Ad Code

Recent Posts

மேஜர் தயாபரனின் வீர வரலாற்று நினைவுகள்


மேஜர் தயாபரன்

கனகசபை சிறிதரன்

இராஜேந்திரகுளம், வவுனியா

வீரப்பிறப்பு: - 29.01.1965

வீரச்சாவு: - 18.06.1990


நிகழ்வு: - வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

   

மேஐர் தயாபரன்


தயாபரன்! அவ்வளவு நிறமற்ற மெலிந்த அழகான தோற்றம். அவனுக்கு இருபத்தைந்து வயதுதான். ஆனாலும் எம் மண்ணின் விடுதலைக்காக நீண்ட நாட்கள் போராடியவன். இன்று தன் நினைவுகளை மட்டும் விதைத்து விட்டு....... -


வன்னி மண்ணில் ஒரு கிராமத்தில், அமைதியாக வெளி நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபாடு காட்டாமல் வாழ்ந்த தயாபரனை, சுற்றி நடந்த சமூகத்தின் மாறுதல்கள் ஒரு போராளியாக உருவாக்கி இருந்தது, உண்மை தான்......


இராசேந்திரங்குளம் - இங்குதான் தயாபரன் பிறந்தான், இது வன்னியின் ஆதிக் கிராமங்களில் ஒன்று. அந்தக் குளத்தையும் அதன் கீழிருந்த வயல்களையும் நம்பி, அங்கே மக்கள் காலங்காலமாக வாழ்ந்தார்கள். அது ஒரு எல்லைக் கிராமமும் ஆகும்.


  அதன் அருகில் இன்னொரு தமிழ்க் கிராமமான பாவற்குளத்தில், மேலும் மேலும் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் பாவற்குளத்தின் உட்பக்கமாக இருந்ததால் " உட்குளம்'' என அழைக்கப்பட்ட குளத்தை உலுக்குளம் என்ற பெயர் மாற்றத்தோடு சிங்களக் கிராமமாக உருவாக்கினார்கள். இனவெறி ஊட்டப்பட்ட புதிய சிங்களவர்களின் வருகையும் அவர்களது அடாவடித்தனங்களும், தமிழ் மக்களின் மனங்களில் அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தின. 


காலப் போக்கில் பாவற்குளத்திலிருந்தும் அதன் அயற்கிராமங்களிலிருந்தும் தமிழ் மக்கள், குடியேற்றப்பட்ட சிங்களக் காடையர்களினாலும் சிறீலங்காப் படையினராலும் மிகக் கொடூரமான முறையில் விரட்டப்பட்டார்கள். அந் நிகழ்வு எதிர் பார்த்தது தான். ஏனெனில் பாவற்குளமும் அதையொட்டிய பெரும் வயல் நிலங்களும் மிகவும் வளமானவை. அத்தோடு அவை சிங்கள எல்லைகளோடு இணைந்திருந்தன. இந்தக் கிராமங்களின் இழப்புகளின் தொடர்ச்சியாக அடுத்தது இராசேந்திரங்குளமிருந்தது.


  இவையெல்லாம் தயாபரனின் கண் முன்னாலேயே நடந்தது. தன்னுடைய அயற்கிராமங்கள் பறி போனதும், தனது மக்கள் படு கொலை செய்யப்படுவதும், அவனை ஒரு போராளியாக உருவாக்கி இருந்தது.


1984 ஆம் ஆண்டுப் பகுதியில் அவன் தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டான். புலிகளின் 6 ஆவது பயிற்சி முகாமில் பயிற்சியைப் பெற்றபின், வவுனியா மாவட்டத்தில் போராட்ட நடவடிக்கைகளில் இவன் பங்கு பற்றத் தொடங்கினான். அங்கு போராட்டம் கருக்கட்டிய காலம். அங்கு வாழ்ந்த மக்களது உரிமைகளை அவர்களுக்கு வலியுறுத்தி, அவர்களுக்கெதிராகப் பயன்படுத்தப்படும் வன் முறைக்கு எதிராகப்போராட மக்களைத் தயார் படுத்தவேண்டிய நிலை இருந்தது. அத்துடன் புதிய போராளிகளை இணைத்து, இயக்கத்தைப் பலப்படுத்தவேண்டிய தேவையும் இருந்தது.


தயாபரன், போராட்டக் களத்தில் இறங்கியவுடன் முதலில் எமது விவசாயப் பண்ணைகளில் நின்றான். அதன் பின் சிறிய பயிற்சி முகாமொன்றிற்குப் பொறுப்பாளனாக இருந்து, புதிய போராளிகளை உருவாக்கினான். இந்த முகாமில் தான் தயாபரனின் திறமையும் ஆளுமையும் அடையாளங் காணப்பட்டன. இதன்பின்பு, தாக்குதற் பிரிவொன்றிற்குப் பொறுப்பாளனாகத் தயாபரன் நியமிக்கப்பட்டான்.


தமிழீழத்தின் எல்லைப்புற மாவட்டமான வவுனியா பரந்த பிரதேசத்தை உள்ளடக்கியது. எல்லையோரக் கிராமங்கள் சிங்களக் குடியேற்றங்களினால் பறிபோயிருந்தன. சிங்களப் படை முகாம்கள் எங்கும் பரந்திருந்தன. அப்பகுதியில் எமது தாக்குதற் பிரிவொன்றின் நடவடிக்கைகள் இலகுவானதல்ல...... மிகவும் சிரமமானது.


 எங்கள் எல்லையோரக் கிராமங்களிலிருந்து சிங்களவர்களை அகற்றுவதற்காகவும் ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காகவும், அவர்கள் எதிரிகளுடன் அடிக்கடி மோதவேண்டி இருந்தது. நீண்ட தூர நடைப்பயணங்கள். உணவற்று, நீரற்று - சில வேளைகளில் அவர்களின் தொடர்புகள் கூட அற்றுப் போய்விடும். ஆனால் அவர்கள் எங்கோ ஒரு மூலையில் எதிரிக்கெதிராகப் போராடிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் முகாமிற்குத் திரும்பிய பின்புதான், அவர்களுடைய பயணத்தின் கடினங்களும் சாதனைகளும் இழப்புக்களும் எங்களிற்குத் தெரியவரும். உண்மைதான் - எங்களின் உயிர்த் தோழர்களில் ஒருவனை நாம் இழந்திருப்போம்; இழப்பின் தாக்கம் எங்கள் வெற்றிகளை எல்லாம் மறைத்திருக்கும். 


இந்த நிலையில் தான்..

இந்திய - இலங்கை ஒப்பந்தமும், போர் ஓய்வு காலமும் ஏற்படுகிறது. அந்நேரத்தில் சமூக விரோத சக்திகளெல்லாம் வவுனியா நகரைத் தமது தளமாக்கி, நிலைபெற்றுக் கொள்கிறார்கள். ஒரு தினத்தில் புளொட்டினரால் கப்டன் தனம், கண்ணன், கைலை என புலிகளின் உறுப்பினர்கள் பலர் கொல்லப்படுகிறார்கள்,


நாங்கள் எம் தோழர்களின் இழப்புகளைத் தாங்க முடியாது தவிப்பதும், அதன் விளைவாகச் சினம் கொள்வதும் வழமைதான். அதுவும் ஆயுதமற்ற நிலையிலிருந்த எம்மீது ஒரு போரினைத் தொடுத்த புளொட்டினரை, எம்மால் மன்னிக்க முடியவில்லை. இதன் விளைவாக கல்பாய்ந்த வெட்டையில் இருந்த புளொட்டினரின் முகாம் எம்மால் அழிக்கப்படுகிறது. இத்தாக்குதலின் ஒரு பகுதிக்கு கப்டன் மகேந்தியும், தயாபரனும் தலைமை ஏற்று வழி நடாத்தினார்கள். அச் சமூக விரோதிகளின் கைகளிலிருந்த ஆயுதங்களும், அன்று எம்மால் கைப்பற்றப்பட்டன. சிங்கள இராணுவ முகாம்களுக்கு அருகிலேயோ இந்தியப் படை முகாம்களுக்கு உள்ளேயோ கூட தமக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை, அச் சமூக விரோதிகள் அதன்பின்பு புரிந்துகொண்டார்கள்,


  இந்தியா, இலங்கை அரசுடனும் சமூக விரோத சக்திகளுடனும் இணைந்து கொண்டு எமக்கு எதிராகப் போர் தொடுத்த நேரம், தயாபரன் தன்படை அணியினருடன் பல முனைகளில் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருந்தான். இந்த நேரத்தில், சிங்கள மயமாக்கப்பட்டுவிட்ட பாவற்குளத்தில் ரோந்து வந்த சிங்கள இராணுவத்தினர் மீதும் ஊர்காவல் படையினர்மீதும், ஒரு தாக்குதலைத் தயாபரன் தலைமையேற்று நடாத்தினான். 


இத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டு, ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அத்துடன் இத் தாக்குதல், இரண்டு நாட்டுப் படைகளின் பாதுகாப்புடன் பெருகிவந்த சிங்களக் குடியேற்றம் ஒன்றையும் அகற்றியது. இதே போல இன்னொரு எல்லைப்பகுதியான செட்டிகுளத்திலும் இந்திய இராணுவ வாகனம் ஒன்றின் மீது, தயாபரன் தாக்குதலை நடாத்தினான். (இதில் 18 படையினர் கொல்லப்பட்டு 1 பிறன் எல்.எம்.ஜி. உம் 17 எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளும் எம்மால் கைப் பற்றப்பட்டன) மிக நெருக்கடியான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் சம்பவங்கள், எங்கள் மக்களின் மனங்களில் நம்பிக்கையை விதைத்ததுடன், அரசினரால் திட்டமிடப்பட்டு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பரவத் தொடங்கிய சிங்களக் குடியேற்றங்களையும் நிறுத்தின. 


இதன் பின் சிலகாலங்கள் தலைவருடன் நின்றபின், திரும்பவும் தயாபரன் வவுனியா மாவட்டத்திற்கு வந்தான். அந்த நேரம் புதிய பயிற்சி முகாமொன்றை நடத்த அவர்கள் தீர்மானித்தார்கள். இப்பயிற்சி முகாமிற்குத் தயாபரனே பொறுப்பாளனாக இருந்து, புதிய போராளிகளை உருவாக்கினான். இதன் விளைவாக வவுனியா மாவட்டத்தில் போராளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் பின்பு, பரந்துபட்ட பிரதேசங்களை உள்ளடக்கிய வவுனியா மாவட்டத்தின் எல்லைப்புறப் பிர தேசங்களில் ஒன்றான செட்டிகுளம் பகுதிக்கு, எமது படை அணி ஒன்றை நிரந்தரமாக அனுப்பி வைக்கக்கூடியதாக இருந்தது. அப் படை அணியின் பொறுப்பாளனாகவும், செட்டிகுளப் பிரதேசப் பொறுப்பாளனாகவும், மேஜர் தயாபரனே நியமிக்கப்பட்டான்.


 சில காலங்களின் பின் தயாபரன் வவுனியா மாவட்டத்திற்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். தயாபரன் வவுனியா மாவட்டத்தில் இயக்கத்தின் வளர்ச்சிக்காகக் கடுமையாக உழைத்தான், பல பயிற்சி முகாம்களை ஏற்படுத்திப் புதிய போராளிகளை உருவாக்கியதோடு, போர்முறைத் திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தினான்.


 இந்த நிலையில் தான் இந்திய இராணுவத்தினரின் வெளியேற்றமும் சிறீலங்கா அரசுடனான பேச்சுவார்த்தையும் ஏற்பட்டது. ஆனாலும் சிறீலங்கா அரசு இராணுவ தயார்ப்படுத்தலையும், தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களையும் செய்து வந்தது. இறுதியில் ஒரு யுத்தத்தை எம் தேசத்தின்மீது கட்டவிழ்த்து விட்டது.


தமிழீழமெங்கும் நடந்த போரில் புலிகள் பல சாதனைகளை நிகழ்த்தி இருந்தனர். சிறீலங்கா இராணுவத்தினரின் முகாம்கள் பல முற்றாக அழிக்கப்பட்டன. பெருந்தொகையான இராணுவத்தினர் கொல்லப்பட்டு, அவர்களது ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த யுத்தத்திற்கு வவுனியாவில் தயாபரன் தலைமையேற்று வழிநடாத்திக் கொண்டிருந்தான்.  வவுனியாவில் மிகப்பெரிய இராணுவ முகாம்களைக் கொண்டிருந்தபோதும் சிறீலங்கா இராணுவத்தினர் முன்னேற முடியாமல் இருந்தனர். தங்களின் இயலாமையின் விளைவாக அப்பாவித் தமிழ்மக்கள் மீது காட்டு மிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள். 


17-6.1990 மாலை நேரம் , குருமன்காட்டிற்கு வந்த இராணுவத்தினரை எம்மவர்கள் புகையிரதக் கடவை வரை விரட்டிச்சென்று திரும்பினார்கள். மறு நாள் அவ்விடத்தை நோக்கி எம்மவர்கள் இருபிரிவாக முன்னேறினார்கள். முதலில் சென்ற இருவரும் புகையிரதப்பாதையில் ஏறியவுடன், அருகிலிருந்த தண்ணீர்த் தொட்டியிலிருந்து இராணுவத்தினர் சுடத்தொடங்குகிறார்கள். எம்மவர்கள் இருவரும் தமக்கு வசதியாக நிலையெடுத்து, எதிரியை நோக்கித் தமது ஆயுதங்களை இயக்கத் தொடங்கினார்கள்.


   எம்மவர்கள் சிலகணங்களில் ஒன்றாகச் சேர்ந்தபின் எதிரி பலத்த எதிர்ப்பைச் சந்திக்கின்றான், தாக்குதலைத் தயாபரன் தலைமையேற்று வழிநடாத்திக் கொண்டிருந்தான். புகையிரதப் பாதைக்கு மறுபுறத்தில் இராணுவத்தினர் இருந்த படியால், எம்மவர்கள் எழுந்து நின்றே தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்தனர். அது ஒரு எல்லைப்புற யுத்தம் மாதிரி...., எதிரி வீழ்வதும், அவனை மீட்கப் பலர் முயல்வதுமாக.......


தயாபரன் ஒரு முதிரை மரத்தின் மறைவில் நின்று கொண்டு, தனது எம் - 16 துப்பாக்கியை எதிரியை நோக்கி இயக்கிக் கொண்டிருந்தான். ஆனால் தண்ணீர்த்தொட்டியிலிருந்த சிறீலங்காப் படையினரின் துப்பாக்கிரவை ஒன்று, தயாபரனின் வயிற்றை ஆழக்காயப்படுத்தியது.


  அவன் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தான்; அவனுடைய தோழர்கள் அவனைச் சுற்றிவர இருந்தனர். திட்டமிடுவதிலும், போராளிகளை வழி நடாத்துவதிலும் தயாபரன் சிறந்த அனுபவம் பெற்றிருந்தான். அதேநேரம் அவன் தன்னுடைய சகதோழர்களை அளவுகடந்து நேசித்தான்.    


அவர்களின் ஆபத்துக்களின்போதெல்லாம் அவன் அவர்களுடனேயே இருந்தான். உண்மைதான், நாம் எங்களிற்கிடையே பிரிக்க முடியாத பற்றொன்றை வளர்த்துக்கொள்கின்றோம். அதுதான் எங்களின் ஒவ்வொரு தோழனின் இழப்பின்போதும் நாம் கலங்கி நிற்கின்றோம். எதுவுமே செய்யமுடியாத சில கணங்களைச் சந்திக்கின்றோம். ஒவ்வொரு தோழனின் இழப்பின்போதும் தயாபரன் தவிப்பான். ஆனால் இன்று, தயாபரனை இழந்து விடுவோமோ என நாம் தவித்துக் கொண்டிருந்தோம்.


தயாபரன் தன் தோழர்களை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தான், வேதனையினூடே அவனது வார்த்தைகள் மௌனமாக வெளிவந்து கொண்டிருந்தன. அவை அறிவுரைகளாக, கட்டளைகளாக....... அவன் மௌனமாகிவிட்டான்.


மலரப் போகும் எமது தமிழீழ தேசத்தில் நாம் உயிருடன் இருப்போமோ இல்லையோ என்பது, கேள்விக்குறியே. இது - எமது மண்ணை மீட்பதற்கான போர் இதில் மரணத்தை நாம் தழுவநேரிடலாம். ஆனால் எமது மக்கள் விடுதலை பெற்று, சுதந்திர தேசத்தில் மகிழ்ச்சிகரமாக வாழ்வார்கள் என்பது தான், எமது மகிழ்ச்சியாகும்.


தயாபரன் இன்று எம்மோடு இல்லை. இப்படி இன்று எத்தனையோ போராளிகள் தமது எண்ணங்களை, உணர்வுகளை எம்மிடையே விட்டுச் சென்றுள்ளார்கள். இவை எமது மக்களினது விடிவிற்கான மரணங்கள்.


இடர் பல நேரிலும் –


எதிரிகள் ஏவிய குண்டுகள்


எம்மீது பாயினும் :


  எம் கரம் ஓயாது, கனன்று கொண்டே ......


விடுதலை நோக்கியே படையணி ஒன்றிங்கு


விரைந்திடும் எம் எல்லை தனில்.


வவுனியா மாவட்டப் பொறுப்பாளரான மேஜர் தயாபரன் (சிறிதரன்), இராசேந்திரங்குளம்


எனும் கிராமத்தைப் பிறப்பிடமா ANகக் கொண்டவன். போராட்ட


நடவடிக்கைகளைத் திட்டமிடுவதிலும், போராளிகளை வழி நடத்துவதிலும் சிறந்த அனுபவம் பெற்றவனான தயாபரன், பல தாக்குதற் சம்பவங்களிற் குத்தலைமையேற்று வழி நடத்தி னான். கிராமத்து மக்களி டையே நன்றாகப் பரிச்சய மாகி ஒன்றிக் கலந்துவிட்ட மேஜர் தயாபரன், 18.06.1990 அன்று நடைபெற்ற சிறீலங்கா இராணுவத்தினருடனான யுத்தத்தில், வீரமரணமடைந்தான்.




  - ஜெயம்*

விடுதலைப் புலிகள் இதழ் 


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code