Ad Code

Recent Posts

மேஜர் அமுதா வீர வரலாற்று நினைவுகள்

மேஜர் அமுதா

வாசுகி பொன்னம்பலம்

தெல்லிப்பளை

யாழ்ப்பாணம் 

வீரச்சாவு: 14.02.2000


நிகழ்வு: இயக்கச்சி பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவு


அவள் மாதிரி ஒரு பிடிவாதக்காரியை, கோபக்காரியை, நினைத்ததைச் செய்யும் ஓர்மம் கொண்டவளை மிக அரிதாகத்தான் நீங்கள் எங்கேனும் கண்டிருப்பீர்கள். பார்த்தால் அப்படித் தெரியாது. மிக அமைதியாக ஒரு புன்சிரிப்போடு தலையசைப்பாள் அந்த மகாஅழுத்தக்காரி.


"நாங்களாக யோசிச்சுச் செய்யவேணும். வந்து சொல்லும் வரைக்கும், கேள்வி கேட்கும் வரைக்கும் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது"


என்பாள். யாரும் சொல்வதற்கு முன்னாலேயே அதைச் செய்துவிடும் ஆற்றல் அவளிடம் இருந்தது. 82mm மோட்டார் பொறுப்பாளராக அவள் இருந்த காலங்களில் தன்னுடைய மோட்டார் அணிக்குரிய முன்னணி அன்றைய வேலை என்ன என்பதை தான் நிற்கும் பகுதிக்குரிய சண்டைப் பொறுப்பாளரிடம் கேட்டுக் கொள்வாள். அவர்களால் பணி தரப்படாத நாட்களில் தன்னுடைய அணியிலுள்ளவர்களுக்குப் படிப்பிக்கத் தொடங்கி விடுவாள். அடிப்படை விடயமான தமிழ், கணிதத்திலிருந்து அவர்களுக்குக் கட்டாயம் தேவையான வரைபடம், திசைகாட்டி, ஆயுதம் என்று அவளது கல்வித் திட்டம் பரவலானது. நாளாந்தம் பத்திரிகைச் செய்திகளை வாசித்து, கொழும்பு அரசியல் நிலைமையையும் அலசி ஆராய்வாள்.


ஆற்றலுள்ள ஓவியராகவும் அவள் இருந்தாள். ஆழமான கருத்துக்களைக் கொண்டதாக அவளால் வரையப்பட்ட அநேக ஓவியங்கள் 'சுதந்திரக் காற்று' களமுனை இதழின் அட்டையை அடிக்கடி அலங்கரித்தன. அவளின் தூரிகைக்கு அவளது பேனா ஒன்றும் சளைத்ததல்ல.


கற்பூரபுத்தி என்பார்களே. எதையும் சட்டெனப் பற்றிக்  கொள்ளும் இயல்பு. அது அவளுக்கே உரியது.


கனவல்ல தமிழீழம் நாளை நம் நாடு' என்ற தலைப்பில் ஒரு கவியரங்கம் செய்ய வேண்டியுள்ளது. உங்களின் கவிதை வேண்டும் என்று கேட்ட மூன்றாவது நாளே 5 நிமிடம் வாசிக்கக்கூடிய ஒரு அற்புதமான கவிதையை எழுதி. பார்வைக்கு அனுப்பிய வேகம் இருக்கிறதே அதுவும் அவளுக்கேயுரியது.  இத்தனைக்கும் அந்த மூன்று நாட்களில் ஆறஅமர இருந்து, ஆகாயத்தையும் பூமியையும் ரசித்து கற்பனையைக் கசக்கி ஒரு கவிதை எழுதினாளா என்றால், இல்லை. A9 வீதியை உள்ளடக்கிய மாங்குளம் பகுதியில் நிலை கொண்டிருந்த மாலதி படையணிக்கும் அங்கிருந்த ஆண் போராளிகளுக்கும் தேவையான மோட்டார் சூட்டாதரவை அவர்கள் வேண்டும் பொழுதுகளில் வேண்டும் இடங்களுக்கு தனது 81mm மோட்டாரினால் வழங்கியவாறும், பின்னர் எறிகணைகள் விழுந்த இடங்களை எமது முன்னணி நிலைகளில் போய் நின்று பார்வையிட்டு, எறிகணை வீச்சின் சரி, பிழைகளை தன்னுடைய அணிப் போராளிகளுக்குச் சொல்லிக் கொடுத்து, காடு வெட்டி பின்னணி விநியோகங்களைச் செய்ய ஏதுவாகப் பாதைகளை அமைக்கும் பணியைச் செய்து, தன்னுடைய அணிகளுக்கு ஒரு மோட்டார் அணிக்கு இருக்க வேண்டிய கணித அறிவை சின்னச் சின்னக் கணக்குகளாகச் செய்விப்பதன் மூலம் வளர்த்து, செய்தி கேட்பதையும் பத்திரிகை வாசிப்பதையும் அவர்கள் தொடர்ச்சியாகச் செய்யவேண்டும் என்பதற்காகவே இருக்கும்போதும் நடக்கும்போதும் இருந்திருந்தாற்போல் கேள்விகள் கேட்டு, என்று அவளது நாளாந்த நடவடிக்கைகளின் நடுவேதான் அந்தக் கவியரங்கக் கவிதை எழுதப்பட்டது.


மேஜர் அமுதா எழுதி வாசித்த அந்தக் கவிதையை எமது தேசியத் தலைவர் நேரடியாக இருந்து கேட்டார். தன் கவிதை நடுவே கிருஷாந்தியை நினைவுகூர்ந்த அமுதா,


''என்றும்


எங்கள் தலைமையையும்


வழிகாட்டலையும்


நாங்கள் நம்பினோம்.


அன்று நீங்கள்


ஏதோவொரு நம்பிக்கையில்


அப்பாவிகளாய்


அரக்கர் பிடியில்


அடைக்கலம் தேடியதால்


நீங்கள் துடித்தபோதுகூட


எங்களால் அரவணைக்க முடியவில்லை.


ஏனென்றால்


நாங்கள் தூரத்திலிருந்தோம்.


ஆனாலும்


குமுறிக் கொதித்தெழுந்தோம்.


என்ற வரிகளை வாசித்தபோது தலைவரின் விழிகள் அசையவில்லை. தேசியத் தலைவரின் உள்ளத்தைத் தொட்ட வரிகள் அவளுடையவை.


தலைவரில் அவளுக்கிருந்த மதிப்பும் நேசமும் யாராலுமே அளவிடமுடியாதவை. "எங்கள் அன்பு வாசன். தயவுசெய்து எங்களிடம் திரும்பி வா" என்ற வரிகளோடு கொழும்பிலிருந்து அம்மாவினதும், ரஷ்யாவிலிருந்து அக்காவினதும் வேண்டுகோளைச் சுமந்தவாறு வருகின்ற கடிதங்கள் அவளுக்குச் சினத்தை முட்டும். "எங்கடை அண்ணையைப் பற்றி இவைக்கு என்ன தெரியும். அவரைப்பற்றி ஏதாவது விளங்கியிருந்தா இப்பிடி என்னை வரச்சொல்லி எழுதியிருக்கமாட்டீனம" என்று கோபப்படுவாள்.


வீட்டில் அவள் வாழ்ந்த சூழ்நிலை சற்று வித்தியாசமானதுதான். சொந்த இடம் தெல்லிப்பளை என்றாலும் தந்தை பொன்னம்பலம் வேலை காரணமாக இடம் மாறிக்கொண்டே இருந்ததால், ஊரை விட்டே விலகியிருக்கவேண்டிய நிலை அவருக்கு. சிறு பிள்ளையான இவளின் கல்வி குழம்பிவிடக் கூடாதே என்று கோண்டாவிலில் அம்மம்மாவிடம் இவளை விட்டுச் சென்று விட்டார் இவளின் தந்தை, கூடவே அம்மாவும் போய்விடவே பின்நாளில் அமுதாவாக ஆன குட்டி வாசுகியின் குழந்தை மனதில் பெற்றோர்மீது சொல்லமுடியாத கோபம்.


"இரவு படுக்கிறநேரம் இருந்த அம்மாவை நித்திரையாலை எழும்பிப் பார்த்தநேரம் காணேல்லை"


என்று அம்மா தன்னை விட்டு பிரிந்த நாளைப்பற்றிக் குறிப்பிடுவாள். அதன் பின் அம்மா இவளுடன் இடையிடையில் வந்து நின்றபோதும் விடுமுறை நாட்களில் இவளை அப்பாவிடம் அழைத்துச் சென்றபோதும் தங்கள் அன்பையெல்லாம் அவள்மீது சொரிந்தபோதும், சிறுவயதில் உண்டான வடு அவளில் மறையவில்லை. கண்ணீரால் கடிதம் எழுதும் அம்மாவிற்கும் அழகிய கவிதைகள் எழுதுகின்ற அக்காவிற்கும் அமுதாவின் ஒரே பதில் - தயவுசெய்து என்னைக் குழப்பாதேங்கோ என்பதுதான் அமைப்பைவிட்டு விலகுவது என்பது அவளுக்குச் சற்றும் உடன்பாடில்லாத விடயம்.


1999 இல் போர்முழக்கம் (ரணகோஷ) 03 முடிந்து, போர்முழக்கம் 04 நடைபெற முன்னர் பள்ளமடுவில் எமது படையணி நிலைகொண்டிருந்தபோது அமுதாவின் 81mm மோட்டாரும் நிலைகொண்டிருந்தது. தான் ஒரு கரும்புலியாகப் போக விரும்புவதாகக் கேட்டு கடிதத்தின்பின் கடிதமாக எழுதிக் கொண்டிருந்தவளுக்கு பள்ளமடுவில் நின்றபோதுதான் தேசியத் தலைவரிடமிருந்து பதில் வந்தது.


"உங்களின் வேண்டுகோள் ஏற்கப்பட்டது. தேவைப்படும் போது அழைக்கின்றேன" என்று தலைவரின் ஒப்பத்துடன் வந்த கடிதத்தை அவள் மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தாள்


போர்முழக்கம் 04 நடந்துகொண்டிருந்தது. சிறாட்டிக்குளப் 3. பகுதியால் முன்னேற முயன்ற படையினரை அமுதாவின் 81mm எரிகணை வீச்சு பதம் பார்த்தது. அமுதாவின் மோட்டார்நிலையை எதிரியின் எறிகணைகளும் தேடிவந்தன. திடீரென அவர்களது நிலையிலேயே விழுந்து வெடித்த எதிரியின் எறிகணை ஒன்று எல்லோரையும் தாக்கியெறிந்து விட்டது. மோட்டார் சூட்டாதரவு கேட்டுக்கொண்டிருந்த முன்னணி வீரர்களுடன் கதைத்துக்  கதைத்துக்கொண்டு தனது மோட்டாருக்கு இலக்குச் சொல்லிக் கொண்டிருந்த அமுதா எங்கேயோ, அமுதாவின் கையிலிருந்த  தொலைத்தொடர்புக் கருவி எங்கேயோ, அதற்குரிய மின்கலங்கள் எங்கேயோ என்று தூக்கியெறியப்பட்டன. எல்லாம் ஒரு நிமிடத்துக்குள்தான். புழுதி அடங்கியலும் தொலைத்தொடர்புக் கருவியையும் மின்கலங்களையும் பொறுக்கியெடுத்துப் பொருத்தி உடனேயே முன்னணி நிலைகளுடனான தொடர்பைச் சீர்ப்படுத்தி அடுத்தடுத்த எறிகணை வீச்சுக்களுக்கான கட்டளைகளை வழங்கத் தொடங்கி விட்டாள். இது அமுதாவின் சிறப்பியல்பு. எந்த நெருக்கடிக்குள்ளும் நிதானம் தவறாத ஆளுமை அவளுடையது.


அன்றைய சண்டை மிகவும் இறுக்கமான சண்டைதான். இறுக்கத்தைச் சமாளிப்பதற்காக களமிறங்கிய புதிய அணிகள் பிரதேச அமைப்பு தெரியாமல் முன்னகரச் சிரமப்பட்டபோதெல்லாம் அவர்களின் தொலைத்தொடர்புக் கருவியில் இடை நுழையும் அமுதாவின் குரல் 'இத்தனை பாகையில் இத்தனை m தாரம் போ' என்று தன் மோட்டார் வீச்சு எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் அவர்களை வழிநடத்தியது. தான் நிற்கும் பிரதேசத்தை முழுமையாக ஆராய்ந்து வைப்பது அவளின் இயல்பு. இத்தனைக்கும் அமுதாவின் மோட்டாரும் தன் ஆதரவுச் சூடுகளை நிறுத்தவில்லை. எதிரியின் எறிகணைகளும் எமது நிலைக்கு அயலில் விழுந்து வெடிப்பது நிற்கவுமில்லை. தனது மோட்டார் வீச்செல்லையைக் கடக்கும் அணிகளை அடுத்த மோட்டார் அணியுடன் தொடர்பு படுத்தி விடுவதும், புதிதாக மோட்டார் வீச்செல்லைக்குள் நுழையும் அணிகளுடன் தானாகவே தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதுமாக அற்புதமாகச் சண்டை செய்த போராளி அவள்.


அவளின் பதட்டமேயில்லாத நிதானம் கடைசி நிமிடம் வரை அப்படியேதானிருந்தது. 2000.04.01 அன்று இயக்கச்சிப் பகுதியில் அமைந்திருந்த எதிரியின் முன்னணிக் காவலரண்களை ஊடுருவி நுழைந்து தாக்கிக் கொண்டிருந்தபோது அவளது அணியின் ஒரு பகுதி சரியான நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டது. "உடனடியாகவே அமுதா அந்த இடத்துக்கு விரைந்து நிலைமையைச் சீரமைக்க முயன்றாள். தனக்கு முன்னுக்கும் பின்னுக்கும் இராணுவம் - நெருங்கிக் கொண்டிருப்பதை, தனது அணி தனிமைப்பட்டுக் கொண்டிருப்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு மோட்டார் சூட்டாதரவு கேட்டுக் கொண்டிருந்தவள் அன்றைய நெருக்கடியான சண்டையில் வீரச்சாவைத்தழுவிக் கொண்டாள்.


இயல்பிலே அவள் சரியான கோபக்காரி. வேலைகளைத் தானாகவே செய்வாள். யாராவது சொன்னால் கோபம் வந்து விடும். சிறு வயதில் முட்டையோடு நடந்து போய்க்கொண்டிருந்தவளிடம் 'முட்டையைக் கவனமாகக் கொண்டு போ' என்று அம்மா சொல்ல கோபத்தில் முட்டையை போட்டு உடைத்துவிட்டாள். இது அடிக்கடி வீட்டில் நடக்கும் சம்பவம். இதே கோபம் போராளி ஆன பின்னரும் அவளில் மாறவில்லை. 


யாழ். மாவட்டம் சிங்கள இராணுவத்தின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்த 1995 ஆம் ஆண்டில் தன்னை அமைப்போடு இணைத்துக் கொண்டாள். எதிரி எப்படி எம்மண்ணில் இருக்கலாம் என்ற கோபத்துடனேயே சூரியகதிர்  01 எதிர் நடவடிக்கைக்கு பின்னணி விநியோக அணியில் ஒருத்தியாகச் செயற்பட்டாள். இதன் பின் அடிப்படைப்பயிற்சிப் பாசறையில் பணியாற்றிய காலத்தில்தான் அவள் ஒரு ஓவியராகவும், கவிதை எழுதுபவளாகவும் தன்னை வெளிப்படுத்தினாள். 


பின் 1997 கடைசியில் மோட்டார் அணியொன்றின் வரைபடவியலாளராக ஓயாத அலைகள்- 02 முடியும் வரை பணியாற்றி, இரண்டாவது படை வீச்சு ஓய்ந்த பின் 81mm மோட்டார் அணியொன்றின் பொறுப்பாளராக ஆனாள். அம்பகாமம், மாங்குளம், பனங்காமம், பெரியமடு, பள்ளமடு பகுதிகளில் நடந்த சண்டைகளில் அவளது மோட்டார் முழங்கியது. 1999 கடைசியில் அம்பகாமத்தில் எதிரியின் வோட்டசெற் 01 முடிந்த கையோடு மேஜர் தர அதிகாரிகள் கல்லூரிக்குப் படிப்பதற்காக அனுப்பப்பட்டாள். சாதாரணமாகவே சரியான கெட்டிக்காரி. அவளின் திறமையை அந்தக் கல்லூரி வாழ்க்கை மேலும் மேலும்  மெருகூட்டியது.  


வாய்ப்புக் கிடைத்தவேளைகளில் கவிதை எழுதினாள். எல்லோரும் கூடியிருந்து அவளது கவிதைகளை ரசித்தார்கள். அவளின் கோபம் மட்டும் குறையவில்லை. மிகவும் பொறுமையுடனும் ரசனையுடனும் வேலை செய்பவள் சிறு தவறுக்கும் கோபப்படுவாள். சிறிது நேரத்திலேயே மனவருத்தப்படுவாள். "நான் பிழை செய்தால் திருத்துங்கோ. என்ரை கோபத்தைக் குறையுங்கோ" என்று எல்லோரிடமும் சொன்னாள்.


ஓயாத அலை 03 தீவிரமாக நடந்துகொண்டிருக்கும்போது களமிறங்கிய புதிய அணிகளை ஐந்த வழிநடத்துவதற்காக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவர்கள். எல்லோரும் போயிருந்தார்கள். அன்றைய சண்டைக்குப் போகும் வாய்ப்பு அமுதாவுக்குக் கிடைக்கவில்லை. தன் பொறுப்பாளரிடம் போய் அமுதா கதைக்கத் தொடங்கினாள். தொடர்ச்சியாக மோட்டரிலேயே இருந்ததால் தனக்கு நேரடிச்சண்டை அனுபவம் இல்லை என்றம், படித்து முடித்து விட்டு படையணிக்கு வந்தால் ஒரு பொறுப்பாளராக நின்று சண்டையை வழிநடத்தவேண்டி வரும் என்றும், அதனால் இப்போது புதியவர்களுடன் சண்டைக்குப் போகும் வாய்ப்பைத் தருமாறும் பிடிவாதமாக நின்று, அந்தச் சண்டைக்குப் போனாள். 2000.04.01 அன்று இயக்கச்சிப் பகுதியில் நடந்த அந்தச் சண்டையே அமுதாவின் முதலாவதும் கடைசியானதுமான சண்டை ஆயிற்று.


அமுதாவின் ஆறு வருடப் போராட்ட வாழ்க்கை எமது விடுதலை வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவளது பதினைந்துக்கும் மேற்பட்ட ஓவியங்களும் இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகளும் பூத்த சிறுகதைகளும் அந்தப் பணியைச் செய்யும்.



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code