுக்கு ஊழியம் செய்வதற்காகக் குருத்துவ வாழ்வில் புகுந்தவன் மனதில், தற்கொடையாளி திலீபன் பெருமதிப்புக்குரியவனாக இருந்தான். எனவே, இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடத் தன்னாலியன்ற அத்தனையையும் செய்தான் இவன்.


26.11.1988 அன்று, இவன் கல்வி கற்கும் சம்பத்திரிசியார் கல்லூரியினுள் புகுந்தனர் இந்திய இராணுவத்தினரும் தேச விரோதிகளும், "நக்குகின்ற நாய்க்குச் செக் கென்ன, சிவலிங்கமென்ன " என்று கூறுவார்கள். அதுபோலவே தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலையைச் சிறீலங்காப் படையினரிடமிருந்து பொறுப்பேற்றிருந்த இப்படைகளுக்கு, வைத்தியசாலையென்றோ கல்லூரியென்றோ வித்தியாசம் காணத் தெரியவில்லை. கல்லூரியிலிருந்த வண. பிதா பிலேந்திரன் தாக்கப்பட்டார்; பக்கத்திலுள்ள புனித மரியாள் பேராலயத்தினுள் இருந்த சக்கரியாஸ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுக் கொண்டுசெல்லப்பட்டார்; பின், இவர் ஈச்சமோட்டைப் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அந்தப் பேராலயத்தில் பியானோ வாசிப்பதுடன், ஊழியம் செய்து வந்தவர் சக்கரியாஸ். வண. பிதா பிலேந்திரன் தாக்கப்பட்டதும், சக்கரியாஸ் கைதுசெய்யப்பட்டுப் பிணமாக மீட்கப்பட்டதும் இவன் அறிய நடந்த சம்பவங்கள். இச்சம்பவங்கள் இவன் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. இதுவரை, "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு" என்று போதித்தபடி மற்றவர்களுக்காகத் தன்னை வருத்தி ஊழியம் செய்பவராகத் தெரிந்த யேசு, இப்போது தெரியவில்லை; மாறாக, ஜெருசலேம் பெரிய தேவாலயத் தின் முன்னால், அநீதிகள் புரிபவருக் கெதிராக ஆவேசத்துடன் சென்று சாட்டையால் அடித்த யேசுதான் பெரிதாகத் தெரிந்தார்.


விடுமுறை நாட்களில் இரவு, பகலென்று போராளிகளுடனேயே தங்கினான் இவன் அவர்களது நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்தான். இதுவும் அடிப்படையில் மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கை என்பதால், இந்த வாழ்க்கை பிடி த்துப் போயிற்று. அதனால், 01-01-1990 அன்று, குருமடத்தில் இருக்கவேண்டிய இவன் இரவோடிரவாக இயக்கத்திற்குச் சென்று விட்டான். சில நாட்கள் அனலை தீவில் தங்கியிருந்த இவன், மீண்டும் எழுவைதீவு வழியாக யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றான். எனினும், எழுவைதீவில் தரையிறங்கவில்லை; படகினுள்ளேயே மறைந்திருந்தான். வழக்கமாக போராளிகளுக்கான உணவுப் பொட்டலங்களைக் கட்டிக் கொடுக்கும் இவனது அன்னைக்கு, அன்று அதிலொன்றைத் தனது மகனுக்காகவும் கட்டுவது தெரியாமலிருந்தது. அந்த உணவு தான் தாயின் சமையலில் உண்ணும் இறுதிச் சாப்பாடு என்பதை அவனும் அறிந்திருக்கவில்லை. படகு புறப்படும்போது இவன் எழுந்து நின்றான். அந்த அழகிய தீவை நன்றாக இரசித்தான். அது சுதந்திர பூமியாக, எமக்குச் சொந்தமாக விருக்கும் நாளைப் பற்றிய கற்பனைகளுடன் பயணத்தைத் தொடர்ந்தான்.ஆனால், மீண்டும் அந்தத் தீவின் புழுதி இவனுடலில் பட வேயில்லை. 


இவன் இயக்கத்திற்குப் போகும்போது தனது அன்னைக்கு எழுதிய கடிதத்தில், "இந்த ஊரில் முதல் குருவானவரும் எங்களுடைய குடும்பத்தில்தான்; முதல் போராளியும் எங்களுடைய குடும்பத்தில்தான் " என்று குறிப்பிட்டிருந்தான். அதுவும் ஒரு பெருமைதான் என்பதை உணர்ந்தார் இவனது அன்னை.


மணலாற்றில் தனது இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டான் இவன். அங்கேதான் கிறிஸ்ரியன் பெர்னாண்டோ 'கதிரவனாக' மாறினான். யூலைமாதத்தில் சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதலொன்றில் கையில் காயமடைந்தான். இக் காயம் குணமடைந்ததும் இவன் தீவகப் பகுதியில் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். அக் காலத்தில் தகவல்களை மட்டும் பெற்றுக் கொள்ளவில்லை : மக்களுடைய மனங்களையும் வென்றெடுத்தான். அவர்கள் மனம் வேதனைப்படக்கூடியவாறு ஒருபோதும் இவன் நடந்ததில்லை. அனுபவமுள்ள பல போராளிகளே, மக்களை அணுகும் விடயம் தொடர்பாக இவனிடம் ஆலோசனை பெற்றுள்ளனர் என்றால், இவன் எந்தளவுக்கு மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளான் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.


1991 ஆம் ஆண்டு தீவுப்பகுதியை இராணுவத்தினர் முற்றுகையிட்டனர். உலங்கு வானூர்திகளினதும், குண்டு வீச்சு விமானங்களினதும் இரைச்சல் காதைச் செவிடாக்கியது. இந்த முற்றுகைக்குள் இவன் சிக்கிவிட்டான். எல்லோரும் யாழ்ப்பாணத்தை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கையில், இவன் மட்டும் இன்னும் உள்ளே சென்றான். வேலணையிலிருந்து புங்குடுதீவைநோக்கிச் சென்றான். அங்கு இயக்கத்தின் புலனாய்வு நடவடிக்கைகள் பற்றிய பல முக்கிய ஆவணங்கள் இருந்தன. அவை சிறீலங்காப் படையினரிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே, அங்கு விரைந்தான். அங்கிருந்து அவற்றை எடுத்துக்கொண்டு, இவன் வேலணையின் பிரதான வீதியைக் கடந்ததற்கும் சிறீலங்கா இராணுவம் அந்த இடத்தைக் கைப்பற்றிய தற்குமிடையில், மிகச் சில விநாடி இடைவெளியே இருந்தது. உயிரைப் பணயம் வைத்துத்தான் அதை மீட்டிருக்கிறான். இது இவனது பொறுப்புணர்ச்சிக்கு உதாரணம்.


இவனுக்குப் பொறுப்பானவர்கள் மனதில் இவன் வித்தியாசமானவனாகத் தெரிந்தான். குறிப்பிட்ட தவறுக்காக, இன்ன தண்டனை உனக்கு என்று இவனிடம் அறிவித்தால் போதும்; கண்காணிக்கத் தேவையில்லை. அத்தண்டனையைச் செய்து முடித்துவிட்டால் அறிவிப்பான்; இல்லையேல், இன்ன காரணத்துக்காக இன்ன வேலையால் - இத்தண்டனையைச் செய்து முடிக்கவில்லை என்றோ அல்லது இவ்வளவு தண்டனையை முடித்துள்ளேன், மிகுதியை நாளை செய்து முடிக்கிறேன் என்றோ இவனிடமிருந்து அவர்களுக்குக் குறிப்பு வரும்.


தீவகத்திலிருந்து வந்த பின்னர், இவன் புலனாய்வுப் பிரிவின் நிர்வாக அலுவலகம் ஒன்றுக்குப் பொறுப்பாக இருந்தகாலத்தில், மிக முக்கியமான ஆவணமொன்று தொலைந்து விட்டது. இதற்காக இவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை, ஒரு பெட்டியைத் தூக்கித் திரிதல். அப்பெட்டி சங்கிலியினால் இவனது கையுடன் இணைக்கப்பட்டிருந்தது. தண்டனைக் காலம் முழுவதும் இவன் அதனுடனேயே திரிந்தான். யாழ். நகரத்தினுள் இவனுக்கு வேலையிருக்கும்; முக்கியமான கூட்டங்களுக்குப் போகவேண்டியிருக்கும். எல்லாமே பெட்டியுடன்தான். குளிப்பதற்குப் பெரும்பாலும் குளத்தையே தேர்ந்தெடுத்தான். அந்தப் பெட்டியையே சலவைக் கல்லாகவும் பாவித்தான். தான். அப்போதெல்லாம், தன்னுடனிருந்த போராளிகளுக்கு, தான் செய்த தவறு எவ்வளவு பாரதூரமானது என்றும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவென்றும் விளக்கினான். அது போலவே, தன்னுடனிருந்து தவறு செய்யும் போராளிகளுக்கு, அத்தவறின் விளைவாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் இவன் விளக்குவான். அந்த விளக்கங்கள் இவன் மீதிருந்த மதிப்பை மேலும் உயர்த்தின.


எல்லோரையும் போல சண்டையில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இவனுக்கும் இருந்தது. இராணுவ நெருக்கடிகள் மிகுந்த நேரங்களில் அலுவலகத்தில் இவனைக் காணக்கிடைக்காது. பரபரப்பு முடிந்த பின்னர்தான் அலுவலகப் பக்கம் தென்படுவான். தலையைச் சொறிந்து கொண்டே, எந்த இடச் சண்டையில் தான் கலந்து ெகாண்டான் என்பதைச் சொல்வான் தனக்குப் பொறுப்பானவர்களிடம்.


இவனது போராட்ட வாழ்வின் இறுதிப் பகுதி,வவுனியா தடைமுகாம் பகுதியிலேயே கழிந்தது. புலனாய்வுப் பிரிவு மிகவும் விழிப்புடன் பணியாற்றவேண்டிய பகுதி இது. எல்லை கடந்தால் எதிரியின் பிரதேசம். எனவே, தேசத்துரோகிகளின் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும். அதே வேளை, ஏனைய பொதுமக்களை அநாவசியமாகச் சிரமப்படுத்தக் கூடாது; அவர்கள் மனம் நோகாதவாறு நடக்க வேண்டும். எனவே, இப்பணி இலகுவானதல்ல.


இப்பணிகளைத் தொடர்ந்துவரும் காலத்தில், மாவீரர் வாரம் நெருங்கியது.


மாவீரர் வாரத்துக்கான பணிகளை ஆரம்பித்த போது, நண்பர்களிடம் சொன்னான்: "எனக்கு மாவீரர் வாரத்துக்கை சாகிறதுதான் விருப்பம்; அதுக்குள்ள சாகிறதுக்குக் குடுத்து வச்சிருக்கவேணும்."


அன்று நொச்சிமோட்டைப் பக்கமாக சிறீலங்கா இராணுவத்தினர் வெளியேறி விட்டனர் என்று, தகவல் கிடைத்தது. உடனே இவன் தன் நண்பர்களுடன் இராணுவ முன்னேற்றம் நிகழ்ந்த இடத்தை நோக்கி விரைந்தான். 'சண்டைக்கு முதல் இராணுவத்தினர் எதுவரை வந்துள்ளார்கள் என்பதை அறிய வேண்டும். இதற்கு நொச்சி மோட்டைப் பாலத்தடியில் உள்ள ஒரு மரத்தின் மீது ஏறவேண்டும்' எனத் தீர்மானித்தான். அவர்களோ அப்பாலத்தைத் தாண்டி வந்துவிட்டார்கள். அந்த விபரம் இவனுக்கும், இவனது நண்பர்களுக்கும் தெரியாது. இவர்கள் இராணுவத்தின் வியூகத்துள் அகப்பட்டுவிட்டனர். இந் நிலையில் இவனது நண்பனொருவன் காயமடைந்தான். எனினும், சண்டை நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே அவன் மீட்கப் பட்டான். இந்நிலையில் கதிரவன் காயம் டைந்தான். போர்முனையிலிருந்து வைத்தியசாலைக்குப் போகும்வரை, தனது அலுவலகத்திலிருந்த ஆவணங்களைக் காப்பாற்றிப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லுமாறு, கூறிக்கொண்டிருந் தான். அவை சிறீலங்கா இராணுவத்தினரீடம் சிக்கிவிட்டால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும்.எனவே, எப்பாடுபட்டேனும் அவை பாதுகாக்கப்படவேண்டியவை.


கதிரவன் சொல்லிக்கொண்டேயிருந்தான் - அதைக் காப்பாற்றும்படி. கிளிநொச்சி மருத்துவமனையில் இவன் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், அவற்றினைக் காப்பாற்றியாயிற்று என்ற செய்தி, இவனுக்கு உரைக்கப்பட்டது.அதைக் கேட்டதும்,அது வரை இருந்த இவனது பரபரப்பு ஓய்ந்தது;பரபரப்பு மட்டுமல்ல,இவனது உடலின் இயக்கமும்தான்.


"எனக்கு மாவீரர் வாரத்துக்கை சாகிறதுதான் விருப்பம்; அதுக்குள்ள சாகிறதுக்குக் குடுத்து வச்சிருக்கவேணும்" என்ற இவனது வார்த்தைகளும், இவனது வாழ்வும். எங்களால் மறக்கமுடியாதவை. என்றுமே


இவனது பிரிவுச் செய்தி சிறீலங்காப் படையினர் மூலமாகத்தான் இவனது அன்னைக்குக் கிடைத்தது. அவர் அந்த வீட்டில் பதிக்கப்பட்டிருந்த இவனது பிஞ்சுப் பாதங்களின் அடையாளங்களைப் பார்த்திருப்பார்.


"சீவியத்தில் என்னை நேசித்தவர்களே, மரணத்திலும் என்னை மறவாதீர்" என்ற வாக்கியம், அவருக்கு நினைவில் வந்திருக்கும்! 




விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code