சுப்பிரமணியம் சந்திரக்குமார்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 01.03.1972
வீரச்சாவு: 24.11.1995
நிகழ்வு: யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு
அந்த உயரமான அவளது உருவத்துக்கும் கதைக்கும் பொருத்தமில்லை. பயிற்சிப் பாசறையில் நீள நீள வைத்தபடி ஒடுகின்ற கால்கள். கனரக ஆயுதத்தைத் தூக்கியபடி ஒடும் போது இவளுக்கு எவ்வளவு கம்பீரம். கண் கொட்டாமல் அவளையே பார்த்தபடி..
அந்த உருவமும் கம்பீரமும் கண்களைவிட்டு மறைந்து விட்டனவா? அகக் கண்களில் அவள் நிழலை நாங்கள். நினைத்தபடி
பயிற்சிப் பாசறைக்கு ஒருமுறை மனம் சென்று திரும்பும் பதட்டம் என்பதே துளியளவும் கிடையாத அவளின் கதைகள், ஒரு குழந்தையினுடையதைப் போலவே ஆறுதலாக நீண்டு வரும். சிணுங்களுடன் முடிவடையும்.
உருவத்திற்கும் கதைக்கும் பொருத்தமேயில்லை.
ஆனையிறவின் உப்பளக் காற்றும் இயக்கச்சியின் தென்னந்தோட்டங்களும் இன்னும் பலாலியின் கரிய பனைவெளிகளும் அவளுக்குப் பரிச்சயமானவை. அவளது வியர்வைத்துளிகளை அவை உறிஞ்சியிருக்கும். இரவில் ஊர்ந்து நகரும்போது. அவளது உடலில் சிராய்ப்புக் காயங்களிலிருந்து வெளிவந்த குருதி காய்ந்திருக்கும்.
அதில்பயிற்சியில் காட்டிய திறமையும் அவளின் கம்பீரமான உருவமும் அவளை ஐம்பது கலிபர் கனரக ஆயுதப் பிரிவுக்குப் பயிற்சி ஆசானாக்கியது. அதில் இருந்த படியே இளைய போராளிகளை இந்த மண்ணுக்காகத் தந்தாள்.
அவள் ஒரு வாகனச் சாரதியும் கூட முழுமையாக வாகனம் ஓட்டுவதில் பயிற்சி பெற்று திறமையாகச் செயற்பட்ட போது அவளுக்குத் தலைவரின் பரிசு கிடைத்தது. அந்தச் சந்தர்ப்பம் என்றுமில்லாத மகிழ்ச்சியையும் பெருமையையும் கொடுத்தது. அதுவே அவளது செயற்பாடுகளுள் தீவிரத்தை ஏற்படுத்தியிருந்தது.
'சூரியக்கதிர்' வலிகாமச் சமர் அவளின் கடைசிச் சண்டை. ஆண் போராளிகளின் ஒரு பகுதிக்கு அவளது குழு பின்னணி வேலைகளில் ஈடுபட்டது. இருள் மூடியிருந்த இரவுகளில் பதுங்கு குழி வெட்டி மண் மூட்டை அடுக்கி பாதுகாப்பு அரண் அமைத்து எத்தனையோ பொழுதுகள் சாப்பாடின்றிக் கழியும். வயிற்றைப் பசி கிள்ள. நித்திரையின்றிய இரவுகளில் அவள் தனது ரீ எண்பத்திரண்டு ரகத் துப்பாக்கியுடன் நடப்பாள்.
தலை நிமிர்த்த இயலாத ரவை மழை. அடுக்கடுக்காக வந்து விழும் எறிகணை மழைபட்டு கட்டிடங்களும் வீடுகளும் சிதையும் - உடல்களும் சிதறும். அந்த இடங்களில் அவள் ஒடி ஒடி பதுங்கு குழி அமைத்தாள்.
அன்றைய நாளும் அப்படித்தான். அந்தச் சண்டை உக்கிரமானதாகத்தான் இருந்தது. அரியாலைக்குள் புகுந்து ஊடுருவித் தாக்கிய எங்களணிக்குள் அவளும்.
எல்லாம் முடிவுற்று. எடுத்த ஆயுதங்களை அள்ளிக்கொண்டு நகர்ந்தபோது அவள் வரவில்லை. 'செஞ்சோலையின்' பக்கத்து கடையில் விழுந்த எறிகணை ஒன்றில் காயப்பட்டு.. அவள் வரவேயில்லை.
நீண்ட கம்பீரமான எங்கள் அலைமகளின் உடலை மட்டும் நாங்கள் சுமந்து வந்தோம் அவளுக்கு விருப்பமான அந்தப் பழைய பாட்டுகளைக் காற்றள்ளி வந்தன. அவளது உயிர் மூச்சுமட்டும் வலிகாமத்தின் பாரம் சுமந்த காற்றோடு. 1995.11.15 இன் பூக்கள் உதிர்ந்த மாலைப் பொழுதில் நெஞ்சில் சோகம் கவிந்தது.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்