மேஜர் துளசி
ஆள்வார்பிள்ளை லம்போதரன்
கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 07.12.1972
வீரச்சாவு: 15.03.1997
கடந்த சில நாட்கள் முழுதும் துளசியின் எண்ணங்களுடனேயே கழிந்தன. துளசியுடன் வாழ்ந்தவர்களிடம் அவனைப்பற்றி வினவிய போது எல்லோருமே அமைதியாகினர். முதலில் போராட்ட வாழ்க்கையில் ஒரு போராளியிடம் இருக்கவேண்டிய பண்புகளையும் கடந்து ஒரு உயர்ந்த போராளியாய் வாழ்ந்த அந்த வீரனைப் பற்றி எதைச் சொல்வதெனத் திகைத்தனர். தாங்கள் அவனைப்பற்றிச் சொல்லும் போது அந்த வீரனின் உண்மையான வடிவம் பாதிக்கப்பட்டு விடுமா என எல்லோரும் அவனைப்பற்றிச்
தயங்கியபடியே சொல்லத் தொடங்கினர். அந்தத் தயக்கத்துடனேயே அமைதியான தோற்றத்திற்குள் இருந்த அதியச உண்மைகளைச் சொல்ல எனது எழுதுகோல் முனைகின்றது.
ஆனையிறவு சாதாரண ஒரு மனிதனாகவும் அந்த மனிதர்களுள் அவன் தமிழனாகவும் பிறந்ததினால் போராட்ட வாழ்வு எல்லாப் போராளிகளைப் போலவும் அவனுக்கும் தவிர்க்க முடியாத தொன்றாகி விட்டது. அவன் போராளி ஆகிய பின் அவனுக்கான உறவுகள் விரிவடைந்து இந்தத் தேசம் அவனது உறவாகியது. அதன் பின் இந்த மண்ணில் உலவிய ஒவ்வொரு தாயையும் தன் தாயாகவும் ஒவ்வொரு தோழர்களையும் தன் சகோதரனாகவும் அவன் நேசித்தான். இந்த நேசிப்புக்களின் விளைவுதான் அவனது போராட்ட தடங்களாகப் பதிந்திருக்கின்றன. அப்படி இல்லாது விடின் இப்படி ஒரு போராளியால் செயற்பட முடியாது. அது முன்னரண்களில் அவன் வாழ்ந்த காலம். அப்போது அங்கிருந்த தோழர்கள் சிலருக்கு அவன் பொறுப்பாளன். அங்கு ஒவ்வொரு காப்பரணில் காவலில் நிற்கும் போராளிகளையும் அவன் சந்திப்பது வழக்கம்.
காவலரணில் நின்ற போராளிகளைச் சந்தித்தபடி வந்தவன் ஒரு காப்பரணில் அமர்ந்து கொள்கிறான். அது போராளிகள் தேநீர் அருந்தும் நேரம் அதனால் அடுத்த சில மணித்துளிகளில் அங்கு என்ன நிகழப்போகின்றதென்பதையோ, தான் அதற்காய் என்ன முடிவு எடுக்கப்போகின்றேனென்பதையும் அறியாதவனாய் *என்ன மாதிரி எனக்கும் தேத்தண்ணி தருவீங்களோ” என்றவன் அந்தப் போராளிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தான். அங்கு நிலவிய அமைதியைக் குலைத்தபடி ஒரேயொரு துப்பாக்கி வேட்டுச்சத்தம் மட்டுமே கேட்டு ஓய்ந்தது. அவனுக்கு தேநீருடன் வந்தவன் எதிரியின் பதுங்கிச் சுடுபவனுக்கு இலக்காகி மடிந்து போகிறான். அந்தக் கணத்திலிருந்து அவன் ஒரு முடிவெடுத்துக் கொள்கின்றான். இனி தேநீர் குடிப்பதேயில்லை என்று. அவன் அந்த முடிவை எடுத்ததுடன் மட்டும் நிற்கவில்லை. அதன்பின் தன் வாழ்வின் கடைசித் துளிவரை கடைப்பிடித்தான். அவனது இதயத்தின் வேதனையின் வெளிப்பாடாகவே
இதைக் கடைப் பிடித்தான். இப்படித்தான் ஒவ்வொரு ஒரு பொறுப்பாளனாய் இருந்த போராளியையும் நேசித்தான்.
(நன்றி தமிழீழ ஆவணக்காப்பகம் _தாரகம் )
அவன் நாட்களிலெல்லாம் தனக்குக் கீழ் இருக்கும் ஒவ்வொரு போராளிக்கும் எத்தகைய வசதிகள், உடைகள், உணவு என்பன கிடைக்கின்றதோ அதைவிட சற்றுக் குறைவாகவே தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். ஏனெனில் தன்னால் எதை நிறைவேற்ற முடியுமோ அதை நிறைவேற்றிய பின்னரே அந்த விடயத்தில் தன் கீழுள்ள போராளிகளும் அதை
நிறைவேற்ற வேண்டும் எதிர்பார்ப்பவன். என்று அவன். வேவு அணியொன்றுக்குப் பொறுப்பாகவிருந்தும் செயற்பட்டவன். அது பலாலி இராணுவ முகாமைச் சுற்றியுள்ள பகுதி. அங்கு இராணுவ முன்னணி நிலைகளை வேவுபார்க்கும் பணியில் அவன் பொறுப்பில் சில போராளிகள் கொடுக்கப்பட்டனர். ஏனெனில் துளசிக்கு ஏற்கனவே வேவு பார்ப்பதில் அனுபவம் இருந்தது. அவன் காட்டும் திசைகளில் சென்று அவர்கள் வேவுத்தரவுகளைச் சேகரித்து வருவார்கள். சில வேளைகளில் எதிர்பார்த்த தரவுகள் கிடைக்காதபோது வேவுக்குச் செல்லும் போராளிகளிடமிருந்து
அதற்கான காரணத்தை தெளிவாகச் சொல்லமுடியாது போனால் தானே அந்த இடத்திற்கு நேரில் சென்றுவிடுவான். இதன் பின் அவர்கள் அவன் குறித்த இலக்கிற்குச் செல்லாமல் மீள்வதில்லை. ஆனாலும் அவன் போராளிகளின் இழப்பை விரும்புபவனல்ல.
யாழ்ப்பாணம் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் வீழ்ந்தபின் ஒரு பொழுதில் துளசியின் கீழ் நின்ற போராளிகள் சிலரை வேவிற்கு அனுப்பிவிட்டு அமைதியான இரவுப் பொழுதில் தொடர்புக்கருவியின் தொலைத் முன்னால் விழித்திருந்தான். மாலை கழிந்து வந்து இருளுக்குள் சென்றவர்கள் விடிவதற்குள் திரும்பிவிட வேண்டும்.
மணித்துளிகள் ஆனாலும் நகர்ந்தனவே தவிர தொலைத் தொடர்புக்கருவியில் எந்த ஓசைகளும் எழவில்லை. விடிவதற்கான நேரம் அண்மிக்க அண்மிக்க அவன் இதயம் படபடத்தது. ஆனாலும் அவன் எண்ணியதற்கு எதிர்மாறாய் எல்லாம் நடந்தன. தொலைத் தொடர்புக்கருவி அமைதியாய் இருக்க காலை வழமைபோல் விடிந்தது. தூரத்தே அவன் தேடும் அந்த உருவங்களைக் காணவேயில்லை.
அவனால் முகாமில் இருக்க முடியவில்லை. அந்தக் கடற்கரையில் அவர்கள் சென்ற திசையைப்பார்த்தபடியே இருந்தான். காலைப் பொழுது முடிந்து நண்பகலை அண்மித்தபோதும் தூரத்தே எதையும் அவதானிக்க முடியவில்லை. கடற்கரை வெப்பக் காற்றும் அனல் வீசும் சூரிய வெப்பக்கதிர்களும் அவனுக்கு பெரிதாகப்படவில்லை. போராளிகள் அவனை முகாமிற்கு வரும்படி அழைத்தனர்.
ஆனால் அவன் கடலையே வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். நண்பகலையும் தாண்டிய பொழுதில் அந்த வேவுவீரர்களின் தொடர்பு கிடைக்கின்றது. அதன் பின்புதான் அவன் அந்தக் கடற்கரையிலிருந்து புறப்பட்டான். இப்படித்தான் அவன் ஒவ்வொரு போராளிகள் மீதும் பாசம் வைத்திருந்தான்.
அவன் போராளிகள் மீது மட்டுமல்லாமல் எந்த மக்களின் விடிவிற்காக போராட்டப் பாதையினைத் தேர்ந்தெடுத்தானோ அந்த மக்களையும் அவன் நேசித்தான். முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றிய பின் அங்கு புதிதாகப் பயிற்சி பெற்ற போராளிகளுக்கு பொறுப்பாளனாய் துளசி செயற்பட்டுக் கொண்டிருந்தான். அந்த நாட்களில் அங்கு பயிற்சிபெறும் போராளி ஒருவரின் தாய் தன் மகன் அங்கு நிற்பதை எப்படியோ அறிந்து தன் மகனைச் சந்திப்பதற்காக வந்தாள். ஆனால் அந்தத் தாய் அங்கு வந்தது அவனை அழைத்துச் செல்லவல்ல. தன் வீட்டின் பழுதடைந்த கூரைக்குள் இருந்தபடி தான் வாழ்வதையும் அதற்கு மகனிடத்தில் ஏதாவது உதவி கிடைக்குமா என்று கேட்பதற்கும்தான. அந்தத் தாயின் இயலாமையை துளசியால் உணர முடிந்தது. ஆனாலும் அவன் ஒரு தாக்குதலணியை வழி நடத்துபவன்
என்றவகையில் அந்தத் தாயிற்கு நேரடியாக விடைசொல்ல வேண்டிய அவசியமோ அல்லது செய்யவேண்டிய உதவி அவசிமோ
இருக்கவில்லை. ஆனாலும் தான் இயன்ற உதவியை அந்தத் தாயிற்கு செய்வதற்காக் போராளிகளிற்கு ஓய்வாக இருக்கும் நேரங்களில் தென்னம் ஓலைகளைச் சேகரிக்கச் செய்தான். அந்தத் தாய் வந்து சென்று சில நாட்கள் கழிந்த ஒரு பொழுதில் அந்தத் தாயின் வீட்டிற்கு கிடுகுகள் வந்து சேர்ந்தன. அவன் அதை அனுப்பியபோதும் தன் பெயருக்குப் புகழ் தேடவில்லை. “இயக்கம் உங்களிடம் கொடுக்கச் சொன்னதாக சொல்லிக்
கொடுக்கவும் ‘ என்று அவன் போராளிகளிடம் சொல்லியனுப்பியிருந்தான்.
இப்படிக் கழிந்த அந்த வீரனின் வாழ்வின் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்கின்றன. அவனது இயக்க வாழ்வில் ஒரு தளபதியின் மெய்ப்பாதுகாவல் பணியினை அவன் பொறுப்பெடுத்துச் செயற்பட்ட காலம். மெய்ப்பாதுகாப்புப் பணியில் அலட்சியம் இல்லாமல் செயற்படயமாக வேண்டும் என்பதனை ஒவ்வொரு போராளிக்கும் அடிக்கடி நினைவூட்டுவான். அந்தப் பணியில் அலட்சியமாகச் செயற்பட்டால் விளைவு பாரியதாய் இருக்கும் என்பதை அவன் உணர்ந்திருந்தான். அதனால்த்தான் போராளிகள் மெப்பாதுகாப்புப்பணியில் அலட்சியமாக நின்றால் துளசியிடம் தப்பித்துவிடமுடியாது.
தளபதியை விட அந்தப் போராளிகள் துளசிக்கே அதிக பயம். ஆனால் அந்தப்பயம் அவனால் தண்டனை கிடைக்கு மென்பதற்காக அல்ல. அவன் சொல்லும் எதையும் செயலில் காட்டுபவன். தளபதி அதிகமான நாட்களில் இரவு பன்னிரண்டு மணியையும் தாண்டிய பின்னரே நித்திரைக்குச் செல்வார். தளபதி விழித்திருக்கும் நேரம் வரை துளசியும் விழித்தபடியே இருப்பான். போராளிகள் அவனை நித்திரைக்குச் செல்லுமாறு பணித்தாலும் துளசி அந்தத் தளபதிக்கு முன் துயின்றதேயில்லை. அப்படிப்பட்ட வீரனிற்கு அந்தப் போராளிகள் பயப்படாமல் வேறு என்ன செய்ய முடியும்?
அந்தத் தளபதியும் துளசியும் ஒரே சமர்க்களத்தில் விமானக் குண்டுவீச்சில் ஒன்றாக விழுப்புண் அடைந்தனர். இருவரிற்கும் பலமான காயம். உடனே இவர்களும் ஏனைய காயமடைந்த போராளிகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒரே பகுதியில் அடுத்தடுத்த அறைகளில் இருந்தபடிதான் இருவரும் சிகிச்சை பெற்றுவந்தனர்.
துளசி தன்னுடன் உதவிக்கு நின்ற போராளியை அடிக்கடி தளபதியிடம் அனுப்பி அவர் எப்படி இருக்கின்றார் என்பதை அறிந்தபடியே இருப்பான். இதற்குள் அவர்கள் காயப்படும் போது அவர்களின் ஆயுதங்கள் வழமைபோல் உரிய இடங்களுக்கு
அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால் தளபதியின் கைத்துப்பாக்கியைக் காணவில்லை. கைத்துப்பாக்கி தொலைந்து விட்டதை துளசியிடம் சொல்லியபோது அவன் தன் காயத்தின் வேதனையிலுமிருந்து சிரித்தபடி தன் கட்டிலின் தலையணைக்குக் கீழ் இருந்து அந்தக் கைத்துப்பாக்கியை எடுத்துக் கொடுத்தான். தான் காயமடைந்த போதும் தன் கடமையினை நிறைவேற்றிய திருப்தி அவன் இதயத்தில் அப்போது இருந்திருக்கும்.
துளசியின் ஆச்சரியமூட்டும் திறமைகளால் அவன் புலனாய்வுப் பணியில் முக்கியமான வேலை ஒன்றிற்கு தெரிவு செய்யப்பட்டு அதற்கான முகாமிற்கும் சென்று விட்டான். துளசிக்கு அது விருப்பமாகவும் இருந்தது. அவன் அங்கு சென்று ஓரிரு நாட்களில் குளித்துக்கொண்டிருக்கும்போது அவன் உடலின் தோற்றம் எதேட்சையாக தளபதியின் கண்களுக்குள் அகப்பட்டது.
அப்போதுதான் அவனது உடலில் அநேகமான பகுதிகளில் காயத்தழும்புகள் இருப்பதை அவதானித்தார். அந்தத் தளபதி அவனை அழைத்து தான் எதிர்பார்க்கும் பணிக்கு நீ பொருத்தமானவனாக இருந்த போதும் உனது காயத்தழும்புகள் அதற்குப் பொருத்தமானதாக வில்லையே என்று அவனை முதலிருந்த பணிக்கே திருப்பி அனுப்பிவிட்டார். உண்மை நிலையைப் புரிந்த துளசி சோகத்தோடு திரும்பினான்.
ஆனாலும் சாதிக்கவேண்டும் என்ற மன உணர்வு அவனிடம் குன்றிப் போகவில்லை. யாழ்ப்பாணம் சிங்கள் இராணுவத்தால் சூழப்பட்ட பின் அங்கு நிகழும் ஒவ்வொரு அனர்த்தங்களும் அவன் நெஞ்சை வெகுவாகப் பாதித்தது. அதனால் யாழ்ப்பாணம் சென்று தானும் போரிடவேண்டும் என்று அவன் துடித்துக் கொண்டிருந்தான். அவன் எண்ணம் நியாயமானதாக இருந்தாலும் அவன் உடல் அதற்குப் பொருத்தமானதாகவேயில்லை.
தவளை நடவடிக்கையின்போது அவன் காலில்பட்ட விழுப்புண் பாரியதாய் இருந்தது. அவனது காலொன்று அகற்றவேண்டிய சந்தர்ப்பம் இருந்தபோதும் அவன் மறுத்ததினால் அகற்றப்படாமலிருந்தது. அந்தக்கால் அகற்றப்படாததன் வேதனையை அவன் அனுபவித்தபடியே இருந்தான். அது எப்போதும் மாறாத காயமாய் நீர் வடிந்தபடியே இருந்தது. அவன் ஒற்றை ஊன்று கோலை ஊன்றியபடியே பின்னர் உலாவினான்.
இந்தக் காலுடனேயே யாழ்ப்பாணம் போகப்போவதாகத் தளபதியிடம் கேட்டுக்கொண்டான். அவன் உணர்வைத் தளபதியால் புரிந்துகொள்ள முடிந்தாலும் அவன் உடல் அதற்கு இடம் தராது என்பதால் அவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அதன் பின் துளசி தான் வைத்திருந்த ஊன்று கோலையும் தூக்கி எறிந்துவிட்டு மிகுந்த வேதனையை அனுபவித்தபடி நடைபயின்றான்.
கொஞ்ச நாட்களின் பின் தளபதியிடம் அதே வேண்டுதல். தளபதியிடம் இருந்து மீண்டும் மறுத்து பதில். ஆனாலும் இறுதியில் தன்னால் சாதிக்க முடியும் என்று அவன் உறுதியாய் நின்றதால் யாழ்ப்பாணம் செல்லவிருக்கும
போராளிகளுக்குப் பொறுப்பாக துளசி தெரிவு செய்யப்பட்டான். அவனது மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவனிற்குக் கீழ் நின்று பயிற்சி பெற்ற போராளிகள் பயிற்சி முடிந்து புறப்படும் நாள்வரை துளசியும் தங்களுடன் வரப்போகிறான் என்பதை நம்பவேயில்லை.
1997இன் ஒரு மாலைப் பொழுதில் அந்த நடைப்பயணம் ஆரம்பித்தது. விடிவதற்குள் தாண்டவேண்டிய தூரம் பத்துக் கிலோமீற்றர்களையும் தாண்டிய தூரம். தாண்டவேண்டிய தூரம் தரையல்ல. சேறும் சகியும் நீரும் நிறைந்த கடல்நீரேரி. உடனிருந்த போராளிகள் அனைவரிடமும் அந்தக் கடினபயணத்தைத் தாண்ட உடற் பலமிருந்தது. ஆனால் துளசியிடம் அந்தத் தூரத்தை தாண்டும் மனோபலம் மட்டுமேயிருந்தது.
கரையில் நின்ற தோழர்கள் கொஞ்சம் தயக்கத்தோடு விடை கொடுத்தனர்.
பயணம் ஆரம்பித்தது. துளசி தன்னுடன் வந்த இன்னொரு போராளியின் மேல் ஒரு கையை துணைக்கு வைத்தபடி அந்தக் கடின பயணத்தில் நடந்து கொண்டிருந்தான். உடற்சோர்வும், வேதனையும் எல்லோரையும் விட அவனிற்கு அதிகமாய் இருந்தது. அவனது உடைந்த கால் பயணத்திற்கு ஒத்துழைக்கத் தயங்கியது. ஆனால் மனம் உடையாமல் ஒத்துழைத்தபடி அவனை முன்நகர்த்தியது.
பயணம் நெஞ்சளவு நீருக்குள்ளாலும் இருந்தது. இடையில் நீந்திக்கடக்க நெஞ்சளவு வேண்டியுமிருந்தது. அனுபவிக்க முடியாத வேதனைகளை அந்த இரவுப்பொழுது அவனிற்குக் கொடுத்தபோதும் அவன் அந்தப் பயணத்தை முடித்து யாழ்ப்பாணக் கரையில் ஏறினான். அப்போது அவனின் விழுப்புண்பட்ட கால் வளைந்தேவிட்டது.
அந்தப் பயணத்தை அவன் முடித்தபோதும் அடுத்துவந்த நாட்களெல்லாம் வேதனை மிகுந்தவையாகவே கழிந்தன. முற்றிலும் சிறிலங்கா இராணுவ முகாம்களால் சூழப்பட்ட யாழ் குடாநாட்டிற்குள்ளேயே இனி அவர்களது வாழ்விருந்தது. கழியப்போகும் ஒவ்வொரு மணித்துளிகளும் ஆபத்தானவை. சுற்றிவர எந்தத் திசையிலும் இராணுவக் கண்கள். இந்தச் சூழலுக்குள் தப்பித்து நின்று இராணுவத்திற்கு தொல்லை கொடுப்பதற்கு தனியே ஆயுதபலம் மட்டும் போதாது.
இராணுவத்தை எதேட்சையாக சந்திக்க நேரின் தாக்குதல் நடாத்திவிட்டுத் தப்பித்துக்கொள்ள நல்ல உடற்பலம் தேவை. இங்கே தப்பிச்செல்லும்போது ஆயுதமென்பது இரண்டாவது பட்சந்தான்.
ஆனால் வேகமாக நடக்கவே முடியாத காலோடு யாழ்ப்பாணத்தில் அந்தத் தாக்குதலணிக்கு பொறுப்பாளனாகவும் நின்று செயற் நிற்பதுமட்டுமல்லாமல் தாக்குதலணிக்குபடுவதென்பது சாதாரணமானதல்ல.
ஆங்காங்கே நிற்கும் போராளிகளுக்கு தகவல்மூலமே கட்டளைகள் வழங்கப்படும்.
நேரடியாக சந்திப்பது என்பது அத்தி பூப்பது போலவே நிகழும். ஆனாலும் அங்கிருந்த போராளிகளுக்கு துளசியைப் பற்றி நன்கு தெரியும். அவன் வழிநடத்தலில் தவறிருக்காது என்பது அவனது கடந்த காலப் பதிவுகள். அவன் அரசியற்துறையில் நிர்வாகப் பொறுப்பாளனாக, தாக்குதலணிப் பொறுப்பாளனாக, வன்னியில் இயங்கிய நிர்வாக சேவைப் பொறுப்பாளனாக என பல்வேறு கோணங்களில் வழி நடத்தல் புரிந்தவன். அப்போது அவன் நேரடியாகச் செய்து காட்டியவை இப்போது அவன் நேரடியாக இல்லாத வேளையிலும் போராளிகளுக்கு அவனது முழுமையாகப் புரிந்திருந்தது. அதனால் களங்களை வழி நடத்துவது அவனுக்கு இலகுவானதாகவே இருந்தது.
ஆனாலும் ஒத்துழைக்காத உடல் வலுவோடு தாக்குதல் நடாத்துவதற்கான வேவு நடவடிக்கையிலும் தாக்குதல் நடக்கும் இடத்தை நேரடியாகப் பார்த்து உறுதி செய்வதில் போராளிகளின் மறுப்பையும் மீறி அவன் முன்நிற்பான். எப்போதும் மக்களுக்குத் தொல்லை கொடுக்கும் இராணுவத்திற்கே முதலில் இழப்புக் கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பான். அதுபோலவே தட்டாதெருவில் மக்களுக்குத் தொல்லை கொடுக்கும் இராணுவத்திற்கு அவனது அணியின் முதற்தாக்குதல் நிகழ்ந்தது.
ஒரு சிங்கள இராணுவக் கட்டளை அதிகாரிபோல கம்பி வேலிகளால் சூழப்பட்ட முகாமிற் குள்ளிருந்து கட்டளை வழங்காது விடுதலைப்புலிகளின் கடந்தகால வரலாற்றினைப் போலவே துளசியும் இயலாத உடல்வலுவோடு களத்தில் தன் போராளிகளுடன் அருகிருந்தான். அந்தத் தாக்குதலில் ஏழு சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். எதிரியின் நான்கு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. அந்தத் தாக்குதலுக்காக வன்னியிலிருந்து அவனது அணிக்கு வாழ்த்துச் செய்தியும் கிடைத்தது.
அவன் தொடர்ந்தும் தன் தாக்குதல்களை விளானில், கலட்டியில் என பல்வேறு முனைகளில் மேற்கொண்டான். அந்த நாட்கள் மிகவும் கடினமா நித்திரையென்பது எப்போதாவது கிடைப்பதொன்றாகும் உணவு என்பது கிடைக்கும் போது மட்டுமென்பதாயும் ஓய்வு என்பது இல்லாததாயும் இருந்தது. இவர்களின் தாக்குதல் அதிகரிக்க இராணுவ முற்றுகைகளும் அதிகரித்தது. அவர்கள் தங்குவதற்கான இடங்கள் இல்லாது போயின. சில வேளைகளில் தங்குமிடங்களில் தண்ணீர், உணவு எதுவுமின்றி இரண்டு மூன்று நாட்களும் முடங்கியிருக்க வேண்டியும்ஏற்பட்டது.
இந்தக் கடினமான சூழலுக்குள்ளும் சண்டைகளில் விழுப்புண்படும் போராளிகளை எப்படியாவது வன்னிக்கு அனுப்பி விடுவான். அது இலகுவான காரியமாகவும் சொல்லக்கூடியதாயும் இருக்கவில்லை. துளசியின் முன்னேற்பாடான செயற்பாடுகளும் நுட்பமான திட்டங்களுமே அந்தப்
போராளிகளைக் காப்பாற்றின.
யாழ்ப்பாணத்தில் முற்றுகை அதிகரித்ததால் துளசியால் அங்கு செயற்படுவது கடினமென்பதை உணர்ந்து அவனை வன்னிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவன் வரவேயில்லை. தான் இராணுவத்தின் முற்றுகைக் குள்ளானால் தன்னையும் அழித்து இராணுவச் சிப்பாய்கள் பலரை ஒரே நேரத்திலும் அழிப்பதற்காக வெடிமருந்துப் பொதியொன்றை தனக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டிக் கொண்டிருந்தான்.
புனிதமான அவனது போராட்ட உணர்வின் முன்னால் வன்னியில் இருந்த தளபதிக்கு எதுவும் செய்யமுடியாத நிலை. ஆயினும் அவன் வரவேண்டும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
தொண்ணூற்றி ஏழாம் ஆண்டின் பங்குனி மாதத்தின் பதினைந்தாம் நாள் வழமைபோல விடிந்திருந்தது. இறுக்கமான முற்றுகைச்சூழலுக்குள் ஒரு தாக்குதலை நடத்தவேண்டும் என அதிகமாக முயற்சித்தபடியிருந்தான் துளசி. அன்றைய பகல்ப் பொழுது முடிந்து இருளுக்குள் சூழல் புகுந்ததன் பின் இலக்கு ஒன்றினைப் பார்த்து உறுதி செய்வதற்காக கவி என்ற போராளி துவிச்சக்கர வண்டியினை ஓட்டிச்செல்ல துளசியும் அவனுடன் இருந்தான். இடையில் துவிச்சக்கர வண்டியினை இராணுவக் கரமொன்று பற்றிப்பிடிக்கின்றது. கவி இராணுவத்தைகைகளால்
தாக்கவும் அவர்கள் சுதாகரிக்கும் போது கவியினை தப்பிச் செல்லுமாறு பணித்தவன், இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னங்களால்
காயமடைந்தான். நிலைமையை நன்கு புரிந்து கொண்டவன்
சயனைட்’ வில்லையை உட் கொண்டு தான் உயிருடன் எதிரியிடம் பிடிபடக்கூடாதென்ற உறுதியுடன் தன் கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டான்.
யாழ். கோண்டாவிலின் பாரதி வீதியில் அந்த இரவுப் பொழுதில் எங்களொருவருக்கும் தெரியாமல் அவன் மடிந்து போனான். யாழ்ப்பாணத்து வீதிகளில் அதுவரை எங்கள் வீரர்களால் சிந்தப்பட்ட இரத்தத்துடன் அவனின் இரத்தத் துளிகளும் சேர்ந்துகொண்டது.
“சின்ன வயதிலேயே சிறந்த ஆளுமையும் அசைக்க முடியாத தலைமைப்பற்றும் எல்லோரையும் இலகுவாகக் கையாளும் நிர்வாகத் திறமையும் துணிச்சலான அவனின் சண்டைகளுமே என்னைக் கவர்ந்தன.
எல்லோருக்கும் மேலாய் அவனிடமிருந்த போராட்டப்பற்று அதிசயிக்கத்தக்கது. அவன் யாழ்ப்பாணத்தில் தன்னுடன் கூட நின்ற போராளிகள் ஒவ்வொருவராய் மடிந்தபோது அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன் வீங்கி நீர் வடியும் மாறாத காயமிருந்த காலுடன் சென்று சண்டையிட்டு தாங்க முடியாத சுமைகளைத்தாங்கி எல்லோராலும் சாதிக்க முடியாத வற்றைச் சாதித்து மடிந்ததை எப்படி மறக்கமுடியும்?” என்று அவனை வளர்த்த தளபதி கூறியவை எத்தனை உண்மையானவை.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்