உ. சோலை விக்னேஸ்வரன்
அடம்பன், மன்னார்
வீரப்பிறப்பு: 11.10.1966
வீரச்சாவு: 16.07.1991
நிகழ்வு: மணலாறு கோட்டத்தில் விடுதலைப் புலிகளின் முகாமை நோக்கி நகர்ந்த சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
தென் ஆசியாவின் வரலாற்றுப் போக்கை மாற்றியதில் மணலாற்று மண்ணுக்கு தனியிடமுண்டு. இந்தியப் படையுடன் இங்கு நடந்த போர்கள் பாரம்பரிய யுத்தங்களையெல்லாம் கேள்விக்குரியதாக்கிற்று. இந்திய இராணுவத்தில் சிறப்புமிக்கதாகக் கருதப்பட்ட படைப்பிரிவுகளெல்லாம் தமது பெருமையை இழந்தன. இங்கு நடந்த வியப்பூட்டும் அனுபவங்களை இந்திய இராணுவத் தளபதிகள் நூல் வடிவில் வெளியிடுகின்றனர். மற்றும் பல வரலாற்று ஆய்வாளர்கள் இதனை ஆய்வு செய்து கொண்டிருக் கின்றனர். 'அமைதிப் படையில் கடமையாற்றி உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிடும் அளவுக்கு இந்தியப் படையின் இழப்பு இருந்தது.
இந்தப் பெருமை மிக்க போரில் கலந்து கொண்ட ஒரு அணியை வழி நடத்தியவன்தான் வீமன். இவன் மன்னார் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவன். அங்கேயே பயிற்சியும் பெற்றவன். சொல்லப்படும் விடயத்தை இலகுவாக புரிந்து கொள்பவன். யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா இராணுவத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குரும்பசிட்டி மினிமுகாம் தாக்குதல் உட்பட பல தாக்குதலில் கலந்த கொண்டவன். யாழ்ப்பாணத்தில் இந்தியப் படையினருடனான போர்களில் பங்குபற்றிய பின் மணலாற்றில் இவனது பணி தொடர்ந்தது.
1988 ஆம் ஆண்டு மே மாதம் 23ம் நாள் மணலாற்றில் இந்தியப் படையினருடனான போர் ஆரம்பித்தது. காலை 5.15க்கு ஆரம்பித்த இந்தச் சண்டையில் பிற்பகல் 4-00 மணிவரை இந்தச் சண்டையில் கலந்த கொண்ட எவருமே அந்த இடத்தை விட்டு விலகவேயில்லை. வேறொரு முகாமிலிருந்த வீமன் சண்டை தொடங்கிய பத்து நிமிடத்துக்குள் ஜி.3 துப்பாக்கியுடன் அங்கு நின்றான். அவனைப் பொறுத்தவரை சண்டை செய்வதற்கு இது நல்ல சந்தர்ப்பம். அதனால் அவன் மகிழ்ச்சியுடன் கத்திக்கத்திச் சண்டை போட்டான். அன்றிலிருந்து இந்தியப்படை இந்த மண்ணை விட்டுப் போகும் வரை அவனது இந்தச் சுபாவம் மாறவில்லை.
அந்த இடைக்காலத்தில் மணலாற்று மண்ணில் நடந்த அனுபவங்கள் மறக்கமுடியாதவை. ஒரு காலத்தில் உப்புக்குக் கூட தட்டுப்பாடு இருந்தது. காயப்படுவோருக்கு வைத்தியம் செய்வதற்குரிய சூழ்நிலை இல்லை ஒவ்வொரு போராளியும் தமது நெருங்கிய நண்பர்களை இழந்திருந்தனர். ஆனாலும் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையானாலும் இவனது கலகலப்பான போக்கை மாற்றமுடியவில்லை.
எந்த நேரமும் இந்தியப் படை வரலாம் என்பதால் உணவைச் சேமிப்பதில் வெகு அவதானமாக இருக்கவேண்டியிருந்தது. அவற்றை செய்வதில் உருமறைப்புச் மரங்கள்கூட பெரும் பங்கு வகித்தன. இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி இந்திய வானொலியில் ஒலிபரப்பப் பட்ட கவியரங்கு ஒன்றில் வன்னிக் காட்டு மரங்கள் கூட காட்டிக்கொடுக்காது என்று குறிப்பிடுமளவிற்கு எமது மண் உயர்ந்து நின்றது. ஒரு நாள் இவன் மரத்தில் சிறாம்பிகட்டி உணவைச் சேமிக்கும்போது கையை விட்டுவிட்டு நிற்கிறேன் பார் என்று தனது நண்பனிடம் கூறியபோது மரத்திலிருந்த தவறிவிழுந்தான் அதனால் படுக்கையிலேயே கிடக்கவேண்டிய நிலை. முற்றுகையென்றால் இவனையும் படுக்கையுடன் கொண்டுபோக வேண்டும். அந்த நிலையிலும் இவனது கலகலப்பு மாறவில்லை. அதுதான் அவனது தனித்துவம்.
குணமடைந்து மீண்டும் களத்துக்கு திரும்பினான். இளைய தலைமுறைப் போராளிகளை வழிநடத்தினான். திட்டமிட்டு செயலாற்றுவவதில் இவனுக்கு எவ்வளவு திறமையிருந்ததோ அதேயளவுக்கு ஒரு போராளியின் மனதை அறிந்து செயற்படும் ஆற்றலுமிருந்தது. போராளிகளின் இன்ப துன்பத்தில் பங்கு கொள்வான். அவர்களைத் தட்டிக்கொடுத்து புதுத்தெம்புடன் அவர்களை போராட வைப்பான்.
பொதுவாக இவனது முகாம் எப்போதும் மீண்டும் மகிழ்ச்சியுடன் காணப்படும். இந்திய ஜவான்களெல்லாம் மரண பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கையில் இவனது முகாமில் அடிக்கடி கலை நிகழ்ச்சிகள் நடக்கும். சனி, ஞாயிறு தினங்களில் விளையாட்டுக்கள் நடைபெறும். அந்த முகாமில் ஒரு மரை, ஒரு கரடி என்பவற்றுடன் ஒரு கருங்குரங்கையும் வளர்த்தான். அது ஒரு அபூர்வ ஆற்றல் மிக்கது.
இவனைப் போலவே எல்லோரும் எப்போதும் சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டுமென்று விரும்பியது.
யாருக்காவது ஒருவர் அடித்தால் அடிப்பவரை அது கையைப்பிடித்துத் தடுக்கும். இருவரும் ஒற்றுமையாக இருப்பதைக் கண்டாலே அதற்குத் திருப்தியேற்படும். புதிதாக அந்த முகாமுக்கு வருபவர்கள் இதனைப் பார்த்து வியப்பார்கள்.
காட்டிற்குள் சென்றபுதிதில் திசையறிகருவி மூலம் காட்டை இனங்காண்பதில் வல்லவர்களாக இருந்தவர்களில் இவனும் ஒருவன். மரணத்தின் வாசலைச் சந்தித்தது போன்ற மிகப் பயங்கரமான முற்றுகைக்குள் எதிரிப்படையை மிகக்கிட்டிய தூரத்தில் இனங்கண்ட சம்பவங்களெல்லாம் ஏராளம். அப்போதெல்லாம் திசையறிகருவியின் துணையுடன் போராளிகளை பத்திரமான இடங்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறான்..
சிறிலங்காப் படையினருடனான போர் மீண்டும் ஆரம்பித்த பின் இவன் மாங்குளம் முகாம் மீதான முற்றுகை, காரைநகர் சிறிலங்காப் படையினருடனான மோதல், முந்திரிகைக்குளத்தில் சிறிலங்காப் படையினரின் மினி முகாம் மீதான தாக்குதல் போன்ற பல தாக்குதல்களில் பங்கேற்றான்
அக் காலங்களில். இவனுடன் தாக்குதல்களில் கலந்து கொண்டோர் அதனை ஒரு இனிய நினைவுகளாகவே குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு சம்பவத்திலும் இவன் நடந்து கொண்ட விதம் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காக இவன் என்னென்ன விதத்தில் செயற்பட்டான் என்றெல்லாம் கதை கதையாகக் கூறுகின்றனர். நீந்தத் தெரியாதோரை கயிற்றில் கட்டி நீந்த விட்டது .. தமக்கு நண்டு சுட்டுக் கொடுத்தது. இளநீர் பறித்துக் கொடுத்தது... பொதுவாக போர்ச் சூழலில் இருக்கும் உணர்வே இருக்கவில்லை அவர்களுக்கு அக் காலங்களில் ஒரு விடுமுறையைக் கழிக்கும் உணர்வே இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். போர்க் களத்தில் எதிரியை காட்டி விட்டு சுட்டு வீழ்த்தியதை நினைத்து வியக்கின்றனர்.
இவ்வளவு ஆற்றல் மிக்க போராளியை 15.7.1991 இல் தொடங்கிய மணலாற்றுப் போரில் இழந்தோம். இப்போருக்கு முன்னதாக இராணுவத்தினரின் உளவுப் பிரிவொன்றுடன் மோதல் நிகழ்ந்தது. எனவே நடை பெறவிருக்கும் முற்றுகையை முறியடிக்க திட்டங்கள் தீட்டினான் இவன் "எங்கட காட்டுக்கை வந்திட்டுப் போறதெண்டா, சேட்டையா?...நல்ல அடி குடுத்துக்கலைக்க வேணும்" என்று கூறி விட்டு போராளிகளை தயார்படுத்தினான். மிகக் கடுமையான மோதல் நிகழ்ந்தது. தொடர்ச்சியான இந்த முற்றுகையில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்லும் வழியில் மறைந்திருந்த படையினர் தாக்கினர். அந்தப்போரின் போதே வீமன் இந்த மண்ணைப் பிரிந்தான். உயிர் பிரியும்வரை அந்த மோதலுக்குத் தலைமை தாங்கினான். இவனுடன் இன்னும் '12 போராளிகள் அச்சம்ப வத்தில் வீரச்சாவடைந்தனர். இவனால் வழிநடத்தப் பட்ட போராளிகள் அந்தப் பாரிய முற்றுகையை முறிய டித்தனர்.
இவனது உடல் இறுதி ஊர் வலத்துக்கு வந்தபோது மில்லரின் நினைவு தினக் கூட்டத்தில் இவன் ஆற்றிய உரையே தாயகபூமியில் மக்களுக்கு நினைவுக்கு வந்தது. எங்கள் சிங்களக் குடியேற்றத்தை முறியடிக்க அணிதிரள வேண்டுமென்று உணர்வு பூர்வமாக ஆற்றிய உரை அது. போராளிகள் இவனது கலகலப்பு, திட்ட மிடும் ஆற்றல் போன்ற வற்றை நினைத்து புத்துணர்வு பெறுகின்றனர். அவர்களுக்கு இவன் கடைசியாகச் சொன்னது இன்று சொன்னது போல் இருக்கிறது.
"எங்கடை காட்டுக்கை வந்திட்டுப் போறதெண்டா சேட்டையா ... நல்ல அடி குடுத்துக் கலைக்க வேணும்" ஆம் இந்தக் காடுகள், கடல்கள், வயல்கள் எல்லாமே எங்களுடையவை. இதை இழக்கச் சம்மதிக்கமாட்டார்கள் அவர்கள்.
-இலக்கியன் -
0 கருத்துகள்