வீரச்சாவு நிகழ்வு விபரம்: மணலாறு மண்கிண்டிமலை சிறிலங்கா படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவு
நக்கீரா! நீ பிறந்த பழுகாமத்துக்கு வழு ஏற்படக்கூடாதென நினைத்த மறவனே! கடைசி நிமிடம் வரை உனக்கிருந்த மனக்குறையை வரிகளாக்கி, தமிழ் மக்களின் முன் வைக்கிறேன்.
“எல்லா தாய் தகப்பனும் வந்து வந்து தங்கட பிள்ளையள உயிரோட பாத்திட்டு போயிட்டாங்க அம்மா மட்டும் ஏன் இன்னும் வரவில்லை நான் இந்தச் சண்டையில் செத்தா பொடியக்கூட பார்க்க வரமாட்டாவா மச்சான்…” என்று, கடைசி நிமிடத்திலும் உன் மனதில் கிடந்த மனக்குறையை, ஏக்கத்தை வெளியிட்டாய். உன்னை உன் தாய் பார்க்கக் கொடுத்துவைக்காமல் போகலாம் ஆனால் உன் வீரத்தை கேட்டு நிச்சயம் கண்கலங்க, நிறைவு கொண்டிருப்பாள்.
நக்கீரா! உனக்கு உன் தாயைக் காணவில்லை என்று குறை. ஆனால் நாமெல்லாம் உன்னில்தானே எம் தாயைக் கண்டோம். உன் செயலில்தானே எம்தாயின் அன்பைப் பெற்றோம். நாம் காயப்பட்டிருந்தபோதும், நோயுற்றிருந்த போதும் அருவரூப்பின்றிக் காயம் கழுவியது… கருணையோடு பராமரித்தது…. இதைவிட உலகத்தில் உயர்ந்த பணி என்ன உண்டு? தாயிடந்தான் தூய அன்னைப் பெற முடியுமென நினைத்த எமக்கு, ஒரு போராளியிடமும் அதைப் பெறமுடியுமென்பதை உணர்த்திவிட்டாய். தாயை வென்றுவிட்டாய். தலைவன் சரியாகத்தான் வளர்த்தார் என்பதை நிலைநிறுத்திவிட்டாய்.
‘மின்னல்’ தாக்குதலில் காயமுற்ற நூற்றுக்கணக்கான போராளிகளுக்கு, ஓடி ஓடி நீ செய்த மருத்துவப்பணி சாதாரணமானதா…? எழுத்தில் வடிக்கக்கூடியதா…? சொல்லி முடிக்கக்கூடியதா…?
நக்கீரா! மற்றவர்கள் உன்னைப் பேசியபோதெல்லாம் மௌமாக இருந்து பின் சிரித்துப் பேசுவாயே, அது எப்படி உன்னால் சாத்தியமானது! பொறுமையை உன்னிடமிருந்துதானே சிறிதளவாயினும் நான் கற்றுக்கொண்டேன்.
ஒரேயொருமுறை நீ கோபமுற்றதையும் எவருடனும் பேசாது மௌனமாக இருந்ததையும் கண்டிருக்கின்றேன். ‘செவண்பவர்’ இராணுவ நடவடிக்கையை முறியடிக்கச் சென்ற படையணியில் இடம் பெறமுடியாது போனபோது, உனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா….? அன்றுதான் நீ நக்கீரனாய் நின்றாய். உன் ஈரநெஞ்சிலும் கனல் பறப்பதை அன்றுதான் கண்டேன். உனது கோபத்துக்குக் காரணம். நியாயமான கோபந்தான். ஆனால் உன் பெரும் பணியொன்றினைக் கருதியே, தளபதி உன்னை அக்களத்துக்கு அனுப்பவில்லையென்பதை அறிந்து, கண் கலங்கி நீ நின்ற நாளையும் நான் மறந்துவிடவில்லை.
‘இதயபூமி’ தாக்குதல் நடவடிக்கைக்கான பயிற்சி நடந்துகொண்டிருந்த போது செத்துவிழுவதாக நடித்தலும்,; விழுந்த உன்னை நான் தூக்கிச் சென்றதும், பின்பொத்தென நிலத்தில் போட்டதும் நிஜமாக மாறிவிடும் என்று, நான் நினைக்கவில்லையடா!
தாக்குதலுக்குப் புறப்படும்போது “என்ன, நக்கரன்ர முகம் வித்தியாசமாய்க் கிடக்கு சாகப்போறன் போல கிடக்கு” என்று நான் சொன்னதும்.. சொன்னது நிகழ்ந்ததும்…
ஒரு தாயை இழந்துவிட்டோம். உணர்கின்றோம். ஆனால், உன் உயிர் இதயபூமியை புனிதமாக்கி விட்டது. அங்கே உன்குருதியால் பதிந்த புதிய வரலாற்று வரிகள்…!
‘இதயபூமி – 1’ இராணுவ நடவடிக்கையின் வெற்றிக்கு உயிர்தந்த பதின்மர்!
மணலாறு, அப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல. தமிழீழகத்தின் எத்திசையில் இருப்பவர்களுக்கும் அந்தமண் சொந்தமண் எம் வீரகாவியத்தின் தலைவனைக் காத்துத்தந்த பூமி அது, இந்த உண்மை எம் வீரர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதும், தலைவன் எமது மண்ணில் கொண்ட தளராத பற்றும், அவனது வளர்ப்புக்களின் அயராத கடின பயிற்சியும், நிறைவாகும் வரை மறைவாக இருக்கும் விவேகமும் இதயபூமி நடவடிக்கையின் வெற்றிக்கு வழிசமைத்தவைகளாகும். இந்த வெற்றி வரலாற்றோடும், இதயத்தோடும், இதயபூமியோடும் இரண்டறக் கலந்துபோனவர்கள்தான்.
லெப்டினன்ட் திருமலைநம்பி / பெர்னாண்டோ
லெப்டினன்ட் நக்கீரன் / செந்தூரன்
லெப்டினன்ட் காந்தி / அழகப்பன்
லெப்டினன்ட் விமலன் / வில்லவன்
லெப்டினன்ட் ஈழவேந்தன் / அமீர்
லெப்டினன்ட் குயிலன்
லெப்டினன்ட் வாசன் / தமிழ்வாணன்
லெப்டினன்ட் விக்ரம் / துரைக்கண்ணன்
2ம் லெப்டினன்ட் சியாமணி
2ம் லெப்டினன்ட் புகழரசன்





0 கருத்துகள்